Advertisement

அத்தியாயம் 16

மௌன மொழி பேசும் 

உந்தன் கண்களில் மயங்கித் தான் 

போகிறது எந்தன் மனம்!!!

     என்ன தான் காதலை ரகு வந்து சொல்வான் என்று காத்திருந்தாலும் ஜானகியும் அவன் மீது உயிராக இருந்தாள். அவனுடன் தனித்து இருக்கும் தருணங்களை ஒரு நாளும் தவிர்க்க மாட்டாள்.

     நண்பர்கள் வெளியே அழைத்தால் ரகுவுடன் இருக்க வேண்டும் என்றே செல்வாள். அதற்கு மோகன் அனுமதி கொடுத்தாலும் தேவகியிடம் திட்டு தான் வாங்குவாள். ஆனால் அவளுக்கு ரகுவுடன் இருக்கும் தருணங்கள் வேண்டும்.

     எங்கே சென்றாலும் ரகு அவளுடனே இருப்பான். அவளுடனே இருப்பது போலவே பார்த்துக் கொள்வான். அது அவளுக்கும் தெரியும்.

     நண்பர்கள் அனைவரும் அந்த வார இறுதியில் படத்துக்குச் செல்ல முடிவு எடுத்தார்கள். டிக்கட், ஸ்நாக்ஸ், சாப்பாடு என என்ன செலவு வந்தாலும் அனைவரும் தாங்களாகவே பொறுப்பெடுத்துக் கொள்வார்கள்.

     அதிலும் கீர்த்தி கஞ்சம் தான். அவள் செலவு செய்ய வில்லை என்றாலும் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். அவளும் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் அவர்கள் செலவில் ஆடம்பரமாக இருப்பாள். இத்தனைக்கும் சுனில் அவளுக்கு என அள்ளிக் கொடுத்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

     சுனில் அந்த வாரம் ஊருக்குச் சென்றிருக்க கீர்த்தியும் அவர்களுடன் படத்துக்கு சென்றாள். அர்ஜூன் சுப்பு இருவரும் ஏழு பேருக்கு டிக்கட் எடுத்துக் கொண்டு வர ஸ்நாக்ஸ் பொறுப்பை ஜானகி பார்த்துக் கொள்வதாக சொன்னாள். மதிய உணவுக்கு ரகு, வெங்கி, அனிதா மூவரும் பொறுப்பெடுத்துக் கொண்டார்கள். தியேட்டர் உள்ளே சென்றதும் வெங்கி, அர்ஜூன், சுப்பு என வரிசையாக அமர்ந்தார்கள். அடுத்து ஒரு இருக்கையை ரகுவுக்கு விட்டு கீர்த்தி, அனிதா, ஜானகி மூவரும் அமர்ந்தார்கள்.

     டிக்கட் பரிசோதகரிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு கடைசியாக வந்த ரகு அவனது இருக்கையில் அமராமல் கீர்த்தி மூன்று பெண்களையும் ஒரு இருக்கை தள்ளி அமரச் சொல்லி விட்டு கடைசியாக ஜானகிக்கும் அடுத்து சென்று அமர்ந்தான். அதை வேறு யாரும் கவனிக்க வில்லை என்றாலும் கீர்த்திக்கு புருவம் உயர்ந்தது. அப்போது தான் இத்தனை நாட்கள் வேண்டும் என்றே ரகு ஜானகி அருகிலே இருப்பது புரிந்தது. மற்ற அனைவரும் சாதாரணமாக இருக்க கீர்த்தி மட்டும் ஜானகி மற்றும் ரகுவை கவனிக்க ஆரம்பித்தாள்.

     ஜானகியும் ரகுவைக் கவனித்தாள் தான். அவளுக்கு தான் தெரியுமே அவன் இப்படி தான் செய்வானென்று. ஆனாலும் அதை மறைத்து “என்ன டா இங்க வந்து உக்காந்துட்ட? பசங்க கூட உக்காரலையா? அங்க சீட்டை விட்டுட்டு எங்களை தள்ளி உக்கார வச்சிட்டு நீ இங்க வந்துட்ட?”, என்று மட்டும் கேட்டாள்.

     “அந்த சீட்ல உக்காந்தா படம் தெரியாதுன்னு தோணுச்சு. நம்ம தலைவர் படம் எந்த தொந்தரவும் இல்லாம பாக்கணும்ல? அது மட்டும் இல்லாம இந்த பக்கம் இன்னும் நிறைய பசங்க உக்காந்துருக்காங்க. உன்னை எப்படி தனியா விட முடியும்? அதான் ஒரு சேஃப்ட்டிக்கு”, என்று சொல்ல “நம்பிட்டேன் டா”, என்று சொல்லி விட்டு சிறு சிரிப்புடன் அவளும் திரை பக்கம் திரும்பினாள்.

     அவளுக்கு அடுத்த பக்கம் அனிதா அமர்ந்திருக்க அவளுடனும் அவ்வப்போது பேசிக் கொண்டு படத்தைப் பார்வை இட்டாள். ரகுவோ அவள் அருகாமையில் தான் லயித்திருந்தான். அவனுக்கு அவ்வளவு பிடிக்கும் ஜானுவை. அதனால் வேண்டும் என்றே தான் அவள் அருகே வந்து அமர்ந்தான். அனைவரும் படத்தில் மூழ்கி இருக்க ரகுவுக்கு ஒரு துளி கூட கவனம் படத்தில் செல்ல வில்லை.

     தன்னுடைய கையை சேரில் வைத்த படி ஜானகி படம் பார்த்துக் கொண்டிருக்க ரகுவின் கண்கள் அவளைத் தான் நோட்டம்  விட்டது. முதுகு வரை இருந்த கூந்தலை விரித்துப் போட்டிருக்க காதில் பெரிய வளையம் போட்டிருந்தாள்.

     அவர் பார்வை திடீரென்று ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்த அவனைத் திரும்பிப் பார்த்தவள் “என்ன டா?”, என்று கேட்டாள்.

     “இல்லை, கையில போடுற வளையலை காதுல போட்டுருக்கியேன்னு பாத்தேன். ஒரு சின்ன கம்மலாவது குட்டி ஜிமிக்கியாவது போட்டா என்ன டி?”, என்று கேட்டான்.

     “ஆக நீ படத்தை கவனிக்காம என்னைத் தான் பாக்குற? பேசாம திரும்பி படத்தைப் பாரு”, என்றவள் திரும்பிக் கொண்டாள். அவனும் சீட்டில் கையை வைத்து திரையைப் பார்த்தான்.

     இருவர் கையும் உரசிய படி இருக்க முதலில் அதை உணர்ந்தது அவன் தான். எதார்த்தமாக நடந்தது தான் என்றாலும் அவனுக்கு அதுவே புல்லரித்தது. கையை அசைக்க கூட முடியாமல் அமர்ந்திருந்தான். அதை விட்டு எடுக்கவே மனதில்லை.

     ஏ.சி காற்றில் கூந்தல் பறக்க தன்னுடைய கரத்தை எடுத்து காதோடு ஒதுக்கித் தள்ளி விட்டு ஜானகி மீண்டும் கையை வைக்கும் போது அவன் கரத்தின் மீதே கையை வைத்து விட அதை உணர்ந்து “சாரி ரகு”, என்று சொல்லிக் கொண்டே அவனைப் பார்த்தவள் அவன் பார்வையில் திகைத்தாள். அந்த அளவுக்கு அவன் கண்களில் காதல் வழிந்தது.

     உள்ளுக்குள் குறுகுறுக்க அவன் பக்கம் லேசாக குனிந்து “உன்னைக் கொல்லப் போறேன் பாரு. என்னையே நோட் பண்ணுற? பேசாம படத்தைப் பாரு டா”, என்று சொன்னாள். அவள் பேசிய ரகசிய பேச்சை ரசித்தவன் அவளைப் போலவே அவளது காதில் உதடு பட லேசாக குனிந்து “ஏன் பார்த்தா என்னவாம்? அதுல உனக்கு என்ன பிரச்சனை? பொண்ணு மாதிரியா மிர்ச்சி நீ இருக்குற? டீ ஷர்ட் ஜீன்ஸ்ன்னு போட்டுட்டு திரியுற? பின்ன பாக்காம என்ன செய்வாங்களாம்? அது மட்டுமில்லாம என்னோட பார்வை உன்னை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணுது?”, என்று கிசுகிசுப்பாக கேட்டான்.

     அதில் சுதாரித்துக் கொண்டவள் “அறிவிருக்கா உனக்கு? படத்தைப் பாக்காம இங்க பாக்குறேன்னு தான் கேட்டேன். பாரு ராசா. பாத்துட்டே இரு. எனக்கு என்ன?”, என்று சொல்லி விட்டு அவள் திரும்பிக் கொண்டதும் ரகுவுக்கு சப்பென்று போனது.

     “போடி”, என்றவன் முகத்தை திருப்ப சிறு சிரிப்புடன் அவளும் திரையின் பக்கம் திரும்பினாள். ஆனாலும் அவன் கோபம் புரிய இயல்பாக வைப்பது போல அவன் கரத்தை ஒட்டி தன்னுடைய கரத்தை வைத்தவள் “இந்த சாங் செமையா இருக்குல்ல?”, என்று அவனிடமே கேட்டாள்.

     சிறு சிரிப்புடன் அவள் புறம் திரும்பியவன் “செமையா தான் இருக்கு”, என்று சொல்லிக் கொண்டே அவள் கையைப் பிடித்தான். சிறு கூச்சம் வந்தாலும் அவள் கையை எடுக்க வில்லை. அதுவே அவனுக்கு போதுமானதாக இருக்க அவள் விரல்களுடன் தன்னுடைய விரல்களை உறவாட விட்டான்.

     ஏதோ ஒரு சிலிர்ப்பு அவளுக்குள். அதை அடக்க முடியாமல் “கையை எடு டா”, என்றாள்.

     “பிளீஸ் மிர்ச்சி இப்படியே இரேன்”, என்று சொல்ல அவளும் அமைதியாக இருந்தாள். அவன் விரல்கள் அவள் விரல்களை மிக மென்மையாக வருட அவள் மனம் அலைபாய்ந்தது.

     உடல் எல்லாம் நடுங்கி ஒரு மாதிரி அவஸ்தைக்கு உள்ளாக தன் தவறை மறைக்க “இப்ப கையை விடலை செருப்பு பிஞ்சிரும் ரகு”, என்று கோபப் பட்டாள்.

     அடுத்த நொடி அவன் கையை விலக்கிக் கொண்டு அவளைப் பார்த்தான். அவளும் அவனைப் பார்த்தாள். அவன் முகம் சுண்டிப் போய் இருந்தது. அது மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் அவள் அமைதியாக இருக்க “சாரி”, என்றான் ரகு. இப்போது அவளுக்கு குற்ற உணர்வாக இருந்தது. அவன் தொட்டதும் அதை அனுமதித்தது தான் தானே? ஆனால் அவனை மட்டும் திட்டி என்ன பயன் என்றவள் அடுத்து அவன் பக்கம் திரும்பவே இல்லை.

     இவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை எல்லாம் கீர்த்தி கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். படத்தின் இடைவேளை வந்ததும் அர்ஜுனும் சுப்புவும் ஜானகியிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஸ்னாக்ஸ் வாங்க எழுந்து கொள்ள “டேய் எனக்கு வெண்ணிலா ஐஸ்கிரீம் வாங்கிட்டு வா”, என்றாள் கீர்த்தி.

Advertisement