Advertisement

அத்தியாயம் 14

என் நொடிகளும் கரைந்து தான்

போகிறது உந்தன் நினைவுகளில்!!!

     ரகுவுடன் கீர்த்தி அவ்வளவு நெருக்கத்தில் இருக்கும் புகைப்படங்களை ஜானகி காட்டியதும் ரகுவுக்கு அவ்வளவு அதிர்ச்சி. கூடவே அவள் மேல் கோபமும் வந்தது. “அட லூசு, நீ இதை வச்சா என்னை நம்பாம போன? யாரோ மார்பிங்க் பண்ணினது டி. யார் என்ன அனுப்பினாலும் நம்பிருவியா? இது தான் உன் காதலா?”, என்று சீற்றத்துடன் கேட்டான் ரகு.

     “போட்டோவை நான் பாக்குறதுக்கு முன்னாடியே எனக்கு விஷயம் தெரியும் ரகு. நீ கீர்த்தி கூட வாழ்ந்தது உண்மை. ஆதி உன் மகன் தான். யாரோ வந்து ஆதியை கொடுங்கன்னு கேட்டதுக்கு இந்த குதி குதிக்கிற?”

     “ஏய் மெண்டல், வளர்த்ததுனால ஆதி என் மகன் தான். ஆனா எனக்கும் கீர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் முதலும் கடைசியுமா காதலிச்ச பொண்ணு நீ மட்டும் தான். அது மட்டுமில்லாம ஆதி என் பையனே கிடையாது. ஒரு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தா தெரிஞ்சிரும். அது மட்டும் இல்லாம நம்ம கல்யாணம் நடக்குற வரைக்கும் நான் பிரம்மச்சாரி தான் டி. நான் தொட்டது முதலும் கடைசியுமா உன்னை மட்டும் தான்”, என்று உண்மையைச் சொல்ல அவள் குழப்பமாக அவனை ஒரு நொடி பார்த்தாள். ஆனால் அவளால் நம்ப முடியவில்லை.

     ஜானகிக்கு தங்கள் முதலிரவில் அவன் தடுமாறியது நினைவில் வந்தது. ஆனாலும் அதை பெரிதாக எடுக்காமல் “எப்பாடி எவ்வளவு பெரிய பொய் பாருங்க அத்தை. ஆதியை பெத்துட்டு கீர்த்தி கூட வாழ்ந்துட்டு எப்படி சொல்றான் பாருங்க”, என்று ஜானகி சொன்ன பிறகு தான் உண்மையை உளறியதை உணர்ந்தான் ரகு.

     அன்னையை தர்மசங்கடத்துடன் நிமிர்ந்து பார்த்தான். ஆனால் நிர்மலா அவனை நம்பினாள். இதைச் சொல்லும் போது மகன் முகத்தில் இருந்த உண்மை புரிந்தது. அது மட்டும் அல்லாமல் கீர்த்தியுடன் அவன் பட்டும் படாமல் பேசியது அவளுக்கு தெரியுமே.

     தன்னுடைய கணவர் திருமணம் என்று சொன்னதும் அவன் இறுகிப் போனதை பார்த்தாள் தானே? ஏதோ கடமைக்கு என்று கீர்த்திக்கு தாலி கட்டியதும் அவளுக்கு நினைவில் வந்தது. ஆனால் ஜானகியுடனான திருமணத்தில் அவன் முகம் எவ்வளவு பூரித்திருந்தது என்று பார்த்தாளே.

     தெரிந்த உண்மையில் நிர்மலா அதிர்ந்து அவனைப் பார்த்தாள். “அம்மா”, என்று அவன் தயங்க “ரகு நீ இப்ப சொன்னது உண்மையா டா? அப்ப ஆதி உன் மகன் இல்லையா?”, என்று கேட்டாள்.

     “அம்மா, அது வந்து…“, என்று அவன் தயங்க “பாத்தீங்களா அத்தை உங்க பையன் எப்படி மாத்தி மாத்தி பேசுறான்னு? நாளைக்கு ஒரு டெஸ்ட் எடுத்தா உண்மை தெரிய போகுது. இவன் ஆதியை மகனே இல்லைன்னு சொல்லி முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்கிறான் பாருங்க”, என்றாள் ஜானகி.

     “ஜானு, வாயை மூடு. மாப்பிள்ளைக்கு எந்த டெஸ்டும் எடுக்க தேவை இல்லை. அவர் நல்லவர். பேருக்கு கூட அவரைக் கெட்டவர்ன்னு சொல்லாத”, என்று மோகன் சொல்ல மாமனாரை முதல் முறையாக நல்ல முறையில் பார்த்தான். கூடவே கோபமும் வந்தது. இதற்கு காரணம் இவர் தானே என்று?

     “அப்பா உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. இவனைப் பத்தி சொன்னா நீங்க தப்பா நினைப்பீங்கன்னு தான் நான் சொல்லலை. இவனை யாரும் தப்பா சொல்லக் கூடாதுன்னு தான் நானும் இவனோட அப்பாவும் உண்மையை மறைச்சோம். இவன் மயக்கத்துல இருந்தாலும் கீர்த்தி கூட வாழ்ந்தது நிஜம். ஆதி இவன் பையன் தான்”, என்று அவள் சொல்ல “இல்லை மா. என் மகன் முகத்துல உண்மை தெரியுது. என் மகன் அப்படி தப்பு பண்ண மாட்டான். நீ ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டு என் புருசனையும் குழப்பிருக்கேன்னு நினைக்கிறேன்”, என்றாள் நிர்மலா.

     “அடியே என்னை நம்புடி. மயக்கத்துல எப்படி ஒரு பொண்ணு கூட வாழ முடியும்?”, என்று கேட்டான் ரகு.

     “அது கீர்த்தியும் உன்னை லவ் பண்ணினா. அதான்”, என்று தடுமாற்றத்துடன் சொல்ல “லூசு, என்னைச் சுத்தி என்ன எல்லாம் நடந்திருக்கு? கடவுளே அதைக் கூட கண்டுக்காம நான் காதல் தோல்வில இருந்துருக்கேனே? என்னைச் செருப்பால அடிக்கணும்”, என்றான் ரகு.

     “நான் வேணும்னா அடிக்கவா?”, என்று கேட்டவளை வெட்டவா குத்தவா என்பது போல பார்த்தான்.

     “இப்படி பேசிட்டு இருந்தா எந்த தீர்வும் கிடைக்காது. ரெண்டு பேரும் மாத்தி மாத்தி குறை தான் சொல்லப் போறீங்க? ஆனா நீங்க ரெண்டு பேரும் நினைக்கிறதும் தப்பு. நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சதை தவிர வேற எந்த தப்பும் செய்யலை. இன்னுமா உங்களுக்கு புரியலை உங்க ரெண்டு பேர் வாழ்க்கையிலயும் கீர்த்தி எவ்வளவு விளையாடிருக்கான்னு”, என்று கேட்டார் மோகன்.

     “என்னது?”,. என்று அதிர்ச்சியாக கேட்டார்கள் இருவரும்.

     “ஆமா இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் அந்த கீர்த்தி தான்”, என்றார் மோகன்.

     “சபாஷ், ஒண்ணும் தெரியாத அப்பாவி மேல பழி போடுறீங்க?”, என்று ரகு சொல்ல “ஆமா பா, கீர்த்தி பாவம். எல்லாம் செஞ்சது இவன் தான்”, என்றாள் ஜானகி.

     “இப்பவாது நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க மாப்பிள்ளை. ஜானுமா நீயும் தான் டா”, என்றார் மோகன்.

     “என்ன கதை விடப் போறீங்க?”, என்று ரகு கேட்க “உண்மையைச் சொல்லப் போறேன். அந்த கீர்த்தி உங்க ரெண்டு பேரையும் எவ்வளவு முட்டாளா ஆக்கிருக்கான்னு சொல்லப் போறேன்”, என்றார்.

     மோகன் பழைய நினைவுகளுக்கு போக ஜானகியும் ரகுவும் கூட பழையதை நினைத்துப் பார்த்தார்கள். நிர்மலாவோ இன்னும் என்ன எல்லாம் வரப் போகுதோ என்ற கலக்கத்துடன் அவர் சொல்வதைக் கேட்க தயாரானாள்.

     அப்போது காலிங் பெல் சத்தம் கேட்க அனைவரும் யாரென்று யோசிக்க “வந்திருக்குறது கீர்த்தியா தான் இருக்கணும். இவன் தான் அவளை வரச் சொன்னான்”, என்று சொன்ன ஜானகி கதவை நோக்கிப் போனாள். மோகன் கண்கள் கூர்மை அடைந்தது. வருவது கீர்த்தி என்றால் இங்கேயே அவளுக்கு சமாதி கட்ட முடிவு எடுத்தார்.

     ஆனால் அங்கே வந்தது விக்ரம் சிங். அவனை இந்நேரம் இங்கு யாருமே எதிர் பார்க்க வில்லை. ஜானகி அவனை உள்ளே அழைக்க அவனைக் கண்டு எரிச்சல் அடைந்த ரகு “அதான் ரெண்டு நாள் டைம் கேட்டேனே? அதுக்குள்ள என்ன?”, என்று கேட்டான்.

     “எனக்கு கீர்த்தி பத்தி எல்லாம் தெரியணும். அதுக்கு தான் மோகன் சாரைப் பாக்க அவங்க வீட்டுக்கு போனேன். ஆனா அவர் இங்க இருக்குறதா சொன்னாங்க”, என்றான்.

     “நீங்க எதுக்கு கீர்த்தி பத்தி தெரிஞ்சிக்கணும்? அதுவும் இவர் கிட்ட கேட்டு. எங்க கிட்டயும் எதையோ கதை சொல்ல தான் ஆரம்பிச்சார். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க? வாங்க உக்காருங்க. உங்களுக்கும் சேத்து கதை சொல்வார்”, என்றான் ரகு நக்கலாக.

     விக்ரம் சிங் ரகு அருகில் அமர “நான் ஒண்ணும் கதை சொல்லலை மாப்பிள்ளை. உண்மையா தான் சொல்றேன். கீர்த்தி தான் உங்க எல்லாரோட வாழ்க்கைலையும் விளையாடிருக்கா”, என்றார் மோகன்.

     “நான் நம்ப மாட்டேன்”, என்று ரகு சொல்ல “நான் நம்புறேன். என் தம்பி வாழ்க்கைல அவ தான் விளையாடிருக்கணும்”, என்றான் விக்ரம் சிங்.

     “ஹலோ பிரதர் உங்க தம்பி வாழ்க்கைல விளையாடினது கீர்த்தி இல்லை. இதோ இவர் தான். எப்படி இவரை மன்னிச்சு விட முடியுது உங்களால?”, என்று கேட்டான் ரகு. எல்லாவற்றையும் அதிர்வுடன் கேட்ட படியே அமைதியாக அமர்ந்திருந்தனர் ஜானகியும் நிர்மலாவும்.

     “என் தம்பியை அவர் கொலை பண்ணினது எனக்கு வருத்தம் தான். கோபம் தான். அவர் தண்டனை அனுபவிக்கலைன்னா நானே அவரைக் கொன்னுருப்பேன். ஆனா அவர் தண்டனை அனுபவிச்சதும் இல்லாம அதுக்கான காரணத்தையும் மேலோட்டமா என் கிட்ட சொன்னார். ஒரு அப்பாவா அவர் சரியா தான் இருக்கார்”, என்று விக்ரம் சிங் சொல்ல ரகு அவனையும் மோகனையும் ஆச்சர்யமாக பார்த்தான்.

     ஏனென்றால் மோகனால் ரகுவின் வாழ்க்கை மட்டுமே போனது. அதற்கே அவன் மோகனை வெறுக்க விக்ரம் சிங்கோ தம்பியை பறிகொடுத்தும் மோகன் பக்கம் பேசுவது அவனுக்கு வியப்பைக் கொடுத்தது. ஏதோ எல்லாமே தவறாக இருப்பது போல ஒரு உணர்வு.

     “நான் தான் எல்லாவற்றையும் தவறாக நினைக்கிறேனோ?”, என்று எண்ணிய ரகு மோகன் புறம் திரும்பி “இத்தனை நாள் காரணம் கேக்க முடியலை. நீங்க எதுக்கு ரகுவைக் கொன்னீங்க?”, என்று கேட்டான்.

     “ஜானு கிட்ட அவன் தப்பா நடந்துக்க பார்த்தான் மாப்பிள்ளை. அதனால தான். என் பொண்ணைக் காப்பாத்த அப்படி செய்ய வேண்டியதா போச்சு. மத்த படி ஒரு உயிரைக் கொல்லும் அளவுக்கு நான் கொடூரமானவன் இல்லை மாப்பிள்ளை”, என்றார் வேதனையாக. அவர் குரலில் இருந்த உண்மை அவனுக்கு புரிந்தது.

     அதனால் ஜானு புறம் திரும்பி “எல்லாம் உன்னால தான் டி. உன்னை எவன் ஆம்பளை பிள்ளை மாதிரி வளரச் சொன்னது? அந்த சுனில் கிட்ட என்ன வம்பு பண்ணி அவன் கிட்ட மாட்டின?”, என்று கேட்டான்.

     “ஹலோ, நான் ஒண்ணும் அவன் கிட்ட வம்பு பண்ணலை. இன்னும் சொல்லப் போனா அவன் யாருன்னே எனக்கு தெரியாது. உன்னால தான் நான் அவனைத் தேடிப் போனேன்”, என்றாள் எரிச்சலாக.

     “என்னது என்னாலயா? விட்டா நான் தான் சுனிலை வச்சு உன்னைக் கடத்தினேன்னு சொல்லுவ போல?”

     “நீ கடத்தலை. ஆனா நான் உனக்காக…. ப்ச் விடு. அது இப்ப பெரிய விஷயம் இல்லை”, என்றாள். அவன் அவளை முறைக்க “சார் நீங்க சொல்லுங்க. எல்லாம். எனக்கு ஆதியோடு அந்தமாக எல்லாம் தெரியணும்”, என்றான் விக்ரம் சிங்.

     “ஆமா, எல்லாரும் என்ன எல்லாமோ பேசுறீங்க? எனக்கு ஒண்ணுமே புரியலை. சம்பந்தி, நம்ம பிள்ளைங்க வாழ்க்கைல என்ன தான் நடந்துச்சு? சொல்லுங்க”, என்று கேட்டாள் நிர்மலா. ரகுவும் இப்போது அவர் சொல்லப் போவதில் உண்மை இருக்குமோ என்று எண்ணி அவர் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தான்.  மோகனும் சொல்ல ஆரம்பித்தார். ஜானகி மற்றும் ரகு இருவரும் பழைய விஷயங்களை அசை போட்டனர்.

Advertisement