Advertisement

“ஏன் ரகு? உனக்கு எங்க அப்பா மேல எதுக்கு இவ்வளவு கோபம்?”, என்று வியப்பாக கேட்டாள்.

“அதை உன் அப்பன் கிட்ட போயி கேளு டி, கதை கதையா சொல்லுவான்”, என்று மனதில் நினைத்தவன் அதை வெளியே சொல்ல வில்லை. அப்படிச் சொல்லி மனைவியின் வெறுப்பை சம்பாதிக்க விரும்ப வில்லை. ஏனென்றால் ஜானகிக்கு தந்தை என்றால் அவ்வளவு பிடிக்கும் என்று அவனுக்கு தெரியுமே.

அதனால் அதை மறைத்து “என் மாமனார் மேல எனக்கு என்ன டி கோபம்? நீ என் கூட இருக்கணும் அவ்வளவு தான்”, என்றவன் அவளின் இடையை வளைத்து அணைத்து தன்னுடன் இறுக்க அவன் தொடுகையில் தந்தை என்ன? சகலத்தையும் மறந்தாள் ஜானகி.

இருவரும் சற்று நேரத்தில் உறங்கி விட்டார்கள். முதலில் எழுந்த ஜானகி குளித்து வேறு சேலை அணிந்து வெளியே வர சமையல் அறையில் தேவகி மட்டும் இருப்பது தெரிந்தது.

“அப்பா எங்க மா? நீங்க என்ன செய்றீங்க?”, என்று கேட்டாள்.

“நான் எல்லாருக்கும் டீக்கு வடை போடுறேன் பாப்பா. அப்பா கடைக்கு போனாங்க”

“கடைக்கு எதுக்கு இப்ப?”

“மாப்பிள்ளைக்கும் உனக்கும் டிரஸ் எடுத்துக் கொடுத்து தான் அனுப்பணும். அன்னைக்கு நான் மறந்துட்டேன். அதான் எடுக்க போயிருக்காங்க”, என்று தேவகி சொல்லும் போதே விஷ்ணுவும் ஆதியும் வந்து விட்டார்கள்.

ரகு குளித்து வேறு உடை மாற்றி வெளியே வந்த போது தேவகி, ஜானகி, விஷ்ணு மூவரும் ஆதியுடன் விளையாடிக் கொண்டிருந்த காட்சியைத் தான் பார்த்தான். அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. ஆதியை அவர்கள் ஏற்றுக் கொண்டது அவனுக்கு அவ்வளவு நிறைவு.

“இந்த மாமாவால மட்டும் ஏன் ஆதியை ஏத்துக்க முடியலை?”, என்று எண்ணி பெருமூச்சு விட்டவன் அவர்களுடன் அமர்ந்து பேச ஆரம்பித்தான்.

தேவகி அனைவருக்கும் வடை காபி கொடுக்க பேசிக் கொண்டே உண்ண ஆரம்பித்தனர். “ஏய் ஜானு எங்க டி உங்க அப்பா?”, என்று கேட்டான் ரகு.

“அது என்ன உங்க அப்பா? மாமான்னு கூப்பிட மாட்டியா? அப்பா கடைக்கு போயிருக்காங்க”, என்று சூடாகவே பதில் கொடுத்தாள்.

“அவரைச் சொன்னதும் உனக்கு பொங்கிருமே? ஆனா அவருக்கு வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு மரியாதை கொடுக்கணும்னு தெரியாதா? நான் இருக்கும் போது அவர் வீட்ல இல்லாம கடைக்கு போகலாமா?”, என்று மாப்பிள்ளை மிடுக்கை காட்டினான். இந்த பேச்சு வார்த்தை எல்லாம் ரகசியமாக தான் நடந்தது.

“நமக்கு டிரஸ் வாங்க மறந்துட்டாங்கன்னு தான் வாங்க போயிருக்காங்க. ஆமா நீ ஏன் அவரை வம்பிழுத்துட்டே இருக்க? என்ன அவரோட பொண்ணைக் கட்டினா அவர் உனக்கு அடிமையா இருக்கணுமா?”, என்று கேட்டதும் “ஆத்தாடி மிர்ச்சி இவ்வளவு காரம் தாங்காது டி. கொஞ்சம் காரத்தை குறை. எனக்கு அவர் மேல சின்ன மனஸ்தாபம் அதான்”, என்றான்.

அவனை வியப்பாக பார்த்தவள் “அப்பா மேல மனஸ்தாபமா? என்ன ஆச்சு?”, என்று கேட்டாள்.

“உன் அப்பா என் கிட்ட வந்து உன்னைக் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு பேசினார். அதனால தான் நான் அன்னைக்கு உன்னை அப்படி பேசினேன்”, என்று போட்டுக் கொடுத்து நாருதர் வேலையை ஆரம்பித்தான்.

“என்னது? அப்பா அப்படிச் சொல்லச் சொன்னாங்களா?”, என்று அதிர்ச்சியாக கேட்டவள் “இல்லை கண்டிப்பா அப்படி பேசிருக்க மாட்டாங்க. அப்பாவுக்கு என் மனசு தெரியும்”, என்றாள்.

“அப்ப நான் பொய்ச் சொல்றேன்னு சொல்றியா? நான் சொல்லுறது சத்தியம். வேணும்னா உன் அப்பா கிட்டயே கேளு”, என்று சொல்ல திகைத்தாள்.

ரகு பொய் சொல்வது போல தெரிய வில்லை. அதனால் “இன்னைக்கு அப்பா வரட்டும். அவங்களுக்கு இருக்கு”, என்று கோபமாக சொன்னாள்.

“அப்பாடி எனக்கு இப்ப தான் நிம்மதியா இருக்கு”, என்று சந்தோஷமாக எண்ணிக் கொண்டான் ரகு. ஜானகி கேள்வி கேட்கும் போது மோகன் முகம் எப்படி மாறும் என பார்க்க அவனுக்கு அவ்வளவு ஆசையாக இருந்தது.

“நீ மட்டும் உன் பொண்ணுக்கு நல்ல அப்பாவா இருக்கணும்? நான் மட்டும் அப்படி இருக்க கூடாதா?”, என்று மனதில் கருவிக் கொண்டான் அவரை.

ஆனால் மேலும் மேலும் அவரை சீண்டி அவனுக்கே பெரிய இடியாக ஒரு விஷயத்தை அவர் செய்யப் போகிறார் என்பதை அவன் அறிய வில்லை.

ஜானகிக்கு, ரகுவுக்கு, ஆதிக்கு, நிர்மலாவுக்கு என நால்வருக்கும் தனித் தனியாக உடை எடுத்துக் களைத்து வந்த மோகன் பைகளை தேவகியிடம் கொடுத்து விட்டு அக்கடா என்று அமர “அப்பா”, என்ற படி வந்தாள் மகள்.

“சொல்லு குட்டிமா”, என்று அவர் பாசத்துடன் சொல்ல அவர்கள் உரையாடலை சுவாரசியமாக பார்வை இட்டுக் கொண்டிருந்தான் ரகு. விஷ்ணு தேவகி இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று சாதாரணமாக பார்த்தார்கள்.

“நீங்க என் கிட்ட பொய் சொன்னீங்களா பா? என்னோட ஆசை என் மனசு எல்லாம் தெரிஞ்சும் என்னை ஏமாத்துனீங்களா பா?”, என்று ஜானகி கேட்க அவள் கேள்வி புரியாமல் அவர் முழிக்க ரகுவுக்கு விசில் அடித்துக் கை தட்ட வேண்டும் போல இருந்தது.

“என்ன குட்டிமா? எனக்கு ஒண்ணும் புரியலையே டா. நான் என்ன செஞ்சேன்?”

“அன்னைக்கு ரகு கிட்ட கல்யாணம் பத்தி பேச போறேன்னு சொன்ன நீங்க அவன் கிட்ட என்னை வீட்டுடச் சொல்லி சொன்னீங்களா?”, என்று அவள் கேட்க ஒரு நொடி அதிர்ந்து போனவர் மௌனமாக தலை குனிந்தார். விஷ்ணு தேவகி இருவருக்கும் கூட இந்த செய்தி புதியது தான்.

“ரகு என்னைக் கல்யாணம் பண்ணக் கேட்டதும் நான் எவ்வளவு சந்தோஷப் பட்டேன்னு உங்களுக்கு தெரியும்  தானே பா? அப்படி இருக்கும் போது ஏன் பா அப்படி பண்ணுனீங்க?”, என்று ஜானகி கேட்க ரகுவைப் பார்த்தார் மோகன்.

அவன் நமட்டுச் சிரிப்பு சிரிக்க “பத்த வச்சிட்டியே பரட்டை”, என்பது போல அவனைப் பார்த்தார்.

“இவன் விட்டா எனக்கும் என் பொண்ணுக்கும் இடையே எந்த உறவும் இல்லாம ஆக்கிருவான் போல?”, என்று எண்ணி ஒரு நொடி யோசித்து தன்னை தெளிவு படுத்தியவர் “அது அதுக்கு சொல்லலை டா, அவர் காதலை சோதிக்க தான் அப்படிச் சொன்னேன்”, என்று சமாளித்தார்.

அனைவரும் குழப்பமாக பார்க்க “இல்லை படிக்கும் போது மாப்பிள்ளை உன்னை லவ் பண்ணினாரா? ஆனா அவங்க அப்பா மிரட்டினதும் அந்த கீர்த்தியைக் கட்டிக்கிட்டாரா? அதான் நான் மிரட்டினதும் உன்னை மறுபடியும் விட்டுடுவாரான்னு பாத்தேன். அதே மாதிரி அவரும் உன் கிட்ட பிடிக்காத மாதிரி பேசினார்”, என்று மோகன் சொல்ல இப்போது ரகு அதிர்ந்தான்.

“அடக் கடவுளே என் பக்கம் பந்தை திருப்பிட்டாரே? இப்ப இவ என் மேல கோபப் படுவாளே?”, என்று எண்ணி பயந்து பார்க்க இப்போது அவனைப் பார்த்து அவருக்கு திருப்தியாக இருந்தது.

ஆனால் மகள் வாழ்க்கையை கெடுக்க நினைப்பாரா அந்த தந்தை? அதனால் “ஆனா நான் வச்ச பரிட்சைல மாப்பிள்ளை ஜெயிச்சிட்டார் குட்டிமா. உன் கிட்ட அப்படி பிடிக்கலைன்னு சொன்னாலும் என் கிட்ட உங்க பொண்ணு தான் எனக்கு வேணும்னு கண்டிப்பா பேசிட்டார். இவ்வளவு தான் நடந்தது”, என்று எதை எதையோ கோர்த்து சொல்ல ரகு நிம்மதியாக மூச்சு விட்டான்.

“அப்படியா நான் கூட பயந்துட்டேன். ரொம்ப தேங்க்ஸ் பா. யாருக்கும் கிடைக்காத அப்பா எனக்கு கிடைச்சிருக்காங்க”, என்று சொன்ன ஜானகி அவரைக் கட்டிக் கொள்ள அவனுக்கு பொசுபொசுவென்று இருந்தது.

“பாத்தியா ரகு எங்க அப்பாவை? எங்க அப்பாவுக்கு என்னைத் தவிர வேற எதுவுமே முக்கியம் இல்லை. என்னோட சந்தோசத்துக்காக என்ன வேணும்னாலும் செய்வார்”, என்று பெருமையாக சொல்ல “ஆமா ஆமா உனக்காக கொலை செஞ்சவர் தானே?”, என்று எண்ணி மனதில் எழுந்த கடுப்பை மறைத்தவன் “சரி சரி உங்க பெருமை. நேரம் ஆச்சு, வீட்டுக்கு கிளம்பனும். ஆதியை ரெடி பண்ணு”, என்றான் சாதாரணமாக.

அவளும் ஆதியைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள். மகள் கிளம்பப் போகிறாள் என்று தெரிந்து தேவகி மதியம் செய்த உணவுகளை சூடு பண்ணி பேக் செய்யப் போக விஷ்ணு வாங்கி வந்த உடைகள், ஆதிக்கு என்று அவன் வாங்கிக் கொடுத்தவைகளை பேக் செய்யப் போனான்.

Advertisement