Advertisement

அத்தியாயம் 18

இடைவெளி இருந்தாலும் 

இணைந்து பயணிக்கிறது 

நம் இதயங்கள்!!!

விஷ்ணு வந்ததும் ஜானகியை அவனிடம் ஒப்படைத்து விட்டு போலீசில் சரணடைந்து விட வேண்டும் என்று முடிவு செய்து மோகன் அமர்ந்திருக்க அப்போது சுனில் எண்ணுக்கு அழைப்பு வந்தது. அதுவும் கீர்த்தி என்று அதில் வர இது எந்த கீர்த்தின்னு தெரியலையே? என்று எண்ணிக் கொண்டே அதை எடுத்தார்.

அவர் எடுத்தது தான் தாமதம் “ஏன் சுனில் இத்தனை நாள் போனை எடுக்கலை? என்ன ஆச்சு உனக்கு? எனக்கு இங்க எவ்வளவு பிரச்சனை தெரியுமா? அந்த ஜானகியை நிம்மதி இல்லாம பண்ணணும்னு நினைச்சு நான் பிரச்சனைல மாட்டிக்கிட்டேன். எனக்கு ரகு கூட கல்யாணம் முடிஞ்சிருச்சு சுனில். நான் மூணு வாரமா உனக்கு கால் பண்ணிட்டே இருக்கேன். உனக்கு என்ன ஆச்சு? அப்புறம் உன் குழந்தை என் வயித்துல வளருது டா. எப்படி இதை நான் ரகு கிட்ட சொல்ல முடியும்? ரகுவையும் ஜானகியையும் பிரிக்க நினைச்சு தான் அது ரகுவோட குழந்தைன்னு ஜானகி கிட்ட சொன்னேன். ஆனா அவ என்னை இவ்வளவு பெரிய இக்கட்டுல மாட்டி விடுவான்னு யோசிக்கலை. எப்ப குழந்தை விஷயம் வெளிய தெரியுமோன்னு பயமா இருக்கு. அன்னைக்கு ஜானகியை உன்னை ரேப் பண்ண சொன்னேன் தானே? அதையும் நீ பண்ணலை. வெறும் அவளை டிரஸ் இல்லாம வீடியோ மட்டும் எடுத்து வச்சிருக்க? சரி பரவால்ல. அதை வச்சு எப்படியாவது ரகுவை மிரட்டி டைவர்ஸ் வாங்க வச்சு என்னைக் கூட்டிட்டு போ டா. சரி யாரோ வராங்க. நான் அப்புறம் பேசுறேன். எப்படியாவது வந்து கூட்டிட்டு போயிரு சுனில்”, என்று சொல்லி விட்டு கீர்த்தி போனை வைக்க அதிர்ந்து போனார் மோகன்.

“கீர்த்தியா? கீர்த்தனாவா? மகளின் தோழியா? அவளா இதற்கெல்லாம் காரணம்?”, என்று பேரதிர்ச்சி அவருக்கு. மகள் பாம்புக்கு பாலை வார்த்து விட்டாள் என்று புரிந்தது. அவளைக் கொல்லும் வெறி வந்தது. ஆனால் இப்போது அவள் மேல் கை வைத்தால் பிரச்சனை வேறு மாதிரி திரும்பும் என்று எண்ணிக் கொண்டார். கூடவே செத்துக் கிடந்த சுனிலை ஒரு மிதி மிதித்தார்.

காரை எடுத்துக் கொண்டு அந்த இடத்துக்கு வந்த விஷ்ணு அங்கிருந்த நிலையைக் கண்டு அதிர்ந்து போனான்.

“அப்பா என்ன இதெல்லாம்? ஜானு எப்படி இங்க? இவன் யாரு? என்ன நடந்துச்சு?”, என்று அவன் அதிர்ச்சியில் கேள்வி கேட்க “குட்டிமாவைக் தூக்கிட்டு இங்க இருந்து போ விஷ்ணு. நான் இவனைக் கொன்னுட்டேன்”, என்றார் மோகன்.

“அப்பா…”

“இங்க பாரு விஷ்ணு, ஜானு இங்க இருந்தா அவ ஏன் இங்க வந்தா? என்ன பிரச்சனைன்னு எல்லாம் பேச்சு வரும். அவ வாழ வேண்டிய பொண்ணு. உனக்கு என்ன நடந்ததுன்னு நான் அப்புறம் சொல்றேன்”, என்று சொன்னவர் அவனுடன் மகளை அனுப்பி விட்டார். கூடவே சுனிலின் போன், லேப்டாப், ஜானகியின் போன் எல்லாம் அவனிடமே கொடுத்து பத்திரப் படுத்தச் சொன்னார். உயிரே போனாலும் அதை யாரிடமும் கொடுக்க கூடாது என்று சத்தியம் வாங்கி விட்டே அவனை அனுப்பி வைத்தார்.

பிறகு மகளின் ரத்த துளிகளை சுத்தம் செய்து விட்டு அவரே போலீசில் சரணடைய உள்ளூர் நியூஸ் பேப்பரில் இந்த செய்தி வந்தது பெயர் மாற்றி. தொழில் போட்டியில் கார்மெண்ட்ஸை மூடச் சொன்னான். அதில் வந்த தகராறில் கொன்று விட்டேன் என்று ஏதேதோ கதையைச் சொன்னார்.

குப்தா வீட்டில் இருந்து கொஞ்சம் பிரஷர் கொடுக்க தீவிர விசாரணை செய்யாமலே போலீஸ் குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது. மோகனே கொலை செய்ததை ஒப்புக் கொண்டதால் நேரடியாக தண்டனை கொடுத்து விட்டார்கள். குப்தா வீட்டினருக்கு மகன் கொலை எதற்கு என்று புரியா விட்டாலும் குற்றவாளி சரணடைந்ததாலும் அதற்கு மேல் மோகன் பேச மறுத்ததாலும் அப்படியே விட்டுவிட்டார்கள்.

மருத்துவமனையில் தங்கையை அனுமதித்த விஷ்ணு தாயிடம் அறையும் குறையுமாக சொல்லி விட்டு தந்தையைக் காணச் சென்றான். மோகன் அவனிடம் எதையுமே சொல்ல வில்லை. அவர் சொல்ல மறுப்பது புரிந்து அவனே விட்டுவிட்டான். ஆனால் சொத்தை வித்தாவது ஜாமீனில் எடுக்கப் போவதாக அவன் சொல்ல மோகன் மறுத்து விட்டார்.

இப்போது அவர் வெளியே வந்தால் குப்தா வீட்டினரால் பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது என்று தான் தண்டனையை அனுபவித்தார்.

ஜானகி கண் விழித்து நடந்ததை அறிந்து கதறினாள். தனக்காக தந்தை ஜெயிலுக்கு போனதுக்கு அவளுக்கு அவ்வளவு வலி. என்ன நடந்தது என்று விஷ்ணு விசாரிக்க எல்லாவற்றையும் சொன்னாள். அவள் சுனில் பற்றி மட்டும் சொல்ல அவனே நடந்ததை ஊகித்துக் கொண்டான். ஆனால் அவனுக்கு கீர்த்தியைப் பற்றி எதுவுமே தெரிய வில்லை. தங்கையை தேற்றினான். இத்தனை நாள் இருவருக்கும் முட்டிக் கொள்ளும். இன்றோ அந்த குடும்பத்தையும் அன்னை தங்கையையும் தூணாக தாங்கிக் கொண்டான்.

நிலைமையை அனைவரும் ஓரளவுக்கு ஏற்றுக் கொண்ட பிறகு தான் லேப்டாப், போன் எல்லாம் கண்ணில் விழுந்தது. அந்த லேப்டாப்பையும் போனையும் தந்தை சாம்பல் கூட தெரியாத அளவுக்கு எரிக்கச் சொல்லி இருக்க அவன் புருவம் உயர்ந்தது. அதில் ஏதோ இருக்கிறது என்று எண்ணியவன் அதை பரிசோதித்தான். ஐ.டி ஊழியனான அவன் அந்த லேப்டாப்பில் அழிந்திருந்த தகவல்களை எல்லாம் மீண்டும் எடுத்துப் பார்த்தான்.

அதில் தங்கையின் வீடியோவும் இருக்க அவன் கண்கள் கலங்கியது. ஒரு அண்ணனாக தங்கைக்காக அவ்வளவு வேதனை பட்டான். இப்போது தந்தை கொலை செய்தது சரி என்று புரிந்து அதை சுக்கு நூறாக உடைத்து எரித்து சாம்பலாகினான். அந்த வீடியோ விஷயத்தை அவனும் இது வரை வெளியே மூச்சு விட வில்லை. அவனுக்கு கீர்த்தி விஷயம் தெரிந்திருந்தால் இந்நேரம் அவளை ஒரு வழி செய்திருப்பான். அதனால் தான் மோகன் அதை மறைத்தாரோ என்னவோ?

அந்த வீடியோ பற்றி இது வரை ஜானகிக்கு தெரியவே தெரியாது. மோகனைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது. இது ஒரு பக்கம் என்றால் ரகுவின் மனநிலையோ மிக மோசமாக இருந்தது.

கீர்த்தியுடன் திருமணம் முடிந்து விட்டது. ஆனால் அவளை மனைவியாக அவனால் எண்ணவே முடிய வில்லை. ஏதாவது தெரியாத பெண் மனைவியாக வந்திருந்தால் கூட மனதை மாற்றி அவனே அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டிருப்பானா இருக்கும். ஆனால் கீர்த்தியை முடியவே இல்லை. கூடவே அவளை நினைத்தும் பாவமாக தான் இருந்தது.

ஏனென்றால் பார்க்கும் நேரம் முழுக்க அவளும் அழுது கொண்டே தான் இருந்தாள். ஒரே வீட்டில் இருந்தாலும் பேசாமலே இருவருக்குள்ளும் ஒரு வாரம் கடந்தது.

அன்று சுனில் என்று நினைத்து மோகனிடம் எல்லாம் சொல்லி விட்டு போனை வைத்தவள் திரும்பிப் பார்க்க அங்கே ரகு நின்றிருந்தான். “பேசினதை எல்லாம் கேட்டுட்டானோ?”, என்று பயந்து அவள் திருதிருவென்று விழித்தாள்.

அவள் பேசியது அவனுக்கு கேட்க வில்லை. ஆனால் அவள் திருதிருவென்று விழிப்பது அவனுக்கு சந்தேகத்தை கிளப்பியது.

“போன்ல யாரு கீர்த்தி?”, என்று கேட்க அதிர்ந்து போனவள் “அது… அது வந்து… ஜானகி…”, என்றாள்.

“அவளா? அவ கிட்ட எதுக்கு பேசுற? அவ மனுசியா? பண பேய். அவளை லவ் பண்ணுறதுக்கு நான் வெக்கப் படுறேன். இனி அவ கிட்ட பேசாதே”, என்று கோபத்துடன் சொல்லி விட்டுச் சென்று விட்டான். உண்மையிலே அப்போது ஜானகி மீதும் தனது தந்தை மீதும் கோபத்தில் தான் இருந்தான். அவள் விரும்ப வில்லை என்றெல்லாம் அவனுக்கு கோபம் வரவில்லை. ஆனால் மன்னிப்பு கேட்க கூட அவள் அனுமதிக்க வில்லையே என்ற கோபம் அவனுக்கு.

ரகு ஜானகியை திட்டியதும் “அப்பாடி தப்பித்தோம்”, என்று எண்ணிய கீர்த்திக்கு வாந்தி வேறு கொடுமையாக இருந்தது.

அவள் படும் பாடு யாருக்கு தெரிந்ததோ இல்லையோ மூர்த்திக்கு தெரிந்தது. உடனே மகன் மருமகளை பேங்க்ளூருக்கு அனுப்பி விட்டார். இங்கேயே இருந்தால் நிர்மலாவுக்கு சந்தேகம் வருமே? அதனால் அங்கே ஒரு சொந்தக்காரர் இருக்க அவரை வைத்து வீடு பார்த்து அவர்களை குடி இருக்க வைத்தார். மகனையும் கோச்சிங்க் கிளாஸ் போகச் சொன்னார்.

Advertisement