Advertisement

     “ரகு, ஏன் டா இப்படி? என்னால முடியலை. எனக்கு கஷ்டமா இருக்கு. இனி நீ எனக்கு இல்லையா? உன்னோட குழந்தையை சுமக்குற பாக்கியம் எனக்கு இந்த ஜென்மத்துல இல்லாம போச்சே டா? இப்ப வரைக்கும் உன்னோட நினைவுகளோட தானே வாழ்ந்துட்டு இருக்கேன்? நீ தொட்ட ஒவ்வொரு தருணத்தையும் நினைச்சு நினைச்சு சந்தோஷப் பட்டுட்டு இருந்தேனே? இப்ப எல்லாம் போச்சே? கீர்த்தியும் உன்னை லவ் பண்ணுறாளாம் டா. இது எனக்கு தெரியாதே? இப்ப உன் குழந்தை வேற? அதை எப்படி டா அப்பா இல்லாம விட முடியும்? கீர்த்திக்கும் உன்னோட குழந்தைக்கும் நீ வேணும் டா. உங்களை நான் சேத்து வைப்பேன். நீ கீர்த்தி கூட சந்தோஷமா இருக்கணும். நான் உன்னை நினைச்சிட்டே வாழ்ந்துருவேன். ஆனா கஷ்டமா இருக்கு டா”, என்று எண்ணி அழுதவள் அதற்கு பிறகு தெளிவாகி விட்டாள் என்ன செய்ய வேண்டும் என்று.

     ஜானகி தான் பார்த்துக் கொள்வதாக சொல்லவும் இனி ஜானகி ரகுவுடன் சேர மாட்டாள் என்று முடிவு செய்து சுனிலுக்கு விடாப் பிடியாக அழைக்க ஆரம்பித்தாள் கீர்த்தி.

     அவன் எடுத்தால் தன்னை உடனே வந்து அழைத்துச் செல்லும் படி சொல்லுவதற்காக காத்திருந்தாள். கூலி வேலை செய்யும் தந்தையோ அக்கம் பக்க வீடுகளில் பாத்திரம் விளக்கும் தாயும் படித்துக் கொண்டிருக்கும் இரண்டு தங்கைகளும் கூட கீர்த்திக்கு நினைவு இல்லை.

     சுனிலை உடனே திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும் என்பது தான் அவள் முடிவு. அதே நேரம் சுனிலோ ஜானகியின் அழகில் தான் மயக்கத்தில் இருந்தான். இப்போது அவன் மனதில் கீர்த்தி இல்லவே இல்லை. அதற்காக அவன் ஜானகியை உயிருக்கு உயிராக விரும்பினான் என்று சொல்ல முடியாது. ஆனால் அவனுக்கு ஜானகி வேண்டும்.

     ரகு ஜானகியிடம் வந்து வெளியே செல்லலாம் என்று அழைக்க யாருக்கும் வெளியே செல்ல மனதில்லை என்பதால் மறுத்து விட்டாள். அதனால் மாலை வரை அப்படியே கிளாசில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கவே முடிவு செய்தார்கள். ரகு ஜானகியிடம் தனியே பேசும் தருணத்துக்காக காத்திருக்க கீர்த்தி ஜானகியை விட்டு நகரவே இல்லை.

     அன்று மாலை அனைவரும் கிளம்பிய போது ஜானகியும் கிளம்ப ரகு மட்டும் ஜானகிக்காக காத்திருந்தான். அவனுடைய காதலைச் சொல்வதற்காக.

     “ஜானு, கிளம்பிறாத. ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு”, என்றான் ரகு. அங்கே நின்ற கீர்த்திக்கு ரகு காதலைச் சொல்ல வந்திருக்கிறான் என்று புரிந்தது. அதனால் ஜானு புறம் திரும்பி “சரி ஜானு, நீங்க பேசிட்டு கிளம்புங்க. நான் ஊருக்கு போகணும். நான் கிளம்புறேன். வரேன் ரகு”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள். அவள் மனதில் அப்படி ஒரு நிம்மதி. இனி ரகு என்ன சொன்னாலும் ஜானகி அவன் காதலை ஏற்க மாட்டாளே? அது அவளுக்கு மிகப் பெரிய சந்தோசத்தைக் கொடுத்தது.

     ஹாஸ்டல் அறைக்கு சென்ற கீர்த்தி “நான் நம்பர் மாத்திட்டு உனக்கு கூப்பிடுறேன் சுனில்”, என்று தகவல் அனுப்பி வைத்தவள் அந்த சிம் கார்டை உடைத்து தூரப் போட்டு விட்டு ஊருக்கு கிளம்பி விட்டாள். ஆனால் அவள் குழந்தையை அழிக்க எல்லாம் நினைக்க வில்லை. நிச்சயம் கீர்த்திக்கு சுனில் மேல் அவ்வளவு நம்பிக்கை இருந்தது தன்னை திருமணம் செய்து கொள்வான் என்று.

     இங்கே ஜானகிக்கு ரகுவைக் காண காண மனம் கலங்கியது. தன்னிடம் இருக்கும் போது ஒரு பொருளில் அருமை நமக்கு தெரியாது. அது நம் கை விட்டு போன பிறகு அது தனக்கே வேண்டும் என்று தோன்றுமே அப்படி ஒரு மனநிலைமை அவளுக்கு. இப்போது அழுதால் எல்லாம் சொதப்பி விடும் என்று எண்ணியவள் தன்னை சமாளித்துக் கொண்டு “நீ இன்னும் கிளம்பலையா ரகு?”, என்று கேட்டாள்.

     “போகணும் ஜானு. உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதான் வெயிட் பண்ணுறேன். பேசலாமா?”

     “நானும் உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் ரகு”, என்று சொன்னதும் அவன் முகம் மலர்ந்தது. அவன் மலர்ந்த முகம் அவளுக்கு அவ்வளவு வேதனையைக் கொடுத்தது. அவளுக்கு தான் தெரியுமே ரகு தன்னை விரும்புவது.

     “ஏன் டா இதை இப்ப வந்து தான் நீ சொல்லனுமா? கொஞ்ச நாள்க்கு முன்னாடி சொல்லிருந்தா நானும் சரின்னு சொல்லிருப்பேன். கீர்த்தியும் உன்னை லவ் பண்ணி அப்படி எல்லாம் நடந்திருக்காதே?”, என்று மனதில் எண்ணியவள் “எங்க போய் பேசலாம்?”, என்று கேட்டாள்.

     “இதைச் சொல்லும் போது தனிமை தான் வேணும். ஆனா நீ எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு தெரியலை”, என்று எண்ணிக் கொண்டு “கேண்டீன் போகலாம்”, என்றான்.

     “சரி”, என்று சொல்லி அவனுடன் சென்றாள். அங்கே சென்று அமர்ந்ததும் “ஏதாவது வாங்கிட்டு வரவா ஜானு?”, என்று கேட்டான்.

     “டீ வேணும்”, என்று சொல்ல சரி என்று சொல்லி வாங்கி வந்தான். அதற்குள் அவனிடம் என்ன பேச என்று எல்லாம் யோசித்தாள்.

     “இந்தா குடி”, என்று கொடுத்தவன் “சொல்லு ஜானு, என்ன பேசணும்?”, என்று கேட்டான்.

     “இல்லை நீ சொல்லு”, என்று சொல்லி அவள் தப்பிக்க பார்த்தாள்.

     “சரி சொல்றேன்”, என்று அவன் சொன்னதும் அவளுக்கு திக்கென்று இருந்தது. இப்போது அவன் காதலைச் சொல்லி அவள் அதை மறுக்க தான் போகிறாள். அப்போது வரும் கண்ணீரை அடக்கி அவனிடம் சாதாரணமாக கூட பேச முடியாது. அந்த உணர்வை அவளால் கடக்க முடியாது.

     அதனால் “லேடீஸ் தான் பர்ஸ்ட், நான் சொல்றேன்”, என்றாள் ஜானகி.

     “சொல்லு மிர்ச்சி”, என்றான் ஆர்வமாக.

     “சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை. ஒரு டவுட் கேக்கணும்”

     “கேளு டி”, என்றவனின் குரலில் அதீத உரிமை தெரிக்க மனதுக்குள் நொந்து போனாள.

     “நேத்து ஒரு படம் பாத்தேன், அதுல ஒரு டவுட் வந்துச்சு”, என்று சொல்ல அவனுக்கு சப்பென்று போனது. அவன் முக்கியமான விஷயத்தை பேச வந்திருக்க அவள் அப்படிச் சொல்லவும் கடுப்பானவன் “என்ன டவுட்?”, என்று கேட்டான் எரிச்சலுடன்.

     அவன் உணர்வுகள் புரிந்தாலும் அதை காட்டாமல் “இல்லை ஹீரோ ஒரு பொண்ணை லவ் பண்ணுவான். அந்த பொண்ணு அந்த பையனை லவ் பண்ணலை”, என்றாள்.

     “சரி, அப்புறம்”

     “ஹீரோவை இன்னொரு பொண்ணு லவ் பண்ணுது. அந்த பையன் அந்த பொண்ணு கூட தனியா இருக்கும் போது அதிக பீவர்ல மயக்கத்துல அந்த பொண்ணை ரேப் பண்ணிட்டான்”

     “ஐயையோ, அப்புறம்?”

     “அப்படி நடந்தது அந்த பையனுக்கு தெரியாது. அந்த பொண்ணும் சொல்லலை. ஆனா கொஞ்ச நாள் கழிச்சு அந்த பொண்ணு பிரக்னண்ட்டா இருக்கா. இப்ப அந்த பொண்ணு என்ன பண்ணனும்? அந்த பையன் கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணனுமா? சொன்னா அந்த ஹீரோ நம்புவானா?”

     “அந்த பையன் இன்னொரு பொண்ணை லவ் பண்ணுறதுனால இந்த பொண்ணை ஏத்துக்குறது கஷ்டம் தான். அதுவும் அவனுக்கே தெரியாத பட்சத்துல எப்படி நம்புவான்?”, என்று கேட்டான் ரகு.

     “இதற்கு தானே கீர்த்தியும் பயந்தாள்?”, என்று எண்ணிய ஜானகி “ஆனா குழந்தை என்ன பண்ணும்? அவ எப்படி அப்பா இல்லாம வளர்ப்பா?”, என்று கேட்டாள்.

     “ஆமா குழந்தை பாவம். குழந்தைக்காக அந்த பொண்ணை ஏத்துகிட்டு தான் ஆகணும். சரி, அந்த படத்துல என்ன கிளைமேக்ஸ் வந்துச்சு?”, என்று கேட்டான்.

     “கிளைமேக்ஸ் பாக்கலை. பவர் இல்லை. அதான் உன் கிட்ட கேட்டேன். படம் பேரும் தெரியலை. சரி ரகு அந்த பையன் நீயா இருந்தா என்ன முடிவு எடுப்ப?”, என்று கேட்டாள்.

     “நானா இருந்தா அப்படி ஒரு தப்பு செஞ்சிருக்க மாட்டேன் ஜானு. மயக்கத்துல கூட இன்னொரு பொண்ணு என் பக்கத்துல வர முடியாது. என் மனசுல இருக்குற ஒருத்தி கிட்ட தான் என்னோட உணர்வுகள் வெளிப்படும். அப்புறம் எப்படி நான் அதை நம்புவேன். அப்படி ஏதாவது ஒரு பொண்ணு வந்து சொன்னா அரை பிச்சிருவேன்”, என்று சொல்ல ஜானகிக்கு வேதனையாக இருந்தது. ஆனால் அவன் சொன்னதில் முழு அர்த்தம் இருக்கிறது என்று அவள் நம்ப வில்லை. அவன் காதலில் ஆழம் தெரிந்திருந்தால் அவன் சொன்னதை நம்பி இருப்பாளோ என்னவோ?

     “ஆமா நல்ல மயக்கத்துல இருக்கும் போது பக்கத்துல என்ன நடக்குதுன்னு யாருக்கு தெரியும்?”, என்று அவள் கேட்க “நான் எனக்கு தோனிணதைச் சொன்னேன். சரி அதை விடு. நமக்கு என்ன அதை பத்தி? நான் உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் ஜானு”, என்றான்.

     “ஆன்… என்ன சொல்லு?”, என்று கேட்ட ஜானகியின் நெஞ்சம் அதிர்ந்தது.

     “மிர்ச்சி, நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை. ஐ லவ் யு… உன்னை பாத்ததுல இருந்தே நீ தான் என் மனசுல இருக்க. ஒரு நல்ல வேலைக்கு போன அப்புறம் நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? அதுக்கு முன்னாடி உனக்கு என்னைப் பிடிக்குமா?”, என்று கேட்டே விட்டான்.

     உள்ளுக்குள் பொங்கிய காதல் உணர்வுகளை அடக்கி “வாட்?”, என்று அதிர்ச்சியாக கத்தினாள்.

     “ஆமா ஜானு. ஐயம் இன் லவ் வித் யு. அதனால தான் உன்னை சீண்டி உன் கிட்ட ஓவரா நடந்துக்கிட்டேன்”

     “டேய் ஒழுங்கா இங்க இருந்து ஓடிப் போய்ரு. யார் கிட்ட வந்து காதல்ன்னு பினாத்திக்கிட்டு இருக்க? நான் யார்னு தெரியுமா? உன் மண்டை உடையுறதுக்குள்ள இங்க இருந்து போயிடு. ஆளையும் மண்டையும் பாரு. நீயெல்லாம் எனக்கு இணையா? எங்க அப்பா எனக்கு உன்னை விட பணக்கார மாப்பிள்ளையா தான் பாப்பார். அதுவும் உன்னை விட அழகான மாப்பிள்ளை தான் பாப்பார்”, என்று உளறித் தள்ளினாள் ஜானகி.

Advertisement