Advertisement

     “போ யாரு வேண்டாம்னு சொன்னா? உன்னையும் உன் அப்பாவையும் பாத்தாலே எனக்கு எரிச்சலா இருக்கு”

     “எனக்கும் உன்னைப் பாத்தா எரிச்சலா தான் இருக்கு. நீ என் ரகு இல்லை. என் ரகு இப்படி எல்லாம் பேச மாட்டான். நீ ஒரு ராட்சசன். வாங்கப்பா போகலாம். இனி ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க கூடாது”, என்று அவள் சொல்ல “கொஞ்சம் பொறுமையா இரு ஜானகி. காரணமே இல்லாம நீங்க பிரியக் கூடாது மா. அவன் ஏதோ குழப்பத்துல இருக்கான்”, என்றாள் நிர்மலா.

     “பிரிஞ்சு தான் ஆகணும் அத்தை. உங்க பையன் என்ன பேச்சு பேசுறான்னு பாத்தீங்கல்ல? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எனக்கு இனி இங்க இருக்க வேண்டாம். நான் போறேன்”

     “போனா போகட்டும் மா. பெரிய இவ. இனி எனக்கு இவ தேவை இல்லை”, என்றான் ரகு.

     “அப்பா வாங்க போகலாம்”, என்று அழைத்த மகளையும் மருமகனையும் பார்த்த மோகனுக்கு இப்போது இருவருக்கும் இடையே பிரிவு வந்தால் அது சரியாக இருக்காது என்று தோன்றியது. அவர் ஒன்றை நினைத்து தான் சுனில் வீட்டினருக்கு தகவல் கொடுத்தார். ஆனால் அது மகள் பக்கம் பழி திரும்பும் என்று அவர் எதிர் பார்க்க வில்லை.

     “ரகு உன் மனசுல நீ என்ன தான் நினைச்சிட்டு இருக்குற? ஒருத்தியைக் கட்டி வச்சா நீ நல்லா வாழுவேன்னு நானும் அப்பாவும் உனக்கு கல்யாணம் செஞ்சு வச்சோம். ஆனா ஒரே வருசத்துல அவளை டைவர்ஸ் பண்ணின? அப்புறம் ஜானகியை கல்யாணம் பண்ணப் போறேன்னு சொன்ன? கல்யாணமும் பண்ணி வச்சோம். இப்ப இவ கூடவாது நல்லா வாழுவேன்னு பாத்தா இவளையும் விரட்டி விட பாக்குற? மனுசனா டா நீ?”, என்று கேட்டாள் நிர்மலா.

     “அம்மா உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. இவளை எல்லாம்? அதுவும் இந்த ஆள் என்ன செஞ்சார் தெரியுமா?”, என்று ரகு கேட்க “நீ என் மகனா ரகு? எப்படி டா என் வயித்துல வந்து பிறந்த? உன்னை நல்லவனா தானே டா வளத்தேன்? எங்க என் வளப்பு தப்பா போச்சு? இதைப் பாக்க கூடாதுன்னு தான் உங்க அப்பா போய்ச் சேந்துட்டாரோ?”, என்று கேட்டாள்.

     “நான் நல்லவன் மா. இந்த ஆளை மாதிரி கேடு கெட்டவன் இல்லை. இந்த ஆளைப் பத்தியும் அவரோட பொண்ணைப் பத்தியும் உங்களுக்கு தான் மா தெரியலை. சுயநலப் பிசாசுங்க. ரத்தம் குடிக்கிற காட்டேரிங்க”, என்று ரகு சொல்ல “யாரு நல்லவன் ரகு? நீயா? நீயா நல்லவன்? குட் ஜோக்”, என்று சிரித்தாள் ஜானகி.

     “என்ன டி திமிரா?”

     “ஆமா திமிர் தான். ஆனா அந்த திமிர் நீ போட்ட சோத்தால வந்தது இல்லை. இப்ப நெஞ்சை நிமித்திக்கிட்டு சொல்றியே நான் நல்லவன்னு? அதைச் சொல்ல உனக்கு வெக்கமா இல்லை? பண்ணுறது எல்லாம் நீ பண்ணிட்டு என் அப்பாவை கேடு கெட்டவன்னு சொல்ற?”

     “ஏய் வார்த்தையை அளந்து பேசு”

     “நீ ஒண்ணும் வார்த்தையை அளக்களையே? நான் மட்டும் ஏன் அளந்து பேசணும்?”

     “நீ என்னமும் பண்ணு. இப்ப என் வீட்ல இருந்து இடத்தைக் காலி பண்ணு. உன்னைப் பாக்கவே எனக்கு பிடிக்கலை. இதுல நான் நல்லவனான்னு நக்கல் வேற? இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்னும் ரெண்டு நாள்ல டைவர்ஸ் பேப்பர் வீடு தேடி வரும். உனக்காக தானே உன் அப்பா எல்லாம் செஞ்சார்? ஆனா நீ தினமும் என் கூட வாழ முடியாம துடிக்கிறதைப் பாக்குறது தான் இனி அவருக்கு தண்டனை. போடி”

     “நான் போகத் தான் போறேன். இனி உன் கூட வாழுவேன்னு கனவுல கூட நினைக்காத. டைவர்ஸ் பேப்பர் அனுப்பு. நான் சந்தோஷமா சைன் போட்டு அனுப்புறேன். ஆனா எந்த விதத்துல நீ நல்லவன் ரகு? சத்தியமா நீ நல்லவன் இல்லை. அயோக்கியன்”

     “ஏய்”

     “உண்மையைச் சொன்னா உனக்கு எரியுதா?”, என்று கேட்க மோகனே அவள் பேச்சை வியப்பாக கேட்டார். ஏனென்றால் அவருக்கு தெரியும் ரகு சுத்த தங்கம் என்று.

     “அம்மாடி, கோபத்துல பேசுறது எதுவும் சரியா இருக்காது டா. மாப்பிள்ளை பேசுறார்ன்னு நீயும் பேச வேண்டாம் மா”, என்று மகளை அடக்கப் பார்க்க “இல்லப்பா, உங்களுக்கு இவனைப் பத்தி தெரியாது. எனக்கு மட்டும் தான் தெரியும்”, என்றாள்.

     “என்ன தெரியும் உனக்கு? சொல்லுடி தைரியம் இருந்தா? நெஞ்சை நிமித்திக்கிட்டு சொல்லுவேன் டி நான் நல்லவன்னு. என் அப்பா அம்மா என்னை நல்லவனா தான் வளத்துருக்காங்க”

     “அவங்க நல்லா தான் வளத்தாங்க? ஆனா நீ நல்லா வளரலையே ரகு? அவங்க வளப்பு தப்பா போய் பல வருஷம் ஆச்சு”

     “ஏய், நான் செஞ்ச ஒரே தப்பு உன்னை லவ் பண்ணிட்டு கீர்த்தியை கல்யாணம் பண்ணினது தான். அதுவும் அப்பா போர்ஸ் பண்ணினதுனால. வேற எந்த தப்பும் நான் பண்ணலை”, என்று அவன் சொல்ல நிர்மலாவுக்கு இது புதிய செய்தி.

     “என்ன டா சொல்ற? அப்படின்னா ஜானகியை உனக்கு முன்னாடியே தெரியுமா?”, என்று நிர்மலா கேட்க “நாங்க ஒண்ணா தான் அத்தை படிச்சோம். ரெண்டு பேரும் லவ்வும் பண்ணினோம். உங்க பையன் என் கிட்ட காதலைச் சொன்னப்ப நான் ஏத்துக்கலை. அப்புறம் மாமா அவனை கீர்த்தியை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி போர்ஸ் பண்ணினதுனால தான் அவன் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்”, என்றாள் ஜானகி.

     “உனக்கே தெரியுதுள்ள உண்மை என்னன்னு? அப்புறம் எதுக்கு என்னை திட்டுற? உங்க அப்பாவைக் காப்பாத்த என்னை குறை சொல்லுறியா?”, என்று கேட்டான் ரகு.

     “கீர்த்தியைக் கல்யாணம் பண்ணினது உன்னோட சூழ்நிலை. அதை நான் தப்புனு கூட சொல்ல மாட்டேன். உன் காதல் என் மேல மட்டும் தான்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா நீ பண்ணின பெரிய தப்பு தான் எல்லாரோட வாழ்க்கையும் கேள்வி குறியாக்கி வச்சிருக்கு”

     “வாட், என் தப்பா? நான் என்ன பண்ணினேன். சும்மா கதை விடாதே”

     “கதை இல்லை, நிஜம் ரகு. எந்த நல்லவன் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணை கர்ப்பமாக்குவான்? ஆனா நீ பண்ணின”

     “வாட்?”, என்று அதிர்ந்து போய்க் கேட்டான்.

     “என்ன வாத்து கோழின்னு? நீ ஒரு அயோக்கியன். என்னை லவ் பண்ணின. என் கிட்ட காதலைச் சொல்லுறதுக்கு முன்னாடியே நீ கீர்த்தி கூட வாழ்ந்துட்ட”

     “குட் ஸ்டோரி ஜானகி. கண்டிநியூ”, என்று அவன் சிரிக்க “சொல்ல தான் டா போறேன். ஒரு நாள் கீர்த்தி பார்ட்டி வச்சாளே? அன்னைக்கு தான் நீ அவ கூட முழு போதை மயக்கத்துல வாழ்ந்துருக்க. நீ என் கிட்ட காதலைச் சொல்ல வந்த முந்தின நாள் தான் உன் குழந்தை கீர்த்தி வயித்துல வளறது தெரிஞ்சது. அதுவும் இல்லாம கீர்த்தியும் உன்னை லவ் பண்ணினா. அதனால தான்  நான் உன் காதலை ஏத்துக்கலை. என்னோட உயிர் நீன்னு தெரிஞ்சும் விட்டுக் கொடுத்தேன். கீர்த்தி பத்தி சொன்னா நீ ஒத்துக்க மாட்டேன்னு தெரிஞ்சு தான் நான் உன் அப்பாவுக்கு லட்டர் போட்டேன். கீர்த்தி கர்ப்பத்தை பத்தி சொன்னேன். உன் அப்பாவும் என் கிட்ட பேசினார். அதான் உன் அப்பா உனக்கு அவ்வளவு சீக்கிரமா கீர்த்தியை கல்யாணம் பண்ணி வச்சார்”, என்று சொல்ல அதிர்ந்து போனான் ரகு. அவள் சொன்னது மற்றவர்களுக்கும் அதிர்ச்சி தான். மோகனுக்குமே மகள் லட்டர் போட்டது எல்லாம் தெரியாது.

     இந்த உண்மையை ஜீரணிக்கவே ரகுவால் முடிய வில்லை. கடைசியில் அனைத்துக்கும் காரணம் இவள் தானா? இவளே தானா? என்று எண்ணியவன் அங்கிருந்த ஜக்கை எடுத்து தண்ணீரைக் குடித்து தாகம் தணித்தான். ஆனால் உள்ளம் மட்டும் குமுறியது.

     “இப்ப நீ என்ன சொன்ன? எங்க அப்பாவுக்கு நீ லட்டர் போட்டியா? அப்படின்னா அப்பா கீர்த்தியை எனக்கு கட்டி வைக்க காரணம் நீயா?”, என்று கேட்டான்.

     “ஆமா நான் தான் சொன்னேன்”, என்று சொல்ல அடுத்த நொடி அவன் கரம் இடியாக அவள் கன்னத்தில் பதிந்தது.

     “டேய் ரகு, மாப்பிள்ளை…”, என்று நிர்மலா மற்றும் மோகன் இருவரும் பதற “டேய் பண்ணுறது எல்லாம் நீ பண்ணிட்டு என்னை ஏன் டா அடிச்ச?”, என்று கேட்டாள் ஜானகி.

     “அதானே, ரகு எனக்கு கூட இந்த விஷயம் எல்லாம் தெரியாது. நீ இவ்வளவு மோசமானவனா டா? அதான் அந்த மனுஷன் நான் அவ்வளவு சொல்லியும் உனக்கு அவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சாரா? ஆதி கூட சீக்கிரம் பிறந்தது இதனால தானா? என் கிட்ட என்ன சொன்ன குறைப் பிரசவம்னு தானே? அடப்பாவி நீயா டா இப்படி? உன்னை நினைச்சுக் கவலைப் பட்டு தான் உன் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சா?”, என்று அழுத படி கேட்டாள் நிர்மலா.

     “அம்மா நீ வேற? நடந்ததே வேற”, என்றவன் ஜானகி புறம் திரும்பி “அடப்பாவி, எங்க அப்பா கிட்ட இப்படி பத்த வச்சியா டி நீ? அதான் அந்த மனுஷன் என்னை ஒரு வார்த்தை கூட பேச விடலையா? உனக்கு எல்லாம் மனசாட்சி இருக்கா டி? என்னைப் பத்தி இப்படி அபாண்டமா பேசுற? ஒரே ஒரு பொய் சொல்லி என் மொத்த வாழ்க்கையையும் சீரழிச்சு நான் இத்தனை வருஷம் அழுததுக்கு காரணம் நான் விரும்பின ஜானகியா? உன்னைப் போயாடி உருகி உருகி காதலிச்சேன்?”, என்று பல்லைக் கடித்த படி கேட்டான்.

     “உண்மையைச் சொன்னா அபாண்டமா? எங்க உங்க அம்மா தலைல அடிச்சு சத்தியம் பண்ணு பாப்போம்”, என்று ஜானகி சொல்ல “சத்தியம் பண்ணு டா. நான் போய்ச் சேருறேன்”, என்றாள் நிர்மலா.

     “ஏமா நீ வேற? நீயும் அப்பா மாதிரியே நினைக்கிற? அப்பாவும் என்னை நம்பலை போல? இப்ப நீ வேறயா? இவ பொய் சொல்றா மா”, என்று நிர்மலாவிடம் சொன்னவன் அவள் புறம் திரும்பி “ஏய் என்ன டி அப்பாவும் மகளும் டிராமா போடுறீங்களா?”, என்று கேட்டான் ரகு.

     “நீ நல்லவன்னு பீத்திக்காத. அதுக்கு தான் உண்மையைச் சொன்னேன். எங்களுக்கு டிராமா போடணும்னு எந்த அவசியமும் இல்லை. நீ கீர்த்தி கூட கல்யாணத்துக்கு முன்னாடியே வாழ்ந்தேன்னு சொல்றதுக்கு ஆதாரம் இருக்கு என் மெயில்ல. காட்டவா அதை?”, என்று கேட்டவள் அவசரமாக சுனில் அவளுக்கு அனுப்பி இருந்த மெயிலில் இருந்த புகைப்படங்களைக் காட்ட விக்கித்துப் போனான் ரகு.

     நிச்சயம் அது அவன் தான். ஆனால் கீர்த்தியுடன் அவ்வளவு நெருக்கத்தில் இருப்பதை அவனால் நம்பவே முடிய வில்லை.

காதல் தொடரும்…..

Advertisement