Advertisement

அத்தியாயம் 17

களைப்படையும் வரை 

பயணிப்போம் கரம் பற்றி!!!

     சிறிது நேரத்தில் சுனில் அங்கிருந்து கிளம்பிச் செல்ல கீர்த்தியும் அவர்கள் போலவே மயங்கி இருப்பது போல அமர்ந்து கொண்டாள். அந்த மயக்க மருந்தின் வீரியம் குறையத் துவங்க கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொருவரும் கண் விழித்தார்கள்.

     என்ன நடந்தது? எதனால்? என்று யாருக்கும் எதுவும் புரிய வில்லை. கீர்த்தியும் மயக்கத்தில் இருப்பது போல இருக்க யாருக்கும் எதுவும் தெரிய வில்லை. பின் அவர்கள் உண்ட பிரியாணியில் தான் பல்லி ஏதாவது விழுந்துருக்கலாம் என்று பேசி விட்டு தங்களின் வீட்டுக்குச் சென்றார்கள்.

     அன்று என்ன நடந்தது என்று தெரியாமலே ஜானகி ரகு இருவரும் வீட்டுக்குச் செல்ல கீர்த்தியும் சுனில் கையில் இருக்கும் வீடியோவை வைத்து இருவரையும் ஆட்டிப் படைக்க முடிவு எடுத்து ஹாஸ்டல் கிளம்பினாள்.

     ஹாஸ்டல் வந்து உடனே சுனிலை அழைத்து “சுனில் எங்க இருக்க?”, என்று கேட்டாள்.

     “மும்பை கிளம்பிட்டு இருக்கேன். வீடியோ வந்து வாங்கிக்கிறியா?”, என்று கேட்டான்.

     “வீடியோ சேஃபா உன் கிட்ட இருக்கட்டும். நான் கேக்கும் போது கொடு. இப்பவே ஏதாவது ஆரம்பிச்சா வீணா சந்தேகம் வரும்”

     “சரி பேபி. நான் கிளம்பிட்டு இருக்கேன். அப்புறம் பேசுறேன்”, என்று அவன் போனை வைக்க நினைத்தான். ஏனோ அன்று அவனால் கீர்த்தியிடம் அதிகம் பேச முடியலை.

     அவன் தன்னை தவிர்ப்பது கூட தெரியாமல் “சரி அப்புறம் பேசுறேன்”, என்று சொல்லி வைத்து விட்டாள் கீர்த்தி.

     மும்பைக்கு பயணம் செய்து கொண்டிருந்த சுனில் மனதிலோ முழுவதும் ஜானகி உருவம் தான். அவன் காதலிப்பது கீர்த்தியை தான். ஆனால் ஜானகியை அப்படிப் பார்த்ததற்கு பிறகு ஒரு மாதிரி சலனப் பட்டான் என்பது நிஜம். பெண்ணாசை என்னும் பேய் அவனை ஆட்டிப் படைக்க தயாராக இருந்தது.

     தன்னுடைய வீட்டுக்குச் சென்றதும் யாருக்கும் தெரியாமல் அந்த வீடியோ இருந்த பென்ட்டிரைவை ஒளித்து வைக்க நினைத்தான். ஆனால் அவன் சலனப் பட்ட மனதோ மீண்டும் அந்த காட்சியைப் பார்க்கச் சொல்ல உடனே பென்ட்டிரைவை லேப்டாப்பில் பொறுத்தினான். அவன் கண்கள் எதிர்பார்ப்புடன் அந்த திரையை வெறித்தது.

     அதைப் பார்க்க பார்க்க ஏதோ ஒரு மாதிரி போதை அவனை ஆட்கொள்ள ஜானகியின் அழகில் மயங்கித் தான் போனான். அவனுக்கு கீர்த்தி போர் அடித்து விட்டாளோ என்னவோ? அவனுடைய உண்மையான காதலை அவனது காதலியே கொன்று விட்ட பிறகு அதில் இருந்து அவனால் எப்படி மீண்டு வர முடியுமாம்?

     நாட்கள் நகர நகர ஜானகி தனக்கு மனைவியாக வேண்டும் என்ற ஆசை கிளர்ந்து எழுந்தது அவனுக்கு. மண்டோதரி என்ன தான் அழகாக இருந்தாலும் ராவணன் சீதை மீது கொண்ட இச்சை போல தான் சுனிலின் ஆசையும்.

     இதற்கிடையில் கீர்த்திக்கு நாட்கள் தள்ளிப் போனது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே காலேஜ் இருக்க இதை அறிந்து பயந்து போனாள். இதை அவள் எதிர் பார்க்கவே இல்லை.

     இதை முதலில் சுனிலிடம் சொல்ல நினைத்த கீர்த்தி அவனை அழைக்க சுனில் அவள் போனை வேண்டும் என்றே தவிர்த்தான். அவன் வேலையில் இருப்பான் என்று எண்ணிய கீர்த்தி இதை வைத்து ஜானகி ரகு வாழ்க்கையில் விளையாட முடிவு எடுத்தாள். சுனிலுக்கு குழந்தை விஷயம் தெரிந்திருந்தால் நிச்சயம் குழந்தைக்காக யோசித்திருப்பான். அது தெரியாததால் அவன் மனம் ஜானகியைத் தான் நாடியது.

     அன்று தான் கல்லூரியின் கடைசி நாள். கடைசி தேர்வும் கூட. காலையில் தேர்வு முடிந்ததும் அனைவரும் கிளாசுக்குள் வந்தார்கள். நண்பர்கள் பிரிவைப் பற்றி பேசிக் கொண்டிருக்க யாருக்கும் வீட்டுக்கு செல்லும் எண்ணமே இல்லை.

     ரகு இன்று ஜானகியிடம் காதலைச் சொல்ல தவிப்புடன் காத்திருக்க அதை கீர்த்தி புரிந்து கொண்டாள். அதற்கு முன் தன்னுடைய வேலையை ஆரம்பிக்க முடிவு எடுத்தாள்.

     தன்னுடைய வாழ்க்கையே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று அறியாத கீர்த்தி ஜானகி முன்பு முகத்தை பாவமாக வைத்த படி அமர்ந்திருந்தாள்.

     “கீர்த்தி நான் பசங்களைக் கூப்பிடுறேன். நாம வெளிய போகலாமா? அனிதாவையும் கூப்பிடு. ஏதாவது மூவிக்கு போயிட்டு வீட்டுக்கு போகலாம்”, என்று கேட்டாள் ஜானகி.

     அதற்கு கீர்த்தி பதில் சொல்லாமல் ஒரு மாதிரி முகத்தை வைத்திருக்க “என்ன டி ஒரு மாதிரி இருக்க?”, என்று கேட்டாள் ஜானகி.

     “வலிக்காம எப்படி சாகுறதுன்னு யோசிக்கிறேன் ஜானு”, என்று சொல்லும் போதே கண்ணீர் வந்தது கீர்த்திக்கு.

     “வாட்? கீர்த்தி, என்ன ஆச்சு? அழுறியா?”

     “ஆமா டி, எனக்கு வாழவே பிடிக்கலை”

     “என்ன ஆச்சு கீர்த்தி. வீட்ல ஏதாவது பிரச்சனையா?”

     “நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் ஜானு”

     “தப்பா? என்ன ஆச்சு? அப்படின்னாலும் சாவு ஒரு தீர்வு கிடையாது கீர்த்தி”

     “ரகுவோட குழந்தை என் வயித்துல வளருது. அதுவும் அவனுக்கு தெரியாமலே? இப்ப கூட நான் சாவை பத்தி யோசிக்க கூடாதா?”, என்று கூசாமல் பொய்ச் சொல்ல “வாட்?”, என்று கத்திய ஜானகியின் தலையில் இடி விழுந்தது போல இருந்தது. கண்கள் கலங்கி மூச்சுக்கு திணறிப் போய் ரகுவைப் பார்க்க அவன் புன்னகையுடன் வெங்கியுடன் பேசிக் கொண்டிருந்தான்.

     ஜானகியின் முகத்தில் இருந்த அதிர்வைக் கண்டு வந்த சந்தோஷத்தை அடக்கிக் கொண்டாள் கீர்த்தி.

     “ஆமா, அன்னைக்கு நீங்க எல்லாரும் மயங்கி விழுந்த அப்புறம் நான் எல்லாரையும் எவ்வளவோ எழுப்ப முயற்சி செஞ்சேன்? ஆனா யாரும் எந்திரிக்கலை. எனக்குமே அரை மயக்கம் தான். நான் ரகுவையும் எழுப்ப முயற்சி செய்யும் போது அவன் மேலேயே விழுந்து அவன் என்னை கட்டிப் புடிச்சு….”, என்று கீர்த்தி சொல்லிக் கொண்டிருக்க “ஸ்டாப்பிட் கீர்த்தி, நீ ஏதோ தப்பா நினைச்சிட்டு இருக்குற? ரகு அப்படி பண்ண மாட்டான். அது மட்டுமில்லாம எல்லாரும் மயக்கத்துல இருந்தோமே? நீ கூட கடைசியா தான் கண்ணு முழிச்ச?”, என்று கேட்டாள்.

     “நாம எல்லாருமே அரை மயக்கத்துல தான் இருந்தோம்? ஆனா நீங்க எல்லாரும் மயங்கி ஒரு மாதிரி நின்னதுக்கு அப்புறம் தான் எனக்கு மயக்கமே வந்துருச்சு. அதுக்கு முன்னாடி நடந்ததை தான் சொல்றேன். அவன் தான் என்னை. அதுவும் அவனை அறியாமலே….”

     “அவன் மயக்கத்துல் இருந்தான் சரி. ஆனா நீ தெளிவா தானே இருந்த? தடுக்கலையா அதை?”

     “தடுத்தேன் ஜானு, அவன் விடலை. அது மட்டுமில்லாம ஐ லவ் கிம்”, என்று கீர்த்தி துணிந்து பொய் சொல்ல உள்ளுக்குள் உடைந்து போனாள் ஜானகி.

     “நீ அவனை லவ் பண்ணுணியா கீர்த்தி? சொல்லவே இல்லையே?”, என்று தளர்ந்து போய்க் கேட்டாள்.

     “ரகுவை யாருக்கு தான் பிடிக்காது ஜானு? அவன் அழகு, அவன் திறமை, அவன் கேரிங்க் இதை எல்லாம் கூட இருந்து பாத்த பிறகு அவனை எப்படி லவ் பண்ணாம இருக்க முடியும்? அன்னைக்கு நடந்ததுல நான் அவனை மட்டும் குறை சொல்லலை. என் பக்கமும் தப்பு இருக்கு. ஆனா மயக்கத்துல இருந்து எழுந்த பிறகு அவனுக்கு எதுவும் நினைவு இல்லை. இப்ப அவன் கிட்ட சொன்னாலும் நம்ப மாட்டான். அதை சொல்லி அவன் கிட்ட அசிங்க படுறதுக்கு பேசாம செத்துறலாம் போல இருக்கு. இப்ப என் காதலுக்கும் அர்த்தம் இல்லை. இன்னைக்கு அவன் கிட்ட என் காதலைச் சொல்லணும்னு நினைச்சேன். ஆனா நேத்து தான் எனக்கே கண்பர்ம் ஆச்சு. நேத்து நமக்கு லீவ், அதான் உன் கிட்ட சொல்ல முடியலை. இப்ப என் காதலைச் சொன்னா அவன் நம்புவானா?”, என்று கண்ணீருடன் கேட்டாள்.

     ரகு மற்றும் ஜானகியிடம் தன்னுடைய குட்டு வெளிப்பட்டாலும் பரீட்சை முடிந்ததும் சுனிலை திருமணம் செய்து கொண்டு சென்று விட வேண்டும் என்று முடிவு எடுத்து தான் துணிந்து பொய் சொன்னாள். அதற்கு பின் தான் இருக்கும் இடத்தை யாருக்கும் சொல்லக் கூடாது என்று முடிவு எடுத்தாள்.

     ரகுவைக் காதலித்து அவனுடைய குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு கீர்த்தி எங்கேயோ சென்று விட்டாள் என்று ஜானகி நம்ப வேண்டும். அதை நம்பினால் தான் ஜானகி ரகுவுடன் வாழ மாட்டாள் என்பது தான் அவள் பிளான்.

     கீர்த்தியின் பொய் அழுகையைக் கண்டு தன்னை சமாளித்துக் கொண்ட ஜானகி “ஏன் டி இப்படி பேசுற? சாவு எதுக்கும் தீர்வு கிடையாது கீர்த்தி. நான் உன்னை நம்புறேன். நாம ரகு கிட்ட பேசிப் பாப்போம்”, என்றாள்.

     “நாம சொன்ன உடனே அவன் நம்புவான்னு நினைக்கிறியா ஜானு? அதை விட என்னை ஏதாவது அசிங்கமா கேட்டுட்டா நான் என்ன பண்ணுவேன்? அதுக்கு நான் சாகுறது தான் மேல்”, என்றாள். ஜானகிக்கும் தெரியுமே? இதை நிச்சயம் ரகு நம்ப மாட்டான் என்று.

     “ஏன் டி சாவு அது இதுன்னு திரும்பி திரும்பி பேசுற?”

     “வேற என்ன பண்ண ஜானு? அவன் கிட்ட எதுவும் சொல்லாம அவன் என்னைக் கல்யாணம் பண்ண மாட்டான். சொன்னாலும் கல்யாணம் பண்ண மாட்டான். என் காதலையும் அவன் ஏத்துக்க மாட்டான். இந்த குழந்தையும் அவனோடதுன்னு ஒத்துக்க மாட்டான். அதுக்கு என் கிட்ட ஆதாரமும் இல்லை. அவனைக் கல்யாணம் பண்ணாம என் குழந்தையை நான் எப்படி வளக்க? என் ரகுவோட குழந்தை அப்பா இல்லாம வளரணுமா? இன்னைக்கு தான் காலேஜ் கடைசி நாள். இனி ரகுவைப் பாக்க கூட முடியாது. நான் என்ன செய்வேன்? இந்த குழந்தையோட நான் எப்படி வீட்டுக்கு போவேன்?”, என்று சொல்லி கீர்த்தி கண்ணீர் விட்டு அழ “அழாதே நான் பாத்துக்குறேன். என்னை நம்பு டி. உன்னையும் ரகுவையும் சேத்து வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு”, என்று சொன்ன ஜானகி அங்கிருந்த பாத்ரூமுக்குள் சென்று ஏங்கி ஏங்கி அழுதாள்.

     அவளால் இந்த உண்மையை ஜீரணிக்கவே முடியவில்லை. மயக்க நிலை இல்லாமல் கீர்த்தி இப்படி சொன்னால் ஜானகி நிச்சயம் நம்பி இருக்க மாட்டாள். ஆனால் அன்று என்ன நடந்தது என்று ஒருவருக்கும் தெரியாதே? அதுவும் கீர்த்தி பொய் சொல்லுவாள் என்று ஜானகி கனவா கண்டாள்? அதனால் அதை நம்பினாள்.

Advertisement