Advertisement

மாமனாரும் மருமகனும் மட்டுமே அமர்ந்திருந்தார்கள். மோகன் மகளைப் பற்றிய யோசனையில் தான் இருந்தார். ஆதியை அனுப்பி விடுவேன்னு சொன்னவன் அதை செய்ய வில்லை. இனியும் செய்வான் என்று அவருக்கு நம்பிக்கையும் இல்லை. அதுவும் ரகு நடந்து கொள்வதைப் பார்த்தால் வேண்டும் என்றே தான் செய்கிறான் என்று அவருக்கு புரிந்தது.

“மாப்பிள்ளை”, என்று அழைத்தார்.

“சொல்லுங்க மோகன் சார்”, என்று சொல்லி அவரைத் தள்ளி வைத்தான்.

“மாப்பிள்ளை”, என்று அவர் அதிர்வாக அழைக்க “இந்த உறவு எல்லாம் அப்புறம். ஏதோ பேச வந்தீங்க? என்ன விசயம்னு சீக்கிரம் சொல்லுங்க. நானும் போய்க் கிளம்பனும்”, என்றான்.

“என்னையும் என் மகளையும் பிரிக்க பாக்குறீங்களா?”, என்று நேரடியாகவே கேட்டு விட்டார்.

“பரவால்லயே கண்டு பிடிச்சிட்டீங்களே?”, என்று அவனும் ஒத்துக் கொண்டான்.

“ஏன் மாப்பிள்ளை? ஜானுன்னா எனக்கு உயிர். எதுக்கு பிள்ளையையும் தகப்பனையும் பிரிக்க பாக்குறீங்க?”

“ஏன் அதை நீங்க செய்யலையா? ஆதியை என்னை விட்டு பிரிக்க நினைக்கிறது மட்டும் சரியா?”

“சரி இல்லை தான். ஆனா ஆதி உங்க மகன் கிடையாது”

“ஆனா நான் நாலு வருஷம் கஷ்டப் பட்டு வளத்துருக்கேன். அவன் என் மகன் தான்”

“நோ, அவன் உங்க கூட இருக்க கூடாது. ஆதியை எப்ப அந்த கீர்த்தி கிட்ட கொண்டு போய் விடப் போறீங்க?”

“நான் ஏன் விடணும்?”, என்று அவன் திமிராக கேட்க “மாப்பிள்ளை?”, என்று அதிர்ந்தார்.

“ஆதி என் மகன் தான். அவன் என் கூட தான் இருப்பான். உங்க கிட்ட அவனை அனுப்புவேன்னு சொன்னது சும்மா. அதெல்லாம் ஒரு நாளும் நடக்காது. ஆதிக்கு அப்பா நான். அம்மா உங்க பொண்ணு. ஆதி தான் எங்க மூத்த மகன். என்னை மீறி நீங்க என்ன செஞ்சாலும் அதில் பாதிக்கப் பாடப் போறது உங்க மக தான். இன்னொரு தடவை இதைப் பத்தி பேசுனீங்கன்னா நான் ஜானகி கிட்டயே சொல்லிருவேன். உங்க அப்பா ஆதியை விரட்டுறாருன்னு. அப்புறம் அவளுக்கு நீங்களே பதில் சொல்லிக்கோங்க. மிர்ச்சி பயங்கரமா கேள்வி கேப்பா. இன்னைக்கு மாதிரி முழிப்பீங்க”, என்று நக்கலாக சிரித்தான்.

“நீங்க ஆதியை விடுவேன்னு சொன்னதுனால தானே நான் அந்த கீர்த்தியை விட்டேன். உங்க கல்யாணத்துக்கும் சம்மதிச்சேன். நீங்க என்னை ஏமாத்திட்டீங்க”

“ஆமா ஏமாத்திட்டேன். இப்ப என்ன? நீங்க சொன்னதை நான் செய்யாததுனால கீர்த்தியைக் கொல்லுவேன்னு சொல்ல வறீங்களா?”

“ஏன் கொல்ல மாட்டேனா? என் பொண்ணு வாழ்க்கைக்கு அவ என்னைக்கா இருந்தாலும் இடைஞ்சல் தான். நீங்க சொன்ன வார்த்தைக்காக நான் அமைதியா இருந்தேன். இனி அப்படி இருக்கணும்னு அவசியம் இல்லையே? இனி ஆதி உங்க கூடவே இருக்கட்டும். நான் அந்த கீர்த்தியை முடிச்சிருவேன்”

“முடிஞ்சா முயற்சி பண்ணுங்க. நீங்க தலைகீழா நின்னாலும் உங்களால அது முடியாது”

“ஏன் முடியாது. இனி பொறுமையா இருக்க மாட்டேன். அவ எங்க இருந்தாலும் போய் வெட்டுவேன்”

“ஹா ஹா, தாராளமா வெட்டுங்க. ஆனா அவ பக்கத்துல உங்க பொண்ணு இருப்பா. அவ முன்னாடியே கீர்த்தியை வெட்டுங்க. பாக்கலாம் நடக்குதான்னு”

“என்னது?”

“ஆமா, இனி கீர்த்தி எங்க கூட எங்க வீட்ல தான் இருப்பா. நான் இப்பவே கீர்த்தியை இங்க வரச் சொல்லப் போறேன். என்னை மீறி நீங்க அவளை எப்படிக் கொல்லுவீங்கன்னு பாக்குறேன்”, என்று அவன் சொல்ல அதிர்ந்து போனார்.

“என்னது உங்க வீட்லயா? என்ன உளறுறீங்க?”

“என்னை என்ன பண்ணச் சொல்றீங்க? ஒரு அப்பாவிப் பொண்ணைக் காப்பாத்தணும். அதனால எனக்கு வேற வழி தெரியலை. உங்களை மீறி அவளைக் காப்பாத்த முடியுமான்னு எனக்கு தெரியலை. ஏன்னா நீங்க ஒரு கொடூரமான கொலைகாரன். உங்க கிட்ட இருந்து கீர்த்தியை காப்பாத்தணும்னா அது ஜானகியால மட்டும் தான் முடியும். அதான் அவளை வரச் சொல்லப் போறேன். ஆனா கீர்த்தி இங்க வந்த அப்புறம் அதிகமா பாதிக்க படப் போறது உங்க பொண்ணுதாங்குறதை மறந்துறாதீங்க? ஏன்னா எனக்கும் உங்களுக்கும் தான் தெரியும் கீர்த்திக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு. ஆனா உங்க பொண்ணு நான் கீர்த்தி கூட சந்தோஷமா வாழ்ந்ததா தான் நினைச்சிக்கிட்டு இருக்கா. அப்படி இருக்கும் போது ஒரே வீட்ல என் முதல் பொண்டாட்டியும் ரெண்டாவது பொண்டாட்டியும் இருந்தா உங்க பொண்ணு எப்படி சந்தோஷமா இருப்பான்னு யோசிச்சிக்கோங்க”, என்று சொல்ல அவர் இடிந்து போனார்.

இத்தனை நாட்கள் திருமணத்திற்கான எதிர்பார்ப்புகள் இருந்தாலும் கீர்த்தியை நினைத்து ஜானகி பட்ட கஷ்டம் தெரியுமே? அப்படி இருக்க ஒரே வீட்டில் மகளும் கீர்த்தியும் இருந்தால் மகள் துடித்து விடுவாளே என்று கலங்கிப் போனார். ரகு சுத்தமான தங்கம் என்று அவருக்கு தெரியும் தான். ஜானுவைத் தவிர வேறு எந்த பெண்ணையும் அவன் தீண்ட மாட்டான் என்று அவருக்கு நன்கு தெரியும்.

ஆனால் மகள் அப்படி நினைக்க மாட்டாளே. கீர்த்தியுடன் வாழ்ந்து ஆதி பிறந்ததை எல்லாம் அவள் மறந்து வாழ முயற்சிக்கும் போது இருவரும் ஒரே வீட்டில் இருந்தால் எப்படி துடித்துப் போவாள்.

அது மட்டும் இல்லை. அந்த கீர்த்தி விஷம். அவள் இங்கே வந்தால் நிச்சயம் மகளை நன்கு வாழ விட மாட்டாள். இது என் வாழ்க்கை டி என்று ஒரு வார்த்தை சொல்லாமல் கண்ணால் கீர்த்தி பார்த்தாலும் கூட ஜானகி அதை உதறித் தள்ளி விட்டு அவளுக்காக விட்டுக் கொடுத்து விட்டு வந்து விடுவாள். அப்படி மகளை ரகு விட மாட்டான் என்றாலும் அந்த கீர்த்தி இங்கு வந்தால் யாருமே நிம்மதியாக இருக்கப் போவதில்லை என்று அவருக்கு புரிந்தது.

அவர் இடிந்து போய் பேச்சற்று அமர்ந்திர்ப்பதை பார்த்தவன் “என்னை மீறி நீங்க எப்படி கீர்த்தியை நெருங்குறீங்கன்னு பாக்குறேன். ஆதி என் மகன். என் கூட தான் இருப்பான். கீர்த்தி ஆதியோட அம்மா. அவளும் இனி என் கூட தான் இருப்பா. உங்களால முடிஞ்சதைப் பாருங்க. நான் ராமனா இருக்கணும்னு தான் எங்க அப்பா எனக்கு ரகுராம்னு பேர் வச்சார். ஆனா நான் அந்த முருகர் மாதிரி தான் இருக்கணும் போல?”, என்று போற போக்கில் சொல்லி விட்டு ரகு அங்கிருந்து செல்ல தலையைப் பிடித்த படி அமர்ந்து விட்டார் மோகன்.

இதில் இருந்து எப்படி மகளைக் காப்பாற்ற என்று தெரிய வில்லை அந்த தந்தைக்கு. கீர்த்தியைப் பற்றிய உண்மையையும் அவரால் மகளிடம் சொல்ல முடியாது. அந்த உண்மை அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அது தெரிந்தால் மகள் உயிரை விடவும் தயங்க மாட்டாளே? அதனால் தான் யோசித்தார்.

ஜானகி, ரகு, ஆதி மூவரும் கிளம்பி வர அனைவரும் பரபரப்பாக இருந்தனர். மோகன் மட்டும் அமைதியாக இருக்க “என்ன மாமா ஒரு மாதிரி இருக்கீங்க?”, என்று கேட்டு வம்பிழுத்தான் ரகு. அவனை ஒரு பார்வை பார்த்தவர் எதுவுமே சொல்ல வில்லை.

“அவருக்கு ஜானு மேல ரொம்ப பாசம் மாப்பிள்ளை. அதான் அவளைப் பிரியனுமேன்னு இப்படி இருக்கார். நீங்க பெருசா எடுக்காதீங்க”, என்றாள் தேவகி.

“இதுல என்ன இருக்கு அத்தை? ஜானு உங்க பொண்ணு. அவளை எப்ப வேணும்னாலும் நீங்க பாக்க வரலாம். சரி நாங்க கிளம்புறோம்”, என்று சொல்லி விட்டு விஷ்ணுவை கட்டித் தழுவி “போயிட்டு வரேன் மச்சான், வரேன் அத்தை, வரேன் மாமா”, என்று நல்ல படியாகவே விடை பெற்றான் ரகு. ஜானுவும் அன்னை, அண்ணன், தந்தையை அணைத்து கண்ணீர் விட்டு அவர்கள் கொடுத்த ஆறுதலையும் வாங்கி விட்டே கிளம்பினாள்.

வரும் போது வண்டியில் தான் வந்தனர். ஆனால் போகும் போது லக்கேஜ் இருந்ததால் விஷ்ணு காரை எடுத்தான். ஆதி, விஷ்ணு, ஜானகி மூவரும் காரில் வர விஷ்ணு காரை எடுத்தான். ரகு வண்டியில் கிளம்பினான்.

அவர்கள் கிளம்பிய பிறகும் யோசனையில் ஆழ்ந்தார் மோகன். மகளின் பிரிவில் அப்படி இருக்கிறார் என்று எண்ணி தேவகி அவரைக் கண்டு கொள்ள வில்லை. வெகு நேரம் யோசித்தவர் ஒரு பெரிய முடிவை எடுத்து விட்டு தான் படுத்தார். அதை ரகு அறிந்தால்….

காதல் தொடரும்….

Advertisement