Advertisement

சிறிது நேரம் அமைதியில் கழிய அதுவும் அவனுக்கு கடுப்பாக இருந்தது. அவளிடம் காதலைச் சொல்ல அவன் தயாராக இல்லை தான். ஆனால் அவளுடன் சாதாரணமாக இயல்பாக பேசிப் பழக அவனுக்கு அவ்வளவு ஆசை. அதனால் “என்ன யோசிச்சிட்டு வர ஜானு?”, என்று கேட்டான்.

“ஒரு சின்ன டவுட், அதான்”

“என்ன?”, என்று அவள் முகம் பார்த்த படி கேட்டான்.

“உனக்கு இருக்குறது சிக்ஸ் பேக்கா எய்ட் பேக்கா?”, என்று ஆராய்ச்சியாக அவன் வயிற்றைப் பார்த்த படி கேட்க அவள் கேள்வியில் அவன் கண்கள் விரிந்தது.

“வாட்? என்ன கேட்ட?”, என்று அதிர்ந்து போய்க் கேட்டான்.

“இல்லை, கேக்கணும்னு தோணுச்சு அதான். பதில் சொல்ல இஷ்டம் இல்லைன்னா வேண்டாம்”, என்ற படி அவள் தலையைத் திருப்ப அவனுக்கு சிரிப்பு வந்தது. நிச்சயம் இவள் மற்ற பெண்களைப் போல இல்லை என்று எண்ணிக் கொண்டவன் “என்னைப் பாக்க பாடி பில்டர் மாதிரியா இருக்கு?”, என்று கேட்டான்.

“அப்படி இல்லை, ஆனா பனியன் கட்டிங் கட்டிங்கா தெரிஞ்ச மாதிரி இருந்துச்சு. அதான் கேட்டான்”, என்று சொல்ல அவன் புன்னகை விரிந்தது. கூடவே அவள் தைரியமும் அவனுக்கு பிடித்திருந்தது.

“அது எலும்பு அப்படி தான் தெரியும். இன்னும் அஞ்சாறு வருசத்துல வேணும்னா சிக்ஸ் பேக் வச்சிருவேன்”

“எலும்பா அப்படி வரி வரியா தெரியுது?”, என்று அவள் கண்களை விரித்துக் கேட்க அவள் கண்களுக்குள்ளே தொலைந்து போக வேண்டும் போல இருந்தது அவனுக்கு.

“ஆமா, ஏன்? நீ வேற ஆம்பளைங்களை இப்படி பாத்தது இல்லையா?’

“இல்லை, உன்னை தான் பர்ஸ்ட் டைம் உள் பனியனோட  பாக்குறேன்”, என்று அவள் சாதாரணமாக சொல்ல அவனுக்கு தான் இப்போது வெட்கம் வந்தது.

மீண்டும் அவள் ஏதோ யோசனையிலே வர “இப்ப என்ன யோசனை?”, என்று கேட்டான் ரகு.

“இல்லை பஸ் ஸ்டாப்ல என் டிரஸ் ரொம்ப கேவலமா தெரிஞ்சதோ?”, என்று சங்கடமாக கேட்டாள்.

“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை”

“அப்புறம் ஏன் அந்த ஆட்கள் குறுகுறுன்னு பாத்தாங்க. கமெண்ட் வேற அடிச்சாங்கன்னு நினைக்கிறேன்”, என்று அவள் கேட்க அவன் அமைதியாக இருந்தான்.

“என்ன ரகு சொல்லு?”

“நான் சொல்லிருவேன், ஆனா நீ அதை எப்படி எடுத்துப்பேன்னு தெரியலையே?”, என்று தயங்கினான்.

“அதெல்லாம் ஒண்ணும் நினைக்க மாட்டேன். சொல்லு. கேவலமா இருந்துச்சா?”

“உள்ளே இருக்குறது எதுவும் வெளிய தெரியலை தான். ஆனா…”

“ஆனா என்ன?”, என்று கேட்டவளுக்கு அப்படி ஒரு படபடப்பு.

“ஆனா எப்படி இருக்கும்னு ஒரு சின்ன கற்பனையைக் கொடுத்தது”, என்று அவன் சொல்ல அவள் முகம் அவமானத்தில் சிவந்தது. அதை உணர்ந்தவன் “உன்னோட போல்ட்நெஸ் எல்லாம் சரி தான். ஆனா அதுக்கும் துப்பட்டாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தானே?”, என்று கேட்க அவன் புரியாமல் பார்த்தாள்.

“இல்லை, துப்பட்டா விலகினா அசிங்கமா இருக்கும். அப்படின்னு தான் நீ போடாம இருக்க. சரி தானே?”

“ஆமா”

“ஆனா போடாம இருக்குறதும் சில நேரம் மத்தவங்க பார்வைக்கு வழி வகுக்கும். எனக்கு சொல்ல தோணுச்சு அதான் சொன்னேன். கேக்குறதும் கேக்காம போறதும் உன் விருப்பம்”, என்று சொல்ல அவள் எதுவும் சொல்ல வில்லை.

அவன் வீடு இருக்கும் ஏரியா வந்ததும் “அண்ணா நிறுத்துங்க”, என்றான்.

அவர் நிறுத்தவும் அவளைப் பார்த்தவன் “நான் இறங்கிக்கிறேன், நீ பாத்து போ. போயிட்டு கால் பண்ணு. இல்லைன்னா நான் உன் கூட வரவா? உன் ஏரியா வந்து விட்டுட்டு திரும்பி வரேன்”, என்றான்.

“இந்த சென்னைக்கு நீ தான் புதுசு. நான் பழசு தான். நான் போய்ருவேன். உங்க வீடு இங்க தான் இருக்கா?”

“ஆமா கொஞ்சம் உள்ள தள்ளி போகணும்”

“ஓ சரி, அப்புறம் உன் சட்டையை கழட்டி தரவா? இப்படியே எப்படி வீட்டுக்கு போவ?”

“நான் இப்படி போனா நாலு பேர் வித்தியாசமா பாப்பாங்க தான். அதனால எனக்கு ஒண்ணும் இல்லை. ஆனா உன்னை அப்படி யாரும் பாக்க கூடாது. என்னோட சட்டையை நாளைக்கு கொண்டு வா. இப்ப பாத்து பத்திரமா போயிட்டு வா மிர்ச்சி”, என்று சொல்ல அதிர்வாக அவனைப் பார்த்தாள்.

அவள் பார்வையைக் கண்டவன் “அது நான் உனக்கு வச்ச செல்லப் பேர்”, என்று சொல்ல அவள் கண்கள் விரிந்தது.

“முட்டக்கண்ணி, பாத்துப் போ. கண்டிப்பா எனக்கு கால் பண்ணனும்”, என்று அவன் சொல்ல சிறு சிரிப்புடன் அவள் தலையசைத்தாள். அவளது சிரிப்பு அவனுக்கு அவ்வளவு பிடித்தது.

“அண்ணா பத்திரமா கூட்டிட்டு போங்க”, என்று அவன் சொன்னதும் “சரி தம்பி”, என்று சொல்லி விட்டு ஆட்டோவை எடுத்தார் டிரைவர்.

கண் மறையும் வரை அந்த ஆட்டோவை பார்த்துக் கொண்டே இருந்தான். அவளும் திரும்பி திரும்பி பார்த்த படி சென்றாள் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த சந்திப்பு இருவர் மனதிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டும் நிஜம்.

ஆட்டோவில் வீட்டுக்கு வந்த ஜானகியை தேவகி விசாரிக்க நடந்ததைச் சொல்லி நான்கு திட்டு வாங்கினாள் ஜானகி. ஏனென்றால் தேவகிக்கு அவளது நடை உடை பாவனை எதுவும் பிடிக்காது. எப்போதும் அன்னைக்கும் அவளுக்கும் முட்டிக் கொள்ளும். ஆனால் மோகன் அவளை ஒரு வார்த்தை கூட சொல்ல விட மாட்டார்.

விஷ்ணுவும் பெண்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று சொல்வதால் அண்ணனுக்கும் தங்கைக்கும் எப்போதும் சண்டை தான். “போடா”, என்று சொல்லி விட்டு அவள் கடக்க அவன் தந்தையை மீறி அவள் தலையில் கொட்டி விட்டே செல்வான்.

ஆனால் இன்று தாய் திட்டியது எதுவும் அவளுக்கு காதில் விழவே இல்லை. அவள் மனம் முழுக்க ரகுவையே சுற்றி வந்தது.

அவளது அறைக்குள் வந்தவள் அந்த சட்டையுடனே போய் கண்ணாடி முன்பு நின்றாள். அவள் முகத்தில் இருந்த மயக்கமும் மலர்வும் அவளையே அவளுக்கு அழகாக காட்டியது. அந்த சட்டைக் காலரை பற்றி முகர அவன் வியர்வை வாசனை அவள் நாசியை தீண்டியது. அது அவளை எதுவோ செய்தது. அன்றே அவள் மனதில் முழுதாக பதிந்து விட்டான் ரகு.

அவனைப் பற்றிய கனவில் அவள் இருக்க அப்போது அவளது போனுக்கு புது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

அதை எடுத்து “ஹலோ”, என்றாள்.

“ஜானு, நான் ரகு. நீ வீட்டுக்கு போய்ட்டியா?”, என்று அவ்வளவு கலக்கமாக கேட்டான்.

“நான் சேபா வந்துட்டேன். உனக்கு நான் கால் பண்ணணும்னு நினைச்சேன். நீயே பண்ணிட்ட?”, என்று சந்தோஷமாக பேசினாள்.

அந்த சந்தோஷம் அவனையும் இயல்பாக்கினாலும் “உன்னை தனியா விட்டுட்டோமோன்னு பயந்துட்டே இருந்தேன். நான் உன் கூட வந்திருக்கணும். உன்னை தனியா விட்டுருக்க கூடாது. ஆட்டோல உக்காந்துட்டே உன்னை உன் வீட்ல விட்டுட்டு திரும்பி வந்துருக்கணும். ரொம்ப பயந்துட்டேன்”, என்று அவன் தன்னை மீறி புலம்புவது அவளுக்கு புரிந்தது.

“அதான் நான் வந்துட்டேனே? எனக்கு ஒண்ணும் இல்லை ரகு. கூல்”, என்றாள்.

“ம்ம், ஆமால்ல. ஆனா இனி உன்னை தனியா விட மாட்டேன். நான் பயந்தது எனக்கு தான் தெரியும். இப்ப தான் நிம்மதியா இருக்கு”, என்று அவன் சொல்ல இனி அவனுடன் கழிக்கும் இப்படி பட்ட தருணங்கள் வருமா என்று அவள் மனம் எதிர் பார்க்க ஆரம்பித்தது.

“ரகு”

“ஆன், சொல்லு ஜானு”

“ஒண்ணும் இல்லை, சும்மா தான்”

“சரி டிரஸ் மாத்திட்டு தலையை உணர்த்து ஜானு. சளி பிடிச்சிக்கும்”, என்று சொல்ல அவன் அக்கறை அவ்வளவு பிடித்தது. அவன் தனக்கு புதியவன் என்ற எண்ணமே வரவில்லை அவளுக்கு.

Advertisement