Advertisement

     அவள் பேச்சில் அதிர்ந்து “மிர்ச்சி”, என்று அழைக்க “ஸ்டாபிட் ரகு. என்னை ஜானுன்னு கூப்பிடு. இவ்வளவு நாள் நீ பிரண்டா தான் பழகுறேன்னு நினைச்சேன். ஆனா இப்படி காதல்ன்னு வந்து நிப்பேன்னு நினைக்கலை. இனி என் கிட்ட பேசாத”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள். இன்னும் ஒரு நொடி இருந்தாலும் கதறி விடுவாள்.

     அதையும் விட அவன் “காதல் இல்லாம ஏன் டி என்னோட தொடுகையை அலோ பண்ணின?”, என்று கேட்டு விட்டால் அதை அவளால் தாங்க முடியாதே? அதனால் தப்பித்தோம் பிழைத்தோம் என்று சென்று விட்டாள்.

     அவனோ அவள் பேச்சில் அதிர்ந்து நின்றான். காதலைச் சொன்னதும் சரி என்று சொல்லி வெக்கப் படுவாள் என்று தான் எண்ணினான். ஜானகி தன்னை காதலிக்கிறாள் என்று அவன் நினைக்க வில்லை. ஆனால் தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்வாள் என்று முழுமையாக நம்பினான். ஆனால் அவளோ பணம் அழகு என்று தன்னைக் கீழாக பேசுவாள் என்று நினைக்கவே இல்லை.

     ஜானகியா தன்னை இப்படி இகழ்ந்து பேசினாள் என்று அவனால் நம்பக் கூட முடிய வில்லை. “ஏன் இப்படி பேசினா? அப்படின்னா அவ உண்மையாவே என்னை பிரண்டா தான் நினைச்சாளா? நான் தான் அவசரப் பட்டுட்டேனா? ஆமா அவ என்னை பிரண்டா தான் நினைச்சிருக்கா. நான் அவ கையைப் பிடிச்சப்ப செருப்பால அடிப்பேன்னு தானே சொன்னா? லிஃப்ட்ல நான் அப்படி நடந்துக்கிட்டதுக்கும் அழுதாளே? அவளுக்கு என்னைப் பிடிக்கலை? பரவால்ல. எனக்கு அவ நட்பாது வேணும். நான் அவ கிட்ட மன்னிப்பு கேக்கணும்”, என்று எண்ணி கண்ணீருடன் அவன் அவளை அழைக்க அவன் அழைப்பை அவள் ஏற்கவே இல்லை.

     காதல் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவள் இனி தன்னிடம் பேசக் கூட மாட்டாளோ என்ற கவலையில் தளர்ந்து போய் அமர்ந்தவன் பின் நேரம் ஆனதால் வீட்டுக்குச் சென்றான். அந்த நிமிடம் அவன் தொட்டதும் அவள் உருகி கரைந்தது அவனுக்கு நினைவில் வரவில்லையா இல்லை அதை அவன் கவனிக்க வில்லையா என்று தெரிய வில்லை.

     வீட்டில் அவனால் அன்னை தந்தையிடம் சகஜமாக கூட பேச முடியவில்லை. இனி ஜானகி எனக்கு இல்லையா என்று அவன் மனம் அவ்வளவு வேதனை கொண்டது. மீண்டும் மீண்டும் அவளுக்கு அழைக்க அவளோ போனை அணைத்து வைத்து விட்டாள்.

     அவன் நிலை இப்படி இருக்க தன்னுடைய அறைக்குள் வந்த ஜானகியோ ஏங்கி ஏங்கி அழுதாள். உண்மையான காதலை எத்தி தள்ளி விட்டு வந்த வேதனை தாங்க முடியாமல் அழுதாள். அவள் அறைக்குள் இருந்தால் தேவகி தொல்லை கொடுக்க மாட்டாள் என்று தெரியுமாதலால் அப்படி ஒரு அழுகை.

     மோகன் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருக்க அவரிடமும் அவள் பகிர்ந்து கொள்ள வில்லை. அவர் இருந்தாலாவது விஷயத்தைக் கேட்டு ஏதாவது செய்திருப்பார். விஷ்ணு படித்து முடித்து அப்போது தான் வேலைக்கு சேர்ந்திருந்ததால் அவனுக்கு நைட் ஷிப்ட்டாக தான் இருந்ததால் அவனும் வீட்டில் இல்லை.

     அன்று முழுவதும் கதறி அழுத ஜானகி அடுத்த நாளே ரகுவின் அட்ரசை டைரியில் இருந்து எடுத்து அவனது தந்தைக்கு கடிதம் எழுதி அனுப்பினாள். அது மொட்டைக் கடுதாசி போல எல்லாம் இல்லாமல் அவள் பெயர் போன் நம்பர் எல்லாம் எழுதியே அனுப்பினாள். அனுப்பிய பிறகு தான் “ஐயோ ரகு வீட்ல இருப்பானே? அவன் கையில சிக்கினா என்ன பண்ணுறது?”, என்று பயந்தாள்.

     ஆனால் அந்த லட்டரை வாங்கியது ரகு தான். தந்தைக்கு வந்த லட்டர் என்று தெரிந்ததால் அவன் அதைக் கவனிக்க வில்லை. போஸ்ட் மேன் மூர்த்தி என்றதும் வாங்கி வைத்து விட்டான்.

     மற்ற நேரமாக இருந்திருந்தால் பிரித்து படித்திருப்பான். இப்போது அவன் மனம் முழுக்க ஜானகியே இருக்க அவனால் யோசிக்க கூட முடிய வில்லை.

     மூர்த்தி வந்ததும் நிர்மலா அதைக் கொடுக்க அதை வாசித்தவர் அதிர்ந்து தான் போனார். “யாருங்க லட்டர் போட்டது? அதுவும் இந்த காலத்துல?”, என்று நிர்மலா கேட்க “இது டிப்போல இருந்து இன்சூரன்ஸ் விஷயமா அனுப்பிருக்காங்க மா”, என்று சமாளித்தவர் தனியே சென்று உடனே ஜானகியை அழைத்து காட்டுக் கத்தல் கத்தினார். நிர்மலாவுக்கு குழப்பம் தான். ஆனால் கணவரை சந்தேகம் எல்லாம் பட வில்லை. அதனால் ஒரு தோள் குளுக்களோடு விட்டுவிட்டாள்.

     மூர்த்தியிடம் நன்கு திட்டு வாங்கிய ஜானகி பொறுமையாக எல்லாவற்றையும் விளக்க நொந்து தான் போனார். அவரும் நம்பி விட்டார். ஆனாலும் மனம் ஏதோ அடித்துக் கொண்டது.

     “அங்கிள் பிளீஸ், ரகுவுக்கு இந்த விஷயம் தெரியாமலே இந்த கல்யாணத்தை முடிச்சு வைங்க. ரகு கிட்ட இதைச் சொன்னா அவன் கீர்த்தியை நம்ப மாட்டான். கீர்த்தி வாழ்க்கை பாழாப் போகும். ஒரு வேளை ரகு நம்பிட்டா அவனே அவனை அழிச்சிப்பான். நிச்சயம் இதையெல்லாம் அவன் சாதாரணமா எடுத்துக்க மாட்டான். பிளீஸ் கீர்த்தி வீட்ல பேசி ரகுவை கட்டாயப் படுத்தி கல்யாணம் பண்ணி வச்சிருங்க”, என்று கெஞ்சி பேசி விட்டு போனை வைத்தாள் ஜானகி.

     மூர்த்திக்கு என்ன செய்ய என்றே தெரிய வில்லை. அவர் தலையைப் பிடித்த படி அமர்ந்திருக்க அதே நேரம் சுனிலும்  ரகுவின் தந்தைக்கு கீர்த்தி மற்றும் ரகு இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அனுப்பினான்.

     அவனுக்கு ஜானகி மேல் இருந்த வெறியும் ஆசையும் அதிகமாகியது. அதனால் கீர்த்தியை தன்னுடைய வாழ்வில் இருந்து அப்புறப் படுத்த எண்ணினான். அவனுக்கு ஜானகி வேண்டும் என்றால் ரகுவும் கீர்த்தியும் அவர்கள் வாழ்வில் குறுக்கே வரக் கூடாது என்று எண்ணி அவர்களை ஒன்று சேர்க்க முடிவு எடுத்து தான் ரகுவின் தந்தைக்கு அனுப்பி வைத்தான். ரகுவின் வாழ்க்கையைக் கெடுக்க கீர்த்தி எடுக்கச் சொன்ன புகைப்படம் அவளது வாழ்வையே மாற்றி விட்டது.

     ஏற்கனவே மகனைப் பற்றி ஜானகி சொன்னதும் நம்பி இருந்த மூர்த்தி அந்த புகைப்படங்களைக் கண்டதும் மகன் தவறு செய்து விட்டான் என்று நம்பியே போனார். அந்த புகைப்படத்தையும் ஜானகி தான் அனுப்பி இருக்கிறாள் போல என்றும் எண்ணிக் கொண்டார். அதற்கு மேல் அவருக்கு என்ன ஆதாரம் வேண்டுமாம்?

     அடுத்த நாளே கிளம்பி கீர்த்தி வீட்டுக்கு சம்பந்தம் பேச சென்று விட்டார். அங்கேயும் மனது அலைபாய கீர்த்தியை தனியே அழைத்தவர் “மாசமா இருக்கியா மா?”, என்று கேட்டார்.

     அதிர்ந்து நின்றாள் அவர் கேள்வியில். அவளுடைய அதிர்ச்சியே அது உண்மை என்று அவருக்கு புரிய வைக்க “அதுக்கு என் மகன் தானே காரணம்? என் பேரன் வாழ்க்கை எனக்கு முக்கியம்? அடுத்த வாரம் உனக்கும் ரகுவுக்கும் கல்யாணம். உங்க வீட்ல சரின்னு சொல்லிட்டாங்க”, என்று திருமணத்தை முடிவு செய்து விட்டு தான் கிளம்பினார்.

     வீட்டுக்கு சென்று மூர்த்தி விஷயத்தைச் சொன்னதும் ஏற்கனவே ஜானகி காதலை மறுத்து விட்டாள் என்ற விரக்தியில் இருந்த ரகு திருமண செய்தி கேட்டு அதிர்ந்து விட்டான்.

     அவன் எவ்வளவோ போராட அவரோ திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்று சொன்னார். அவன் மறுக்க விஷ பாட்டிலை கையில் எடுத்துக் கொண்டார். வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டான். நிர்மலாவும் அவன் இப்ப தானே படிப்பையே முடிச்சிருக்கான் என்று எவ்வளவோ சொல்லியும் மூர்த்தி கேட்கவே இல்லை.

     பெண் யார் என்று கூட ரகு கேட்டுக் கொள்ள வில்லை. தந்தையின் பார்வை ஒரு மாதிரி அளவிடுவதைக் கூட அவன் அப்போது உணர வில்லை. தந்தை உயிருக்கு முன் அவனுக்கு வேறு எதுவும் பெரிதாக தெரியவில்லை என்பதால் அமைதியாக இருந்து கொண்டான். ஜானகி சம்மதம் சொல்லி இருந்தாளாவது தந்தையிடம் போராடி இருப்பான். அவளும் அவனது போனை எடுக்காமல் இருக்க தவித்து தான் போனான்.

     அதே போல கீர்த்திக்கோ அதிர்ச்சி என்றால் அப்படி ஒரு அதிர்ச்சி. மூர்த்தி வந்து பேசியதும் இது ஜானகி வேலை என்று புரிந்தது. ஆனால் என்ன செய்ய என்று தெரியவில்லை. ஏனென்றால் சுனில் எண் வேறு அணைத்து வைக்கப் பட்டிருந்தது. அவளுக்கு என்ன செய்ய என்று கூட தெரிய வில்லை. ஏனோ கண்களைத் திறந்து கொண்டே நெருப்புக் குழியில் விழுந்த உணர்வு அவளுக்கு.

     சுனிலுக்கு தெரியும் கீர்த்தி தன்னை அழைப்பாள் என்று. அதனால் தான் போனை அணைத்து வைத்திருந்தான். வேறு போன் தான் பயன் படுத்திக் கொண்டிருந்தான். அவர்கள் திருமண வேலைகள் நடக்க சென்னை வந்த சுனில் இப்போது ரகு, ஜானகி இருவரையும் நோட்டம் விட்டான். ரகு கீர்த்திக்கு திருமணம் பேசியது எல்லாமே அவனுக்கு தெரிந்தது.

     கீர்த்தி அழைப்பது கூட திருமணம் விஷயம் சொல்லத் தான் என்று புரிந்து கொண்ட சுனில் கீர்த்தியை தவிர்த்தான். ரகு கீர்த்தி திருமண வேலைகள் வேகமாக நடந்தது. ரகு தனிமையிலே நேரத்தைச் செலவிட்டான். பத்திரிக்கை வந்த பிறகு தான் கீர்த்தனா தான் மணப்பெண் என்று அவனுக்கே தெரிந்தது. மீண்டும் தந்தையிடம் சென்று அவன் மறுக்க அவன் பேச வருவதைக் கூட அவர் கேட்க வில்லை.

     அவருக்கு தெரியும் மகன் ஒழுக்கசீலன் என்று. ஆனால் அவனை அறியாமலே போதையில் அவன் செய்த செயல் அவனை வெகுவாக காயப் படுத்தும் என்பதால் தான் அவனிடம் அவர் எதையுமே சொல்ல வில்லை. அதனால் தான் அவன் அறியாமலே அவன் வாழ்வை சரி படுத்த முயன்றார். ரகுவுக்கு அந்த விஷயம் தெரியக் கூடாது என்று ஜானகியும் கேட்டுக் கொண்டாளே.

     ரகு கீர்த்தனா திருமணம் அன்று அறைக்குள் முடங்கி கிடந்தாள் ஜானகி. அப்போது தான் வீட்டில் உள்ளவர்கள் அவளைக் கவனித்தார்கள்.

Advertisement