Advertisement

அத்தியாயம் 13

என்னவளின் இதயதுடிப்பும் 

என்னைப் பொறுத்த வரை 

இன்னிசை தான்!!!

     தன்னைத் தேடி வந்திருப்பது சுனில் வீட்டினர் என்று ரகு எதிர் பார்க்கவே இல்லை. இப்படி ஒரு திருப்பத்தை அவன் கனவில் கூட நினைக்க வில்லை. அருகில் அமர்ந்திருந்த நிர்மலாவைப் பார்த்தான். அவளும் குழப்பத்தில் இருக்க “சுனில் யாரு டா? நான் கேள்விப் பட்டது இல்லையே? அப்புறம் இவங்க எல்லாம் யாரு?”, என்று கேட்டாள் நிர்மலா.

     “அப்புறம் சொல்றேன் மா. இப்ப எல்லாருக்கும் டீ போடுங்க”, என்று சொல்லி அன்னையை அனுப்பி வைக்க முயன்றான் ரகு. “எல்லாருக்கும் டீ கொடுத்துட்டேன் டா”, என்று நிர்மலா சொல்ல “எனக்கு போடுங்க”, என்று சற்று எரிச்சலுடன் சொல்லி அவளை உள்ளே அனுப்பி வைத்தான். நிர்மலாவுக்கு அதிர்வாக இருந்தது மகனின் நடவடிக்கை.

     தனியாக கூட கடிந்து கொள்ளாதவன் மற்றவர்கள் முன்னால் இப்படி பேசுவது அந்த அன்னைக்கு அதிர்ச்சியை தந்தது. நிர்மலா உள்ளே சென்றதும் “சொல்லுங்க”, என்றான் ரகு. மனம் மட்டும் திக் திக்கென்று அதிர்ந்தது.

     “எங்களுக்கு எங்க பேரன் வேணும். எங்க சுனிலோட பையன் வேணும்”, என்று அவர் நேரடியாக கேட்க அதிர்ந்து போனான். அவனால் எதுவுமே பேச முடிய வில்லை.

     “நான் விக்ரம் சிங். சுனிலோட அண்ணன். சுனிலோட பையன் தான ஆதி? எல்லாம் தெரிஞ்சு தான் வந்திருக்கோம் மிஸ்டர் ரகு”, என்று சுனிலின் அண்ணன் சொல்ல “அது… அது வந்து…”, என்று தடுமாறினான் ரகு.

     “எங்களுக்கு உண்மை வேணும். பொய் சொன்னா டி.என்.எ டெஸ்ட் எடுக்க வேண்டியது வரும்”, என்று அவன் கட் அண்ட் ரைட்டாக பேச “ஆதி என் மகன்”, என்று தடுமாற்றத்துடன் சொன்னான் ரகு.

     “நீங்க இவ்வளவு வருஷம் வளத்துருக்கீங்க. அந்த பாசம் கண்டிப்பா இருக்கும். ஆனா எங்க வாரிசுன்னு தெரிஞ்ச பிறகு எங்களால அவனை விட்டுக் கொடுக்க முடியாது. நாங்க ஆதியைக் கூட்டிட்டு போறோம்”, என்று முடிவாக சொன்னான் விக்ரம் சிங்.

     “முடியாது, நான் கொடுக்க மாட்டேன்”, என்று ரகு சொல்லும் போதே அவன் கண்கள் லேசாக கலங்கியது. உண்மையிலே ஆதியை வளக்க அவன் அதிகம் கஷ்டப் பட எல்லாம் இல்லை. ஆனால் ஜானகியின் நினைவுகளில் இருந்து தப்பிக்க ஆதி அவனுக்கு பெரிதும் உதவினான். அன்னையை எப்படி சமாளிக்க என்று வேறு யோசனையாக இருந்தது. ஆதியை அவன் வளர்த்ததை விட நிர்மலா தான் அதிகம் பார்த்துக் கொண்டாள். இருந்தாலும் ஆதி அப்பா என்று அழைத்து விட்டால் போதும் ரகுவுக்கு. அவ்வளவு சந்தோஷப் படுவான். அப்படி இருக்க அவனை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்?

     அவன் மறுப்பு மற்றவர்களுக்கு வேதனை அளிக்க விக்ரம் சிங்கோ கோபத்தில் “நாங்க அனுமதி கேக்கலை. அவன் குப்தா குடும்பத்தோட வாரிசு. இவ்வளவு நாள் அவனை பாதுகாப்பா வளத்ததுக்கு நன்றி. நாங்க கிளம்புறோம்”, என்று அவனிடம் சொன்னவன் “எல்லாரும் கிளம்பலாம், அம்மா உங்க பேரனை தூக்கிட்டு வாங்க”, என்றான்.

     “நான் கேஸ் போடுவேன்”, என்று ரகு சொல்ல அவனைப் பார்த்து நக்கலாக சிரித்தவன் “என்ன கேஸ் போட்டாலும் அவன் எங்களுக்கு தான் சொந்தம்னு தீர்ப்பு வரும். அது உங்களுக்கே தெரியும் மிஸ்டர் ரகு. அதுக்கு மேல உங்க இஷ்டம்”, என்றான் திமிராக.

     அந்த உண்மை புரிந்த ரகு அவனை வேதனையாக பார்க்க “சும்மா இரு விக்ரம். இத்தனை வருஷம் வளத்துருக்கார். அவருக்கும் அவனைப் பிரிய கஷ்டமா இருக்கும் தானே? அவர் கிட்ட இப்படியா பேசுறது?”, என்று மகனை அடக்கிய அந்த தந்தை “இங்க பாருங்க தம்பி, ஆதி எங்க பேரன். எங்க மகனை இழந்த நாங்க எங்க பேரனை இழக்க விரும்பலை. ஆதி அப்படியே சுனில் மாதிரியே இருக்கான். கொஞ்சம் நல்லா பாருங்க விக்ரம் சாயல் கூட அவன் கிட்ட இருக்கு. டி.என்.ஏ டெஸ்ட் கண்டிப்பா எங்களுக்கு சாதகமா தான் வரும். அந்த அளவுக்கு ஏன் போகணும்? உங்க மனசு புரியுது. ஆனா நீங்க அவனுக்கு உண்மையான அப்பா இல்லை. அவனை உங்களுக்கு பாக்கணும்னு தோணுச்சுன்னா தாராளமா வந்து பாருங்க. அவன் எங்களுக்கு தான் சொந்தம்”, என்று சொல்லி அவர் கார்டைக் கொடுக்க கண்கள் கலங்கியது ரகுவுக்கு.

     அவர் சொன்ன உண்மை புரிந்தது. ஆனாலும் மனம் பாரமாக இருந்தது. நிர்மலா டீ எடுத்துக் கொண்டு வரும் போது ரகு கலங்கிப் போய் அமர்ந்திருந்தான்.

     யாரும் எதுவும் பேச வில்லை. அப்படி ஒரு மௌனம் அங்கே நிலவியது. “இவ்வளவு நாள் தெரியாத விஷயம் இப்ப எப்படி தெரிஞ்சது?”, என்று தடுமாற்றத்துடன் கேட்டான் ரகு.

     “மோகன் அப்படிங்குறவர் தான் கால் பண்ணினார். அவர் தான் சுனிலை கொலை செஞ்சவர், ஏன் செஞ்சார் எதுக்கு செஞ்சார் எல்லாமே சொன்னார். அவர் சொன்னதும் பிளைட் பிடிச்சு வந்துட்டோம். ரொம்ப நன்றி இவ்வளவு நாள் அவனை வளத்ததுக்கு”, என்று விக்ரம் சொல்ல அவன் சொன்ன எல்லாவற்றையும் முழுதாக கேட்காமல் மோகன் மேல் வன்மத்தை மட்டும் வளர்த்துக் கொண்டான் ரகு. நிர்மலாவுக்கும் அந்த செய்தி அதிர்ச்சி தான்.

     “கடைசில அந்த ஆள் புத்தியைக் காமிச்சிட்டானே?”, என்று எண்ணிக் கொண்ட ரகு “ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க. நானே ஆதியை உங்க கிட்ட ஒப்படைக்கிறேன்”, என்றான்.

     அதற்கு விக்ரம் மறுத்து பேசப் போக அவன் கையைப் பற்றிய பெரியவர் ஒரு நொடி யோசித்து “சரி, ரெண்டு நாள் டைம் எடுத்துக்கோ பா. ஆனா ரெண்டு நாள் கழிச்சு எங்க பேரன் எங்களுக்கு வேணும்”, என்று சொல்லி எழுந்து கொள்ள மற்றவர்களும் எழுந்து கொண்டார்கள். ரகுவும் எழுந்து நின்று விடை கொடுத்தான்.

     அனைவரும் சென்றதும் நிர்மலா ரகு அருகே வர ஜானகியும் ஆதியை தூக்கிக் கொண்டு உள்ளே வந்தாள். ரகு தலையைப் பிடித்த படி அமர்ந்திருந்தான். ஆதியை நிமிர்ந்து பார்க்க கூட அவனால் முடியவில்லை. அவனைப் பார்த்தால் நிச்சயம் உடைந்து விடுவோம் என்று அவனுக்கே தெரிந்தது.

     “என்ன ஆச்சு டா? யார் இவங்க? என்ன பேரன்? என்ன பேசுறாங்க? எனக்கு ஒண்ணும் புரியலை. நீ ஏன் இப்படி இடிஞ்சு போய் இருக்க? என்ன ஆச்சு சொல்லு?”, என்று நிர்மலா கேட்க அவன் பதிலுக்காக ஜானகியும் அவன் முகத்தையே பார்த்தாள்.

     ஆனால் ரகு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க “என்ன ஆச்சு ரகு? ஏன் ஒரு மாதிரி இருக்க? வந்தவங்க யாரு? அத்தை கேக்குறாங்க? நீ பதில் சொல்லாம இருக்க?”, என்று கேட்டாள் ஜானகி.

     அவள் குரல் கேட்டதும் அவனுக்கு மோகன் நினைவு தான் வந்தது. “கடைசில மொத்தமா முடிச்சிட்டாரே? அவரோட பொண்ணுக்காக கடைசில என் மனசை கொன்னுட்டாரே? இதை அம்மா எப்படி தாங்குவாங்க? ஆதியை எப்படி அவங்க பிரிஞ்சு இருப்பாங்க? நானும் அவனைப் பாக்காம எப்படி இருப்பேன்?”, என்று எண்ணியவனுக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது.

     அவளை நிமிர்ந்து பார்த்தவன் அவளை முறைத்துப் பார்த்தான். அவள் கையில் இருந்த ஆதியை வாங்கிக் கட்டிக் கொண்டான். அவன் கண்கள் கலங்கியது.

     “என்ன ஆச்சு ரகு?”, என்று ஜானகி கேட்க அவளைப் பார்த்த அவன் கண்களில் ஒரு துளி கூட காதல் இல்லாமல் இருக்க அதிர்ந்து போனாள்.

     “ரகு?”, என்று அவள் அதிர்வாக அழைக்க “இப்ப உனக்கு சந்தோஷமா டி? எல்லாம் உன்னால தான். எல்லாமே உன்னால தான். உன்னால எத்தனை பேர் வாழ்க்கை போச்சு தெரியுமா?”, என்று கத்த ஆதி மிரண்டு போய் ஜானகியிடம் போக அவள் அவனை வாங்கிக் கொண்டாள்.

     ரகுவின் கோபத்தில் மிரண்ட ஜானகியும் “நான் என்ன செஞ்சேன்?”, என்று கேட்க “அவ மேல ஏன் டா பாயுற? அவ என்ன செஞ்சா? வந்தவங்க உன்னைத் தேடி தான் வந்தாங்க. அது மட்டுமில்லாம என்னல்லாமோ சொல்றாங்க. சம்பந்தி பேர் வேற அடி படுது. இப்ப ஜானகி மேல வேற கோபப் படுற? அவ என்ன டா செஞ்சா?”, என்று கேட்டாள் நிர்மலா.

     “என்ன செஞ்சாளா? என்ன செஞ்சான்னா கேக்குறீங்க? எல்லாமே இவ செஞ்சது தான். இவளை என்னைக்கு பாத்தேனோ அப்பவே என் நிம்மதி போச்சு. இவளை என்னைக்கு காதலிச்சேனோ அன்னைக்கே என் வாழ்க்கை போச்சு. சாகுற வரைக்கும் நான் நிம்மதியா இருக்க கூடாதுன்னு தான் இவ பிளானே”, என்று கத்தினான்.

     ஜானகி அதிர்வாக அவனைப் பார்க்க “இவன் பேச்சு ஒண்ணும் சரியில்லை மா. ஆதி மிரண்டு போறான் பார். அவனை தூங்க வை. நான் காலைலைக்கு சாப்பாடு செய்றேன். மத்தது எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்”, என்று பிரச்சனையை தள்ளி வைத்தாள் நிர்மலா.

     இப்போதே பேசினால் இன்னும் நிலைமை விபரீதமாகும் என்பது அவர் கனிப்பு. ஏனென்றால் ரகு முகத்தில் இருந்த இறுக்கம் அப்படி. ரகு இப்படி இருப்பது நிர்மலாவைப் பொறுத்தவரை மிக அபூர்வம். ரகுவின் திருமணப் பேச்சு வந்த போது, திருமணம் நடந்த போது, டைவர்ஸ் என்று சொன்ன போது, ரகுவின் தந்தை இறந்த போது மட்டுமே இப்படி இருந்தான். இன்று மீண்டும் அப்படி இருக்கவும் அந்த தாய்க்கு பயமாக இருந்தது.

     “கடவுளே என் மகனை நிம்மதியாவே இருக்க விட மாட்டியா?”, என்று எண்ணிக் கொண்டு சமையல் அறைக்குச் செல்ல ஜானகியும் ரகுவை முறைத்துக் கொண்டே ஆதியை தூக்கிக் கொண்டு அறைக்குச் சென்றாள்.

Advertisement