Advertisement

அத்தியாயம் 1

புதுப் புது காவியங்களைப் 

படைக்கிறது என்னவளின் கருவிழிகள்!!!

     இரவு முழுவதும் காத்திருந்த மலரின் மொட்டுகள் ஆதவனைக் கண்டதும் மெல்ல மலர ஆரம்பித்தன. செடி கொடிகளில் இருந்த பனித்துளிகள் மெல்ல மெல்ல சூரியனின் ஆதிக்கத்தால் மறைய ஆரம்பித்திருந்தன. அத்தகைய அழகான காலைப் பொழுது.

     சென்னை நகரில் அமைந்திருந்த ஒரு சாதாரண குடியிருப்பு பகுதியில் இருந்த வீட்டில் தன்னுடைய போனில் இருந்து வந்த அலாரம் சத்தத்தில் கண் விழித்தாள் ஜானகி. அத்தகைய அழகிய காலைப் பொழுதிலும் அவள் மனதில் அமைதி என்பதே இல்லை.

     வேகமாக எழுந்து அமர்ந்தவள் காலைக் கடன்களை முடித்து விட்டு குளித்துக் கிளம்பி அறையை விட்டு வெளியே வந்தாள். சாதாரண காட்டன் புடவையை நேர்த்தியாக கட்டி நீண்ட கூந்தலை கொண்டை போட்டு கையில் ஒரு ஹேண்ட் பேகுடன் வந்தவளைக் கண்டதும் அவளது அன்னை தேவகியின் கண்கள் பனித்தது.

     ஒரு கையில் இரண்டு வளையல்கள், மற்றொரு கையில் கருப்பு நிற வாட்ச், கழுத்தில் ஒரு சின்ன செயின், காதில் ஒரு குட்டி ஜிமிக்கி, நெற்றியில் சின்னதாக ஒரு ஸ்டிக்கர் பொட்டு இது தான் அவளது அலங்காரம். அந்த அலங்காரத்தில் கூட அழகாக இருந்த மகளை கண்டு அந்த தாயின் உள்ளம் பூரித்துப் போனது.

     “என்ன மா அப்படி பாக்குறீங்க? லஞ்ச் கட்டிட்டீங்களா?”, என்று கேட்டாள் ஜானகி.

     “கட்டிட்டேன் டா, வா உக்காந்து சாப்பிடு”, என்று சொன்ன தேவகி மகளின் முதல் கேள்விக்கு பதில் கொடுக்க வில்லை.

     “சரி மா”, என்ற படி அந்த டைனிங் டேபிளில் அமர்ந்தவள் “இன்னும் அப்படி பாத்ததுக்கு காரணம் சொல்லலையே மா?”, என்று கேட்டாள் மீண்டும்.

     “பழைய ஜானகிக்கும் புது ஜானகிக்கும் இருக்குற வித்தியாசத்தைப் பாத்தேன் டா”, என்று தேவகி சொல்ல அவள் முகம் இறுகியது.

     “அந்த ஜானகி செத்துட்டா மா. இப்ப இருக்குறது புது ஜானகி”, என்று இறுகிப் போய் வந்தது அவள் குரல்.

     “அந்த ஜானகி செத்தது எனக்கு சந்தோஷம் தான். ஆனால் அதோட மிச்ச எச்சம் இன்னும் உன் மனசுல இருந்து போகலையே? அதை என்ன செய்ய?”

     “முடிஞ்சா செய்ய மாட்டேனா மா? எதையுமே மறக்க முடியலை”

     “சரி விடு, சாப்பிடு”, என்று சொல்லி அவளுக்கு சூடான பொங்கல் சாம்பார் சட்னியை பரிமாற அரைகுறையாக உண்டு விட்டு அன்னை கொடுத்த மதிய உணவையும் வாங்கிக் கொண்டு தன்னுடைய வண்டியில் கிளம்பி விட்டாள்.

     மருதம் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தவள் ஆசிரியைகளுக்கு என ஒதுக்கப் பட்டிருந்த பார்க்கிங்கில் தன்னுடைய வண்டியை நிறுத்தி விட்டு தன்னுடைய உடமைகளை எடுத்துக் கொண்டு ஆபீஸ் நோக்கி நடந்தாள். அவள் கடந்த நான்கு வருடங்களாக இந்த பள்ளியில் தான் இங்க்லிஷ் டீச்சராக பணிபுரிகிறாள். அதுவும் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி பிள்ளைகளுக்கு தான் பாடம் எடுக்கிறாள். படித்தது கம்ப்யூட்டர் இஞ்சினியரிங். இருந்தாலும் அவளுக்கு இந்த வேலை பிடித்திருக்க இங்கே வந்து சேர்ந்து விட்டாள்.

     வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு ஸ்டாப் ரூமுக்குள் நுழைந்து தன்னுடைய இடத்தில் அமர்ந்தவள் அன்றைய வேலைகளைப் பார்வையிட்டாள்.

     ஜானகி வயது இருபத்தி ஐந்து. சிறிய நெற்றி, மீன் போன்ற விழிகள், கூர்மையான நாசி, இயல்பிலே சிவந்த இதழ்கள் என பார்த்தவுடனே சிட்டியில் பிறந்து வளர்ந்தவள் என்ற தோற்றமும் மாசு மருவில்லாத முகமும் வசீகரமும் கொண்ட பெண்.

     சரியாக மணி ஒன்பது அடிக்க அவளுடைய கிளாசுக்கு சென்றாள். யு. கே. ஜி பிரிவு. அந்த கிளாசுக்கு இன்சார்ஜும் அவள் தான்.

     “குட் மார்னிங் கிட்ஸ்”, என்ற படி அவள் உள்ளே நுழைய அந்த வாண்டுகளும் அவளைப் பார்த்து விஷ் செய்தது. “சிட் டவுன்”, என்றவள் ஹோம் வொர்க் பற்றி பேசிக் கொண்டிருந்தாள்.

     “ஹோம் வொர்க் செய்யாதவங்க எந்திரிங்க. யாராவது இருப்பீங்களே?”, என்று அவள் கேட்க ஒருவன் எழுந்து நின்றான்.

     “அதானே, இல்லாம இருந்தா தான் அதிசயம். டேய் இங்க வா டா”, என்று அழைத்ததும் அவளை பயப்பார்வை பார்த்த படி வந்தான் நான்கு வயது கிருஷ்ணன். பார்க்க கொழுக் மொழுக் என இருக்கும் அவனைக் கண்டதும் எப்படி கோபம் வருமாம் அவளுக்கு.

     அவன் அருகே வந்ததும் அவனைத் தூக்கி டேபிள் மீது அமர வைத்தாள். அவன் சிறு கூச்சத்துடன் அமர்ந்திருக்க “கிருஷ்ணா எதுக்கு நேத்து ஹோம் வொர்க் பண்ணலை?”, என்று கேட்டாள்.

     “மிஸ் என் பேர் கிருஷ். கிருஷ்ணன் இல்லை”, என்று அவன் பட்டென்று சொல்ல “இது வேறயா? சரி கிருஷ், எதுக்கு ஹோம் வொர்க் பண்ணலை”, என்று கேட்டாள்.

     “அது… வீட்ல கெஸ்ட் வந்தாங்க மிஸ்”

     “ஓஹோ வந்தவங்க கூட விளையாடிட்டு இருந்தியாக்கும்”

     “ஆமா மிஸ்”

     “ஒரு கால் மணி நேரம் உக்காந்து எழுதிருக்கலாம்ல டா?”

     “சாரி மிஸ்”

     “சரி பரவால்ல, போய் உக்காரு”, என்றவள் அவன் கன்னத்தில் லேசாக கிள்ளி கீழே இறக்கி விட அவனும் சிரிப்புடன் அமர்ந்தான்.

     “சரி இன்னிக்கு ரைம்ஸ் பாக்கலாமா?”, என்று கேட்ட ஜானகி சிரித்த முகமாக இருந்தாள்.

     “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மிஸ். உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு”, என்று அந்த பள்ளியில் நிறைய பேர் அவளிடம் சொல்லி விட்டார்கள்.

     அப்படிச் சொல்லும் போதெல்லாம் ஒரு வலி உள்ளுக்குள் எழுந்து அவளை இம்ஸிக்கும். ஒரு தலையசைப்போடு அவர்களை கடந்து விடுவாள்.

     ஒரு காலத்தில் அவள் முகத்தில் கோபத்தை தவிர வேறு எதுவுமே இருக்காது. அப்படியே சிரித்தாலும் அது மற்றவரைக் காயப் படுத்தும் ஏளனச் சிரிப்பாகவே இருக்கும். அதை மாற்றியது ஒருவன். இப்போதோ எப்போதும் முகத்தில் சிரிப்பு தான். ஆனால் அவள் என்ன தான் சிரித்த முகத்துடன் இருந்தாலும் அவள் மனம் ஊமையாக அழுது கொண்டிருப்பதை அவள் மட்டுமே அறிவாள்.

     சூடாக இருக்கும் பாலைவன மணலில் நடக்கும் போது ஏற்படும் தாகம் போல தான் சில பேருக்கு வாழ்க்கை இருக்கும். ஆனால் ஜானகியின் நிலைமையோ முற்றிலும் வேறு. அவளைச் சுற்றி நந்தவனம் தான். அந்த நந்தவனத்தில் தான் தாகத்துக்கு தவித்துக் கொண்டிருக்கிறாள். எல்லாம் அவளுக்கு இருக்கிறது. அன்பான தந்தை, கண்டிப்பும் அக்கறையும் கொண்ட தாய், வழிகாட்டும் அண்ணன், நிறைவான சொத்துக்கள். ஆனால் ஒன்றைத் தவிர. அது இன்னும் அவளுக்கு கிடைக்கவே போவதில்லை என்ற நிலை. அவள் மொத்த தாகத்தையும் இந்த பிறவியில் தீர்க்க முடிய வில்லை என்றாலும் அவ்வப்போது சில நீர்துளிகள் அவள் தொண்டையை நனைப்பது போல தான் இந்த டீச்சர் வேலை. சிறு குழந்தைகளைக் கண்டதும் அவள் சோகம் பறந்து விடுமே.

     அவள் மன அமைதிக்காக தான் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்திருக்கிறாள். ஆனால் அது எல்லாம் இந்த பள்ளி முடியும் நேரம் வரை மட்டும் தான். அதற்கு பின் அவள் மனம் முழுவதும் வெறுமை மட்டுமே.

     அவள் கை கால்களை ஆட்டி குழந்தைகளுக்கு ரைம்ஸ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க அப்போது “மிஸ்”, என்ற சத்தத்தில் திரும்பி வாசலைப் பார்த்தாள். வாசலில் பியூனும் அவனுடன் ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணியும் ஒரு நான்கு வயது சிறுவனும் நின்றிருந்தார்கள்.

     அவர்களை நோக்கி நடந்தவள் பியுனைப் பார்த்து “சொல்லுங்கண்ணா”, என்றாள்.

     “நியூ அட்மிசன் மா. ஒரு வாரம் லேட்டா வந்திருக்காங்க. உங்க கிட்ட ஹெச்.எம் விடச் சொன்னாங்க. பாத்துக்கோங்க”, என்று அவர் சொல்லி விட்டுச் சென்றதும் அந்த பெண்மணி புறம் திரும்பி புன்னகைத்தாள்.

     அந்த புன்னகையில் மயங்கிய அந்த பெண்மணி “என் பேர் நிர்மலா மிஸ். இவன் ஆதி. என்னோட பேரன். இவனை யு.கே.ஜில சேக்க வந்தேன். எல்.கே.ஜி படிக்கலை”, என்றாள்.

     “ரொம்ப சந்தோஷம் மேடம். பையனோட அம்மா அப்பா வரலையா?”

     “இல்லை மிஸ்”, என்று சொன்ன நிர்மலா வேறு எதுவும் சொல்ல வில்லை. ஜானகியும் வேறு எதுவும் கேட்காமல் ஆதிக்கு அருகே மண்டியிட்டு அமர்ந்தாள்.

Advertisement