Advertisement

“தேங்க்ஸ் ரகு”, என்று அவள் நெகிழ்ந்து போய் உரைக்க “இது எதுக்கு? எனக்கு நீ தேங்க்ஸ் சொல்லுவியா? சரி ரெஸ்ட் எடு, நாளைக்கு பாக்கலாம்”, என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டான். அவனது அந்த கேள்வி அவளுக்கு புரிய வில்லை. ஆனால் ஏன் அப்படிச் சொன்னான் என்று குழப்பத்தைக் கொடுத்தது.

ரகுவின் சட்டையை கழட்டி குளித்து வேறு உடை மாற்றி இரவு உணவை உண்டு விட்டு அறைக்குள் வந்தவளுக்கு அவன் நினைவு தான். அவன் பேசியது, பார்த்தது, அவனது அக்கறை, சிரிப்பு, அவனுடைய செல்ல அழைப்பு என அனைத்தையும் நினைவு கூர்ந்தாள். அந்த நாளின் பொக்கிசமான தருணங்களை எழுதி டைரியை நிறைத்தாள். இரவு முழுவதும் அவனது சட்டையை கட்டிப் பிடித்து தூங்கியது அவள் மட்டுமே அறிந்த ரகசியம்.

அடுத்த நாள் காலையில் அவள் கல்லூரிக்கு வரும் போது அவளையும் அவளிடம் இருந்து இரண்டு விஷயங்களை எதிர் பார்த்தான் ரகு. ஒன்று அவள் துப்பட்டா அணிந்திருப்பாள் என்றும் மற்றொன்று அவனுடைய சட்டையை எடுத்து வந்து தருவாள் என்றும்.

ஆனால் இது இரண்டுமே நடக்கவில்லை. மூன்றாவதாக ஒன்று தான் நடந்தது. நேராக கிளாசுக்கு வந்தவள் அவள் இடத்தில் சென்று பேகை வைத்துக் கொண்டு அவன் அருகே சென்றாள். அனைவரும் அவளை வியப்பாக பார்த்தார்கள். ரகுவுக்குமே கொஞ்சம் அதிர்வு தான்.

அவளோ சாதாரணமாக அவன் அருகே வந்து அமர்ந்து “அன்னைக்கு கொடுத்த அசைன்மெண்ட் முடிச்சிட்டியா ரகு? நான் பாதி தான் முடிச்சேன். எனக்கு அதுல ஒரு டவுட் இருக்கு. சொல்லிக் கொடு”, என்று பேச அவன் தான் திணறினான்.

மற்ற அனைவரின் பார்வையும் அவர்கள் மேல் இருப்பது கண்டு அவனுக்கே ஒரு மாதிரி இருந்தது. அவள் தன்னிடம் சாதாரணமாக பேசி பழக வேண்டும் என்று ஆசைப் பட்டான் தான். ஆனால் அது திடீரென்று அனைவரின் முன்னிலையிலும் நடந்தது அவனையே திணறடித்தது.

அவன் அவளையே பார்க்க “ஏய் ரகு, உன்னை தான் டா கேக்குறேன். சொல்லிக் கொடுப்பியா மாட்டியா?”, என்று உரிமையாக கேட்டாள் ஜானகி.

அப்போதும் அவன் அசையாமல் இருக்க அவன் தலையில் ஒரு கொட்டவும் தான் அவளைப் பார்த்தான். “அசைமெண்ட் சொல்லிக் கொடுக்கச் சொன்னேன். நீ ஆன்னு பாத்துக்கிட்டு இருக்க? சொல்லித் தா”, என்று கேட்க “சாரி ஜானு, நீ திடீர்னு கேட்டதும் ஷாக். வேற ஒண்ணும் இல்லை. நான் சொல்லித் தரேன்”, என்று சொன்னவன் தன்னுடைய நோட்டை எடுக்க அவள் அவன் அருகே நெருங்கி அமர்ந்து கொண்டாள்.

உள்ளுக்குள் ஜெர்க் ஆனாலும் அதை வெளியே காட்டாமல் அவன் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க அதற்கு பிறகு தான் மற்றவர்கள் பார்வை வேறு பக்கம் திரும்பியது. அது வரை அவர்களையே தான் பார்த்தார்கள்.

அப்போது கிளாசுக்கு வந்த வெங்கி தன்னுடைய இடத்தில் ஜானகி அமர்ந்திருப்பதைக் கண்டு தேங்கி நின்று அதிர்வுடன் பார்க்க “இங்க உக்காரு வெங்கி. நான் ரகு கிட்ட ஒரு டவுட் கேட்டுட்டு போயிருவேன்”, என்று சொல்லி தனக்கு அருகில் இருந்த இடத்தைக் காட்டி ஜானகி அமரச் சொல்ல அவனும் தயக்கத்துடன் அவள் அருகே அமர்ந்தான்.

ஒரு பக்கம் ரகு, மற்றொரு பக்கம் வெங்கி நடுவில் ஜானகி அமர்ந்திருக்க அனைவருக்குமே திகைப்பு தான். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கீர்த்திக்கு கடுப்பு தான். “இவ மட்டும் எப்படி தான் பசங்க கூட தைரியமா சகஜமா பேசுறாளோ?”, என்று எண்ணிக் கொண்டாள். அதை அனிதாவிடம் புலம்ப வேறு செய்ய “பல்லு இருக்குறவ பக்கோடா சாப்பிடுறா. உன்னால முடிஞ்சா நீயும் செய்”, என்று சொல்லி விட்டு தன் வேலையைப் பார்த்தாள் அனிதா. எப்போதும் அனிதா அப்படி தான் தவறு என்றால் நேருக்கு நேர் சொல்லி விடுவாள் ஜானகி போலவே.

முதல் பீரியட் ஆரம்பிக்க இன்னும் ஐந்து நிமிடம் இருக்க “ஓகே பாய்ஸ் நான் என் பிளேஸ்க்கு போறேன். பிரேக்ல பேசலாம்”, என்று சொல்லி விட்டு ஜானகி எழும்ப போக அவள் கையைப் பற்றி இழுத்து எழும்ப விடாமல் செய்தான் ரகு. அதற்கு அவள் அதிர எல்லாம் இல்லை. ஆனாலும் அவனுடைய முதல் தொடுகை அவளை நந்தவனத் தென்றல் போல தாலாட்டியது.

“என்ன டா?”, என்று அவள் கேட்ட படி அவன் அருகே அமர அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் “துப்பட்டா எங்க மிர்ச்சி?”, என்று கேட்டான் அத்தனை உரிமையாக.

“இத்தனை நாள் போடாம இப்ப போட்டா அதுவே வித்தியாசமா தெரியும் ரகு. ஆனா வண்டில வச்சிருக்கேன். வெளிய போட்டுக்குறேன்”, என்று சொல்ல அவன் வேறு ஒன்றும் சொல்ல வில்லை. அவள் அந்த அளவுக்கு தன்னுடைய பேச்சைக் கேட்டதே போதும் என்று தோன்றியது.

“உன் டவுட் முடிஞ்சிருச்சா? நான் போகவா?”

“என் சட்டை எங்க?”, என்று அவன் கேட்க அவளுக்குள் அவ்வளவு தடுமாற்றம்.

“அது… அது… உன் சட்டையை துவைச்சு கொடில அம்மா காயப் போட்டாங்களா? காலைல பாத்தா அதைக் காணும். காக்கா தூக்கிட்டு போயிருக்கும் போல டா”, என்று கதை சொல்லி விட்டு அவள் செல்ல “ஏது? நைட் காக்கா வந்துச்சா?”, என்று அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான்.

அவள் இடத்தில் அமர்ந்து அவனைப் பார்த்தவள் அசால்ட்டாக அவனைக் கண்டு கண்ணடிக்க அவன் உதடுகள் அவள் குறும்பை கண்டு மலர்ந்தது. அன்றில் இருந்து ரகு ஜானகிக்கு முக்கியமானவனாக ஆகிப் போனான். அவனும் அவளை தன்னுடைய நட்பு வட்டத்துக்குள் இழுத்துக் கொண்டான். அவள் வெங்கடேஷ், அர்ஜூன், சுப்பு என ரகுவின் நண்பர்கள் அனைவரிடமும் பேசினாள்.

அது மட்டுமல்லாமல் வெங்கி, அச்சு, சூப் என்று அவர்களை செல்லமாக வேறு அழைக்க அவள் நட்பில் நான்கு ஆண்களும் வீழ்ந்து தான் போனார்கள். ரகுவுக்கு செல்ல பெயர் வைக்க வில்லை என்றாலும் அவனை மட்டும் உரிமையாக டா போட்டு பேசுவாள். அவனுக்கும் பதிலுக்கு டி போட்டு பேச தோன்றும் தான். ஆனால் அடக்கிக் கொள்வான். மொத்தத்தில் ஜானகியின் நட்பு ஆண்களுக்கு பொக்கிசமாக தான் இருந்தது.

இத்தனை நாள் திமிர் பிடித்தவள் என்று எண்ணி இருந்த ஜானகி தங்களுடன் இப்படி ஒட்டுதலாக இருப்பாள் என்று அவர்கள் கனவில் கூட நினைக்க வில்லை. அதனால் அவள் நட்பை அந்த அளவுக்கு உயர்வாக போற்றினார்கள். கேண்டீன் சென்றால் அவளுக்கு என்று ஏதாவது வாங்காமல் வர மாட்டார்கள்.

மதிய உணவு இடைவெளியில் அவளை அழைத்து சாப்பிடச் சொல்லி அவள் ஒரு வாய் சாப்பிட்ட பிறகு தான் சாப்பிடுவார்கள். வீட்டில் விஸேஷம் என்றால் வித்தியாசமான சாப்பாடு அவளுக்கும் ஒரு பார்சல் வரும்.

ஜானகி தான் மட்டும் ஆண்களுடன் நட்புடன் பழக நினைக்க வில்லை. கீர்த்தியையும் அனிதாவையும் கூட அந்த குருப்பில் ஜானகி இணைத்துக் கொண்டாள். அனிதா உண்மையிலே அந்த கேங்கில் சந்தோசத்துடன் இணைய கீர்த்தியோ வேண்டா வெறுப்பாக அனைவரிடமும் பேசுவாள்.

அது ஆண்களுக்கு புரியும் தானே? அவர்கள் ஒரு எல்லையுடன் கீர்த்தியுடன் பேசுவார்கள். அதுவும் ஜானகிக்காக மட்டுமே.

அந்த ஏழு பேரும் அப்போதில் இருந்த ஒரு கேங்காக மாறி விட்டார்கள். ஆனால் பசங்க நாலு பேருக்குமே ஜானகி என்றால் கொஞ்சம் அதிகமாக பிடிக்கும். ஜானு என்றால் அனைவருக்கும் ஸ்பெஷல் தான். ரகு மட்டும் அல்ல, மற்ற மூன்று ஆண்களுமே ஜானகியுடன் அவ்வளவு உரிமையாக பேசுவார்கள். ஆனால் கீர்த்தி மற்றும் அனிதாவிடம் மரியாதையாக பேசுவார்கள்.

அவர்களுக்கு இடையே இருக்கும் நட்பு மற்றும் சகோதரத்துவம் புரியாத கீர்த்திக்கு எரிச்சலாக இருக்கும். “இவ மட்டும் பெரிய இவளா? இவ அப்பா பணக்காரன் அதான் இப்படி இவ பின்னாடி தாங்கிட்டு அலையுறாங்க”, என்று நினைப்பாள். ஆனால் வெளியே காட்டிக் கொள்ள மாட்டாள். நட்பு என்ற பெயரில் கூடவே இருந்து கொண்டு ஜானகி மேல் வன்மத்தை வளர்த்துக் கொண்டாள்.

Advertisement