Advertisement

     அவள் பழைய நினைவுகளில் மூழ்கி இருக்க அப்போது அவளது மொபைல் அடித்தது. எடுத்து பார்த்ததில் விஷ்ணு என்று வந்தது. விஷ்ணு அவளுடைய அண்ணன். ஆஸ்திரேலியாவில் இருந்து அவன் தான் அழைத்திருந்தான். ஒரு மாதம் ஆன் சைட் வேலைக்காக சென்றிருந்தான். போனை எடுத்தவள் “சொல்லுண்ணா”, என்றாள்.

     “வீட்டுக்கு வந்துட்டியா அம்மு?”

     “ஆமாண்ணா”

     ஒரு காலத்தில் அவள் அவனை அண்ணா என்றெல்லாம் அழைக்க மாட்டாள். அதே போல அவனுக்கும் தங்கை என்று தோன்றாது. ராட்சசி, திமிர் பிடித்தவள் என்பான். அவளுடன் பேசவே மாட்டான். ஆனால் இப்போது அனைத்தும் மாறியது. மாற்றம் ஒன்று தானே மாறாதது.

     “என்னோட ஃபிரண்ட் நவீன் கிட்ட உன்னோட போட்டோ காட்டினேன் டா”

     “ம்ம்”

     “உன்னை ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னான்”

     “ம்ம்”

     “உன்னைப் பாக்க வரச் சொல்லட்டுமா? அவன் இப்ப சென்னைல தான் இருக்கான்”, என்று அவன் சொன்னதும் ஒரு நொடி கண்களை மூடித் திறந்தவள் “சரிண்ணா”, என்றாள்.

     “சரி டா, மணி இப்ப அஞ்சு தானே ஆகுது? ஒரு ஆறு மணி போல கிளம்பி பக்கத்துல இருக்குற மால்க்கு போறியா? நான் அவனை அங்க வரச் சொல்றேன். பேசிப் பாரு. எங்களுக்காக முடிவு சொல்லாத. உண்மையிலே உனக்கு பிடிச்சிருந்தா சரின்னு சொல்லு. மத்தது எல்லாம் நான் பாத்துக்குறேன்”

     “சரிண்ணா”

     “பாத்து பேசு அம்மு. பழைய படி …. நீ அப்படி நடந்துக்க மாட்ட தான். ஆனா…”

     “எனக்கு புரியுதுண்ணா. கவலைப்படாதே எப்பவும் உன்னோட நட்பை கெடுக்க மாட்டேன். கவனமாவே அவங்க கிட்ட பேசுறேன். சரி இப்ப குளிச்சிட்டு கிளம்பினா சரியா இருக்கும்”

     “சரி டா, அப்புறம் சாரி, அவனை வீட்டுக்கு வரச் சொல்ல தான் முதல்ல நினைச்சேன். ஆனா நீயும் அம்மாவும் தனியா இருக்குறப்ப அவனை அங்க வரச் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. உனக்கு தனியா போக ஒரு மாதிரி இருந்தா அம்மாவைக் கூட்டிட்டு போ”

     “பரவால்ல அண்ணா, நான் போய்க்குவேன். அம்மா வேண்டாம்”

     “சரி அம்மு”

     “அண்ணா”

     “என்ன டா?”

     “சாரி”

     “எதுக்கு?”

     “என்னால உன் வாழ்க்கையும் போகுது? நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோயேன்”

     “உன் வாழ்க்கை செட்டில் ஆகட்டும். அப்புறம் பண்ணிக்கிறேன். சரி கிளம்பு”, என்று சொல்லி போனை வைத்தான்.

     அவன் வைத்ததும் மனம் குற்ற உணர்வில் தவித்தது. தனக்கு ஒரு வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்க நினைக்கும் அண்ணனின் தவிப்பு அவளுக்கு புரிந்தது. அவளும் அவனிடம் எவ்வளவோ பேசி விட்டாள். அவன் உறுதியாக இருக்கிறான் அவளுக்கு முடித்து விட்டு தான் அவனுக்கு முடிக்க வேண்டும் என்று. அவளுமே அன்னைக்காகவும் அண்ணனுக்காகவும் அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய நினைக்கிறாள். ஆனால் அவளால் முடிய வில்லை.

     போன முறை அவன் ஒரு மாப்பிள்ளையை அனுப்பி இருக்க அவன் கொஞ்சம் அதிகமாக உரிமை எடுத்துப் பேச இவளும் மரியாதை இல்லாமல் பேசி விட்டாள். அதனால் தான் விஷ்ணு இந்த முறை பார்த்து பேசு என்கிறான்.

     இன்று கண்டிப்பாக நவீனுக்கு சம்மதம் சொல்லி விட வேண்டும், தன்னால் அண்ணன் வாழ்க்கை பாழாகக் கூடாது. இறந்து புதைந்து போன உறவைத் தேடி அண்ணனின் வாழ்க்கையைக் கஷ்டப் படுத்தக் கூடாது என்று எண்ணிக் கொண்டு அன்னையிடம் சொல்லி விட்டு குளிக்கச் சென்றாள்.

     குளித்து முடித்து ஒரு பெரிய துண்டைக் கொண்டு உடலைச் சுற்றி வெளியே வந்து கப்போர்டைத் திறந்தாள். முன்பு அவள் உடை ஜீன்ஸ் டிஷர்ட் தான். பேருக்கு கூட அவள் அறையில் சேலையோ தாவணியோ சுடிதாரோ நைட்டியோ இருக்காது. ஏதாவது பங்க்ஸன்க்கு போட லெகங்கா மாதிரியோ பிராக் மாதிரியோ உடை வைத்திருப்பாள். ஆனால் இப்போது அவளது கப்போர்டில் இருப்பது விதவிதமான காட்டன் சேலைகள் தான். அனைத்தும் விஷ்ணு அவளுக்கு எடுத்துக் கொடுத்தது.

     அதில் பிங்க் நிறப் புடவை ஒன்றைக் கையில் எடுத்தாள். அதை எடுத்ததும் “இன்னைக்கும் இதே டிரஸ் தானா? ஒரே ஒரு நாள் பிங்க் கலர்ல சேலை கட்டிட்டு வந்திருக்கலாம்ல? அது உனக்கு ரொம்ப அழகா இருக்கும்”, என்ற குரல் அவள் காதில் கேட்டது. அந்த குரலில் இருந்த ஆசை ஏக்கம் எல்லாம் இப்போது நினைவில் வந்து அவளது தொண்டையை அடைத்தது. அதற்கு “வாயை மூடிட்டு போ டா லூசு”, என்று அவள் பதில் கொடுத்ததும் நினைவில் வந்தது.

     அதை எண்ணிப் பார்த்து ஒரு பெருமூச்சோடு கிளம்ப ஆரம்பித்தாள். சேலை கட்டி வெளியே வந்த மகளுக்கு சிறிது மல்லிகைப் பூவைச் சூடி விட்டாள் தேவகி. பழைய நினைவுகள் மேலும் மேலும் மனதை அழுத்த அன்னையிடம் சொல்லி விட்டு தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு அண்ணன் சொன்ன மாலுக்கு சென்றாள்.

     ஆனால் நவீன் வந்து விட்டானா என்று தெரிய வில்லை. அவன் எண் தெரியாததால் அவனே அழைப்பான் என்று எண்ணி வெளியே இருந்த பார்க் மாதிரியாக இருந்த இடத்தில் அமர்ந்தாள்.

     முன்பெல்லாம் அவளுக்கு காத்திருப்பு என்பது பிடிக்கவே பிடிக்காது. அவளுக்காக மற்றவர்கள் காத்திருக்க வேண்டும் என்று நினைப்பவள். இன்றோ பொறுமையாக நிதானமாக காத்திருந்தாள். எந்த கோபமோ எரிச்சலோ வர வில்லை. சுற்றி இருக்கும் பல தரப்பட்ட மக்களை ஆர்வமாக பார்வையிட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள். அங்கே சாப்பிடுவதற்கு என பல ஐட்டங்கள் வைத்திருக்க மக்கள் குவிந்திருந்தனர்.

     ஏனோ அந்த மாலுக்கு ஷாப்பிங் செய்ய வருவதை விட வெளியே இருக்கும் கடைகளில் உண்ணத் தான் அதிகமாக வருகிறார்கள் என்று தோன்றும். அவள் அந்த மக்களைப் பார்த்துக் கொண்டிருக்க அப்போது ஒரு புது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

     அதை எடுத்து காதுக்கு கொடுத்தவள் “ஹலோ”, என்றாள்.

     “ஹலோ ஜானகி, நான் நவீன்”

     “ஹான் சொல்லுங்க நவீன். மாலுக்கு வந்துட்டீங்களா?”

     “மால் பக்கத்துல இருக்குற சிக்னல்ல மாட்டிக்கிட்டேன். டூ மினிட்ஸ்ல வந்துருவேன். சாரி வெயிட் பண்ண வச்சதுக்கு”

     “இட்ஸ் ஓகே நவீன். பரவால்ல நீங்க பாத்து வாங்க. நான் எண்ட்ரன்ஸ்‌ல வெயிட் பண்ணுறேன்”, என்று சொன்னவள் எழுந்து நின்று வாசலைப் பார்த்தாள்.

     அப்போது அவளது காலருகே இருந்த சேலையை யாரோ லேசாக இழுப்பது போல தோன்ற குனிந்து பார்த்தாள். காலையில் பள்ளிக்கு வந்த ஆதி தான் அவளது சேலையை பிடித்து இழுத்தான். அவன் அருகே நின்றிருந்தாள் நிர்மலா.

     “டேய் குட்டி”, என்ற படி குனிந்தவள் அவனை தூக்கிக் கொண்டு “நீ என்ன இங்க?”, என்று கேட்டு விட்டு நிர்மலாவைப் பார்த்து புன்னகைத்தாள்.

     “பேரனுக்கு ஸ்கூல் பேக், நோட், பென்சில் எல்லாம் வாங்க வேண்டியது இருந்தது மிஸ். அதான் வந்தோம். உங்களைப் பாத்ததும் இங்க ஓடி வந்துட்டான். பரவால்ல ஒரு நாள்ல உங்களை நல்ல அடையாளம் கண்டுக்கிட்டான் மிஸ்”

     “அப்படியா குட்டி?”, என்று கேட்ட படி அவன் கன்னத்தில் முத்தமிட அதை ஒரு ஜோடிக் கண்கள் வெறித்துப் பார்த்தது. அதுவும் அவளை அந்த பிங்க் நிற காட்டன் புடவையில் பார்த்ததும் அங்கே இங்கே கண்ணைத் திருப்பவே முடிய வில்லை. காதில் சின்னதாக ஒரு ஜிமிக்கி, ஒரு கையில் இரண்டு வளையல் மற்றொரு கையில் கருப்பு நிற கடிகாரம், கழுத்தில் ஒரு செயின், நெற்றியில் ஒரு கருப்பு நிற பொட்டு அவ்வளவே, வேறு எந்த அலங்காரமும் இல்லாமல் அவ்வளவு அழகாக இருந்தாள். அதுவும் அவளது நீண்ட பின்னலும் அதில் சூடி இருந்த மல்லிகைச் சரமும் ஆளையே அசரடித்தாள்.

     எல்லாவற்றையும் விட அவள் அழகு இன்னும் கூடி இருந்தது தான் பெரிய விஷயம். “எத்தனை வருஷம் ஆனாலும் இந்த மிர்ச்சி இப்படியே தான் இருக்கும் போல?”, என்று எண்ணமிட்டான் அவன். ஆனால் அவனுக்கு வியப்பாக இருந்தது. அவளை அவன் இது வரை பார்த்தே இராத தோற்றம் தான் அவளது இப்போதைய தோற்றம். இப்படி எல்லாம் அவள் இருந்ததே இல்லை.

     முன்பெல்லாம் காதில் ஏதாவது ஒரு பெரிய வளையத்தை மாட்டியிருப்பாள். கழுத்தில் அதுவும் இருக்காது. அவள் பொட்டு வைத்து அவன் பார்த்ததே இல்லை. ஒரு கையில் கருப்பு நிற ஸ்மார்ட் வாட்ச் அணிந்திருப்பாள். மற்றொரு கையில் எதுவுமே இருக்காது. சில நேரம் கலர்கலராக பேண்ட் மாதிரி ஒன்றை அணிந்திருப்பாள். முன்பெல்லாம் குட்டையாக இருக்கும் தலை முடி தான். அதையும் விரித்து தான் போட்டிருப்பாள். இப்போது அனைத்திலும் மாற்றம் ஒன்றைத் தவிர. அது அந்த கடிகாரம். அது மட்டும் தான் இப்போது வரை மாறாமல் இருக்கிறது என்று எண்ணமிட்ட படியே அவளைப் பார்த்தான். பார்த்துக் கொண்டே இருந்தான்.

காதல் தொடரும்….

Advertisement