Advertisement

அக்கா, தங்கை சண்டை மூன்று நாள் நீடிக்க, “இன்னுமா சமாதானம் ஆகலை?” என்று கேட்டான் கல்யாண்.

“ஆகலை. ரொம்ப பண்றா” சின்னவள் கடுப்பாக சொன்னாள்.

“நானும், என் தம்பியும் சண்டைன்னு வந்தா ரத்தம் பார்க்காம ஓயமாட்டோம். ஆனாலும்  அடுத்த நாளே பேசிடுவோம்”

“உங்களுக்கு தம்பி இருக்காங்களா? வேற யார் சிப்லிங்ஸ்?”

“தம்பி மட்டும் தான். டாக்டருக்கு படிச்சிட்டு இருக்கான்”

“சூப்பர் சீனியர். இந்த போர்ஷன் சொல்லுங்களேன்”

“இந்த ஜுஸ் குடி” என்றவன், அதை சொல்ல ஆரம்பித்தான்.

இருவருக்கும் பேச்சுக்கள் சகஜமாகியது. உணவை பகிர்ந்துண்டனர்.

பலராம் பெரிய மகளுக்கு எப்போது படிப்பு முடியும் என்று பார்த்திருந்தார். உறவுகள், தெரிந்தவர்கள் மூலம் வரன்கள் வந்து கொண்டே இருந்தது. இவர் தான் எக்ஸாம் முடியட்டும் என்று தள்ளி போட்டு கொண்டிருந்தார்.

தாரணிக்கு அடுத்து ஜீவிதா இருக்க, “நான் வேலையில் இருக்கும் போதே இரண்டு பேருக்கும் லைப் செட்டில் பண்ணிடணும்” என்று மனைவியிடம் சொல்லிவிட்டார்.

தாரணியோ கேம்பஸில் செலக்ட் ஆகியிருக்க, பலராம்க்கு மகிழ்ச்சி என்றாலும் அப்பாவாக பல யோசனை.

“பார்க்கலாம் இரும்மா” என்றவருக்கு கைவசம் நல்ல வரன் உள்ளதே. தவறிவிட்டு பின்னால் வேறு  நல்ல வரன் அமையவில்லை என்றால்?

“நான் யோசிச்சு சொல்றேன்” என்றுவிட, தாரணி நண்பனுக்கு போன் செய்தாள். சகுந்தலாவிடம் சொல்லி அம்மாவிடம் பேச வைத்தனர். அஜய்யும் போன் செய்து பலராமிடம் பேசினான்.

“இப்போ எல்லாம் யார் சார் உடனே கல்யாணம் பண்ணிக்கிறாங்க? கொஞ்ச நாள் ப்ரீயா இருந்துட்டு போகட்டுமே” என்று சங்கரும் பேச, தன் முடிவை மறுபரிசீலனை செய்தார் பலராம்.

ஆதிக்கவாதியோ, பிற்போக்குவாதியோ இல்லையே அவர்!

 ஒரு வருடத்தில் என்ன ஆகிவிடும் என்று நினைத்தவர், மகளின் ஆசைக்கு சரி சொல்லிவிட்டார். உடன் அவரின் கம்பெனியிலும் பேசினார் மனிதர்.

தாரணி கூடுதல் கவனம் எடுத்து வைவாவிற்கு தயாரானாள்.  இப்படியாக நால்வரும் அந்த வருட தேர்வை வெற்றிகரமாக முடித்தனர். அப்படி ஒரு ஆசுவாசம்.

“தேங்க்ஸ் சீனியர்” என்ற ஜீவிதா பெரிய சாக்லெட்டை கல்யாண்க்கு நீட்டினாள்.

கல்யாண் சிரித்தபடி வாங்கி கொண்டவன், “நெக்ஸ்ட் இயர்க்கு எல்லாம் போன்ல கைட் பண்றேன்” என்றான்.

“நானும் பிக்கப் பண்ணிடுவேன் சீனியர். உங்களை கண்டிப்பா மிஸ் பண்ணுவேன். அடுத்து என்ன பண்ண போறீங்க” என்று கேட்டாள் சின்னவள்.

“சொல்றேன். சர்ப்ரைஸ்” என,

“அக்காவை தொந்தரவு பண்ண மாட்டீங்க இல்லை”

கல்யாண் சிரித்தவன், “சீக்கிரம் பார்ப்போம்” என்று அவள் தலை பிடித்து ஆட்டி சென்றான்.

பெரியவங்க பார்த்துக்கட்டும். ஜீவிதா தோள் குலுக்கி கொண்டவள் பரீட்சை முடிந்த ஜோரில் வெகேஷன் பிளான் போட ஆரம்பித்துவிட்டாள்.

முதலில் நால்வருமாக சங்கரை பார்க்க சென்றனர். அஜய்க்கும் எக்ஸாம் முடிந்திருக்க, இரு குடும்பமும் ஓய்வாக நாளை செலவிட்டனர்.

ஜீவிதாவிற்கு பலாப்பழம் வெட்டி கொடுத்தான் அஜய். முன்னொரு முறை வந்து சென்ற போது சாப்பிட்டதில் சின்னவளுக்கு மிகவும் பிடித்து போனது. அஜய் தோட்டத்தின் பலாமரம் தேன் சுவையில் தித்தித்தது. சப்பு கொட்டி சாப்பிட்டாள் ஜீவிதா.

சங்கரை தனியே சந்தித்த பலராம், “நம்ம பசங்களுக்கு வேலை ரெடியா இருக்கு சார்” என்றார்.

“நம்ம VP பெர்சனலா சொன்னார். நம்ம குரூப் கம்பெனிஸிலே பசங்களுக்கு வேலை போட்டுக்கலாம்ன்னு சொல்லியிருக்கார்” என,

“அஜய் விருப்பம் தான் சார். கொஞ்ச நாள் வேலை பார்க்கட்டும். அப்புறம் ஊருக்கு வரட்டும்” என்றார் சங்கர்.

உணவின் போது வீட்டினருக்கும் பலராம் சொல்ல, தாரணிக்கு ஒரே மகிழ்ச்சி. அஜய் அப்பாவின் உடல்நிலை வைத்து யோசித்தான்.

“நான் இப்போ நல்லா இருக்கேன் அஜய். நீ வெளியே வேலை பாரு. அனுபவம் கிடைக்கட்டும்” என்றார் தந்தை.

சகுந்தலாவும், இங்க நான் பார்த்துகிறேன். நீ பாரு என்றிட, வேலைக்கு செல்வது முடிவாகிவிட்டது.

இருவரின் ரெசியூமும் VPக்கு அனுப்பி வைத்தனர். முடிவு தெரியும் வரை பிள்ளைகள் விடுமுறையில் இருந்தனர். அஜய் கல்லூரி நண்பர்களுடன் டிரெக்கிங் சென்று வந்தான்.

அக்கா, தங்கை இருவரும் பாட்டி, பெரியப்பா, அத்தை குடும்பம் ஊரில் இருக்க, அங்கு சில நாட்கள். அப்படியே அவர்களுடன் சின்ன ட்ரிப்பும் சென்றனர்.

முதலில் ட்ரைனிங், அதன் பின் வேலை என்று முடிவு வந்துவிட்டது.

அந்த வாரமே கிளம்ப வேண்டும் என்பதால், கடைசி நேர ஷாப்பிங் அதிகம். சென்னையில் தங்க PG பார்த்துவிட்டனர். அஜய்க்கும் தனி PG.

சங்கர், சகுந்தலா அலைய வேண்டாம் என்று அஜய் தனியே கிளம்பினான். பலராம் குடும்பம் காரில் வர, வழியில் அவர்களுடன் இணைந்து கொண்டான்.

ஜீவிதாவிற்கு பயண நேரம் ஜாலி தான். அஜு அது, அஜு இது என்று வாய் ஓயாத பேச்சு. “அவனை கொஞ்ச நேரம் ப்ரீயா விடுடி” என்று முன்னால் கணவனுடன் அமர்ந்திருந்த கல்பனா அதட்ட,

“அஜு நான் பேசுறது தொந்தரவா இருக்கா?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்தவனிடம் கேட்டாள் சின்னவள்.

“அதை கேட்க வேற செய்யணுமா? பாரு காதுல ரத்தத்தை” என்று தாரணி வம்பிழுக்க,

“நீ பேசாத. நான் உன்கிட்ட கேட்கலை”

“ஸ்ஸ்.. சண்டை ஆரம்பிக்காத. நீ என்கிட்ட பேசு. அவ கிடக்கா” என்றான் அஜய்.

“பாரு” என்று திரும்ப வாய்க்கு வேலை கொடுத்தாள்.

சென்னை வந்தடைந்துவிட்டனர். முதலில் தாரணி PG சென்று எல்லாம் முடித்து, அஜய் PGக்கு சென்றனர். அடுத்து குடும்பமாக மால், பீச் என்று சுத்தினர்.

இரவு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினர். ஆண்கள் ஒரு அறையிலும், பெண்கள் ஒரு அறையிலுமாக. மறுநாள் கிளம்பி கோவில் சென்று, உணவு முடித்து அங்கிருந்து புது அலுவலகம் சென்றனர்.

தாரணி, அஜய் இருவரும் முதல் நாள் வேலையில் சேர, அங்கு அவர்களுக்கு முன் கல்யாண் நின்றிருந்தான்.

நண்பர்கள் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ள, அவனோ இருவரையும் பார்த்து கண் சிமிட்டி சிரித்தான்.

“ஜீவி சொல்லியிருப்பாளா?” தாரணி அதிர்ச்சி விலகாமல் கேட்க,

“இருக்காது தாரு” என்றான் அஜய்.

அலுவலக நடைமுறை முடித்து வெளியே வர, “நீங்க இரண்டு பேரும் அப்படி எல்லாம் என்கிட்ட இருந்து தப்பிச்சிட முடியாது” என்று கல்யாண் வந்தான்.

“நானுமா?” அஜய் புருவம் தூக்கி கேட்க, கல்யாண் சிரித்துவிட்டான்.

“எங்க தங்கியிருக்க?” என்று கேட்க,

“PG” என்று சொன்னான் அஜய்.

“என்னோட தங்கிக்கலாமே” கல்யாண் கேட்க,

“வா அஜய் போலாம்” என்று நண்பன் கை பிடித்திழுத்து கொண்டு வந்துவிட்டாள் தாரணி.

“இனி இப்படி பண்ணாத தாரணி. நார்மலா இருக்க பழகு” அஜய் அறிவுரை சொல்ல,

“சீனியர்” என்று கல்யாணை பார்த்த திகைப்பில்  ஜீவிதா அவனிடம் செல்ல,

“யாரும்மா” என்று பலராம் மகளுடன் வந்தார்.

“ஹாய் சார். நான் கல்யாண். ஜீவிதாவோட சீனியர்” என்று மரியாதையாக அறிமுகம் செய்து கொண்டான்.

“எஸ் எஸ் சொல்லியிருக்கா. எக்ஸாம் டைம்ல நீங்க தான் அவளுக்கு கைட் பண்ணீங்க இல்லை, நன்றிபா. நீங்களும் இங்க தான் ஜாயின் பண்ணியிருக்கீங்களா?” என்று விசாரிக்க,

“ஆமா சார்” என்றான் கல்யாண், அங்கு  வந்த கல்பனாவிடமும், “ஹாய் மேடம்” என்று அறிமுகம் செய்து கொண்டான்.

சில பொதுவான பேச்சுக்கள் முடிய, “வாங்களேன் எங்களோட லஞ்ச் சாப்பிட்டு போலாம்” என்றழைத்தார் பலராம்.

தாரணியை ஓரக்கண்ணால் பார்த்து சிரித்தவன், “இன்னொரு நாள் ஜாயின் பண்ணிக்கிறேன் சார். தேங்க்ஸ்” என்று விடைபெற்று கொண்டான்.

ஜீவிதா முகம் கசங்கி போய் நின்றாள். சரியாக சாப்பிடவும் இல்லை. அக்கா, அஜயை பிரியும் நேரம் நெருங்க நெருங்க, கண்ணீர் தானே வழிந்தது.

“ஷ்ஷ் ஜீவி” என்று அஜய் அவள் கை பிடித்து தட்டி கொடுக்க,

“நீங்க எல்லாம் ஒண்ணா இருக்கீங்க. நான் மட்டும் தனி. என்னை தனியா விட்டுடீங்க. நானும் உங்களோட இங்கேயே இருக்கேன். ப்பா. காலேஜ் மாத்துங்க ப்ளீஸ்ப்பா, ப்ளீஸ். நான் அக்கா, அஜுவோட தான் இருப்பேன்” என்று ஆரம்பித்துவிட்டாள்.

வீட்டினருக்கு அவளை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிப்போனது.

தாரணியை கட்டி பிடித்து கொண்டு நகர மாட்டேன் என்று அடம். “அப்பாகிட்ட சொல்லுக்கா. நான் இனி உன்கிட்ட சண்டை போடவே மாட்டேன்” என்று கெஞ்ச, தாரணிக்கும் அழுகை வந்துவிட்டது.

“என்னடி இப்படி பண்ற” என்று அவளை அணைத்து கண்ணீர் துடைத்துவிட்டாள்.

“அவ இதுதான் சேன்ஸ்ன்னு சென்னையில ஜாயின் பண்ண பிளான் பண்றா, நீ அது தெரியாம அவளோட சேர்ந்து அழுதுட்டு இருக்க?” அஜய் சொல்ல,

“இல்லை இல்லை இது உண்மையிலே பாசம். எனக்கு உங்களோட இருக்கணும்” என்றாள்  ஜீவிதா கண்ணீருடன்.

“நீ கேடி. நான் நம்பமாட்டேன். உனக்கு எங்கமேல பாசமா? இது யாராவது ஏமாந்தவங்க இருப்பாங்க பாரு அவங்ககிட்ட போய் சொல்லு. போ” என்றான் அஜய்.

ஜீவிதாவிற்கு கோவம் வந்துவிட்டது. “நீ ரொம்ப மோசம் அஜு. உன் ப்ரெண்ட் என்னை என்னென்ன சொல்றான், கேட்டுட்டு சும்மா இருக்க இல்லை. நீ நல்ல அக்காவே இல்லை. இனி  உங்களுக்காக நான் அழவே மாட்டேன். உங்க தொல்லை இல்லாம நிம்மதியா இருக்க போறேன். ம்மா வாங்க நாம ஊருக்கு கிளம்பலாம்” என்று வேகமாக காருக்கு சென்றுவிட்டாள்.

“என்ன அஜய்” என்று தாரணி தங்கை பின் போக, அவளின் கை பிடித்து நிறுத்திவிட்டான் அஜய். “அவ இப்படியே கோவமா கூட ஊருக்கு போகட்டும். அழ வேண்டாம்” என்றான்.

பெற்றவர்களுக்கும் பெரிய மகளை பிரிவதில் வருத்தமே. நண்பர்களுக்கு ஆயிரம் பத்திரம், அறிவுரை சொல்லி, தேவையானதை வாங்கி கொடுத்து,  அவரவர் இடத்தில் விட்டு ஜீவிதாவுடன் ஊருக்கு கிளம்பினர்.

Advertisement