Advertisement

அத்தியாயம் 15

காற்றில்லா தேசத்திலும் 

உயிர் பிழைத்துக் கொள்ளலாம் 

காதல் இருந்தால்!!!

ஒரு நாள் மாலை கல்லூரி விட்டதும் ஜானகி தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பும் போது வண்டி ஸ்டார்ட் ஆக வில்லை. வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு வாட்ச்மேனிடம் சொல்லி விட்டு எரிச்சலுடன் வெளியே வந்தாள். வானம் வேறு மேக மூட்டத்துடன் எப்போது வேண்டும் என்றாலும் பொழிவேன் என்பது போல இருந்தது.

வரிசையாக செல்லும் ஆட்டோவை நிறுத்த முயற்சி செய்த படியே பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்தாள். ஆட்டோ முழுக்க ஆட்களை ஏற்றிக் கொண்டு வர எதுவும் நின்ற பாடே இல்லை. தந்தைக்கு அழைத்தாலும் அவர் எடுக்க வில்லை. விஷ்ணுவும் அப்போது மும்பையில் எம்.பி.ஏ படித்துக் கொண்டிருந்தான். அதனால் வேறு வழி இல்லாமல் பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பிக்க மழை வேறு சிறு தூறலாக பொழிய ஆரம்பித்தது.

போக போக வேகம் கூடியது. அவள் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து நிற்கும் போது முழுமையாக நனைந்திருந்தாள். பேருந்து வரும் வழியே பார்வையை செலுத்திக் கொண்டிருந்தவள் சிறிது நேரம் கழித்து தலையை திருப்ப இரண்டு ஆண்களின் பார்வை அவள் மேல் இருப்பதை அவளால் உணர முடிந்தது.

“என்ன இவனுங்க இப்படி பாக்குறாங்க”, என்று எண்ணி தன்னை குனிந்து பார்க்க சற்று அதிர்ந்து தான் போனாள். அவளது வெள்ளை டாப் முழுக்க நனைந்திருக்க அவள் உள்ளே அணிந்திருந்த அனைத்தும் வெளியே தெரிந்தது.

அதைக் கண்டதும் திக்கென்று இருந்தது. அவசரமாக பின்னால் மாட்டி இருந்த பேகை எடுத்து முன்னால் வைத்து கட்டிப் பிடித்த படி நின்றிருந்தாள். ஆனாலும் ஒரு மாதிரி அவஸ்தையாக தடுமாற்றமாக இருந்தது. இது வரை அவளுக்கு இப்படி ஒரு நிலை வந்ததில்லை. இதே நிலை மற்ற பெண்களுக்கு வந்திருந்தால் சப்பென்று அந்த ஆண்களை அடித்திருப்பாள். ஆனால் அவளே மற்றவர்களுக்கு காட்சிப் பொருளாக நிற்க அதுவே சங்கடத்தை தந்தது. ஏதாவது ஆட்டோ வராதா என்று அவ்வளவு தவிப்பாக பார்த்திருந்தாள்.

என்ன தான் தைரியமாக இருந்தாலும் சில குணங்கள் பெண்களுக்கு உண்டு தானே? அவள் தவிப்புடன் நிற்க அப்போது நனைந்த படி பஸ் ஸ்டாண்ட் வந்த ரகு அவளைக் கண்டு புருவங்களை மேல் எழுப்பினான். ஆனால் எதுவும் சொல்ல வில்லை. இருவரும் அந்த அளவுக்கு சகஜமாக பேசிக் கொண்டதில்லையே. அவள் அவனை ஒரு முறை நிமிர்ந்து பார்த்து விட்டு தலையை குனிந்து கொண்டாள்.

அவள் ஏதாவது பேசி இருந்தால், இல்லை ஒரு பார்வை பார்த்திருந்தாலும் அவனே சென்று பேசி இருப்பான். ஆனாலும் அவளை கவனிக்க தவற வில்லை. அவன் மனதில் நீங்காத இடத்தை பிடித்த பெண்ணாயிற்றே. மழையில் நனைந்த கோழிக் குஞ்சு போல அவள் நிற்க அவள் முகத்தில் இருந்த தவிப்பையும் அவள் கண்கள் அலைபாய்வதையும் அவள் பையை இறுக்கிப் பிடித்திருந்ததையும் கவனித்தான்.

“இந்த மிர்ச்சி என்ன இப்படி நிக்குறா. இவ இப்படி பட்ட ஆள் இல்லையே? எங்கயும் திமிரா தெனாவெட்டா தானே இருப்பா”, என்று எண்ணும் போதே “பின்னாடி நச்சுன்னு தெரியுது டா, அதே மாதிரி முன்னாடி தெரிஞ்சா எப்படி இருக்கும்?”, என்று ஒரு ஆள் சொல்வதும் அதற்கு மற்றொருவன் சிரிப்பதும் ரகுவுக்கு கேட்டது. அவசரமாக அவளைப் பார்த்தவன் அப்போது தான் அவளது உடையைக் கவனித்தான். அடுத்த நொடி அவர்களை முறைத்து விட்டு வேகமாக அவளை நெருங்கினான்.

அவன் தன்னை மறைத்த படி வெகு அருகில் வந்து நின்றதைக் கண்டு அவள் திகைத்து விழிக்கும் போதே “இதைப் பிடி”, என்று சொல்லி தன்னுடைய பேகை நீட்டினான். ஒரு கையால் அதை வாங்கியவள் அவனைக் குழப்பமாக பார்க்க தன்னுடைய சட்டையைக் கழட்டியவன் அவளுடைய பேகையும் சேர்த்து வாங்கிக் கொண்டு “இதை மேல போட்டுக்கோ”, என்றான்.

அடுத்த நொடி நன்றியோடு அவனைப் பார்த்தவள் எந்த மறுப்பும் சொல்லாமல் அதை வாங்கி அணிந்து கொண்டாள். அந்த கருப்பு நிற சட்டை அவள் மானத்தைக் காப்பாற்றியது. சட்டையை அணிந்ததும் அவளது பேகை அவளிடம் கொடுத்தவன் வந்து கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்த முயன்றான். வெள்ளை உள் பனியன் மற்றும் கருப்பு பேண்ட் அணிந்து நின்றிருந்தவனை சிலர் வியப்பாக பார்த்தாலும் யாரும் எதுவும் சொல்ல வில்லை.

கஷ்டப் பட்டு ஒரு ஆட்டோவை நிறுத்திய ரகு அவள் புறம் திரும்பி “ஜானு வா, ஆட்டோல ஏறு”, என்று அழைத்தான்.

அந்த இடத்தில் இருந்து போனால் போதும் என்று எண்ணிய ஜானகியும் அவசரமாக ஆட்டோவில் ஏறிக் கொண்டு “தேங்க்ஸ்”, என்று சொல்ல “கொஞ்சம் தள்ளி உக்காரு”, என்றான் அவன்.

அவள் கேள்வியாக அவனைப் பார்க்க “நான் இப்படியே வீட்டுக்கு போக முடியாது”, என்றான். அவன் சொன்னது புரிந்ததால் அவனுக்கும் இடம் விட்டு தள்ளி அமர்ந்தாள்.

அவளுக்கு அடுத்ததாக இடைவெளி விட்டு ஏறி அமர்ந்த ரகு “நுங்கம்பாக்கம் போங்க அண்ணா”, என்றான். ஆட்டோவும் கிளம்பியது.

“எங்க வீடு, அங்க இல்லை. அதையும் தாண்டி போகணும்”, என்றாள் ஜானு.

“தெரியும். நான் எங்க வீட்ல முதல்ல இறங்கிக்கிறேன். இந்த நிலைமைல நான் உன் வீடு வரைக்கும் இப்படியே வரது சரி கிடையாது”

“ஏன் வந்தா என்ன?”

“அது அப்படி தான். நான் முதல்ல இறங்கிக்கிறேன். நீ பத்திரமா வீட்டுக்கு போ”

“இல்லை, அது”

“ஏன்? ஆட்டோல தனியா போக பயமா இருக்கா?”

“அதெல்லாம் பயம் இல்லை. நான் போய்க்குவேன். ஆனா நான் பத்திரமா போறேன்னு உனக்கு எப்படி தெரியும்?”, என்று கேட்ட படி அவள் புருவம் உயர்த்த “அப்பாடியோ மிர்ச்சி என்ன அழகு”, என்று தான் அவனுக்கு தோன்றியது. மழையில் நனைந்த கோழிக் குஞ்சு போல முகத்தில் எந்த அலங்காரமும் இல்லாமல் அவள் இருப்பது அத்தனை அழகாக இருந்தது அவனுக்கு. அதுவும் அவளது ஈர உடை அவளது உடலை எடுத்துக் காட்ட அவன் கண்களை திருப்ப திணறினான். அவனுக்கு அவன் மீதே கோபம் வந்தது.

“என்ன டா பண்ணுற? அவ உன்னை நம்பி உன் கூட வரா. நீ அவளை தப்பா பாக்குற? உனக்கும் அந்த ஆட்களுக்கும் என்ன வித்தியாசம்?”, என்று அவன் மனதே அவனைத் திட்டியது.

அவன் பதில் சொல்லாமல் இருக்க “என்ன ஆச்சு ரகு?”, என்று கேட்டாள்.

“ஒண்ணும் இல்லை. உனக்கு பயம் இல்லைன்னா தனியா போ. வீட்டுக்கு போய்ட்டேன்னு ஒரு கால் மட்டும் பண்ணி சொல்லிரு”, என்று சொன்னவன் பார்வையை திருப்பிக் கொண்டான். அவளையே பார்க்க பார்க்க அவன் கண்களையும் மனதையும் நிறைத்தாள். தன்னை மீறி பார்வையால் மனதைச் சொல்லி விடுவோமோ என்று பயந்து போனான்.

“உன் நம்பர் என் கிட்ட இல்லை”, என்று சொல்லி பேச்சை வளர்த்தாள் ஜானகி. இது வரை அவன் மீது லவ் எல்லாம் இல்லை. ஆனால் இப்போது காதல் என்றில்லாமல் ஏதோ ஒரு உணர்வு. ஈர்ப்பு என்று கூட சொல்லலாம். அந்த ஈர்ப்பில் அவனை கூர்ந்து கவனிக்க அவன் அழகு கூட தனியாக தெரிந்தது. அவளை அறியாமலே அவனை சைட் அடித்தாள். பெண்ணின் மனதை தொட ஒரு நொடி போதுமே. அதை செய்திருந்தான்.

அவனது அக்கறை அவளுக்கு அவளுடைய தந்தையை தான் நினைவு படுத்தியது. தந்தை இடத்தில் அவனை வைத்துக் கொண்டது அவள் மனது.

அவள் பேச்சை வளர்ப்பது புரிந்தாலும் அவள் முகம் பார்க்காமல் “உன்னோட நம்பர் சொல்லு ஜானு. நான் மிஸ்டு கால் கொடுக்குறேன்”, என்றான். அவள் நம்பர் சொல்ல அவன் குறித்துக் கொண்டான். அவளுக்கும் மிஸ்டு கால் கொடுத்தான்.

Advertisement