Advertisement

நதியின் ஜதி ஒன்றே! 4

இன்று தான் ஜீவிதாவிற்கு முதல் நாள் கல்லூரி. தாரணியின் கல்லூரியில் தான் சேர்ந்திருந்தாள். வேறு வேறு துறை.

பெற்றவர்களிடம்  வாழ்த்து வாங்கி  கொண்டு அக்காவுடன் கல்லூரிக்கு கிளம்பினாள். பலராம் சின்னவளுக்கும் போன் வாங்கி கொடுத்திருக்க, அடிக்கடி எடுத்து பார்த்தாள்.

அஜய் அழைக்கவே இல்லை.  கல்லூரி பேருந்து வந்துவிட்டால் மொபைல் எடுக்க முடியாது. “உன் ப்ரெண்ட்க்கு என்னை விஷ் பண்ண கூட முடியாதாக்கா?” என்று தாரணியிடம் கோவமாக கேட்டாள்.

“ஜீவி. அவனுக்கென்ன சூழ்நிலையோ? அங்கிள்க்கு ஹாஸ்பிடல், வீடுன்னு அலைஞ்சுட்டு இருக்காங்க. இன்னைக்கு தான் அவனுக்கும் முதல் நாள் காலேஜ். எப்படி இருக்கோ?” என்று தாரணி நண்பனுக்காக கவலைபட்டாள்.

ஆம். சங்கருக்கு இதயத்தில் பிளாக் இருப்பது கண்டறிய பட்டிருந்தது. பலராம்க்கு அவரை பார்த்து விட்டு வந்ததில் இருந்து மனது கேட்கவில்லை.

இதில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று உறுத்தி கொண்டே இருக்க, மனைவி மூலம் சகுந்தலாவிடம் சொல்லி விட்டார்.

அஜய், சகுந்தலா விஷயம் அறிந்து தாமதிக்கவே இல்லை. மறுநாளே சங்கரை அழைத்து கொண்டு மருத்துவனை சென்றுவிட்டனர்.

முன்பே சங்கருக்கு உடல் நிலை வைத்து சந்தேகம் இருந்தது. அதனால பெரிதாக அதிர்ந்துவிடவில்லை. அம்மா, மகனின் உலகம் தான் நின்றது போலானது.

கல்பனாவிற்கு போன் செய்து அப்படி ஒரு அழுகை. மருத்துவம் வளர்ந்துவிட்டது. காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையை எல்லாம் கொடுத்தனர்.

உறவுகளும் விஷயம் கேள்விப்பட்டு துணைக்கு நின்றனர். அதில் சங்கருக்கு அளவில்லா நிம்மதி.

“இருபது வருஷத்துக்கு மேல வேலைன்னு சொந்தங்களை விட்டு தள்ளி நின்னுட்டேன். எங்க எனக்கடுத்து என் பிள்ளைக்கு யாரும் இல்லாம போயிடுவாங்களோன்னு பயமா இருந்துச்சு சகு. இப்போ தான் நிம்மதியா இருக்கு” என்றார் மனைவியிடம்.

“இதுக்காக தான் வேலையை விட்டிங்களா?” சகுந்தலா கேட்க,

“எல்லாம் தான். ஒரு புருஷனா, அப்பாவா நான் என்னோட கடமையை சரியா செய்யணும் இல்லை. நான் வேலையில் இருக்கிற வரைக்கும் தான் அரியலூர் வீட்ல நம்மால  இருக்க முடியும். அங்க இருக்கிறவங்க உனக்கு துணை நிக்க முடியும். வேலை இல்லன்னா யோசிச்சு பாரு”

“இங்க நம்ம ஊர்லயும் வேலைன்னு இருபது வருஷம் தள்ளி நின்னாச்சு. லீவுக்கு விருந்தாளி மாதிரி வந்து போறதோட சரி. இவங்ககிட்ட நாம என்ன பெருசா எதிர்பார்த்திட முடியும்?”

“அங்க ஒரு கால், இங்க ஒரு கால்ன்னு நடு ஆத்துல நிலையில்லாம நிக்கிறோம்”

“அதான்  வேலை போனா போகுதுன்னு சொந்த ஊர், மண்ணு மக்கள்கிட்ட வந்தாச்சு.  நமக்கு பணத்துக்கு பிரச்னையில்லை. எப்படி இருந்தாலும் பையன் வேலைக்கு போனதுக்கு அப்புறம் ஊரோட வந்திடுறதா தான் நினைச்சிட்டு இருந்தோம். இப்போ கொஞ்சம் முன்னாடி வந்துட்டோம். அவ்வளவு தான்” என்றார்.

சகுந்தலாவிற்கும் கணவன் சொல்வது புரிந்து கொள்ள முடிந்தது. தங்களுக்கு அடுத்து ஒற்றை மகனுக்கு கடமைக்காவது பங்காளிங்க வந்து நிற்பார்களே. போதும் தானே?  ஏற்று கொண்டார்.

சங்கருக்கு சிகிச்சைகள் சென்று கொண்டிருந்தது. பலராம் குடும்பத்துடன்  இடையில் சென்று பார்த்து வந்தார்.

ஜீவிதாவிற்கு ஓரளவு எல்லாம் தெரியும் என்றாலும், சிறு வருத்தமே.

“இருந்தாலும் எனக்கு காலேஜ் பர்ஸ்ட் டே விஷ் பண்ணியிருக்கலாம்” என்று அக்காவிடம்  முகம் வாட சொன்னவள், பேருந்து வரவும் மொபைலை அணைத்து பைக்குள் வைத்துவிட்டாள்.

சீனியர் மாணவர்கள் கேட்டில் நின்று ஜுனியர்களை வரவேற்க, “உன் டிபார்ட்மென்ட் அந்த பக்கம்” என்று அக்கா கை காட்டினாள்.

“ஏன் நீ என்கூட வர மாட்டியா? வா” என்று நின்றாள் தங்கை.

“அங்க நான் வரல. நீ போ” என்று நடந்துவிட, ஜீவிதாவிற்கு முகம் வாடி போனது.

“ஹாய் மேடம்” என்றொரு குரல்.

யாரென  பார்க்க, பளிச்சென சிரித்து வெள்ளை ரோஜாவை நீட்டியவன், “வெல்கம்” என்றான்.

ஜீவிதா பார்த்தே நிற்க, “நாங்க எல்லாம் உன் சீனியர்ஸ்”  என்றான் மற்றவன். ஆண், பெண் கலந்து நின்றிருந்தார்கள்.

சுற்றி பார்க்க மற்றவர்களுக்கும் ரோஜா கொடுத்து கொண்டிருக்க, ஜீவிதாவும் “நன்றி சீனியர்” என்று வாங்கி கொண்டாள்.

“கல்யாண்” என்றான் ரோஜா கொடுத்தவன்.

“ஜீவிதா” என்று பெண் சொல்ல, கை நீட்டினான்.

ஜீவிதா கை குலுக்க, சாக்லேட் கொடுத்தான். அவளுக்கு பிடித்த சாக்லேட். அழுத மனதிற்கு வேண்டும் போல இருக்க வாங்கி கொண்டாள்.

“பர்ஸ்ட் டே பயமா?” கல்யாண் கனிவாக கேட்க,

“ஆமாம்” என்று தலையாட்டினாள்.

“நான் ME செகண்ட் இயர். எந்த ஹெல்ப் ஆனாலும் என்கிட்ட கேளு சரியா” என்றான்.

ஜீவிதா தலையாட்ட, “ஜீவி” என்று வந்தாள் தாரணி.

தங்கையின் வாடிய  முகத்தில் மனம் கேட்காமல் வந்திருந்தவளுக்கு இப்போது கோவமே.  “கிளாஸ்க்கு போகாம இங்க என்ன பண்ற?” என்று தங்கையிடம் மெல்லிய குரலில் கடிந்தாள்.

“சீனியர்ஸ் வெல்கம் பண்ணிட்டிருந்தாங்க” ஜீவிதா சொல்ல,

“போதும் கிளாஸ்க்கு போ” என்றாள் அக்கா.

“நீ தான் என்கூட வர மாட்டேன்னு சொல்லி தனியே அனுப்பின இல்லை. போ?” என்றாள் தங்கை.

“இதெல்லாம் ஈவ்னிங் பேசிக்கலாம். இப்போ  கிளாசுக்கு போடி” அக்கா அதட்ட,

“என்ன மேடம் எங்க ஜுனியரை மிரட்டுறீங்க?” என்று கேட்டான் கல்யாண். அவன் முகத்தில் அவ்வளவு குறும்பு.

“அவ என் தங்கச்சி” தாரணி எங்கோ பார்த்து சொல்ல,

“அது வீட்ல. இங்க எங்க ஜுனியர் தான். கிளாஸ்க்கு லேட்டா போயிக்கலாம். நீ இரு ஜீவிதா” என்றான் கல்யாண்.

“ஜீவி. இவங்களோட பேசினா அஜய்க்கு பிடிக்காது. கிளம்பு. போ” அஜய் வைத்து சொன்னால் தங்கை கேட்பாள் என்று நினைக்க,

ஜீவிதாவிற்கோ கோவம் உச்சிக்கு ஏறிவிட்டது. “அவனுக்கு பிடிக்கலைன்னா எனக்கென்ன. நான் பேசுவேன். உன் ப்ரெண்ட் உன்னோட. எனக்கு ஒன்னும் இல்லை போ” என்று வெடித்தாள் தங்கை.

“அப்படி சொல்லு ஜீவிதா. யாரு இந்த அஜய் முதல்ல? பெரிய பருப்பு அவன். இப்போ அவன் இந்த காலேஜே கிடையாது தெரியுமில்லை” ஒருவன் கிண்டலாக சிரித்து கேட்க,

“நீங்க எதுக்கு அஜு பத்தி பேசுறீங்க” என்று தாரணி வாய் திறக்கும் முன் ஜீவிதா சண்டைக்கு கிளம்பிவிட்டாள்.

“பருப்பு எல்லாம் சொல்றீங்க. அஜு இந்த காலேஜ் இல்லன்னா நீங்க எதுக்கு அவரை பேசுறீங்க?”

“ஜீவி விடு” தாரணி சொல்ல,

“உன் ப்ரெண்டை பேசுறாங்க. என்னை விடு சொல்ற?” அக்காவிடம் பாய்ந்தாள் தங்கை.

“ஹேய் ஹேய் ரிலாக்ஸ் பொண்ணே” என்ற கல்யாண், “டேய் நீ மூடிட்டு நில்லு” என்று பேசியவனை அடக்கினான்.

தாரணி ஆயாசத்துடன் தலையாட்டி கொண்டவள், “இப்போவாவது கிளாஸ்க்கு போவியா?” என்று தங்கையிடம் கேட்டாள்.

“போறேன்” என்ற ஜீவிதா பேசியவனை முறைத்து கொண்டே சென்றாள்.

தாரணி அவள் துறை பக்கம் செல்ல, “இந்த ரோஜாவை வாங்கிட்டு போக சொல்லுடா” என்று கல்யாண் குரல் கொடுத்தான்.

தாரணி திரும்பாமலே செல்ல, “உன் பாடு கஷ்டம் தாண்டா மாப்ள” என்றான் நண்பன்.

“அந்த அஜய் இங்க இருந்தாலும் இல்லைனாலும் உனக்கு அவன் தான் வில்லன்”

“தெரியும்” என்ற கல்யாண் முகத்தில் கொள்ளை சிரிப்பே.

மாலை அக்கா, தங்கை இருவரும் வீட்டிற்கு வர, தாரணி தன் போனுடன் மொட்டை மாடிக்கு சென்றாள்.

“என்னை பத்தி வத்தி வைக்க தான் போவா. எனக்கு பேசட்டும். அப்பறம் இருக்கு” மனதில் கருவி கொண்டாள் சின்னவள்.

அதற்கேற்றது போல, “அவகிட்ட எல்லாம் சொல்ல வேண்டாம் அஜய். எனக்கு பயமா இருக்கு. அப்பாகிட்ட உளறிட்டா நான் காலி” என்று அஜயிடம் சொல்லி கொண்டிருந்தாள் தாரணி.

“நாம பக்குவமா சொல்லுவோம் தாரு. நீ டென்ஷன் ஆகாத. அவளோட பாதுகாப்பும் நாம பார்க்கணும் இல்லை” என்றான் அஜய்.

“ஏன் அவளுக்கென்ன பாதுகாப்பு. என்னை பயமுறுத்தாத அஜய்”

“பின்ன நீ இந்த வருஷம் முடிச்சுட்டு வந்திடுவ. ஜீவிதா அங்க தொடர்ந்து படிக்கணுமே. ஒரே ஏரியா வேற”

“நீ சொல்றது சரிதான். ஆனா இன்னைக்கு காலேஜ்ல கூட அவ என்ன பண்ணான்னு சொன்னேன் இல்லை. அவங்க முன்னாடியே உன்னை, என்னை பேசி அவங்ககிட்டேயும் சண்டைக்கு போறா? எனக்கு தான் டென்ஷன் ஆகிடுச்சு”

“தாரு பர்ஸ்ட் இயர் இப்போதான் போற. வளர்ந்திடுவா. நீ விடு நான் பேசிக்கிறேன்” என்றான் அஜய்.

Advertisement