Advertisement

நதியின் ஜதி ஒன்றே! 6

அஜய், தாரணி வேலை பார்க்க ஆரம்பித்து, முதல் மாத சம்பளத்தையும் வாங்கிவிட்டார்கள். வங்கியில் பணம் வந்து விழுந்த நேரம் என்னமோ உலகமே வசப்பட்ட உணர்வு அந்த இளையவர்களுக்கு.

பிரேக்கில் சந்தித்து கொண்டவர்கள், தங்களுக்கு வந்த மெசேஜை காட்டி கொண்டிருக்க, மூன்றாவது கையும் உள்ளே வந்தது.

அஜய், தாரணிக்கு அது யாரென தெரியும் என்பதால் நிமிர்ந்தே பார்க்கவில்லை. அந்த ஆள் அதற்கு எல்லாம் அலட்டிக் கொள்ளவும் இல்லை.  “டிரீட்க்கு போலாமாபா?” என்று கேட்டமர்ந்தான் கல்யாண்.

அஜய் மறுப்பாக தலையசைக்க, தாரணி அவனை பார்க்க செய்யாமல், “இந்த வீக் ஊருக்கு போலாமா அஜய். ஜீவிக்கு எதாவது வாங்கி கொடுக்கணும்” என்றாள் ஆசையுடன்.

“ம்ம். இங்கேயே ஷாப்பிங் முடிச்சுட்டு போலாம். வீட்ல எல்லோருக்கும் வாங்கலாம்” என்றான் அஜய்.

“ட்ரெயின் டிக்கெட் பார்க்கலாம்” என்று பார்த்து, இல்லையெனவும் தட்கலில் புக் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.

“எங்க ஷாப்பிங் போலாம். ஜீவிக்கு என்ன வாங்கன்னு தெரியலையே?”

“அவளுக்கு எது வாங்கினாலும் வம்பு தான். நிச்சயம் குறை சொல்வா”

“பேசாம அவளை திருச்சிக்கு கூட்டிட்டு போய் வாங்கிடலாம். அப்படியே அம்மா, அத்தைக்கும் அவங்களுக்கு பிடிச்சது போல சேரி எடுத்துக்குவாங்க இல்லை” தாரணி யோசனையாக கேட்க,

“சரிதான். அவங்களே பார்த்து எடுத்துக்கட்டும். இங்க ஷாப்பிங் கேன்சல்” என்ற அஜய், மூச்சை இழுத்துவிட்டு நிமிர்ந்தமர்ந்தான்.

கல்யாண் அமைதியாக இருவரையும் பார்த்திருக்க, அஜய்க்கு ஒரு சொல்ல முடியா உணர்வு. அவனுக்கு கல்யாண் இப்போதும் செட் ஆகவில்லை. மௌனமாக  மொபைலை உருட்டினான்.

தாரணியும் நண்பனின் அமைதியில் மௌனமாகிவிட்டாள். ஒரு மாத காலமாக இப்படி தான் சென்று கொண்டிருந்தது.

இவர்கள் அவனை விட்டு பேச, அவன் அமைதியாக பார்த்திருப்பது என்பது ஒரு அசவுகரிய உணர்வு. ‘வேணும்ன்னே பண்றாரா? இந்த மனுஷன் காரணமே இல்லாமல் எங்களை கில்ட்டா பீல் பண்ண வைக்கிறார்’

முதலில் நண்பர்களுக்கு ப்ரீயாக பேச முடியாமல் எரிச்சல் கோவம் வந்தது. இப்போது அவனையும் அவர்கள் வட்டத்தில் இணைத்து எல்லாம் பேசினர். அது கல்யாண்க்கு தெரிய அவன் ஏன் கவலைப்பட போறான்?

கல்யாண் பார்வை நொடி தாரணி மேல் அழுத்தமாக பதிய, அஜய் எழுந்துவிட்டான். நண்பன் எழவும் தாரணியும் அவனுடன் கிளம்பிவிட்டாள்.

கல்யாண் சிரித்தபடி  நிதானமாக காபி வாங்கி குடித்தவன், தம்பிக்கு அழைத்து பேசினான்.

ஜீவிதாவிற்கு படிப்பு சம்மந்தமாக மெசேஜ் ஒன்றும் போட்டுவிட்டான். கல்லூரி முடித்து கூப்பிடுவாள். மாலை நண்பர்கள் வேலை முடித்து வர, கல்யாண் அவர்களுடன் கம்பெனி பஸில் ஏறி கொண்டான்.

முதலில் காரில் வந்தவன், இவர்களுக்காக பஸ் மாற்றி கொண்டான். அஜய் தனி சீட்டில் மொபைல் பார்த்து கொண்டிருக்க, அவன் பக்கம் அமர்ந்தான் கல்யாண்.

அஜய்க்கு ஆச்சரியமே. திரும்பி அவனை பார்க்க, கல்யாண் சீட்டில் சாய்ந்து கண்களை மூடி கொண்டான். நண்பனை பார்த்தாள் பெண். அஜய் தோள் குலுக்கினான்.

அந்த வார இறுதியில், இருவரும் ஊருக்கு கிளம்பினர். ஜீவிதா இப்போது கொஞ்சம் தெளிந்திருந்தாள். அக்காவை கட்டிக்கொண்டு அவ்வளவு கதை.

தனிமை தான் சின்னவளுக்கு. ஏற்க பழகி கொண்டாள். படிப்பும் அதற்கு கொஞ்சம் உதவியது. பெற்றவர்களும் அவளுடன் நேரம் செலவழித்தனர்.

தாரணி அப்பா, அம்மாவிடம் சம்பள பணத்தை மொத்தமாக கையில் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டாள். பலராம், கல்பனாக்கு அந்த நொடிகள்  பிடித்திருந்தது.

நெகிழ்ச்சியுடன் மகள் தலையில் கை வைத்தனர். “உன் அக்கா சம்பள பணம். வாங்கிக்கோ” என்று பலராம் சின்னவளின் கையில் கொடுத்தார்.

ஜீவிதா இரு கை நீட்டி வாங்கி கொண்டவள், “முழுசும் எனக்கு தான்” என்றாள்.

“வைச்சுக்கோ” என்றுவிட்டனர் மூவரும்.

பேச்சுக்கென்றாலும் சின்னவளுக்கு ஒரே கொண்டாட்டம். பணத்தோடு போட்டோ எடுத்து அஜய்க்கு அனுப்பி வைத்தாள்.

“எனக்கு கிப்ட் எங்க அஜு?” என்றும் போன் செய்து கேட்டாள்.

“கிப்ட் நானே கொடுக்கிறது. நீ கேட்க கூடாது” என்றான் அஜய் சிரிப்புடன்.

“உன்கிட்ட நான் கேட்பேன். சென்னை போறதுக்குள்ள எனக்கு கிப்ட் வந்திருக்கணும்”

“மிரட்டுற. கிப்ட் கிடைக்குதோ இல்லையோ கொட்டு நிச்சயம் கிடைக்கும்”

“மரியாதை மன்னவர் வந்திட்டார். நான் வைக்கிறேன்” சின்னவள் வைத்துவிட, அஜய் அம்மாவிடம் சென்றான்.

“நாளைக்கு திருச்சி போலாமாம்மா?” என்று கேட்டான்.

வந்ததும் பெற்றவர்கள் கையில் சம்பளம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கியாகிவிட்டது. “அப்பாவையும் கூட்டிட்டு போலாம். ட்ரைவர் வர சொல்லிடலாம்” என்றான்.

சகுந்தலாவிற்கும் மாற்றம்  தேவைப்பட்டது. சங்கர் மனைவி, மகனுக்காக ஒத்துக்கொள்ள, அடுத்த நாள் அதிகாலையிலே திருச்சி கிளம்பிவிட்டனர்.

பலராம் குடும்பமும் சரியாக வந்துவிட, முதலில் காலை உணவை ஒன்றாக அமர்ந்து முடித்தனர்.

அஜய் பலாப்பழத்தை ஜீவிதாவிற்கு கொடுத்தான். அவளுக்காக இரவே வெட்டி பாக்சில் எடுத்து வந்திருந்தான்.  சின்னவள் நிமிடத்தில் காலி செய்துவிட்டு “இவ்வளவு தானா அஜு” என்று ஏக்கமாக கேட்டாள்.

“நீ அளவில்லாம சாப்பிடுவேன்னு தான் கொஞ்சமா எடுத்து வந்தான் ஜீவி. முழு பழம் அப்பா கார்ல வைச்சிருக்கோம்” என்றார் சகுந்தலா.

அடுத்து ஷாப்பிங் சென்றனர். அப்பாவை அஜய் சிரமம் இன்றி பார்த்து கொள்ள, “நான் ஓகே தான். நீ அவங்களோட வாங்கு போ” என்றார் சங்கர்.

“நான் என்ன வாங்க போறேன்ப்பா? உங்களோட இருக்கேன்”

“அஜு.. என் கிப்ட்” என்று வந்துவிட்டாள் சின்னவள்.

“நான் சாரோட இருக்கேன். நீ போ அஜய்” என்று பலராம் சொன்னவர், வசதியான இடம் பார்த்து இருவருமாக அமர்ந்து கொண்டனர்.

“என்ன வேணும்?” அஜய் கேட்க,

“நீ தான் சொல்லணும். ஆஆ” பின் தலையை தேய்த்தாள்.

“வாங்குனியா? எல்லாம் என்னை போல இருப்பாங்களா? அக்கான்ற மரியாதையை என்னைக்காவது கொடுத்திருக்கியாடி?” என்று தாரணி சிரிப்புடன் வர, ஜீவிதா இருவரையும் கோவமாக பார்த்து கிளம்ப போனாள்.

அஜய், தாரணி எதிர்பார்த்து இருந்ததால், ஆளுக்கொரு கை பிடித்து வம்படியாக இழுத்து சென்றனர். “என்னை விடுங்க. நீங்க இரண்டு பேரும் ரொம்ப மோசம். சம்பளம் வாங்கிட்டா நீங்க பெரிய இவங்களா?” என்று குதித்தாள் சின்னவள்.

“பொறாமையை பாரு அஜய்” தாரணி சொல்ல,

“குதிக்காம வா. இல்லை இன்னொன்னு போடுவேன்” என்று அஜய் அதட்டினான்.

“ஹாய் மேடம்” என்ற குரலில்,

“சீனியர்” என்று மலர்ந்து சிரித்தாள் ஜீவிதா.

கல்யாணுடன் அவனின் அம்மா காமாட்சியும் நின்றிருந்தார். “என் அம்மா” என்றான் பொதுவான அறிமுகத்துடன்.

இளையவர்கள் “ஹாய் ஆன்ட்டி” என்றனர்.

“அத்தை சொல்லுங்க” என்ற காமாட்சி, மகனிடம் கண் ஜாடையில் ஏதோ பேசினார்.

அஜய் “நானும் அத்தை சொல்லணுமா?” என்று கல்யாணை நொடி கூடுதலாக  பார்த்து கேட்டான்.

கல்யாண் வாய் திறந்து சிரிக்க, “நீ எனக்கு மகன் போலப்பா” என்றார் காமாட்சி உடனே.

“சரியான கேடிங்க எல்லாம்” அஜய் தோழியிடம் முணுமுணுத்தான்.

தாரணி கைகளை பிசைந்து நின்றிருக்க, “யாரும்மா” என்று சகுந்தலா, கல்பனா வந்துவிட்டனர்.

“என்னோட சீனியர்ம்மா” என்று ஜீவிதா அறிமுகம் செய்ய, அஜய் அவளை முறைத்தான்.

காமாட்சி மிகவும் சகஜமாக அவர்களுடன் பேச்சில் மட்டுமில்லை ஷாப்பிங்கிலும் இணைந்து கொண்டுவிட்டார். “புடவை பத்தி உங்களுக்கு நிறைய தெரியுது?” கல்பனா சொல்ல,

“புடவை எனக்கு உசுரு. அவ்வளவு பிடிக்கும். எல்லா வெரைட்டிலும் வைச்சிருக்கேன். ஒருநாள் வீட்டுக்கு வாங்க. உங்களுக்கு காட்டுறேன்” என்றவர், மற்ற இருவருக்கும் தேர்ந்தெடுப்பதில் உதவினார்.

“எதுக்கு அஜு என்னை முறைச்சீங்க” ஜீவிதா இளையவர்கள் தனியே இருக்க  அஜயிடம் கேட்டாள்.

அஜய்க்கு அவளிடம் காரணம் சொல்ல முடியவில்லை.  கல்யாண் புரிந்து கொண்டவன், “நான் என்னன்னு சொல்லி அறிமுகம் ஆவேன்னு எதிர்பார்த்திருப்பார் தலைவர்” என்றான்.

“அப்படியா அஜு” பெண் அவனிடமே கேட்க,

‘இவளுக்கு எல்லாம் நான் தான் சொல்லணும்’ அஜய் தலையாட்டி கொண்டவன், “உனக்கு எதாவது வாங்கற ஐடியா இருக்கா இல்லையா?” என்று எரிந்து விழுந்தான்.

சின்னவள் அதில், “எனக்கு ஒன்னும் வேணாம் போ” என்றாள் ரோஷத்துடன்.

“ம்ப்ச். சீக்கிரம் வாங்கு. நேரம் ஆகுது”

“நீ என்னை திட்டி ஒன்னும் வாங்கி கொடுக்க வேண்டாம். உன் பணத்தை நீயே வைச்சுக்கோ. நான் படிச்சு முடிச்சு உங்களை விட அதிகமா சம்பாரிச்சு எனக்கு நானே கிப்ட் வாங்கிப்பேன்”

“ஆட்டக்காரி இங்க வைச்சும் ஆடாத”

“ஜீவிமா.. நீ வா. நாம அந்த செக்ஷன் போலாம்” என்றான் கல்யாண்.

ஜீவிதா ஒரு அடி எடுத்து வைக்க, அஜய் அவள் கையை இறுக்கமாக பிடித்து கொண்டான்.  அதில் சின்னவள் முன் வைத்த காலை பின் இழுத்துகொண்டாள்.

கல்யாண் புருவம் தூக்கி பார்த்தான். “சீனியர். உங்களுக்கு ஷாப்பிங்கா?” என்று ஜீவிதா சமாளிப்பாக கேட்டாள்.

“அம்மாக்கு” என்றவன், கை கட்டி நின்றான். அவனுக்கு என்ன செய்ய என்றே தெரியவில்லை. எப்படி சென்றாலும் முட்டுச்சந்து தான்.

Advertisement