Advertisement

நதியின் ஜதி ஒன்றே! 8

இங்கு சேனாதிபதி வீட்டில், “ப்பா ஏன்ப்பா இப்படி?” என்று கல்யாண் நொந்து போய் கேட்டான்.

“இதுதான் ரவுடிசம். இதுக்கு தான் அவர் பொண்ணு தரமாட்டேனு சொன்னார். நீங்க அதையே லைவா அவருக்கு பண்ணி காமிச்சிட்டு வந்திருக்கீங்க. அப்புறம் எப்படி அவர் பொண்ணை கொடுப்பார்?” காமாட்சியும் கேட்டார்.

“என் முன்னாடியே என் மகனுக்கு அவர் பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சட்டமா சொல்வார். நான் கேட்டுட்டு சும்மா வரணுமா?”

“அவர் பொண்ணுங்க. அவர் சொல்லாம”

“இவனும் என் மகன். நான் கேட்காம”

“ப்பா. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க. அவர் நம்மளை பத்தி என்ன நினைப்பார்?”

“ரவுடின்னு நினைப்பார். என்னால உங்களுக்கு இவ்வளவு கௌரவ குறைச்சல்ன்னா எதுக்கு என்னை கூட்டிட்டு போனீங்க?” கட்ட பஞ்சாயத்துக்காரர் எகிறினார்.

“மாமா கௌரவம், கிவுரவம்ன்னு பெரிய பேச்சு பேசுனீங்க அப்பறம் நான் மனுசியா இருக்க மாட்டேன் பார்த்துக்கோங்க” காமாட்சிக்கு கோவம் வந்துவிட்டது.

“உங்களால எங்களுக்கு என்ன கௌரவ குறைச்சல்? நீங்க தான் எங்க கௌரவம், மானம் மரியாதை எல்லாம். இன்னொரு முறை இப்படி வார்த்தை வந்துச்சு”

“சரி கண்ணு விடு ஏதோ கோவம்”

“என்ன கோவம் இருந்தாலும் பார்த்து பேசுங்க மாமா. பொண்ணு கேட்க போன இடத்துல இப்படி பண்ணிட்டு வந்துட்டிங்களேன்னு கேட்டா என்னென்னமோ பேசுறீங்க?”

“சரி உன்கிட்ட பேசினது வேணா தப்பு தான். ஒத்துகிறேன்”

“அங்க பண்ணதும் சரியில்லை தான் மாமா”

“இல்லை கண்ணு. அதை ஒத்துக்க மாட்டேன். நாளைக்கு அவர் போன் பண்ணுவார். பண்ணனும். பண்ணலைன்னா என்ன பண்ணனும்ன்னு எனக்கு தெரியும். நீங்க இதுல தலை கொடுக்காதீங்க” என்று வெளியே கிளம்பிவிட்டார்.

அம்மாவும், மகனும் தலை பிடித்து கொண்டனர். “தாரணிக்கு மாப்பிள்ளை உறுதி பண்ணிட கூடாதுங்கிற  அவசரத்துல நாம பொண்ணு கேட்டு போனது நமக்கு எதிரா திரும்பிடுச்சும்மா” என்றான் கல்யாண்.

“பார்த்துக்கலாம் கல்யாண். நான் அப்பாகிட்ட பேசுறேன்” என்று காமாட்சி மகனுக்கு தைரியம் சொல்லி செல்ல, கல்யாணின் போன் ஒலித்தது.

அஜய். கல்யாண் உறுத்தி கொண்டே தான் போன் எடுத்தான். அதற்கேற்றது போல், “உங்களை நம்பினதுக்கு செஞ்சுட்டீங்க இல்லை” என்று கேட்டான் அவன்.

“அஜய்”

“அப்போ நான் முதல்ல நினைச்சது சரி தான் இல்லை”

“அஜய். ப்ளீஸ் புரிஞ்சுக்கோடா”

“என்ன, என்ன புரிஞ்சுக்கணும்? பொண்ணை பெத்தவர்கிட்ட பொண்ணு கேட்கிறேன்ற பேர்ல மிரட்டிட்டு வருவீங்களா?”

“அஜய் அப்பா மிரட்ட எல்லாம் இல்லை. அவர் ஏதோ டென்ஷனில்”

“ஓஹ். நாளைக்கு போன் வந்திருக்கணும்ன்றது மிரட்டுறது இல்லையோ?”

“அது. அது”

“உங்க அப்பா போன் நம்பர் கொடுங்க” என்றான் அவன்.

“அஜய்”

“பெண்ணை பெத்தவர் இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கார்ங்க. இப்படி தான் பொண்ணு கேட்பீங்களா? தாரணி மனசுல உங்களுக்கு ஒரு சின்ன இடம் இருக்குன்னு தான் ஹிண்ட் கொடுத்தேன். ஆனா நீங்க உங்க புத்தியை காமிச்சுட்டீங்க இல்லை”

“பெரிய வார்த்தை எல்லாம் பேசாத அஜய்”

“உங்களுக்கு பொண்ணு கொடுக்கவே மாட்டேன்னு நிக்கிறார். தாரணிக்காகன்னு பார்த்து நான் தப்பு பண்ணிட்டேன். அதை சரி செய்ய என்ன செய்யணுமோ அதை செய்வேன். உங்களுக்கு மட்டும் ஆள் இருக்குன்னு நினைக்காதீங்க. நாளைக்கு போன் வராது. என்ன பண்றீங்கன்னு நானும்  பார்க்கிறேன்” என்று வைத்துவிட்டான்.

“இதென்னடா கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பிடுச்சு”

தாரணி வீட்டில் இனி எப்படி பேச? அப்பா செய்தது நிச்சயம் அவர்களை பாதித்திருக்கும். என்ன செய்து சரி செய்ய போகிறேன்? தலை முடியை பிய்த்துக்கொள்ள தோன்றியது.

தாரணி என்ன மனநிலையில் இருப்பாள்? நிச்சயம் கோவமாக இருக்க தான் வாய்ப்பு அதிகம். பேசாமல் ஆகாது என்று போன் செய்ய, அவள் எடுக்க தான் இல்லை.

விடியற்காலையில் அஜய் அரியலூர் வந்து சேர,  பலராம் ஒரு பொட்டு கூட தூங்காமல் ஹாலிலே விழித்திருந்தார். அவரை அப்படி பார்க்கவும் அஜய்க்கு அளவில்லா குற்ற உணர்ச்சி.

“இன்னைக்கு நான் போன் பண்ணலைன்னா அவர் என்ன பண்ணுவார் அஜய்?” எடுத்ததும் இதை தான் கேட்டார் மனிதர்.

இரவெல்லாம் அதையே யோசித்திருக்கிறார் என்று புரிய, “அவர் என்ன பண்ணாலும் நம்மால ஹாண்டில் பண்ண முடியும் அங்கிள், நீங்க கவலைப்படாதீங்க” என்றான் அஜய்.

கல்பனா இவர்களுக்காக  காபி எடுத்து வந்தார். பலராம் மறுத்துவிட்டார்.

“அங்க என் பொண்ணை நான் கொடுக்க மாட்டேன் அஜய்” என்றார் பலராம் மிக உறுதியாக.

“உங்க முடிவு தான் அங்கிள்” என்றவன், சில நொடி அமைதிக்கு பிறகு, “சாரி அங்கிள்” என்றான்.

பலராம் கேள்வியாக பார்க்க, பொண்ணு கேட்க சொன்னதை சொல்லிவிட்டான். “என்ன அஜய் இது?” அவர் கோவம் கொள்ள,

அஜயால் பதில் சொல்ல முடியவில்லை. கல்யாணை மட்டும் பார்த்தேன். அவர் அப்பாவை பற்றின் யோசிக்கவில்லை. என் தவறு தான்.

“சோ அந்த பையன் தாரணி பின்னால வரது உனக்கு முதல்ல இருந்து தெரியும் இல்லை” என்று கேட்க, அஜய் தலையசைத்தான்.

“உன்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை அஜய். அவங்களை பத்தி தெரிஞ்சும்.. உன்மேல வைச்ச நம்பிக்கைக்கு நல்ல பதில் தந்துட்ட. நன்றிபா” என்று எழுந்து சென்றுவிட்டார்.

அஜய் குனிந்து தரையை பார்த்து அமர்ந்திருக்க, ஜீவிதா அவன் பக்கம் அமர்ந்தாள். “அஜு” என்று அவன் கை கோர்த்து கொண்டாள்.

“அக்காக்கு பிடிச்சதுன்னு தானே நீங்க சொன்னீங்க அஜு? அப்பறம் அப்பா ஏன் உங்ககிட்ட கோவப்படணும். கல்யாண் சீனியர் நல்லவர் தான். அவர் அப்பா தான் மோசம்” என்றாள் சின்னவள்.

அஜய் அமைதியாக அமர்ந்திருந்தான். கல்பனா அவனுக்கு அறை ஒதுக்கி கொடுத்தார். குளித்து வர, சங்கர் வந்துவிட்டார். உடன் ஒரு கட்சி வேட்டி.

பலராம்க்கு கட்சி வேட்டியை அறிமுகம் செய்து வைத்தார் சங்கர். “ஒன்னு விட்ட MP அண்ணா. மினிஸ்டர் *** கூட நம்ம சொந்தம் தான். பார்த்துக்கலாம்” என்றார்.

தலையசைத்த பலராம்க்குள் பல எண்ணங்கள். இப்படி ஒரு விஷயம் நடப்பது பற்றி தன் சொந்தங்களுக்கு தெரிய கூடாது என்று நினைத்தார்.

ஏனெனில் மகளுக்கு வந்திருக்கும் வரன் சொந்தத்தின் மூலம் தான். இதில் மகளுக்கு வேறு அவன் மேல் விருப்பம் இருப்பது போல் தெரிகிறது.

அஜய் செய்த வேலையால் சங்கர் தனக்கு துணை நிற்கிறார். இவரை வைத்து இதை சமாளிக்க கொள்ளலாம் என்று நினைத்தார்.

சங்கரின் பலம் பற்றி ஊரில் சென்று பார்த்த போது தான் தெரியவே செய்தது அவர்களின் பங்காளிகள் எல்லாம் அதிகாரத்தில் இருந்ததுடன் பணத்திலும் உயர்ந்து இருந்தனர்.

ஆட்பலமும் அதிகம். சேனாதிபதியை இவர்களை வைத்து தான் சந்திக்க வேண்டும் என்றிருந்தார்.

“நீங்க வேலை செய்ற இடம்ன்னு தான் ஆளுங்களை வெளியே நிக்க வைச்சிருக்கோம். தேவைன்னா கூப்பிட்டுக்கலாம்” என்றார் சங்கர். சரி என்று பலராம் கேட்டுக்கொண்டார்.

“என்ன அஜய்” என்று MP அவனிடம் பேசினார்.

தாரணி இன்று அஜய் சொன்னது போல் அலுவலகம் செல்லவில்லை. PGயில் இருக்க, தகவல் வந்துவிட்டது.

“அஜய் அந்த பொண்ணு ஏன் ஆபிஸ் போகலை? சேனாதிபதி ஆளுங்க நடமாட்டம் அங்க இருக்கு” என்றார் MP.

பலராம் பதட்டம் கொள்ள, “ஏன் உடனே டென்சன் ஆகுறீங்க? பொண்ணு கிட்ட போக முடியாது. ப்ரீயா விடுங்க” என்றார் MP.

அஜய் உடனே தாரணிக்கு  அழைக்க, “எனக்கு பயமா இருக்கு அஜய்” என்றாள் அவள்.

ஜீவிதா மொபைல் எடுத்து கொண்டு அஜயிடம் வந்தாள். கல்யாண்க்கு அஜயை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. மறுவாய்ப்பு அவனுக்கு நிச்சயம் தேவை. அதை அந்த வீட்டில் செய்ய கூடிய ஒரே ஆள் அஜய் மட்டும் தான்.

இவனும் விடாமல் அழைக்க, அஜய் பிளாக் செய்துவிட்டான். கல்யாண் வேறு வழி இல்லாமல் ஜீவிதாவிற்கு அழைத்தான்.

சின்னவளும் அழைப்பை ஏற்கவில்லை. மேசேஜ் அனுப்பினான். “ஒரே ஒரு முறை அஜய்கிட்ட பேச வை ஜீவிம்மா” என்று.

“தப்பை சரி செய்யணும் ஜீவி” என்று விடாமல் அனுப்ப, ஜீவிதாவிற்கு பாவமாகி போனது. இங்கு அஜய் அக்காவிடம் பேச பெண் நின்றாள்.

Advertisement