Advertisement

     உணர்வுகள் கிளர்ந்து அது முடிவடையாமல் பாதியிலே தடைபட்டதால் ஒரு மாதிரி தடுமாறி கண்கள் கலங்கி அவள் நிற்க அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரகுவுக்கு கஷ்டமாக இருந்தது. தான் செய்த செயலால் தான் அவள் அழுகிறாள் என்று எண்ணி “சாரி ஜானகி”, என்று மன்னிப்பு கேட்டான். தான் செய்தது அதிகம் தான் என்று அவனுக்கே புரிந்தது. ஆனால் அவனை மீறி நடந்த செயல் தான் இது.

     அவளது அருகாமையும் அவளிடம் இருந்து வந்த வாசனையும் அவனது சித்தத்தையும் இருக்கும் இடத்தையும் மறக்கடித்து அவனை மீறி இப்படி நடந்து விட்டது. அவன் அவளையே குற்ற உணர்வுடன் பார்க்க அவனை முறைத்து விட்டுச் சென்றாள் ஜானகி.

     அவளுக்கு தன்னைப் பிடித்திருக்கிறது என்று தெரியும். ஆனால் காதல் என்றெல்லாம் அவன் நினைக்க வில்லை. அவன் தீண்டும் போதெல்லாம் அவள் எதிர்ப்பு காட்டாமல் இருப்பதே அவனுக்கு போதுமானதாக இருந்தது.

     “நான் அவ கிட்ட ஓவரா அட்வாண்டேஜ் எடுத்துக்குறேன். இது தப்பு. அட்லீஸ்ட் என் காதலையாவது அவ கிட்ட சொல்லிறனும். அவளும் சரின்னு சொல்லுவா”, என்று முடிவு எடுத்தவன் அதற்கு அடுத்து வந்த நாட்களில் அன்று நடந்ததைப் பற்றியும் அவன் காதலை பற்றியும் அவளிடம் பேச நினைக்க ஜானகி அதைப் பற்றி பேச விட வில்லை. அவன் தொடுகையில் மயங்கி கிறங்கியது அவளுக்கு ஒரு மாதிரி சங்கடத்தைக் கொடுக்க அதை தவிர்க்கவே அதைப் பற்றிய பேச்சைத் தவிர்த்தாள்.

     ஜானகிக்கு அவன் காதல் நன்கு புரிந்தது. ஆனால் அவனுக்கு அவள் மனதில் தான் இருக்கிறோமா? எதற்காக தன்னுடைய தொடுகையை அவள் எப்போதும் தவிர்க்க வில்லை? காதலைச் சொன்னால் ஏற்றுக் கொள்வாளா என்று பெருங்குழப்பத்திலே நாட்கள் நகர்ந்தது. அதற்கு பின் வந்த நாட்களில் அவளை அவ்வப்போது சீந்தினாலும் லிப்ட் அளவுக்கு ஒரு நாளும் சென்றதில்லை. ஆனால் அவர்களுக்குள் நடக்கும் ஊடலும் சங்கேத பாஷைகளும் கீர்த்தியை நிம்மதி இழக்க வைத்திருந்தது.

     ரகு மற்றும் ஜானகியின் புன்னகையைக் காண காண அதைக் கெடுக்க வேண்டும் என்ற வெறி அவளுக்குள் கிளர்ந்தது. இப்போது சுனில் வேறு அவளிடம் அதிகம் பேசாததால் முற்றிலும் மாறிப் போனாள் கீர்த்தி. அந்த வார இறுதியில் கீர்த்தியை காண வந்திருந்தான் சுனில். அவன் இப்போது தந்தை மற்றும் அண்ணன்களுடன் சேர்ந்து பிஸ்னசில் சேர்ந்து விட்டதால் அடிக்கடி கீர்த்தியை காண முடிய வில்லை. அவளுடன் அதிகம் பேசவும் முடியவில்லை. அதனால் இன்று ஆவலாகவே வந்திருந்தான்.

     அவளும் அவனைக் காண அவன் வீட்டுக்கு சென்றாள். இத்தனை நாள் பிரிவுத் துயரை அவன் காட்ட அவளோ அந்த அளவுக்கு ஈடுபாடு காட்டாமல் சாதாரணமாக இருந்தாள். அவள் ஒரு மாதிரி இருக்க “என்ன ஆச்சு பேபி உனக்கு?”, என்று கேட்டான் சுனில்.

     “எனக்கு மனசு ஆறவே இல்லை சுனில். நான் இதை எதிர் பார்க்கவே இல்லை”

     “என்ன எதிர் பாக்கலை? என்ன நடந்துச்சு?”

     “இந்த ரகு ஜானகியை லவ் பண்ணுறான் போல? எனக்கு அப்படி தான் தெரியுது. வேற யாரும் இன்னும் அதை கண்டு பிடிக்கலை. ஜானகிக்கும் அவனைப் பிடிக்கும்னு தெரியும். அவன் லவ் சொன்னா அவளும் ஏத்துக்குவா. அப்புறம் ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பாங்க. அந்த ஜானகி சந்தோஷமா இருக்குறது எனக்கு பிடிக்கவே இல்லை. ஒரு மாதிரி எரிச்சலா இருக்கு சுனில்”

     “இதுல என்ன இருக்கு பேபி? அவன் லவ் பண்ணினா பண்ணட்டும். அவ ஏத்துக்கிட்டா ஏத்துக்கட்டும். நமக்கு என்ன? நீ ஏன் அதை நினைச்சு வொர்ரி பண்ணிக்கிற? சீக்கிரம் படிச்சு முடி. உடனே கல்யாணம் பண்ணிக்கலாம். என் ரெண்டு அண்ணனுங்களுக்கு கல்யாணம் முடியுற வரைக்கு எல்லாம் என்னால வெயிட் பண்ண முடியாது. படிச்சு முடிச்சதும் நீ எனக்கு வேணும்”, என்று அவன் உருக அவன் காதல் கூட அவள் வன்மத்தைக் குறைக்க வில்லை.

     “இல்லை சுனில், எனக்கு அந்த ஜானகி சந்தோஷமா இருக்க கூடாது. நான் எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கேன் தெரியுமா? எத்தனை நாள் பட்டினியா இருந்துருக்கேன் தெரியுமா? இப்ப கூட அடுத்தவங்க போட்டு கொடுத்த பழைய டிரஸ் தான் போடுறேன். ஆனா அவளுக்கு என்ன கவலை? அவ சந்தோஸமா இருக்குறதைப் பாத்தா என்னால நிம்மதியா இருக்க முடியலை”

     “நீ நினைக்கிறது தப்பு கீர்த்தி. அவ உன் ஃபிரண்ட்”, என்று சொல்லி அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.

     அவனை முறைத்துப் பார்த்தவள் “பாத்தியா பாத்தியா நீயும் அவ பக்கம் பேசுற? அப்படின்னா என்னை விட உனக்கு அவ முக்கியமா? அவ பணக்காரின்னு தானே அவ பக்கம் பேசுற? அப்படின்னா நீ என்னை லவ் பண்ணலை தானே?”, என்று ஒரு மாதிரி வெறியுடன் கேட்டாள். ஏனோ சுனிலுக்கு கீர்த்தி மனரீதியாக பாதிக்கப் பட்டிருப்பது போலவே தோன்றியது.

     அவளைச் சமாளிக்க “ஐயோ அப்படி இல்லை கீர்த்தி. ஐ லவ் யு. எனக்கு அந்த பொண்ணு ஒண்ணும் பெருசு இல்லை. ரெண்டு மூணு டைம் பாத்துருக்கேன், அவ்வளவு தான். நீ தான் எனக்கு முக்கியம்”, என்று சொல்லி சமாளித்தான்.

     “இல்லை இல்லை, எல்லாருக்கும் அவ தான் உசத்தி. இப்ப நீ கூட அவளுக்காக தான் பேசின? ஏன் சுனில், நீ என்னைப் பாக்குறதுக்கு முன்னாடி அவளைப் பாத்திருந்தா அவளை தானே லவ் பண்ணிருப்ப?”, என்று கேட்க சுனில் நொந்து போனான்.

     “ஏய் தெரியாம சொல்லிட்டேன் டா. சரி அந்த ஜானகி சந்தோஷமா இருக்க கூடாது போதுமா? நான் உன் பக்கம் தான் நிப்பேன். நீ என் உயிர் பேபி”, என்றான்.

     “இப்ப தான் நீ என்னோட சுனில். அவளை ஏதாவது பண்ணனும் டா”, என்றவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள “என்ன பண்ணப் போற?”, என்று கேட்டவனும் அவளை அணைத்துக் கொண்டான்.

     “ஒரு தடவையாவது அந்த ஜானகியை வாழ்க்கையில் தோற்கடிச்சு அவளை அழ வைக்கணும் சுனில். அந்த ரகுவும் ஜானகியும் சேரக் கூடாது. ஜானகிக்கும் அவன் மேல காதல் இருக்குறது மாதிரி தான் இருக்கு”

     “அது தப்பில்லையா? இப்ப நானும் உன்னை லவ் பண்ணுறேன். உன்னைப் பிரிஞ்சு என்னால எப்படி இருக்க முடியும்?”, என்று தன்னை மீறிக் கேட்டிருந்தான்.

     “அப்படின்னா நான் பாவம் இல்லையா? எப்பவுமே எனக்கு முக்கியத்துவம் கிடைக்காதா? எல்லாரும் அவளையே பாராட்டுறாங்க. நீங்க எல்லாம் பணக்காரங்க. நான் ஏழை, அதனால தான் எல்லாரும் என்னைக் கீழா நினைக்கிறீங்க. நீ கூட அப்படி தானே என்னை நினைப்ப? உங்க வீட்ல கூட என்னை மதிக்க மாட்டாங்க தானே? நான் செத்து போறேன்”, என்று அவள் பைத்தியம் போல புலம்ப சுனில் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.

     “பேபி பிளீஸ், அப்படி பேசாத. எனக்கு நீ தான் முக்கியம்”

     “அப்படினா ஜானகியோட நிம்மதியைக் கெடுக்க எனக்கு ஐடியா சொல்லு”, என்று அவள் கேட்க அதிர்ந்து போனான் சுனில்.

     “ஐயோ, எனக்கு தெரியாது பேபி. அப்படி எல்லாம் நானோ என் குடும்பமோ பண்ணினது இல்லை”, என்று அவன் அலற “அப்படின்னா நான் கேவலமானவன்னு சொல்லுறியா? என் குடும்பம் தப்பான குடும்பம்னு சொல்லுறியா?”

     “ஐயோ அப்படி எல்லாம் இல்லை பேபி. சாரி உனக்கு என்ன தோணுதோ செய். நான் உனக்கு சப்போர்ட் பண்ணுறேன்”, என்று சொன்னான் சுனில். அவனது காதல் அவனை அப்படி பேச வைத்திருந்தது. அது அவனுக்கு அவனே வெட்டிக் கொண்டு குழி என்று அவன் அப்போது உணர வில்லை.

Advertisement