Advertisement

இதற்கிடையில் கீர்த்தி சுனில் காதலும் நல்ல படியாக தான் சென்று கொண்டிருந்தது. யாரும் அறியாமல் தான் இருவரும் சந்தித்து பேசுவார்கள். மற்ற படி எல்லாம் போனில் தான். அன்று இரவு சுனிலுடன் பேசிக் கொண்டிருக்கும் போது கீர்த்தி குரல் ஒரு மாதிரி இருக்கவும் “என்ன ஆச்சு என் கீர்த்தி பேபிக்கு?”, என்று கேட்ட சுனிலின் குரலில் அவ்வளவு காதல் வழிந்தது.

“இந்த ஜானகியை நினைச்சா தான் எரிச்சலா இருக்கு சுனில். அவளை ஏதாவது பண்ணனும்னு எனக்கு அவ்வளவு ஆத்திரம் வருது. என்னால அவ சந்தோஷமா இருக்குறதை தாங்க முடியலை. ரொம்ப சீன் போடுறா. அதான் எல்லாரும் அவ கிட்ட அப்படி பேசுறாங்க”, என்று தன்னுடைய காதலனிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் கீர்த்தி.

“அவ மேல உனக்கு எதுக்கு இவ்வளவு காண்டு?”, என்று அவன் சிரிப்புடன் கேட்க “அவளையே எல்லாரும் தூக்கி நிறுத்துறாங்க. எனக்கு அது பிடிக்கலை. அவ என்ன செஞ்சாலும் அதுல அவளுக்கு பாராட்டு தான் கிடைக்குது. ஒரு இங்க்லிஷ் கூட அவ எப்படி பேசுறா தெரியுமா?”, என்று அவள் பொறுமிக் கொண்டு சொல்ல சுனிலுக்கு இந்த பேச்சு தேவையா என்று தான் தோன்றியது.

அதனால் பேச்சை மாற்றும் பொருட்டு “நான் வேணும்னா உனக்கு இங்க்லிஷ் சொல்லித் தரவா?”, என்று காதலாக கேட்டான்.

“உனக்கு நல்லா தெரியுமா? நானும் அப்படி பேச முடியுமா?”

“நீ என்னோட வருங்கால மனைவி. உனக்கு ஹிந்தியும் சேத்து சொல்லித் தரேன். எங்க ஊருக்கு வந்தா யூஸ் ஆகும்”

“எப்ப சொல்லித் தருவ? நீ வீட்ல இருந்து வர? நான் ஹாஸ்டல்ல இருக்கேன்”

“உனக்கு தான் அவுட்டிங்க் போகலாமே? என் வீட்டுக்கு வரியா?, என்று சாதாரணமாக தான் கேட்டான். எந்த உள்நோக்கமும் கெட்ட எண்ணமும் அப்போது அவனுக்குள் இல்லை.

சுனில் மும்பையில் இருக்கும் குப்தா குடும்பத்தின் கடைசி வாரிசு. அதனால் அவனுக்கு செல்லம் அதிகம். அவன் படிக்கவென்று அவனுக்கு பெரிய வீட்டையே சென்னையில் வாங்கிக் கொடுத்திருந்தனர். அங்கே இருந்து தான் அவன் படித்துக் கொண்டிருக்கிறான். இன்னும் இரண்டு வருடங்களில் அவன் மும்பை சென்று விடுவான். உணவு கூட அவனே தான் சமைத்து சாப்பிடுவான். அந்த வீட்டுக்கு தான் அவளை அழைத்தான். ஏனோ அவளுக்கு தன்னுடைய வீட்டைக் காட்ட வேண்டும் என்ற ஆசை அவனுக்கு.

“வீட்டுக்கா?”, என்று தயங்கிய கீர்த்தி “சரி இந்த வீக்கெண்ட் வரேன். மத்த நாள் ஹாஸ்ட்டல்ல விட மாட்டாங்க”, என்று சொல்ல அவனும் சரி என்று சொன்னான். சொன்னது போல செல்லவும் செய்தாள். சுனிலே வந்து அழைத்துச் சென்றான்.

முதல் வாரம் மொழி கற்பதில் மட்டும் கவனம் செலுத்தியவர்கள் நாட்கள் ஆக ஆக ஒருவர் மற்றவரின் உடலைத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் கட்டினார்கள். அதை ஆரம்பித்து வைத்தது அவள் தான் என்பது குறிப்பிடத் தக்கது. அனைவரும் ஜானகியை தாங்குகிறார்கள் என்ற கடுப்பில் இருந்த கீர்த்திக்கு தன்னையே கண்ணுக்குள் வைத்து தாங்கும் சுனிலை அவ்வளவு பிடித்தது. அதனால் அவன் காதலுக்கு பரிசாக தன்னையே கொடுத்தாள்.

இங்கே இருவரின் காதலும் தவறான உறவும் வாரம் வாரம் நடந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராதவாறு பார்த்துக் கொண்டார்கள். இப்படியே இரண்டு வருடம் கடந்தது.

ரகு ஜானகி இருவரும் இரண்டாம் வருட முடிவில் இருந்தார்கள். அவர்களுக்குள் நட்பும் காதலும் மிக இறுகி இருந்தது. ஆனால் காதலை இருவருமே வெளியே காட்ட வில்லை. ஆனால் ஜானகி மீது அவனாகவே அவ்வளவு உரிமை எடுத்துக் கொள்வான். அது அவளுக்கும் பிடிக்கும். அவர்கள் நட்பு மற்றவர்களுக்கு தெரியும் என்பதால் யாருக்குமே அது தவறாக தெரிய வில்லை.

அது சுனிலுக்கு கடைசி வருஷம். அதனால் காலேஜ் கல்சுரல் நடந்தது. அந்த மாலைப் பொழுதில் அவர்களின் கல்லூரி மிக அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. மாணவர்கள் அனைவரும் டிசர்ட், ஜீன்ஸ், வேஷ்டி சட்டை என்று தங்களுக்கு பிடித்த உடைகளில் இருந்தார்கள் என்றால் பெண்கள் அனைவரும் சேலை தாவணி ஜீன்ஸ் என வண்ண வண்ண உடை அணிந்து ஜெகஜோதியாய் ஜொலித்தார்கள்.

வெகு கலகலப்பாக பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தாலும் சிலர் பிடித்தவர்களை சைட் அடித்துக் கொண்டும் இருந்தார்கள்.

அப்போது அனைவரையும் ஆடிட்டோரியத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்க அனைவரும் அங்கே சென்று கிடைத்த இடத்தில் அமர்ந்தார்கள். அந்த இடத்தில் ஆண்கள் பெண்கள் என கலந்து அமர ஆசை தான். ஆனால் அங்கு விதி கிடையாதே அதனால் பெண்கள் ஒரு புறம் ஆண்கள் ஒரு புறம் அமர்ந்திருந்தார்கள்.

ரகுவின் கண்களோ ஜானகியை தான் தழுவியது. அனைவரும் சேலையில் இருக்க அவள் மட்டும் எப்போதும் போடும் உடையிலே இருந்தாள். அது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. அவளை சேலையில் பார்க்க அவ்வளவு ஆசையாக காத்திருந்து ஏமாற்றம் தான்.

அவள் அடிக்கடி அவனைப் பார்க்க அவனோ முறைத்த படி அவளைப் பார்த்தான். புருவம் உயர்த்தியவள் அவனிடம் கேட்க நினைக்க அவனோ அவளைத் தவிர்த்தான். அது அவளுக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது. அவளுக்கு பிடித்த அவனது பாராமுகம் அவளை அப்படி வதைத்தது.

மாலை போகும் போது இருவருக்கும் தனிமை கிடைக்க “எதுக்கு டா முறைச்சிட்டு திரியுற?”, என்று அவ்வளவு எரிச்சலாக கேட்டாள். ஏனென்றால் அவனது பாராமுகம் அவளுக்கு இருந்த சந்தோஷத்தை எல்லாம் அழித்திருந்தது.

அவள் உணர்வுகள் புரியாத அவனோ “இன்னைக்கும் இதே டிரஸ் தானா? ஒரே ஒரு நாள் பிங்க் கலர்ல சேலை கட்டிட்டு வந்திருக்கலாம்ல? அது உனக்கு ரொம்ப அழகா இருக்கும்”, என்றான் சாதாரணமாக.

“இந்த விசயத்துக்கா என்னை தவிக்க விட்டான்?”, என்று எண்ணியவள் “வாயை மூடிட்டு போ டா லூசு”, என்றாள்.

“ஏய் ஏன் டி திட்டுற?”

“என் கிட்ட சேலையே கிடையாது. அது எனக்கு பிடிக்கவும் செய்யாது. அதையும் விட எனக்கு கட்டவே தெரியாது.  நீ அதைக் கட்ட சொன்னா திட்டாம கொஞ்சுவாங்களா?”, என்று கேட்டாள்.

“இதுக்கா டா அப்படி முறைச்சிட்டு திரிஞ்ச? போ ரகு”, என்று சொல்ல அதற்கு பிறகு அவன் எதுவுமே சொல்ல வில்லை.

அன்று இரவு வழக்கம் போல அன்றைய நிகழ்வுகளை அவள் டைரியில் எழுத அப்போது தான் அவனது குரல் மனதில் எழுந்தது. “இன்னைக்கும் இதே டிரஸ் தானா? ஒரே ஒரு நாள் பிங்க் கலர்ல சேலை கட்டிட்டு வந்திருக்கலாம்ல? அது உனக்கு ரொம்ப அழகா இருக்கும்”, என்ற அவனின் குரலில் சலிப்பு, ஏக்கம், ஆசை என அனைத்தும் இருந்தது போல இப்போது அவளுக்கு தோன்றியது.

மீண்டும் மீண்டும் அவள் காதுக்குள் அவன் ஆசை நிரம்பிய குரலே கேட்டுக் கொண்டிருந்தது. “ரகு ஏன் அப்படிச் சொன்னான்? அவன் என்னை சைட் அடிக்கிறானா? இல்லை சும்மா பிரண்ட்லியா சொன்னானா? ஆனா நான் சேலை கட்டாததுக்கா அவனுக்கு அவ்வளவு கோபம்? ரொம்ப எதிர் பார்த்தானோ? ஆனா ஏன் எதிர் பார்த்தான்?”, என்று முதல்முறையாக எண்ணினாள் ஜானகி.

அடுத்த நாளில் இருந்து அவனை நோட் பண்ண ஆரம்பித்தாள். அவன் செய்கைகளை வைத்தே அவளுக்கு தெள்ளத் தெளிவாக அவன் தன்னை விரும்புவதும் சைட் அடிப்பதும். மனதுக்குள் அவ்வளவு சந்தோஷம். தன்னைக் கண்டதும் அவன் கண்கள் மலர்வதை வைத்தே கண்டு கொண்டாள். அதிலும் அவனது அக்கறை, அவனது உரிமையான கோபம் என அனைத்திலும் அவன் காதல் அவளுக்கு வெளிப்பட்டது.

அவன் காதலைக் கண்டு பிடித்தவள் அன்றில் இருந்து அவன் காதலை அனுபவிக்க ஆரம்பித்தாள். ஆனால் அவன் காதல் தெரிந்தது போல காட்டிக் கொள்ளவில்லை. தன்னுடைய காதலையும் சொல்ல வில்லை. ஆனால் அவனுடைய காதல் அவளுக்கு அவ்வளவு பிடித்திருந்தது. காதலில் மட்டும் அல்ல, காதலிக்கப் படுவதிலும் சுகம் இருக்கிறது என்று அவன் அவளுக்கு காட்டினான்.

அவன் காதல் தெரியாதது போல இருந்தாலும் அவன் எப்போது வந்து காதலைச் சொல்வான் என்று காத்திருந்தாள். அவனே வந்து காதலைச் சொன்னால் அவனை இறுக அணைத்துக் கொண்டு தன்னுடைய காதலையும் சொல்ல வேண்டும் என்று அவ்வளவு ஆசை அவளுக்கு. அந்த நாளுக்காக காத்துக் கொண்டு இருந்தாள்.

காதல் தொடரும்…..

Advertisement