Advertisement

அத்தியாயம் 11

பொங்கி வரும் வெள்ளமோ 

கண்ணைச் சிமிட்டிச் செல்லும் 

கானலோ இரண்டுமே காதலே!!!

காலை ஏழு மணி போல முதலில் கண் விழித்தது ஜானகி தான். தன்னுடைய புடவையை முகத்தில் போட்டுப் படுத்திருந்தவனின் கைகள் அவளை இறுகப் பிடித்திருந்தது.

“எங்க போயிறப் போறேனாம்? இப்படி இறுக்கமா பிடிச்சிருக்கான்?”, என்று எண்ணி அவன் தூக்கத்தைக் கலைக்காமல் எழுந்து சென்றாள். குளித்து கிளம்பி அறையை விட்டு வெளியே சென்றவள் காபி போட்டு நிர்மலாவுக்கும் கொடுத்து விட்டு அவனுக்கும் அவளுக்குமாக சின்ன பிளாஸ்கில் எடுத்துக் கொண்டு வந்தாள். அவன் அப்போதும் நல்ல உறக்கத்தில் இருந்தான். நேற்றைய நினைவில் அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது.

அவனையே ஆசையாக பார்த்தாள். “இந்த நொடி உண்மை தானா? என்னோட ரகு கூட ஒரு நாள் வாழ்ந்துட்டேனா? இது நிஜம் தானா? ரகு எனக்கே எனக்கா?”, என்று பூரிப்பாக அவனைப் பார்த்தாள்.

வெகு நேரம் அவனையே பார்த்தவள் மணி எட்டு அடிக்கவும் “ரகு எந்திரி, நேரம் ஆச்சுப் பாரு”, என்று எழுப்பினாள். அவள் குரலில் எழுந்தவனுக்கும் அன்றைய காலை அழகானதாக இருந்தது.

நேற்றைய நினைவில் சிறு சிரிப்புடன் அவளை அணைக்க முற்பட “முதல்ல பல்லை விளக்கிட்டு வா”, என்று விரட்டி விட்டாள்.

“சரிங்க டீச்சரம்மா”, என்ற படியே சென்றான்.

அவன் வந்ததும் அவனுக்கு காபி எடுத்துக் கொடுத்தவள் தனக்கும் ஒரு கப்பை எடுத்துக் கொண்டு அவன் அருகே அமர்ந்தாள். அது தான் சாக்கென்று அவன் கைகள் அவள் இடையை வளைத்து தன் பக்கம் இழுக்க “இரு ரகு, ஒரு கால் பண்ணிக்கிறேன்”, என்றாள்.

“சீக்கிரம் டி”, என்றவன் அவளிடம் சில்மிஷம் செய்ய அவள் தந்தைக்கு கால் செய்வதைப் பார்த்து அவளை முறைத்த படி இருந்தான். அதை அவள் கவனிக்க வில்லை.

“குட்டி மா எப்படி இருக்க டா?”, என்று மோகன் கேட்க அவள் பதில் சொல்ல அது ரகுவுக்கு கேட்டது. “ஆமா ரொம்ப பாசம் தான். ஒரே நாள்ல இவர் பொண்ணை கரைச்சிருவேன் பாரு. எப்படி இருக்கேன்னு விசாரிக்கிறாரு?”, என்று நக்கலாக எண்ணிக் கொண்டான்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்க இப்போதைக்கு முடிக்க மாட்டாள் என்று எண்ணி எரிச்சலுடன் எழுந்து குளிக்கச் சென்றான். அவன் குளித்து முடித்து வரும் போது நிர்மலாவுடன் சேர்ந்து காலை உணவை செய்து கொண்டிருந்தாள் ஜானகி.

அவன் வந்ததும் மூவரும் அமர்ந்து சாப்பிட்டார்கள். பின் ஜானகி வீட்டுக்கு மறுவீட்டுக்குச் சென்றார்கள். அதிக சந்தோசத்துடன் வந்த ஜானகியைக் கண்டு அங்கே அனைவருக்கும் அவ்வளவு நிம்மதி. இத்தனை நாட்கள் அவள் அழுகையை பார்த்தவர்களாயிற்றே.

அனைவரும் சந்தோஷமாக அவர்களை வரவேற்க “வா குட்டி மா, வாங்க மாப்பிள்ளை”, என்று மோகன் சந்தோஷமாக அழைக்க அது காதில் விழாதது போல விஷ்ணுவிடம் பேசிக் கொண்டிருந்தான் ரகு. அவருக்கு ஒரு மாதிரி இருந்தது. ஆனால் அதை பெரிதாக எடுக்க வில்லை. உண்மையிலே அவன் கவனிக்கவில்லை போல என்று எண்ணிக் கொண்டார்.

“ரகு. அப்பா வாங்கன்னு சொல்றார் பாரு”, என்று ஜானகி சொன்ன பிறகு “அப்படியா? நான் கவனிக்கலை மாமா”, என்று சொன்னான் ரகு.

“பரவால்ல மாப்பிள்ளை, உக்காருங்க”, என்றார் மோகன்.

அப்போது ஆதி ஓடி வந்து ஜானகியைக் கட்டிக் கொள்ள அவளும் ஆசையாக அவனைத் தூக்கி கொஞ்சினாள். ரகு புன்னகையுடன் அந்த காட்சியைப் பார்க்க மோகனுக்கு தான் ஒரு மாதிரி இருந்தது.

அவர் ரகுவைத் திரும்பிப் பார்க்க அவன் புன்னகை முகம் மோகனுக்கு ஒரு அதிர்வைக் கொடுத்தது. “ஏமாத்திட்டானோ? ஆதியை கீர்த்தி கிட்ட அனுப்ப மாட்டானோ? ஜானகியும் ஆதியை அனுப்ப மாட்டாளே? ஆனா ஆதி இவங்க கூட இருந்தா என்னைக்கா இருந்தாலும் அந்த கீர்த்தி வந்து பிரச்சனை பண்ணுவா. இப்ப என்ன பண்ண?”, என்று எண்ணினார். பின் மற்றவர்களுக்காக முகத்தை சாதாரணமாக மாற்றிக் கொண்டார்.

ரகு இயல்பாக அந்த வீட்டில் ஒட்டிக் கொண்டான். மாமியார் மச்சினன் என அனைவரிடமும் உரிமையாக பேசினான். ஆனால் அவனுக்கு மோகன் மேல் மட்டும் கோபமாக வந்தது. அதனால் அவரை மட்டும் தவிர்த்துக் கொண்டிருந்தான். அதை அவரும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார். அவன் கோபம் புரிந்தது. ஆனால் அவருக்கும் கடுப்பாக தான் இருந்தது. அவனும் அவரை ஏமாற்றி விட்டானே.

மதிய உணவை தடாபுடாலாக ஏற்பாடு செய்திருந்தாள் தேவகி. சாப்பிடும் போது தேவகி பரிமாற மற்றவர்கள் சாப்பிட அமர்ந்தார்கள். அப்போது தந்தை அருகில் அமரப் போனாள் ஜானகி.

“ஜானு, இங்க வந்து உக்காரு”, என்று சொன்ன ரகு அவள் கையைப் பற்றி இழுத்து தன் அருகே அமர வைத்துக் கொண்டான். அது இயல்பாக இருந்ததால் யாரும் அதை பெரிதாக எடுக்க வில்லை. ஆனால் இதை எல்லாம் மோகன் கவனித்த படி தான் இருந்தார். அவன் செய்கையால் வெகுவாக காயப் பட்டுக் கொண்டிருந்தார்.

“ஆதியை அனுப்பச் சொன்னதால் என்னோட பொண்ணை என் கிட்ட இருந்து பிரிக்க பாக்குறானோ? அப்படின்னா என்னைப் பழி வாங்கத் தான் ஜானுவைக் கல்யாணம் பண்ணினானோ?”, என்று கவலைப் பட்டு அவர்களை கூர்ந்து கவனித்தார்.

ஆனால் ரகு ஜானகியை நல்ல படியாக பார்த்துக் கொண்டான். அவன் முகத்தில் இருந்த புன்னகையும் ஜானகி முகத்தில் இருந்த நிறைவும் அவர்கள் சந்தோஷமான வாழ்க்கையை எடுத்துச் சொல்ல அவருக்கும் நிம்மதியாக இருந்தது.

மகள் தன்னை விட்டுப் போனாலும் அவள் சந்தோஷமாக இருந்தால் அவருக்கு போதும் தான். மகளுக்காக மகளையே விட்டுக் கொடுப்பார். ஆனால் கீர்த்தி என்ற பெண் கண்ணில் விழுந்த தூசி போல உருத்திக் கொண்டே இருக்க அவரால் தெளிவாக ஒரு முடிவுக்கு வரவில்லை.

சாப்பிட்டு முடித்ததும் பேச்சு வாக்கில் “ஜானுவைக் கூட்டிட்டு பாரின் போறீங்களா மாப்பிள்ளை? அங்கயே வீடு வாங்கித் தரேன். ஜானுவுக்கு பாரீன்ல வேலை பாக்கணும்னு ஆசை”, என்று கொக்கிப் போட்டுப் பார்த்தார்.

“இல்லை மாமா, எனக்கு நம்ம ஊர் தான் பிடிச்சிருக்கு. அதுவும் என் வேலை, நான் கஷ்டப் பட்டு படிச்சு வாங்கினது. அறுபது வயசு வரைக்கும் வேலை பாத்து ரிட்டயர்ட் ஆகி என் அப்பாவோட சொந்த ஊரான பொள்ளாச்சில இருக்குற தோப்பைப் பாத்துக்கிட்டு எங்க வாழ்க்கையை ஓட்டிருவேன்”, என்றான்.

“ஆமா பா, எனக்கும் இப்ப பாரின் போக எல்லாம் ஆசை இல்லை. ரகு ஆசை தான் என்னோட ஆசையும். அவன் கூட இருந்து ஆதியை நல்லா வளத்து படிக்க வைக்கணும்”, என்று ஜானகியும் சொல்ல மோகன் முகம் பியூஸ் போன பல்ப் போல சுருங்கிப் போனது. “நீங்க ரெண்டு பேரும் ஆசைப் படலாம். ஆனா அதுக்கு அந்த கீர்த்தி விடணுமே?”, என்று எண்ணியவருக்கு இந்த இக்கட்டில் இருந்து மகள் வாழ்க்கையை எப்படிக் காப்பாற்ற என்று தெரிய வில்லை.

அவர் முகம் சுருங்கிப் போனதை சந்தோஷமாக பார்த்த ரகு ஜானகியை பெருமையாக பார்த்தான். ஜானகி மேல் இன்னும் காதல் வளர்ந்தது அவனுக்கு

“ஜானு மாப்பிள்ளையைக் கூட்டிட்டு உன் ரூமுக்கு போ. ரெஸ்ட் எடுங்க. இந்த குட்டிப் பையன் இன்னைக்கு தான் இங்க இருப்பான். அதனால நான் அவனை வெளிய கூட்டிட்டு போறேன். போகலாமா ஆதிக் குட்டி”, என்று விஷ்ணு கேட்க ஆதியும் சரி என்றான்.

“சரிங்க மச்சான், பாத்து போயிட்டு வாங்க”, என்று விஷ்ணுவிடம் சொன்ன ரகு “ஆதி கண்ணா மாமா கூட போகும் போது சமத்தா சேட்டை பண்ணாம இருக்கணும் சரியா? நீ ஊர் சுத்திட்டு வந்ததும் நாம நம்ம வீட்டுக்கு போகலாம்”, என்றான்.

ஆதியும் “சரிப்பா”, என்று சொல்ல மோகனுக்கு தான் கடுப்பாக இருந்தது.

ஆதியும் விஷ்ணுவும் கடைக்கு கிளம்ப ரகுவை அறைக்கு அழைத்துச் சென்ற ஜானகி “நீ தூங்கு ரகு. நான் அப்பா கூட கொஞ்ச நேரம் பேசிட்டு வரேன்”, என்று சொல்ல எரிச்சல் அடைந்தான்.

“இன்னும் அப்பா அப்பான்னு சொன்னா எனக்கு கெட்ட கோபம் வரும் ஜானு. நானே இப்ப தான் உன் கூட சந்தோஷமா இருக்கேன்.  இனி இந்த ஜானகி ரகுராமோட பொண்டாட்டி மட்டும் தான். என் கூட தான் நீ இருக்கணும். உங்க அப்பாவுக்காக எல்லாம் உன்னை விட்டுக் கொடுக்க முடியாது”, என்று தன்னை மீறி எரிச்சலுடன் சொல்ல திகைத்துப் போனாள்.

Advertisement