Advertisement

பிடிக்காத திருமணம் செய்து வைத்ததால் அவன் தந்தையிடம் பேச்சை தவிர்த்தான். அவர் பேச முயலும் போது அவன் ஒதுங்கிப் போனான். அவருக்கும் தெரியும் இது பிடிக்காத திருமணம் என்று. ஆனாலும் தங்கள் வாரிசை அப்படி விட்டுவிட மனது இல்லாமல் தான் திருமணம் செய்து வைத்தார்.

ஆனால் சரியாக பத்து நாட்களில் கீர்த்தியின் உடல்நிலை மாறுவதைக் கண்டு அவள் மறுக்க மறுக்க அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் ரகு. மருத்துவர் குழந்தை விவரம் சொல்ல அதிர்ந்து போனான்.

அவன் பார்வை அவளை குற்றம் சாட்ட ஏங்கி ஏங்கி அழுதாள். சுனிலை காதலித்ததை அவன் தன்னை ஏமாற்றியதைச் சொல்லி ரகுவின் அனுதாபப் பார்வையை சம்பாதித்துக் கொண்டாள். அவளுக்கு நடிக்கவா சொல்லித் தர வேண்டும்? அவனும் நம்பினான். அந்த சுனில் அவளை ஏமாற்றி விட்டதாக அவன் மேல் கோபத்தில் இருந்தவன் அவனைத் தேட அவன் இறந்து விட்டது தெரிந்தது.

அதை அவன் அவளிடம் சொல்ல உண்மையில் அதிர்ந்து போனாலும் உள்ளுக்குள் பெரிதாக எல்லாம் கவலைப் பட வில்லை. அவளுக்கு தான் இப்போது ரகு இருக்கிறானே? இவனை வைத்து செட்டில் ஆக வேண்டியது தான் என்று எண்ணி சுனிலை நினைத்து கண்ணீர் விடுவது போல நடித்தாள்.

ரகு அவளை நட்புடன் தாங்கிக் கொண்டான். அவளுக்கு ஆறுதலாக இருந்தான். அவளைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லி கேவலப் படுத்த எல்லாம் அவன் நினைக்கவே இல்லை. அந்த அளவிற்கு அவள் மேல் நட்புணர்வு இருந்தது. ஆனால் அவள் அதற்கு அருகதை இல்லாதவள் என்று அறியாமல் போனான்.

குழந்தையும் கலைக்க முடியாத நிலையில் இருக்க ரகு தான் பார்த்துக் கொள்வதாக சொன்னான். ரகு முன்னிலையில் அவள் பெரிதும் நடிக்க கீர்த்தியை பாவம் என்று தான் எண்ணினான் ரகு. அவளுக்கு பார்த்து பார்த்து எல்லாம் செய்தான். ஆனால் மனைவியாக எல்லாம் அவளை நினைக்க கூட இல்லை.

அவளுக்கு அது ஏமாற்றம் தான். அவன் தன்னை தீண்டினால் அப்படியே அவனுடன் ஒட்டிக் கொள்ள வேண்டும் என்று எண்ணி இருந்தாள். ஆனால் அவன் ஒரு எல்லைக்கோட்டுடன் நின்று கொண்டான். அவன் மனதுக்குள் இருந்த ஜானகி மீதான காதல் மட்டும் தான் அவனை உயிர்ப்புடன் வைத்திருந்தது.

“உன்னை நான் இனி பாக்கவே கூடாது டி. ஆனா நீ மட்டும் தான் மிர்ச்சி எனக்கு. சாகுற வரை உன்னையே நினைச்சிட்டு இருப்பேன்”, என்று மட்டும் எண்ணிக் கொண்டான்.

குழந்தை வளர வளர இவன் படிப்பும் தீவிரமாக இருந்தது. எல்லா பரிட்சைகளையும் எழுதினான். கீர்த்தி மாசமாக இருப்பதை இரண்டு மாதங்கள் கழித்து இரு வீட்டிலும் சொல்ல அனைவரும் மகிழ்ந்தார்கள்.

ஒரு வழியாக ஆதி பிறந்தான். மூர்த்தியைத் தவிர மற்றவர்கள் குறைப்பிரசவம் என்று நினைத்தார்கள். அந்த தந்தையும் இப்போது வரை மகன் ரகசியத்தை வெளியே சொல்ல வில்லை. கீர்த்தியிடமும் சொல்லக் கூடாது என்று சொல்லி விட்டார்.

எல்லாம் நல்ல படியாக போய்க்கொண்டு இருந்தது. ஆனால் கீர்த்திக்கு அது பிடிக்க வில்லை. ஏதோ சுதந்திரம் இல்லாதது போல இருந்தது. ரகு ஒரு கணவனாக அவளை நெருங்கி இருந்தால் அவளும் இந்த வாழ்க்கையை தொடர்ந்திருப்பாளோ என்னவோ? அவன் அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று இருந்தான். ஆனால் ஆதியை நன்கு கவனித்துக் கொண்டான். தாய் தந்தையையும் தன்னுடன் அழைக்க நிர்மலா மற்றும் மூர்த்தி இருவரும் சென்னையில் இருந்து பேங்க்ளூருக்கே குடி போனார்கள். மூர்த்தி வேலை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து விட்டார்.

இது கீர்த்திக்கு உவப்பானதாக இல்லை. அனைவரும் வீட்டில் இருப்பதும், குழந்தையை கவனிக்கச் சொல்வதும் கீர்த்திக்கு எரிச்சலை தான் தந்தது. இதில் இருந்து எப்படி வெளியே வர என்று தான் அவள் மூளை யோசித்தது. ரகு தன்னை எந்த இடத்தில் வைத்திருக்கிறான் என்று அவளுக்கு தெரிய வேண்டியது இருந்தது.

ஒரு நாள் “என்னை மன்னிச்சிரு ரகு, என்னால தான் உன் வாழ்க்கை போயிருச்சு”, என்றாள்.

“ஏன் எனக்கு என்ன? நல்ல தானே இருக்கேன். நீ இருக்க ஆதி இருக்கான். அம்மா அப்பா இருக்காங்க. மெயின் எக்ஸாம் ரிசல்ட் மட்டும் தான் வரணும். அது வந்ததும் வேலை கிடைச்சிரும். என் வாழ்க்கை நல்லா தான் போகுது”, என்றான்.

உண்மையிலே அவன் அப்படி தான் நினைத்தான். சுனிலின் நினைவில் வாழும் கீர்த்தியை தள்ளி வைத்து விட்டு வேறொரு வாழ்க்கையை வாழ எல்லாம் அவன் யோசிக்கவே இல்லை. கீர்த்தியை தனியே விட்டுவிட்டு ஜானகியை தேடிச் செல்லவும் அவன் நினைக்க வில்லை.

அவன் காதலி மனைவி எல்லாம் அவனைப் பொறுத்த வரை ஜானகி தான். ஆனால் இந்த ஜென்மத்தில் அவன் கீர்த்திக்கு துணையாக ஆதிக்கு தந்தையாக இருக்க வேண்டும் என்ற முடிவில் தான் இருந்தான். ஆனால் அதை முறியடித்தாள் கீர்த்தி.

“இல்லை ரகு, உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு உனக்கு புரியுதா?”, என்று கேட்டாள் கீர்த்தனா.

“என்னோட வாழ்க்கை நீயும் ஆதியும் தான் போதுமா?”

“அப்படின்னா என்னை பொண்டாட்டியா நினைக்க உன்னால முடியுமா?”, என்று எதிர்பார்ப்பை மறைத்துக் கொண்டு சாதாரணமாக கேட்டாள்.

“நோ, ஐ லவ் ஜானகி. அவளைத் தவிர வேற யார் கூடவும் என்னால தாம்பத்தியம் வச்சிக்க முடியாது”, என்று அவன் உறுதியாக சொல்ல அவளுக்கு எரிச்சலாக வந்தது.

“இந்த முடிவுல உன்னால கடைசி வரை இருக்க முடியுமா?”

“ஏன் முடியாது? நாம பிரண்ட்ஸ். உன் மேல எனக்கு அந்த எண்ணங்கள் எல்லாம் ஒரு நாளும் வராது”, என்று சொல்ல ஒரு பெண்ணாக தோற்று விட்டதாக தான் எண்ணினாள். ஆனாலும் உண்மையைச் சொல்ல எல்லாம் அவள் நினைக்க வில்லை.

“ஆனா நம்மளை சுத்தி இருக்குறவங்க நம்மளை அப்படியே விடுவாங்கன்னு நம்புறியா?”, என்று கேட்டாள்.

“புரியலை”

“நேத்து உங்க அம்மா ஆதி கிட்ட அடுத்த வருஷம் உனக்கு ஒரு தங்கச்சி பாப்பா வந்துரும்னு சொல்றாங்க. எங்க வீட்லயும் ரெண்டு வருஷம் கழிச்சு இன்னொரு குழந்தை பெத்துக்கோன்னு சொல்றாங்க. நான் என்ன செய்யட்டும்? சொல்லு ரகு”, என்று கேட்க அதிர்ந்து போனான்.

“அதானே இதை எப்படி மறந்தேன்?”, என்று எண்ணி புருவம் தேய்த்தான்.

அவனையே பார்த்தவள் “அதனால தான் நான் உன் கிட்ட கேட்டேன் ரகு. நம்மளைப் பொறுத்த வரைக்கும் நாம பிரண்ட்ஸ்,. ஆனா மத்தவங்களைப் பொறுத்த வரை நாம புருஷன் பொண்டாட்டி. அப்படின்னா அவங்க அதை தான் எதிர் பார்ப்பாங்க. ரெண்டாவது குழந்தை உருவாகலைன்னா உங்க அம்மா என்னை ஹாஸ்பிட்டல்க்கு கூட்டிட்டு போவாங்க. ஏன்னா உங்க அம்மாவுக்கு நீ ஒரு புள்ளையாம். அதனால உனக்கு மூணு பிள்ளையாவது இருக்கனுமாம். அப்ப என்ன செய்ய?”, என்று கேட்க நிதர்சனம் புரிந்தது.

“இதை நான் யோசிக்கலை கீர்த்தி. அம்மா ஆசை எனக்கும் தெரியும். இப்ப என்ன பண்ண?”

“எனக்கு தெரியலைன்னு தான் நான் உன்னைக் கேக்குறேன். வேணும்னா ஒண்ணு செய்யலாம்”

“என்ன கீர்த்தி?”

“நாம உண்மையிலே கணவன் மனைவியா மாறலாம். எனக்கு சம்மதம்”, என்று சொல்லி விட்டு தலை குனிந்து கொண்டாள். அவளைப் பொறுத்த வரைக்கும் அது வெட்கம். ஆனால் அவன் அவள் குற்ற உணர்வில் தலை குனிகிறாள் என்று எண்ணிக் கொண்டான்.

“எனக்கு உன் மனசு புரியுது கீர்த்தி. உன் மனசுக்குள்ள என் வாழ்க்கையைக் கெடுத்துட்டோமேன்னு உனக்கு குற்ற உணர்ச்சி இருக்கு. என் வாழ்க்கைக்காக தான் இப்படி நீ சொல்றேன்னு எனக்கு புரியுது”, என்று அவன் சொல்ல “உன் தலை, நான் எனக்காக பேசுறேன் டா. உன்னால நான் எத்தனை நாள் தான் என் ஆசைகளை அடக்கி வாழுறது?”, என்று எண்ணிக் கொண்டாள்.

“அதுக்கு அவசியமே இல்லை கீர்த்தி. நீ எனக்கு ஃபிரண்ட், ஒரு தங்கச்சி மாதிரி. அடுத்தவங்களுக்காக கூட உன்னை என்னால அப்படி யோசிக்க முடியாது. இதுல இருந்து தப்பிக்க ஒரு வழி தான் இருக்கு”

“என்ன?”

“டைவர்ஸ்”

“ரகு”

“பயப்படாதே, நான் உன்னைப் பாத்துக்குறேன். உன் வாழ்க்கைக்கான எல்லா செலவும் என்னோடது. ஆனா நாம பிரியலாம்”

“என்ன சொல்ற? என்னால ஆதியை தனியா வளக்க முடியாது. அது மட்டும் இல்லாம அவனைப் பாத்தாலே எனக்கு சுனில் நினைவு தான் வருது.

“ஆதியை வேணும்னா என் கிட்ட கொடுத்துரு. அவனை நான் வளத்துக்குறேன். உனக்கு என் ஃபிரண்ட் கிட்ட சொல்லி ஒரு வேலை வாங்கித் தரேன்”, என்று சொல்ல அவளுக்கு பெருத்த நிம்மதி.

Advertisement