Advertisement

     காலை உணவு உண்ண நிர்மலா இருவரையும் அழைக்க இருவரும் வந்தார்கள். ஜானகி ரகுவுக்கு பரிமாற ஆரம்பிக்கும் போது “இட்லி வைக்கவா? தோசை வைக்கவா ரகு?”, என்று கேட்டாள் ஜானகி.

     “உன் கையால கொஞ்சம் விசத்தைக் கொடு. நிம்மதியா போவேன்”, என்று ரகு வெறுப்புடன் சொல்ல விக்கித்துப் போய் நின்றாள். அவளுக்கும் இப்போது கோபமாக வந்தது. அவளும் அவனை முறைத்துப் பார்த்தாள்.

     மகன் மருமகள் இருவரும் முறைத்த படி இருக்க “ப்ச் என்ன டா, இப்படி எல்லாம் பேசுற? முதல்ல சாப்பிடுங்க”, என்று நிர்மலா சொல்ல “இல்லை அத்தை, முதல்ல என்ன பிரச்சனைன்னு ரகு சொல்லட்டும். நான் என்ன பண்ணினேன்னு எனக்கு தெரியணும். வந்தது யாருன்னு கூட எனக்கு தெரியாது. அப்படி இருக்க என்னை குறை சொன்னா எப்படி என்னால தாங்க முடியும்?”, என்று கோபமாக கேட்டாள்.

     அதையும் விட கோபமாக அவளைப் பார்த்தவன் “பண்ணுறது எல்லாம் பண்ணிட்டு நல்லவ மாதிரி நடிக்கிறியா? முதல்ல உன் அப்பனுக்கு போன் போட்டு உடனே இங்க வரச் சொல்லு. அந்த ஆள் இப்ப இங்க வந்தே ஆகணும். வரட்டும் அந்த ஆளுக்கு இருக்கு”, என்று ரகு சொல்ல குழப்பமாக அவனைப் பார்த்தவள் “எங்க அப்பாவை எதுக்கு வரச் சொல்லணும்?”, என்றாள்.

     “ரகு என்ன பா இதெல்லாம்? நீ பண்ணுறது பேசுறது எதுவும் சரி இல்லைப்பா. கோபத்துல வார்த்தையை விட்டுட்டா திரும்ப அள்ள முடியாது டா”, என்றாள் நிர்மலா.

     “நீங்க சும்மா இருங்க மா உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. ஏய் கூப்பிடு டி அந்த ஆளை. நீ கூப்பிடுறியா இல்லை நான் கூப்பிடட்டுமா? அந்த ஆளுக்கு இன்னைக்கு இருக்கு”

     “ஆள் கீள்ன்னு சொன்ன உனக்கும் மரியாதை கிடைக்காது ரகு. நானும் பொறுமையா இருக்கேன். நீ ஓவரா போற? அந்த மனுஷன் என்னால ரொம்ப நொந்து போய்ட்டார்.  ஆனா நீ அவரை மரியாதை இல்லாம பேசுற? நீ இப்படி அவரை அவமான படுத்துறதை என்னால தாங்க முடியாது. இன்னொரு தடவை என் அப்பா பத்தி பேசின நான் பொறுமையா இருக்க மாட்டேன்”

     “பேசினா என்ன டி பண்ணுவ? அவன் எல்லாம் ஒரு ஆள்? அவன் எல்லாம் ஒரு மனுசனா? மனசாட்சி இல்லாத மிருகம். அவனை எல்லாம்?”, என்று ரகு சொல்லும் போதே கன்னம் எரிந்தது ரகுவுக்கு. ஜானகி அவனை அவ்வளவு ஆவேசமாக அடித்திருந்தாள். அதுவும் அவள் கண்களில் இருந்த ரவுத்திரத்தைப் பார்த்தவன் அந்த நிலைமையிலும் “பழைய மிர்ச்சி இஸ் பேக்”, என்று எண்ணிக் கொண்டான்.

     ஆனாலும் அவள் அடித்ததில் அவ்வளவு கோபம் வந்தது. “ஏய் என்னையா டி அடிச்ச?”, என்று அவன் எகிற “நீ பேசினதுக்கு ஒரு அடியோட விட்டேன்னு சந்தோஷப் படு”, என்றாள் ஜானகி.

     இருவரும் சண்டைகோழிகள் போல சிலிர்த்துக் கொண்டு நிற்க “ரகு சும்மா இரு டா. ஜானகி நீயாவது பொறுமையா இரேன் மா”, என்று இடையில் புகுந்து சொன்னாள் நிர்மலா.

     “உங்க பையன் பேசுறதுக்கு எப்படி அத்தை பொறுமையா இருக்குறது? என் பொறுமைக்கும் ஒரு அளவு தான் இருக்கு. இப்ப என்ன எங்க அப்பா வரணும்? அதானே? வரட்டும். வந்து என்னைக் கூட்டிட்டு போகட்டும். இனி ஒரு நிமிஷம் கூட நான் உங்க மகன் கூட வாழ மாட்டேன். காதலிச்சேன்னு இறங்கிப் போனா ஓவரா பேசுவியா? உன்னை லவ் பண்ணினதை தவிர நான் என்ன டா தப்பு பண்ணினேன்? இல்லை என் அப்பா தான் என்ன பண்ணினார்? உன்னை லவ் பண்ணினதை நினைச்சு வெக்கப் படுறேன் டா ரகு. உன் கூட வாழுறதுக்கு தனியா இருக்குறதே மேல். எங்க அப்பா மிருகம் இல்லை டா. நீ தான் மிருகம். அதனால தான் உன்னை விட்டுட்டு கீர்த்தி போனாளா என்னவோ? இனி நீ எனக்கு வேண்டாம். நான் எங்க அப்பா கூடயே போறேன்”, என்று சொன்னவள் அடுத்த நொடி மோகனை அழைத்தாள்.

     நிர்மலா பேச்சை இருவரும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. தலையும் புரியாமல் வாலும் புரியாத நிலை தான் நிர்மலாவுக்கு.

     “ஜானு சொல்லு டா”, என்று மோகன் குரல் அன்புடன் வந்தது. அவருக்கு நிச்சயம் பிரச்சனை வெடிக்கும் என்று தெரியும். ஆனால் கலகம் பிறந்தால் தான் வழி பிறக்கும் என்று அவருக்கு புரிந்தது அதனால் தான் இதை ஆரம்பித்து வைத்தார். மகள் அழைக்கவும் அதற்கு தான் என்று புரிந்து விட்டது அவருக்கு.

     “அப்பா”, என்று அவள் கலங்கிய குரலில் அழைக்க மனசு வலித்தது அந்த தந்தைக்கு.

     “என்ன ஆச்சு மா? அழுதியா என்ன?”

     “நீங்க உடனே இங்க வாங்க பா. கொஞ்சம் பேசணும்”

     “இதோ வரேன் மா”, என்று சொன்னவர் உடனே கிளம்பி விட்டார். உண்மைகள் வெளியே தெரிய வேண்டிய நேரம் என்று புரிந்தது. ஆனால் அவரும் சில உண்மைகளை மறைக்க வேண்டியது இருக்கிறதே. எதை மறைக்க வேண்டும், எதைச் சொல்ல வேண்டும் என்று மனதுக்குள் முடிவெடுத்தவர் காரைக் கிளப்பிக் கொண்டு சென்றார்.

     தேவகி எங்கே என்று கேட்டதற்கு கூட அவர் பதில் சொல்ல வில்லை. அங்கே நிலைமை தெரியாமல் மனைவியைக் குழப்ப வேண்டாம் என்று எண்ணிக் கொண்டார்.

     வீட்டுக்குள் வந்தவரை முதலில் பார்த்தது நிர்மலா தான். “வாங்க சம்பந்தி”, என்று நிர்மலா தர்மசங்கடத்துடன் அழைக்க “அப்பா”, என்று கலக்கமாக அழைத்தாள் ஜானகி.

     “குட்டிமா”, என்ற படி அவளை நெருங்க “வாயா, பெரிய மனுசா? என்ன எல்லாம் சாதிச்சிட்டேன்னு நெஞ்சை நிமிர்த்திட்டு வரியோ?”, என்று கோபமாக கேட்டான் ரகு.

     அடுத்த நொடி அவன் கன்னத்தில் இடியென இறங்கியது நிர்மலாவின் கரம். எரிச்சலுடன் அவன் அன்னையைப் பார்க்க “நானும் பாத்துட்டு இருக்கேன், பேச்சு எல்லாம் ஓவரா இருக்கு. அவர் உன் மாமனார். உறவுக்கு மரியாதை இல்லைனாலும் வயசுக்கு மரியாதை கொடுக்க வேண்டாம்”, என்று கோபமாக கேட்டாள்.

     “அம்மா அந்த ஆள் பண்ணினது தெரிஞ்சா நீங்க இப்படி சொல்ல மாட்டீங்க. என் வாழ்க்கையே இந்த ஆளால போச்சு. இப்ப ஆதியும் நம்மளை விட்டுட்டு போகப் போறான் மா”, என்று சொல்ல நிர்மலா அதிர்ந்தாள்.

     “என்ன டா சொல்ற?”

     “ஆமா மா, வந்தவங்க ஆதியைக் கூட்டிட்டு போகத் தான் வந்தாங்க. அவங்களை வரச் சொன்னது இதோ இந்த ஆள் தான்”, என்று உண்மையைச் சொல்ல பெண்கள் இருவரும் அதிர்ந்தார்கள்.

     “உனக்கு என்ன பைத்தியமா ரகு? லூசு மாதிரி பேசுற? அவங்க எதுக்கு டா ஆதியைக் கூட்டிட்டு போகணும்?”, என்று நிர்மலா கேட்க “அதானே? ஆதி உன் பையன் ரகு. அவங்க எப்படி ஆதியைக் கூட்டிட்டு போக முடியும்? கண்டிப்பா உனக்கு லூசு தான் பிடிச்சிருக்கு. பைத்தியமா ஆகிட்ட. இதுல என் அப்பாவை வேற குறை சொல்ற?”, என்று கேட்டாள் ஜானகி.

     “நான் லூசா? நான் பைத்தியமா? ஆனா கண்டிப்பா கொஞ்ச நாள்ல ஆகிருவேன் டி. என் கிட்ட இவ்வளவு பேசுறியே? நான் ஏன் இப்படி எல்லாம் பேசுறேன்னு உன் அப்பா கிட்டயே கேளேன். இதுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு உன் தலைல அடிச்சு சத்தியம் பண்ணச் சொல்லு அவரை. அடுத்த நிமிஷம் நான் அவர் காலுல விழுந்து மன்னிப்பு கேக்குறேன்”, என்று ரகு சொல்ல பெண்கள் இருவரும் விழித்தார்கள்.

     “அப்பா, என்னப்பா இதெல்லாம்?”, என்று ஜானகி கேட்க “பொறு குட்டிமா, பேசலாம்”, என்று மகளிடம் சொன்னவர் ரகு அருகில் வந்து “நாம கொஞ்சம் தனியா பேசலாம் மாப்பிள்ளை”, என்றார்.

     “இன்னும் தனியா பேச என்ன இருக்கு? அதான் எல்லாம் எல்லாருக்கும் தெரியணும்னு தானே இவ்வளவு பண்ணுனீங்க? ஆதியை அவங்க ரெண்டு நாள்ல கொண்டு போகப் போறாங்க. அப்ப எல்லாருக்கும் உண்மை தெரிய தானே செய்யும்? இதுல தனியா பேச என்ன இருக்கு?”, என்று விரக்தியாக சொன்னான் ரகு.

     “உங்க கஷ்டம் எனக்கு புரியுது மாப்பிள்ளை. நாம கொஞ்சம் பேசலாம். நான் சொல்றதைக் கேளுங்க”

     “யோவ், சும்மா நடிக்காத. எப்படி எப்படி? பிள்ளையையும் கிள்ளி விடுவ? தொட்டிலையும் ஆட்டுவியா? கடைசில நீ நினைச்சதை சாதிச்சிட்டல்ல? எதுக்கு இப்படி பண்ணின?”, என்று அவன் கேட்க அவர் பதில் சொல்ல முடியாமல் திணற என்ன நடக்குது இங்க என்று தெரியாமல் நிர்மலா விழிக்க “ஐயோ இங்க என்ன நடக்குதுன்னு கொஞ்சம் சொல்றீங்களா ரெண்டு பேரும்?”, என்று கத்தினாள் ஜானகி.

     “ஒண்ணும் இல்லை மா, ஒண்ணுமே இல்லை. மாப்பிள்ளைக்கு வேற எதுவோ கோபம். அதான் இப்படி காட்டுறார். நீ இப்ப என் கூட வா. ஒரு ரெண்டு நாள் நம்ம வீட்ல வந்து இரு. எல்லாம் சரியாகிரும்”, என்றார் மோகன்.

     “ரெண்டு நாள் என்ன? ஒரெடியா உன் பொண்ணைக் கூட்டிட்டு போய்டு. எனக்கு இவ வேண்டாம். உங்க சங்காத்தமே எனக்கு வேண்டாம்”, என்று ரகு சொல்ல அவனை முறைத்துப் பார்த்தவள் “நீ என்ன டா என்னை வேண்டாம்னு சொல்றது? நான் சொல்றேன், நீ எனக்கு வேண்டாம். வாங்கப்பா போகலாம்”, என்று சிலிர்த்துக் கொண்டு சொன்னாள்.

Advertisement