Advertisement

முதல் நாள் பற்றி பலராம் சின்னவளிடம் கேட்க, “ஓகே தான்ப்பா” என்று முடித்து கொண்டாள் மகள்.

அவள் சென்னை, கோயம்பத்தூர் என்று பிளான் போட, தந்தை பெரிய மகளுக்கு போட்ட பிளானையே இவளுக்கும் போட்டுவிட்டார். இங்கேயே பிடித்து வைத்து கொண்டார்.

முன்பு ஜீவிதா நண்பர்களிடம் சொன்ன போது அவர்கள் சிரித்ததிற்கான காரணம் இப்போது விளங்கியது.

“எல்லாம் மோசம். உங்க தோஸ்து கூட எனக்கு சப்போர்ட் பண்ணல தெரியுமா அத்தை” என்று சகுந்தலாவிற்கு போன் செய்து திட்டி மனதை ஆற்றி கொண்டாள்.

அன்றிரவு குடும்பமாக  உணவு முடித்து தூங்க சென்றனர். ஜீவிதா அவளின் போனை ஆன் செய்யவே இல்லை.

“உன் போன் ஆன் பண்ணு ஜீவி” தாரணி சொல்ல,

“முடியாது” என்றாள் தங்கை.

“சரி இந்தா அஜய் பேசணும்ன்னு சொன்னான் பாரு” என்று போனை கொடுத்து, கல்பனா அழைக்க அவரிடம் சென்றாள்.

ஜீவிதா அடித்து ஓய்ந்த போனை எடுக்கவே இல்லை. காலையில விஷ் பண்ண கூப்பிடவே இல்லை. இப்போ திட்ட மட்டும் எத்தனை முறை கூப்பிடுறான் பாரு? நகம் கடித்து கொண்டாள்.

திரும்ப திரும்ப வர, எடுத்துவிட்டாள். “ஹேய் ஆட்டக்காரி. எவ்வளவு நேரம் கூப்பிடுறது?” அஜய் கேட்க, சின்னவள் பதிலே சொல்லவில்லை.

“பர்ஸ்ட் டே காலேஜ் எப்படி போச்சு?”

“ப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்களா? ஸ்கூல் ப்ரெண்ட் யாரும் இருக்காங்களா?”

“ஜீவிதா உன்கிட்ட தான் கேட்கிறேன்” குரலில் அழுத்தம் அமர்ந்து கொள்ள,

“ஓகே தான்” என்றாள்.

“போக போக செட் ஆகிடும். அப்புறம் இன்னைக்கு உன்கிட்ட பேசின சீனியர்ஸ்கிட்ட பேச்சு வைச்சுக்காத” என்றான்.

“ஏன்.. ஏன் பேச கூடாது. அவங்க என் டிபார்ட்மென்ட் சீனியர்ஸ். நான் பேசவேன்”

“ஜீவிதா. வேண்டாம்ன்னு சொன்னா  கேட்டுக்கணும்”

“ரீசன் சொல்லு”

எதிர்புறம் பதில் இல்லை.

“சொல்லுங்க” என்றாள் சின்னவள் திருத்தி.

“எத்தனை வருஷம் சொன்னாலும், கொட்டினாலும் கேட்க மாட்ட இல்லை”

“அப்படி என்கிட்ட மரியாதையை வாங்கி  வைச்சுக்கிட்டு என்ன பண்ண போறீங்க? எப்போ பாரு அதையே சொல்றீங்க?”

“நான் என்னவும் பண்றேன். நீ நான் சொல்றதை முதல்ல கேளு. அவங்களோட பெருசா வைச்சுக்காத”

“முடியாது. எனக்கு விஷ் கூட பண்ணல. இதுக்கு மட்டும் வருவீங்களா?”

“ச்சு. ஆட்டமா ஆடாத ஜீவிதா. பொறுமையா நான் சொல்லி முடிக்கிற வரைக்கும் கேளு. என்னை இரிடேட் பண்ணாத”

சின்னவள் போனை வைத்து, வீடியோ காலில் அவனை அழைத்தாள், அப்படியென்ன கோவம் என்பதுடன், அவனை பார்க்கவும் நினைத்தாள்.

அஜய் எடுத்துவிட்டவன்,  ஸ்கீரினில் அவளை பார்த்து மேலும் டென்ஷன் ஆகிவிட்டான். “இந்த ஆட்டக்காரியோட என் உயிர் போகுது” கடுப்பாக முணுமுணுக்க,

“என்ன சொன்னீங்க?” என்று கேட்டாள் சின்னவள்.

“தாரணி எங்க?” என்று ஸ்கீரினில் அவளை தேடினான் அஜய்.

“ஏன் என்கிட்ட பேச மாட்டிங்களா?” சின்னவள் முகம் சுருங்கி போனது.

“ஷஷப்பா” அஜய் தலையை இறுக்கமாக கோதி கொண்டவன், “ஜீவிதா நல்ல பிள்ளை தானே?” என்றான் பொறுமையாக.

ஜீவிதா தலையாட்ட, “நான் இப்போ ஆடியோ கால் வருவேனாம். நீ சமத்தா எடுத்து பேசணும் சரியா?” என்றான்.

“இப்படியே பேசு அஜு. உன்னை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு” சின்னவள் கேட்க,

தாரணி வந்துவிட்டாள். “தாரு” என்றான் அஜய் ஆசுவாசத்துடன்.

“என்ன அஜய்” என்று ஸ்கீரினில் வந்தவள், தங்கை கையில் இருந்த போனை சட்டென வாங்கி கொண்டாள்.

அஜய், “நான் ஆடியோ கால் வரேன்” என்று வைத்துவிட்டான்.

“இப்போ எதுக்கு போனை பிடுங்கின?” தங்கை கேட்க,

“முதல்ல உன்னை பாருடி” என்றாள் தங்கை தோளில் அடித்து.

ஜீவிதா தன்னை குனிந்து பார்த்தவள், அதிர்ந்து கலங்கி போனாள். அவளின் எப்போதுமான இரவு உடையான ஸ்லீவ்லெஸ் பிராக்கில் இருந்தாள்.

விரசமாக தெரியவில்லை என்றாலும்,  சரியாகவும் இல்லை. “சாரிக்கா” என்று பதறி போனாள்.

“லூசு. ஒன்னுமில்லை. விடு” தாரணி தோளோடு அவளை அணைத்து கொள்ள, அஜய் போன் வந்தது.

“நான் பேசலை” என்றாள் சின்னவள்.

“ஜீவி. இதென்ன. பேசுடி” என்று ஆன் செய்து அவளின் காதில் வைத்தாள்.

“ஜீவிதா” என்றழைத்தான் அஜய்.

“ம்ம்”

“அவங்க உன் சீனியர்ஸ் தான். ஆனா கொஞ்சம் சரியில்லை. கல்யாண் பேக்கிரவுண்ட் சொல்லிக்கிறபடி இல்லை. அவங்க அப்பா கட்ட பஞ்சாயத்து. கூட நம்ம தாரணிக்கு கொஞ்சம் டென்ஷன் கொடுக்கிறான்”

“அக்காக்கா. என்னக்கா, அஜு என்னமோ சொல்றாங்க” ஜீவிதா பதட்டத்துடன் கேட்டாள்.

“ஒன்னுமில்லை ஜீவிதா. நீ டென்ஷன் ஆகாத. கண்ட்ரோல்ல தான் இருக்கு. அவன் உன்கிட்ட பேசுறதே தாரணிக்காக தான். அதான் சொல்றோம் அவன்கிட்ட டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுன்னு. புரியுது தானே”

“ம்ம். நான் இனி அவங்களோட பேசலை”

“ஒரேடியா பேசாம இருக்க முடியாது. ஆனா அளவா வைச்சுக்கோ. உன் மூலமா தாரணிகிட்ட மூவ் ஆக கூடாது பார்த்துக்கோ” என்றான்.

ஜீவிதா, “சரி” என்றவள், நொடி சென்று, “சாரி” என்றாள்.

அஜய்க்கு புரிந்தது. “உன் அத்தை பேசணும்ன்னு கேட்டுட்டு இருக்காங்க பாரு” என்று சகுந்தலாவிடம் சென்று கொடுத்தான்.

அவர் முதல் நாள் காலேஜ் பத்தி கேட்க, பேசி வைத்தாள் சின்னவள்.

“என்கிட்ட நீ சொல்லவே இல்லை. என்ன நடக்குது?” என்று அக்காவிடம் விசாரணை ஆரம்பித்தாள்.

“நீ சின்ன பிள்ளை, ஆர்வ கோளாறு. உன்கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு அஜய் சொன்னான்” என்று தாரணி சொல்லிவிட, ஜீவிதா உர்ரென்று முகம் வைத்தாள்.

“ME சேர்ந்த முதல் நாள்ல இருந்து தொல்லை. வெளியே வைச்சு எங்கேயோ என்னை பார்த்தாங்களாம். எனக்காக தான் MEயும் சேர்ந்தேன்னு வந்து நின்னாங்க”

“தினமும் கண்ணுல பட்டுட்டே இருப்பாங்க. கிப்ட் எல்லாம் வரும். திரும்ப அனுப்பிடுவேன். அப்பாக்கு, மேனேஜ்மேண்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்ன்னு பயமா இருக்கும். சொல்லி சொல்லி பார்த்து, அஜய் தான் கடைசில பேசினான்”

“அவளுக்கு பிடிக்கலை. டிஸ்டர்பா பீல் பண்றா? அவளை ப்ரீயா படிக்க விடுங்கன்னு  பேசினான். அதிசயமா கேட்டுட்டாங்க”

“அப்புறம் என்ன பிரச்சனை?”

“உனக்கு புரியலை ஜீவி. அவங்க தள்ளி நின்னாலும் கண்ல படாம இல்லை. தொந்தரவு பண்ண மாட்டேன். ஆனா விடவும் மாட்டேங்கிற மாதிரி அவங்க ஆட்டிடியூட் இருக்கும்”

“உனக்கு அவங்களை புரியுதே? எப்படி” தங்கை குழப்பமாக கேட்டாள்.

“என்ன புரியுது? நான் தானே. என்னை தான் அவங்க இப்படி பண்றாங்க. அதான் புரியுது போல” என்று தாரணி பேச்சை முடித்து கொண்டு  பெட்டில் படுத்துவிட்டாள்.

ஜீவிதாவிற்கு குழப்பம் தீரவில்லை. அக்காவை பார்த்து கொண்டே படுக்கைக்கு சென்றாள். மறுநாள் கல்லூரி செல்ல, கல்யாண் எதிரில் நின்றான்.

“ஹாய் மேடம்” என்றான் சிரித்த முகமாக.

“ஹாய் சீனியர்” என்ற சின்னவளுக்கு வார்த்தைகள் நேற்று போல சகஜமாக வரவில்லை.

‘சொல்லிட்டாங்க போல’ கண்டுகொண்டவன், “அது வேற. இது வேற. நீ என்னோட ஜுனியர். கூட குட்டி தங்கச்சி. ம்ஹூம் தங்கச்சி சொல்ல முடியாது. ஆனா தங்கச்சி மாதிரி வைச்சுக்கோ சரியா. என்கிட்ட ப்ரீயா இரு. என்ன” என்றான்.

ஜீவிதா  எல்லா பக்கமும் தலையாட்டினாள்.

‘எல்லாம் என்னை குழப்புறாங்கய்யா’

“இந்தா சாக்லேட்” என்று நீட்ட,

“வேண்டாம்” என்றாள்.

கல்யாண் முகம் கசங்கி போனது. “என்னை பார்த்தா ரொம்ப மோசமா தெரியுதா?” என்று கேட்க,

“இல்லை இல்லை ஆனா வேண்டாம்”

“அஜய், தாரணி சொன்னா வாங்கிப்பியா?”

“அவங்க ஏன் சொல்லணும்?” என்று கேட்டாள் சின்னவள்.

“அவங்க சொல்லி தானே நீ வாங்கலை?”

“அவங்க சொன்னது வேற. ஆனா நான் வாங்காதது வேற. நேத்து வெல்கம்ன்னு  கொடுத்தீங்க.  இப்போ எனக்கு மட்டும் ஏன் ஸ்பெஷலா கொடுக்கணும்? அக்கா அதுல இல்லாம இருக்க முடியாது. அதான் வேண்டாம்” என்றாள் தெளிவாக.

உன்னை வைச்சு தாரணியை அவன் நெருங்க கூடாது என்று அஜய் சொன்னது பெண் மனதில் அழுத்தமாக பதிந்து போனது.

கல்யாண்க்கு மேற்கொண்டு பேச முடியவில்லை, தாரணி வைத்து தானே அவன் ஜீவிதாவிடம் பேசுவது?  சாக்லெட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டான்.

“தேங்க்ஸ் சீனியர்” மெல்லிய புன்னகையுடன் சின்னவள் விலகி சென்றுவிட்டாள்.

கல்யாண் மனது பாரமாக அங்கேயே நின்றுவிட்டான். எப்படியும் அவனால் தாரணியை  நெருங்க முடியவில்லை. அவ்வளவு பிடிக்கும். ஆனா வெளிப்படுத்த வழியில்லை.

“அப்படி என்ன பண்ணிடுவேன் நான்?” கோவமும் இல்லாமல் இல்லை.

அஜய் மேல் கொஞ்சம் அதிகமே. அவன் உள்ள வராம இருந்திருந்தா எப்படியும் அவளை என்னை லவ் பண்ண வைச்சிருப்பேன்.

‘இப்போ தூரம் போயும் குறுக்க நிக்கிறான். நேர்ல போய் நின்னுடலாமா? என்னை விட சின்ன பையன். ச்சு போ’ தவிப்புடன் தலை கோதி சென்றான்.

Advertisement