Advertisement

     அந்த குழந்தையைப் பார்த்ததும் அவளுக்கு பரிட்சையமாக இருந்தது. ஆனால் சட்டென்று யார் என்று நினைவு வரவில்லை. அவள் அவனைப் பார்த்து புன்னகைக்க அவனும் சிறு கூச்சத்துடன் சிரித்தான்.

     “ஆதி குட்டி, உங்க புல் நேம் என்ன?”

     “ஆதித்யா ரகுராம்”, என்று தயக்கத்துடன் சொன்னான். ஆனால் ரகுராம் என்ற பெயர் அவளுக்குள் சிறு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது. ஆனாலும் அதை பெரிதாக எடுக்க வில்லை.

     “குட் நேம். அது மட்டும் இல்லை, எனக்கு ரொம்ப பிடிச்ச நேமும் கூட. ஸ்வீட் பாய். சரி நாம உள்ள போகலாமா? பாட்டிக்கு டாட்டா சொல்லுங்க”, என்று சொல்லி அவனைத் தூக்கிக் கொள்ள நிர்மலாவை பார்த்தான்.

     “கண்ணா மிஸ் கூட போய் நல்லா படிக்கணும். சேட்டை பண்ணக் கூடாது. சமத்தா இருக்கணும்”, என்று நிர்மலா சொல்ல சரி என்னும் விதமாய் தலையசைத்தான்.

     “ஓகே மிஸ் பாத்துக்கோங்க. நான் நாலு மணிக்கு வந்து பையனைக் கூப்பிட்டுக்குறேன்”, என்று நிர்மலா சொல்ல “நான் பாத்துக்குறேன்”, என்று சொல்லி சிரித்த ஜானகி அவனை உள்ளே அழைத்துச் சென்று அவனுக்கு என இருந்த இருக்கையில் அமர வைத்தாள்.

     அவள் கண்களில் இருந்த கனிவும் அவள் பழகும் விதமும் பேசும் விதமும் நிர்மலாவின் மனதை மயக்கியது என்று சொல்லலாம். சந்தோஷமாக வீட்டுக்குச் சென்றாள் நிர்மலா.

     “நம்ம கிளாஸ்க்கு புதுசா வந்துருக்குற குட்டிக்கு கிளாப் பண்ணுங்க”, என்று ஜானகி சொல்ல அனைவரும் கை தட்டினார்கள்.

     பின் மீண்டும் அவள் பாட்டு சொல்லிக் கொடுக்க சந்தோஷமாக கவனித்தார்கள். ஆதியும் முதல் நாள் பள்ளிக்கு வந்தது போல எல்லாம் இல்லாமல் சந்தோஷமாக இருந்தான். இத்தனை நாள் தனியாக இருந்தவனுக்கு அங்கிருந்த கூட்டம் பிடிக்கவே செய்தது. அதுவும் ஜானகியை அவனுக்கு அவ்வளவு பிடித்தது.

     அன்று மாலை நான்கு மணி ஆனதும் நிர்மலா ஆதியை அழைத்துச் சென்று விட்டாள். ஜானகியும் தன்னுடைய வீட்டுக்கு கிளம்பினாள்.

     ஐந்து மணிக்கு தன்னுடைய வீட்டுக்குள் நுழைந்தாள் ஜானகி. “வந்துட்டியா ஜானு?”, என்று கேட்டாள் அவளது அன்னை தேவகி.

     ஜானு என்ற வார்த்தையில் மனம் வெகுவாக கலங்கிப் போனது. முன்பெல்லாம் யாராவது ஜானகி என்று முழுப் பெயரைச் சொல்லி விட்டாலே அவ்வளவு எரிந்து விழுவாள். ஜானுன்னு சொல்லுங்க என்று பஜாரி மாதிரி கத்துவாள். இன்னைக்கு கிருஷ்ணன் பேசும் போது கூட அவளுக்கு அது தான் நினைவில் வந்தது. அப்படிக் கத்தி இதே தாயிடம் வசமாக வாங்கிக் கட்டிக் கொள்ளவும் செய்வாள்.

     அப்போதெல்லாம் அவளுக்கு சப்போர்ட்டாக பேசுவார் அவளது தந்தை மோகன். அவளது குரு, ரோல் மாடல், அவளது கடவுள் அனைத்தும் அவரே. ஆனால் அவர் குணம் சிறிதும் அவளுக்கு இல்லாமல் போனது தான் வருத்தமே.

     மகள் முகம் ஒரு மாதிரி இருக்கவும் “காபி குடிக்கிறியா டி?”, என்று கேட்டாள் தேவகி.

     “வேண்டாம் மா, பசிக்கலை. அப்புறம் குடிக்கிறேன்”

     “ஏன் டா சோர்வா இருக்க? பிள்ளைங்க ரொம்ப படுத்திட்டாங்களா? வேற ஏதாவது வேலைக்கு போயேன் மா. சின்னப் பிள்ளைங்களை மேய்க்கிறது கஷ்டம் டா”

     “எனக்கு பிடிச்சிருக்கு மா. மனசுக்கு ஆறுதலாவும் இருக்கு. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா மா?”, என்று கண்கள் மின்னக் கேட்ட மகளைக் கண்டு மனம் நெகிழ்ந்தது தேவகிக்கு.

     “என்ன டா?”

     “இன்னைக்கு ஒரு குட்டி என் கிளாஸ்க்கு வந்திருக்கு. பேர் என்ன தெரியுமா? ஆதித்யா ரகுராம். ரொம்ப அழகா இருக்கான்”, என்று அவள் சொல்ல அதைக் கேட்டே மகளின் மன உணர்வு புரிந்தது தேவகிக்கு. ரகுராம் என்ற பெயர் அவள் மனதில் எந்த அளவுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியதோ அதே அளவு அவள் மனதில் பழைய நினைவுகளை கீறி விட்டிருக்கும் என்று புரிந்தது.

     நிச்சயம் இந்த மனசோர்வில் இருந்து அவள் வெளியே வர கொஞ்ச நாள் ஆகும். ஆனால் தேவகிக்கு இப்போது என்ன பயம் என்றால் மகள் தினமும் அந்த ஆதி என்ற குழந்தையைக் காண வேண்டி வருமே. தினம் தினம் அட்டண்டன்ஸ் எடுக்கும் போது அவள் அந்த பெயரை உச்சரிக்க வேண்டுமே. எங்காவது ரகுராம் என்ற பெயர் தென்பட்டால் கூட அதில் இருந்து வெளியே வர இரண்டு நாட்களாவது திணறும் மகள் இனி என்ன செய்வாளோ என்று பயமாக இருந்தது.

     “என்ன மா அமைதி ஆகிட்ட?”

     “ஜானு பேசாம இந்த வேலையை விட்டுரு டா அம்மு. தினம் தினம் நீ நிம்மதி இல்லாம அலையனும் டா”

     அன்னை எதற்காக அப்படி சொல்கிறாள் என்று புரிந்து போக ஒரு விரக்தி சிரிப்பை வெளியிட்டவள் “அது தான் என்னோட பாவத்துக்கு தண்டனைன்னா அதை அனுபவிக்கிறது தான் நியாயம் மா”, என்றாள்.

     “அப்படி ஒரு பாவமும் நீ செய்யலை சரியா? காதலிச்சது பாவம்னா இந்த உலகமே இருக்காது டா. நீ தான் பெரிய அளவில் அடி பட்டிருக்க. தினமும் அந்த குழந்தையைப் பாத்துட்டு உன்னால சும்மா இருக்க முடியுமா டி? ஒரு வருஷமா ரெண்டு வருஷமா?  நாலு வருஷம். உன்னை நினைச்சா எனக்கு கஷ்டமா இருக்கு மா”

     “தெரியும் மா. என்னை நினைச்சே உன் நிம்மதி போகுதுன்னு தெரியும். உன்னை, கவலைப் பட வச்சே உன்னோட ஆயுளை நான் குறைச்சிட்டே வரேன். என்னைப் பத்தி கவலைப் பட்டே நீ சீக்கிரம் செத்துருவ மா”, என்று சொல்லும் போதே இருவரின் கண்களிலும் கண்ணீர் வந்தது.

     ஏற்கனவே கலங்கி இருந்த மகளை மேலும் காயப் படுத்தி விட்டோம் என்று புரிந்து “சரி நீ போய் ரெஸ்ட் எடு”, என்று உள்ளே அனுப்பி வைத்தாள்.

     அறைக்குள் வந்தவள் உடையைக் கூட மாற்றாமல் அப்படியே கட்டிலில் விழுந்தாள். தன்னுடைய மொபைலை எடுத்து அதில் மை ஷோல்(ஆத்மா) என்று இருந்த போல்டரை ஓப்பன் செய்து ஒவ்வொரு புகைப்படமாக பார்த்துக் கொண்டு வந்தாள். அதில் இருந்த அத்தனையும் அவளது ரகு என்ற ரகுராம் தான்.

     இப்போது அவளது ஒவ்வொரு இதயத்துடிப்பும் ரகு ரகு என்று துடிக்க ஒரு காலத்தில் அவன் காதலை உதாசீனப் படுத்தி தூக்கி எரிந்ததும் இதே ஜானகி தான். ஆனால் இப்போது அவன் இன்னொரு பெண்ணின் கணவன். இன்னொரு பெண்ணின் கணவனை நினைப்பது கொலையை விட கொடுமையான பாவம் என்ற உண்மை தெரிந்த போதும் அவளால் அதை விட முடிய வில்லை. அவனுடைய நினைவுகள் மட்டுமே அவளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் போது அவள் நியாய அநியாயத்துக்கு எப்படி கட்டுப் படுவாள்?

     அவனை மறக்க வேண்டும், அம்மா சொல்லும் பையனை திருமணம் செய்ய வேண்டும் என்று அவள் எடுக்காத முயற்சி இல்லை. ஆனால் அது எல்லாம் அவளால் முயல மட்டுமே முடிந்தது. இன்னும் சொல்லப் போனால் அவளைப் பொறுத்த வரை ரகுராம் பெரிய பாவமும் செய்திருக்கிறான். அப்படி இருந்தும் அவளால் அவனை மன்னிக்கவும் முடியும் காதலிக்கவும் முடியும். ஏனென்றால் அந்த அளவுக்கு அவன் அவளைக் காதலித்தான். அவனது காதலை உணர்த்தியே அவளைக் காதலிக்க வைத்தான். தன்னை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்தால் எப்படி இருக்கும் என்ற சந்தோஷத்தை அவளுக்கு கொடுத்தவன் அவன். இப்போது அவளுக்கு தந்தை மடியில் படுத்து கண்ணீர் விடத் தோன்றியது.

     “அப்பா, ஏன் பா இப்படி பண்ணுனீங்க? என்னால தான் உங்களுக்கு இந்த நிலைமை? நீங்க இல்லாம எனக்கு எப்படி இருக்கு தெரியுமா? இப்ப நீங்க வேணும் பா. உங்க மடில படுத்து அழணும்”, என்று மானசீகமாக தந்தையிடம் பேசினாள் ஜானகி. அவர் இப்போது அவள் அருகே இருந்திருந்தால் கொஞ்சம் ஆறுதல் கிடைத்திருக்கும். தாயுடன் அவள் அவ்வளவு குளோஸ் இல்லாததால் அவளுக்கு தந்தையைத் தான் தேடியது.

Advertisement