Advertisement

     சென்னையில் அமைந்திருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி… அன்று தான் விடுமுறை முடிந்து கல்லூரி திறக்கப் படுகிறது என்பதால் கொஞ்சம் பரபரப்பாகவே இருந்தது. சீனியர்கள் அனைவரும் கெத்தாக உள்ளே நுழைய முதலாம் ஆண்டு மாணவர்கள் கனவுகளோடும் பயத்தோடும் தயக்கத்தோடும் உள்ளே அடி எடுத்து வைத்தார்கள்.

     முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்பறையில் ஐம்பது பேர் அமர்ந்திருக்க அந்த அறையில் இருந்த நான்காவது பெஞ்சில் கடைசி ஆளாக அமர்ந்திருந்தான் ரகுராம்.

     அவன் பக்கத்தில் பரம சாதுவாக அமர்ந்திருந்தான் வெங்கடேஷ். முதல் நாள் என்பதால் தயக்கத்துடன் பேச ஆரம்பித்து இருவரும் சிறிது நேரத்திலே நட்புடன் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

     அப்போது டக் டக் என்ற ஹை ஹீல்ஸ் சத்தம் கேட்க அனைவரின் பார்வையும் வாசலை நோக்கியது. அங்கே வெள்ளை நிற குர்தா மற்றும் நீல வண்ண ஜீன்ஸ் அணிந்து தன்னுடைய ஹை ஹீல்ஸ் சத்தத்துடன் அந்த கிளாசுக்குள் நுழைந்தாள் ஜானகி. அனைவரின் பார்வையும் அவள் மேலே இருந்தது.

     மற்ற பெண்கள் அனைவரும் சுடிதாரில் வந்திருக்க அவளது உடை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது என்றால் அவளது குதிரைவாலும் காதில் இருந்த பெரிய வளையமும் கண்ணில் இருந்த கருப்பு நிற கூலிங்க்கிளாசும் இன்னும் வித்தியாசமாக இருந்தது.

     நேராக பெண்கள் அமர்ந்திருக்கும் பக்கம் சென்றவள் ஒரு நொடி இடத்தை ஆராய்ந்தாள். கடைசி பெஞ்சில் ஒரு இடம் காலியாக இருக்க நேராக சென்று அங்கே அமர்ந்து கொண்டாள். அவள் அமர்ந்த பிறகும் அனைவரின் பார்வையும் அவள் மேலேயே இருந்தது.

     தலையை திருப்பி ஒரு பார்வை பார்த்தவளுக்கு அனைவரின் பார்வையும் ஒரு சிரிப்பைத் தான் கொடுத்தே தவிர சங்கடத்தையும் கூச்சத்தையும் கொடுக்க வில்லை. சென்னையில் வாழ்ந்தவர்கள் அவளை பார்த்து விட்டு சட்டென்று திரும்பிக் கொள்ள வேறு ஊரில் இருந்து வந்தவர்கள் மட்டும் அவளையே பார்த்த படி இருந்தனர்.

     அவள் சிறு வயதில் இருந்தே இப்படி தான் உடை அணிவதும் அலங்காரம் செய்வதும் என்பதால் அது அவளுக்கு சகஜம் தான். அதுவும் மாறிவரும் சென்னையில் கீரைக்காரியே டீஷர்ட் மிடி சகிதம் சுற்றி வரும் போது இவள் உடை சாதாரணம் தானே?

     “இப்ப இப்படி பாக்குற பொண்ணுங்க இன்னும் மூணு மாசத்துல என்னை விட மோசமா டிரெஸ் போட்டுட்டு தான் வருவாங்க”, என்று எண்ணிக் கொண்டாள்.

     ரகுராம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவன். அவன் இத்தனை வருடம் இருந்தது, படித்தது எல்லாம் அங்கே தான். அவனது தந்தை மூர்த்தி கவர்ன்மெண்ட் பஸ் டிரைவர். அவருக்கு சென்னைக்கு மாற்றல் கிடைத்து ஆறு மாதம் ஆகி இருந்தது. அதனால் தான் அவர் குடும்பத்தை சென்னைக்கு வரவைத்து விட்டார். ரகுவையும் இங்கே இருக்கும் கல்லூரியிலே சேர்த்து விட்டார்.

     வெங்கடேஷ் ஜானகியையே பார்த்துக் கொண்டிருக்க “டேய் பாத்தது போதும், திரும்பு”, என்று ரகு சொன்ன பிறகு தான் ஜானுவிடம் இருந்து தலையை திருப்பினான் வெங்கி.

     “இல்லை ரகு, அந்த பொண்ணு வித்தியாசமா இருக்குல்ல?”

     “நீ விருதுநகர்ல இருந்து வந்துருக்கல்ல? அதான் வித்தியாசமா இருக்கு. எனக்கும் அப்படித் தோணுது. ஆனா இங்க அப்படி இல்ல. எல்லா பொண்ணுங்களும் இப்படி தான் இருப்பாங்க. இன்னைக்கு முதல் நாள், அதனால மத்த பொண்ணுங்க எல்லாம் இப்படி வந்துருக்காங்க. ஆனா இன்னும் கொஞ்ச நாள்ல பாரு. வேற மாதிரி சுத்துவாங்க. நீ சீனியர்சைப் பாக்கலையா? அதனால இது பெரிய விஷயம் இல்லை. அவ டிரஸ் ஓகே தான்”, என்ற ரகு மனதுக்குள் “இவ துப்பட்டா போட்டிருந்தா வித்தியாசமா தெரிஞ்சிருக்காது”, என்று எண்ணிக் கொண்டான்.

     “அவளைப் பாத்த்தும் உனக்கு என்ன தோணுது ரகு?”, என்று வெங்கி கேட்க “உனக்கு என்ன தோணுது?”, என்று கேட்டான் ரகு.

     “திமிர் பிடிச்சவன்னு தோணுது”

     “ஹா ஹா, அது திமிர் இல்லை டா. தைரியம். எனக்கு அப்படி தான் தெரியுது. மத்த பொண்ணுங்க கிட்ட இருக்குற தடுமாற்றம், பயம், தயக்கம் எதுவும் அவ கிட்ட இல்லை”, என்று சொன்னவன் “ஆனால் கொஞ்சம் ஹாட்டா இருக்கா. சோ செக்ஸி இந்த மிர்ச்சி”, என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டான். உண்மையிலே அவனுக்கு அப்படித் தான் தோன்றியது. ஏனோ அவனை அறியாமலே மிர்ச்சி என்ற பெயர் அவனுக்குள் தோன்றியது.

     தன்னைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள் என்று தெரியாமல் இருந்த ஜானகி தனது அருகில் அமர்ந்திருந்த கீர்த்தி அவளையே திகைப்புடன் பார்க்கவும் “ஹலோ, அயம் ஜானு.. ஜானகி”, என்று சொல்லி கை நீட்டினாள்.

     பெண்கள் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்திருந்த கீர்த்திக்கு அவள் நடை உடை பாவனை அவளது ஆங்கில உச்சரிப்பு சிறு திகைப்பைக் கொடுத்தாலும் “ஹாய் என் பேர் கீர்த்தனா”, என்றாள்.

     “நான் இனி கீர்த்தின்னே கூப்பிடுறேன்”, என்று சிரிக்க  கீர்த்தியும் புன்னகைத்தாள். கீர்த்தனாவின் தந்தை மதுரையில் சாதாரண கூலித் தொழிலாளி தான். ஆனால் அதைச் சொல்ல சங்கடப் பட்டு பிஸ்னஸ் மேன் என்று தான் அனைவரிடமும் சொன்னாள்.

     சிறு வயதில் இருந்து கடன் பட்டினி என்று வளர்ந்தவளுக்கு இங்கு படிக்க வாய்ப்பு வந்ததே பெரிய விஷயம். அவள் வீட்டின் பக்கத்தில் இருந்த சர்ச் மூலமாக தான் இந்த காலேஜில் சேர்ந்தாள். அவள் தங்கி இருப்பது ஹாஸ்டலில் தான். பீஸ் எல்லாம் சர்ச் பாத்துக் கொள்ளும்.

     அவள் போடும் உடை கூட அவளது அன்னை வேலை செய்யும் வீட்டில் கொடுப்பது தான். அவள் கொஞ்சம் அழகு என்பதால் தான் அவளுக்கு எந்த உடை போட்டாலும் அழகாக இருந்தது. ஆனால் அவளை விட அழகாக இருந்தாள் ஜானகி.

     கீர்த்தி ஏழை தான். ஆனால் அதை அவள் வெளியே சொல்ல வில்லை. அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தாங்கள் பணக்கார குடும்பம் என்பது போல தான் சொல்லி வைத்திருந்தாள்.

     வீட்டின் கஷ்டத்தை வெளியே சொல்லிக் கொள்பவர்கள் தோற்றுப் போவதில்லை. ஆனால் அதை மறைத்து பொய் சொல்லும் போது தான் வாழ்க்கையில் தோற்றுப் போவார்கள். அங்கே அனைவரும் பணக்காரர்கள் என்று அவளாகவே எண்ணிக் கொண்டாள். தான் மட்டும் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறேனே என்ற கீர்த்தியின் தாழ்வுணர்ச்சி தான் பல பிரச்சனைகளுக்கு அடித்தளம் என்று அவளுக்கு உரைக்கவே இல்லை.

     சிறிது நேரத்தில் பேராசிரியர் உள்ளே வர அவர்களின் வகுப்புகள் ஆரம்பித்தன. அப்போது தான் அவளது பெயர் ஜானகி என்றே மற்ற அனைவருக்கும் தெரியும். அதுவும் நுனி நாக்கில் அவள் பேசும் ஆங்கிலமும் அவள் பேசும் போது ஆடும் குதிரைவாலும் கைகளை ஆட்டி ஆட்டி பேசும் அவளது தோற்றமும் ரகுவை நிச்சயம் பாதிக்கவே செய்தது. முதல் நாளே அவள் மீதான ஈர்ப்பு அவனுக்குள் எழுந்தது. ஆண் பெண் ஈர்ப்பு சகஜம் தானே?

     அதற்கு பின் வகுப்புகள் ஆரம்பிக்கப் பட்டு நாட்கள் செல்ல ஆரம்பித்தன. ரகுவின் மனதிலும் ஜானகி மீதான ஈர்ப்பு வளர்ந்து அதற்கு அடுத்த இடத்தை பிடித்திருந்தது. இதற்கிடையில் அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் சுனில் கீர்த்தனாவைப் பார்த்து காதல் கொண்டான். அவள் பயந்த சுபாவம் அவனை இம்ப்ரஸ் செய்தது.

     அதை நேரடியாக அவளிடம் வந்து சொல்லியும் விட்டான். அவன் வந்து காதலைச் சொன்ன போது கீர்த்தி ஏற்றுக் கொள்ள வில்லை. பல நாள் சுத்தலில் விட்டு அவன் பணக்காரன் என்று தெரிந்த பிறகு தான் அவனை ஏற்றுக் கொண்டாள். ஆனால் அந்த காதலை வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டாள் கீர்த்தி. ஜானகிக்கு கூட தெரியாது.

     சுனில் அவளை வெளிய அழைத்தால் கூட மறுத்து விடுவாள். உண்மையைச் சொல்லப் போனால் தான் ஒரு ஏழை என்பதைக் கூட அவனிடம் சொல்லி விட்டாள். அதற்கு பிறகும் அவன் காதலிப்பதாக சொல்லவும் தான் அவனை ஏற்றுக் கொண்டாள். அவனுக்கு உண்மையாக தான் இருந்தாள். அதே போல அவனும் அவள் மீது உயிரையே வைத்திருந்தான். அந்த காதலை இருவரும் மதிக்க வில்லை என்பதே அவர்கள் வாழ்க்கை சிதைவதற்கு மூலக் காரணம்.

     கல்லூரி ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கடந்திருந்தது. அது வரை ஜானகி ரகுவிடம் அதிகம் பேசியதில்லை. ஆனால் தேவையான விஷயங்கள் பேசுவாள். அவனும் சாதாரணமாக பதில் கொடுத்தாலும் உள்ளுக்குள்ளே அவளை விரும்ப ஆரம்பித்திருந்தான். ஏனோ அவளிடம் ஒரு தனி ஸ்பார்க் இருப்பது போல அவனுக்கு பட்டது. அதே நேரம் அந்த காதலை அவன் வெளிப்படுத்த எல்லாம் இல்லை. இது படிக்கும் காலம், படிக்க மட்டுமே செய்ய வேண்டும் என்பது அவனது எண்ணம்.

     ஏனென்றால் அவனுக்கு அவனுடைய தந்தையை அந்த அளவுக்கு பிடிக்கும். அவன் படித்து நல்ல நிலைக்கு வருவதே அவரின் ஆசை. அதனால் அதை நிறைவேற்றிய பிறகு தான் அவனது விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தான். தந்தை மீது அவனுக்கு இருந்த அதீத அன்பே அவனை கெட்ட பழக்கங்களில் இருந்து தள்ளி வைத்திருந்தது.

     கல்லூரி ஆரம்பித்து இந்த இரண்டு மாதத்தில் ரகு, வெங்கடேஷ், அருண், சுப்பு நால்வரும் நல்ல நண்பர்களாகினார். அதே போல ஜானகியுடன் கீர்த்தி அனிதா இருவரும் நன்கு பேசினார்கள். அது நட்பா என்றெல்லாம் தெரியாது. ஆனால் கீர்த்திக்கு எப்போதும் ஜானகி மேல் ஒரு கவனம் உண்டு. அதை பொறாமை என்று கூட சொல்லலாம்.

     அவள் ஆங்கிலத்தில் ஏதாவது பேசினால் அனைவரும் அவளை வியப்பாக பார்ப்பார்கள். ஆனால் கீர்த்தியோ “எல்லார் முன்னாடியும் ரொம்ப சீன் போடுறா. தமிழ்ல பேசினா என்னவாம்?”, என்று எண்ணிக் கொள்வாள். ஆனால் ஜானகி அதை எல்லாம் பெரிதாக யோசித்தது இல்லை. எப்போதும் ஜானகி அடுத்தவர்களுக்காக தன்னை மாற்றிக் கொண்டது கிடையாது. அவள் இயல்பே அவளாக இருப்பது தான்.

     இது தெரியாமல் கீர்த்தி தான் அவள் மீது பொறாமையை வளர்த்துக் கொண்டாள். அதை வெளியே காட்டாமல் மறைத்தும் கொண்டாள். கீர்த்தியின் மனதில் எந்த அளவுக்கு சுனிலின் காதல் இருந்ததோ அதே அளவு ஜானகி மீதான பொறாமை உணர்வும் இருந்தது.

     ஜானகி தன்னுடைய திறமையால் முதலில் அவளது கிளாசில் பாப்புலர் ஆனாள் என்றால் மற்றொரு விஷயத்தில் கல்லூரியே அவளைத் திரும்பிப் பார்த்தது.

     ஒரு சீனியர் பையன் வந்து ஜானகியிடம் காதலைச் சொல்ல அவள் மறுத்தாள். ஆனால் அவன் அவள் கையைப் பற்றி இழுக்க வர அடுத்த நொடி அவனை ஓங்கி அறைந்து விட்டாள். அன்றில் இருந்து கல்லூரியிலே பேமஸ் ஆகிப் போனாள். அதற்கும் கீர்த்தி வயிறு எரிந்தாள்.

     இப்படியே நாட்கள் செல்ல முதல் செமஸ்டர் பரீட்சை முடிந்து ரிசல்ட் வந்தது. நன்கு படிக்கும் ரகு, பாலகிருஷ்ணன் இருவரையும் விட அதிக மதிப்பெண்கள் எடுத்து முதலாக வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தாள் ஜானகி.

     அதே போல கல்சுரலிலும் தைரியமாக பங்கு கொள்வாள். மற்ற பெண்கள் கிளாசிக்கல் நடனத்தில் சேர்ந்தால் இவள் குத்துப் பாட்டுக்கு தனியாக ஆடுவாள். அனைவரின் கை தட்டையும் முதல் பரிசையும் தட்டிச் செல்வாள். அது போக பேச்சுப் போட்டி, டென்னிஸ் என அனைத்திலும் பங்கு கொள்வாள். இது எல்லாமே அந்த கல்லூரியில் அவளை நட்சத்திர நாயகி ஆக்கி இருக்க இதை  எல்லாம் கீர்த்தி பார்த்து பொருமிக் கொண்டு தான் இருந்தாள்.

     உண்மையான நட்பு நம்மை உற்சாகப் படுத்துமே தவிர தாம் கெட்டுப் போக வேண்டும் என்று நினைக்காது. அவ்வளவு திறமைசாலியான ஜானகி உண்மையான நட்பை கண்டு கொள்ள தவறினாள். அந்த அளவுக்கு கீர்த்தியின் நடிப்பு இருந்ததோ என்னவோ?

காதல் தொடரும்…..

Advertisement