Advertisement

நதியின் ஜதி ஒன்றே! 3

சங்கர் குடும்பம் ஊருக்கு கிளம்பி விட்டிருந்தார்கள்!

கல்பனாவிற்கு கணவன் எப்போது வீடு திரும்புவார்  என்றிருந்தது. முக்கியமான மீட்டிங் என்று ஹெட் ஆபிஸ் சென்றிருக்கிறார் மனிதர்.

போனில் இது பற்றி பெரிதாக பேச முடியவில்லை. “நான் நேர்ல வந்து பேசுறேன்” என்று முடித்து கொண்டார் பலராம்.

இரண்டு நாட்கள் சென்று பலராம் வந்தார். “ப்பா” என்று சின்னவள் தான் முதலில் அப்பாவிடம் ஓடினாள்.

“சகுந்தலா அத்தை, அஜு எல்லாம் ஊருக்கு போயிட்டாங்கப்பா” என்று உதடு பிதுக்கிய அழுகையுடன் சொன்னாள்.

“அழாத ஜீவி, என்ன செய்றதுன்னு பார்க்கலாம் இரு” என்றார் தந்தை சோர்வாக.

“நீங்க தான் அஜு  அப்பா ப்ரோமோஷனை நிறுத்தி வைச்சிருக்கிறதா சொல்றாங்க. அப்படி இல்லை தானேப்பா?” ஜீவிதா படபடப்பாக கேட்டாள்.

“சின்னவங்க நீங்க, நான் பார்த்துகிறேன். விடுங்க” என்றார் பலராம்.

“எனக்கு சொல்லலாம் இல்லை என்ன நடக்குதுன்னு” என்று கல்பனா கேட்டார்.

“முதல்ல என்னை ரெஸ்ட் எடுக்க விடுங்க. நாளைக்கு காலையில நான் சங்கர் சார் ஊருக்கு போறேன்” என்று அறைக்கு சென்றுவிட்டார்.

கல்பனா கணவன் குளித்து வரவும் உணவு கொடுத்து தூங்க கதவு மூடி வந்தார். “ம்மா.. நாமளும்  அப்பாவோட போலாம்” என்று ஜீவிதா ஆரம்பித்தாள்.

“அப்பா என்ன சொல்வார்ன்னு தெரியலையே” கல்பனாவிற்கும் ஆசை தான்.

“நீங்க கேளுங்க. அப்பா ஒத்துப்பார். ப்ளீஸ்ம்மா. ப்ளீஸ்” தாரணி நச்சு செய்தாள்.

ஜீவிதா ஒரு படி மேல் சென்று உடை எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்துவிட்டாள். “ஜீவி அப்படியே போறதா இருந்தாலும் தங்க எல்லாம் வாய்ப்பிருக்காதுடி” கல்பனா சொல்ல,

“இருக்கட்டும். பரவாயில்லை” என்று அலாரம் வைத்தவள், சீக்கிரமே தூங்க ஓடிவிட்டாள்.

தாரணி முகம் மலர்ந்து போனது. நண்பனை பார்க்க செல்வதில் அவ்வளவு ஆனந்தம். பிறந்ததில் இருந்து உடன் இருந்தவனை இந்த ஓரிரு நாட்களிலே மிகவும் மிஸ் செய்துவிட்டாள்.

எதுவாக இருந்தாலும் ஒன்றாக தான் செய்வார்கள். மற்றவரை பற்றிய புரிதல் அதிகம். இருவருக்கும் ஆண், பெண்ணாக பல நண்பர்கள் இருந்தாலும் மற்றவர் ஸ்பெஷல் தான்.

அவன் இல்லாமல் கல்லூரி செல்லவும் பிடிக்கவில்லை. ஒரு வருடம் மட்டுமே பல்லை கடித்து முடித்துவிட வேண்டும். அதன் பின் ஒன்றாக தான் வேலைக்கு செல்ல வேண்டும்.

கல்பனா போன் செய்து சகுந்தலாவிடம் பேசினார். நாளை வர வாய்ப்பிருக்கு என்பது போல குறிப்பு கொடுத்து வைத்தார்.

மறுநாள் பலராம் கிளம்பி வர, அவருக்கு முன் பெண்கள் லக்கேஜுடன் தயாராக இருந்தனர். “நீங்க எங்க கிளம்பிட்டீங்க?” அவர் புரியாமல் கேட்க,

“உங்களோட தான்ப்பா” என்றாள் ஜீவிதா ஷோல்டர் பேக்கை மாட்டி கொண்டு.

“நீங்களும் என்னோட வரீங்களா? நான் எப்போ உங்களை கூட்டிட்டு போறதா சொன்னேன்” பலராம் கேட்க, பெண்கள் “ப்ளீஸ், ப்ளீஸ்” என்றனர்.

பலராம்க்கு இவர்கள் நிற்பது போல் தெரியவில்லை. “டிபன் மட்டுமாவது கொடுங்க” என,

“அதெல்லாம் வெளியே பார்த்துக்கலாம்ப்பா. லேட் ஆகிடும்” என்று ஜீவிதா காருக்கு ஓடிவிட்டாள்.

“என்னை செய்யவே விடலைங்க” என்றார் கல்பனா சலித்து.

“கிளம்புங்க. வேறென்ன பண்ண”

“தேங்க்ஸ்ப்பா” தாரணி அப்பா கை பிடித்து காருக்கு சென்றாள்.

சங்கரின் சொந்த ஊர் கடலூர். வழியில் உணவு முடித்து, பின் காலை போல அவர்கள் கிராமம் சென்றுவிட்டனர்.

வீடு தெரியாததால் அஜய் பைக் எடுத்து வந்தான். ஜீவிதா அவனை பார்க்கவும் காரில் இருந்து இறங்கி அவனிடம் ஓடிவிட்டாள்.

“நான் அஜு கூட போறேன்” என்று பைக்கிலும் ஏற வர,

“ஜீவிதா  காருக்கு போ” என்றான் அவன் கண்டிப்புடன்.

சின்னவளுக்கு முகம் சுருங்கி போனது. “ஏன் நான் உன்னோட வந்தா என்ன?” என்று சட்டென கோவமும் கொண்டு சண்டைக்கு நின்றாள்.

“எத்தனை முறை மரியாதை சொல்லி கொடுத்தாலும் வராது இல்லை. காருக்கு போ” என்று பைக் எடுத்துவிட்டான்.

“ஜீவி. வா” என்று தாரணி அவளை அழைத்து சென்றாள்.

“உன் ப்ரெண்ட் ரொம்ப பண்றான். நாம அவனுக்காக தானே வந்தோம். என்னை பைக்ல கூட்டிட்டு போனா என்ன?” என்று அக்காவிடம் கேட்டாள்.

“ஜீவிதா. முதல்ல நீ பண்ணது தப்பு. அவங்க ஊர் இது. இங்க எப்படி நடந்துக்கணும்ன்னு அஜய்க்கு தான் தெரியும். நீ அமைதியா இரு” என்று தந்தை அறிவுறை சொல்ல, வாய் மூடி கொண்டாள்.

சங்கர் வீட்டின் முன் கார் நிறுத்தி இறங்கினர். இவர்களை வரவேற்க தம்பதியாக வாசலிலே நின்றிருந்தனர். “அத்தை” என்று சகுந்தலாவிடம் ஓடினாள் ஜீவிதா.

“வாங்க சார். வாங்கமா” என்று சங்கர் இவர்களை முறையாக வரவேற்று வீட்டுக்குள் அழைத்து சென்றார்கள்.

எல்லாம் இருக்கையில் அமர அஜய், தாரணி இருவரும் கீழே பக்கத்தில் அமர்ந்தனர். “நீ இல்லாம நல்லாவே இல்லை அஜய்” தாரணி புலம்பினாள்.

அஜய்க்கு புது காலேஜ் எப்படி இருக்கும், என்ன செய்ய போகிறான் என்று கவலை தான். தோழியிடம் அதை சொல்ல, “முதல்ல கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் செட் ஆகிடும் அஜய். ஒரு வருஷம் தானே. ஓடிடும்” என்று தாரணி தன்னை விடுத்து நண்பனுக்கு தைரியம் சொன்னாள்.

“திரும்ப கல்யாண் உனக்கு தொந்தரவு ஏதும் கொடுக்கிறானா? நான் சொல்லிட்டு தான் வந்தேன்” என்று தாரணியிடம் ரகசியமாக கேட்டான்.

“காலேஜ் போனா தான் தெரியும் அஜய்”

“போன் பண்றது இல்லை தானே”

“இல்லை அஜய்”

“குட். ஏதாவது பண்ணா என்கிட்ட சொல்லு, வரேன் நான்” என்றான் அஜய்.

“உன்கிட்ட தான் சொல்வேன். நீ வந்து தான் ஆகணும்” தாரணிக்கு தொண்டை கட்டிவிட்டது.

“ஏய் லூசு. இப்போ என்ன? விடு” என்று அஜய் தோழி கை பிடித்து தட்டி கொடுத்தான்.

பார்த்திருந்த ஜீவிக்கு உள்ளும் புறமும் அப்படி ஒரு எரிச்சல். என்னை பைக்ல ஏத்திக்க மாட்டேன் சொன்னதும் இல்லாமல், என்னை கண்டுக்கவும் இல்லை. போடா என்று கழுத்தை திருப்பி கொண்டாள்.

சகுந்தலா எல்லோருக்கும் இளநீர் கொடுக்க, “ஏன் சார் அவசரப்பட்டு ரிசைன் பண்ணிட்டீங்க?” என்று பலராம் மனத்தாங்கலுடன் கேட்டார்.

சின்னவர்கள் பேச்சை நிறுத்தினர். சங்கர் மௌனம் காக்க, “நான் உங்க ப்ரோமோஷன் நிறுத்தி வைச்சிருக்கிறதா இவங்க என்கிட்ட கேட்கிறாங்க. நீங்க என்னை அப்படி நினைச்சீங்களா சார்” என்றும் கேட்டார்.

 “HR GM நீங்க தான் ஹோல்டுல வைச்சிருக்கிறதா என் GM கை காமிச்சார் சார். நீங்க ஊர்ல இல்லை. நான் உங்க டிபார்ட்மெண்ட்ல கேட்டேன். அப்படி தான் பதில் வந்துச்சு. அதை வீட்ல சொன்னேன். ஆனா வேலையை விட அது காரணம் இல்லை சார்” என்றார் சங்கர்.

பலராமும், மற்றவர்களும் கேள்வியாக பார்த்தனர். சகுந்தலா, அஜய் உட்பட. இதுவரை சங்கர் எதையும் மனம் திறந்து பேசியிருக்கவில்லை.

“வேலையை விட போறேன். நாம ஊருக்கு போயிடலாம்” என்று மனைவி, மகனுக்கு சொன்னார். அவர்கள் திகைக்க, “நமக்காக தான் இந்த முடிவு. பணத்துக்கு பிரச்சனை இல்லை” என்றார்.

ஏதோ போலவே இருந்த மனிதரை இவர்களும் கவனித்திருக்க, சரி என்று ஏற்று கொண்டனர். அஜய் காலேஜ்க்கு இவரின் பங்காளி MP மூலம் பேசி மாற்றி கொண்டார்.

இப்போது பலராம் கேட்கவும் வாய் திறந்தார் மனிதர். “என் டிபார்ட்மென்ட்ல நிறைய பாலிடிக்ஸ் சார். GM கூட டிபியூட்டி மேனேஜர் கை கோர்த்துக்கிட்டான்.  டீலர்ஸ்கிட்ட பணம் கை மாறுற மாதிரி இருக்கு. என்னை உள்ள இழுத்துவிட பிளான் பண்ணாங்க. அதை இல்லைன்னு என்னால நிரூபிக்க முடியும்ன்னாலும், எனக்கு அதுல விருப்பம் இல்லை. அமைதியா வெளியே வந்திடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்” என்றார்.

பலராம், “நான் ஹெட் ஆபிஸ்க்கு போனதே அது பத்தி பேச தான் சார். ஆனா நான் சொல்றதுக்கு முன்னாடியே அவங்க இதை ஸ்மெல் பண்ணிட்டிருந்தாங்க.  ரகசியமா விசாரணை போயிட்டிருக்கு. நீங்க அவசரப்படாம இருந்திருந்தா அடுத்த GM நீங்க தான்” என்றார்.

சங்கர் மௌனம் காத்தார். வேறேதும் இருக்குமோ? மனைவி, மகனுக்கு தோன்றியது. பலராமும் அப்படி தான் நினைத்தார்.

மதிய உணவுக்கு சகுந்தலாவுடன் கல்பனாவும் இணைந்து கொள்ள, அஜய் அக்கா, தங்கையை முந்திரி காட்டுக்கு அழைத்து சென்றான்.

“முந்திரி இப்படி தான் வருமா அஜு” கண்களை விரித்து பார்த்து அங்கும் இங்கும் ஓடினாள் ஜீவிதா.

அஜய் சிரித்தபடி அவர்களுக்கு எல்லாம் சொன்னான். சங்கரும், பலராமும் இவர்கள் பின்னால் வந்துவிட்டவர்கள் தனியே நின்றனர். “வீட்ல இதுபத்தி நான் பேசல சார்” என்று சங்கர் ஆரம்பித்தார்.

“என்னமோ கொஞ்ச நாளா உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குது. ப்ரெஷர் தான் இப்படி இருக்குமோன்னு நிறைய யோசனை. மாஸ்டர் செக் அப் பண்ண அடுத்த வாரம் போறேன். சொன்னா அம்மாவும், மகனும் பயந்திடுவாங்கன்னு சொல்லலை சார்” என்றார் சங்கர்.

“என்ன பண்னுது? கொஞ்சம் வித்தியாசம் தெரிஞ்சாலும் உடனே செக் அப் பண்ணிடுறது நல்லது சார். நாள் தள்ளி போட வேண்டாமே” என்றார் பலராம் அக்கறையாக.

“இப்போ தான் ஊருக்கு வந்திருக்கோம். அப்பா, அம்மா இல்லாம பங்காளிங்க பொறுப்புல வீடு, தோப்பு எல்லாம் விட்டிருந்தோம். பக்குவமா அதை எல்லாம் திரும்ப வாங்கிட்டிருக்கேன் சார். செட்டில் ஆனதும் ஹாஸ்பிடல் போயிடுறேன்”

“இல்லை சார். நீங்க இப்போவே  என்னோட வாங்க. நாம போய் சைலென்ட்டா பார்த்துட்டு வந்திடலாம்” பலராம் வற்புறுத்தலாக சொன்னார்.

“நான் பேசி வைச்சுட்டேன் சார். காலையிலே எடுக்கிற டெஸ்ட் எல்லாம் இருக்கே. சீக்கிரம் போயிடுறேன்”

“லேட் பண்ணாதீங்க” பலராம் சொல்ல,

“ப்பா” என்று ஜீவிதா ஓடி வந்தாள்.

“முந்திரி பழம்ப்பா” என்று அப்பாவிடம் கொடுத்து, அஜய் அவளுக்கு சொன்ன தகவல்களை எல்லாம் பகிர்ந்து கொண்டாள்.

“வெளியே போடுறதுக்கு நீங்களே சொந்தமா பிராண்ட் பண்ணிடலாமே  சார்” பலராம் கேட்க.

“அஜய் சொல்லிட்டிருக்கான் சார். பார்ப்போம்” என்றார் சங்கர்.

சகுந்தலா உணவுக்கு போன் செய்துவிட, எல்லாம் வீட்டிக்கு சென்றனர். தலைவாழை இலையில் விருந்து வைத்தார். எல்லாம் உண்டு முடிக்க, கல்பனா, சகுந்தலா அமர்ந்தனர்.

“உன்கிட்ட நல்ல படியா சொல்லிக்க முடியல கல்பனா. நானே அடுத்த வாரம் வர நினைச்சேன். நீங்களே வந்திட்டீங்க” என்றார் சகுந்தலா.

“இவர் கொஞ்ச நாளா எப்படியோ இருக்கவும், எதையும் யோசிக்க முடியல. அஜய்க்கு வேற காலேஜ் மாறுறது பிடிக்கலை. ஆனா இவருக்காக ஒத்துக்கிட்டு, அதுக்கு அலைச்சல் வேற. உங்களை எல்லாம் விட்டுட்டு  வந்தது வருத்தம்ன்னாலும், இவர் முகம் தெளிஞ்சதுல நிம்மதி தான்” என்றார்.

“அவருக்கு அங்க ஏதோ செட் ஆகலை. இல்லைன்னா இருபது வருஷத்துக்கு மேலா வேலை பார்த்த கம்பெனியை விட்டுட்டு  ஊருக்கு வருவாரா? நமக்கு என்ன போன் இருக்கு, பார்க்க நினைச்சா கார் இருக்கு. நீ முதல்ல அண்ணனை கவனி சகு” என்றார் கல்பனா.

“நீ புரிஞ்சுப்பன்னு தெரியும் கல்பனா. ஜீவி குட்டி தான் ஒரே அழுகை. சமாளிச்சுகிட்டாளா?”

“போக போக தான் சரியாவாங்க. ஜீவிதாவாவது வெளியே சொல்றா, தாரணி ரொம்பவே அஜயை மிஸ் பண்றா”

“பிறந்ததுல இருந்து கூடவே இருந்துட்டாங்க இல்லை. சரியாகிடும்” பெண்கள் தங்களுக்குள் பேசி கொண்டே உணவை முடித்தனர்.

நாள் சென்றதே தெரியாமல் மாலை வந்துவிட பலராம் குடும்பம் கிளம்ப தயாரானது. தாரணி முகம் வாடிவிட, ஜீவிதா உதடு பிதுக்க ஆரம்பித்தாள்.

“மூச். அழாம கிளம்பணும்” அஜய் சொல்ல,

“நீ சொல்லாத. நான் ஒன்னும் உனக்காக அழலை. அத்தையை விட்டு போக தான் அழுறேன்” என்றாள் சின்னவள் ரோஷமாக.

அஜய் பின் தலையில் ஒன்று வைத்தவன், “அங்கிருந்து கிளம்பும் போது தான் அவ்வளவு அழுகை. இப்போவும் அழுகை வருமா உனக்கு” என்றான்.

“நான் அப்படி தான் அழுவேன். நீ என்னை அடுத்து என்ன பண்ண போறேன்னு கேட்கவே இல்லை” என்றாள்.

அஜய் நெற்றியை நீவி விட்டு கொண்டான், அவனின் பிரச்சனையில் இவளை நினைக்கவில்லை அவன். சொன்னால் ஆடுவாள் என்பதால், “இப்போ சொல்லு என்ன பண்ண போற?” என்று கேட்டான்.

“சொல்ல மாட்டேன். நீ கேட்கலைன்னு நான் ஒன்னும் காத்திட்டிருக்கலை”

“அப்புறம் எதுக்குடி அவன் கேட்கலைன்னு சண்டை போட்ட?” கல்பனா சிரிப்புடன் கேட்டார்.

“அக்காக்கு மட்டும் எல்லா விஷயத்துலையும் கைட் பண்றாங்க. என்னை கண்டுக்கவே இல்லை”

“எக்ஸாம் அப்போ அஜய் தான் உனக்கு சப்போர்ட் பண்ணான்” தாரணி நண்பனுக்காக பேச,

“அதை நீ சொல்லாத. உனக்கு உன் ப்ரெண்ட் உசத்தின்னு உன்னோட. போ”

“ஹேய் ஆட்டக்காரி எதுக்கு எல்லார்கிட்டயும் சண்டைக்கு நிக்கிற. என்ன படிக்கணும்ன்னு எதாவது யோசிக்கவாவது செஞ்சியா இல்லையா?” அஜய் அதட்டி கேட்டான்.

“எஞ்சியனிரிங் படிக்க போறேன்” என்றாள் ஜம்பமாக.

“வேணாம் ஜீவிதா. வேற எதாவது பார்க்கலாம்”

“ஏன் நீங்க மட்டும் படிக்கிறீங்க. நானும் அது தான் படிப்பேன்”

“சொன்னா கேளு ஜீவிதா. நிறைய போட்டி. வேலைக்காக போராடனும் போல” அஜய் சொல்ல,

“பரவாயில்லை. நானும் உங்க இரண்டு பேரை போல எஞ்சியனிரிங் தான் படிப்பேன்” உறுதியாக நின்றாள் சின்னவள்.

அஜய் சொல்லி சொல்லி பார்த்தவன் கடுப்பாகி, “என்னவோ பண்ணி தொலை போ” என்றுவிட்டான்.

சின்னவளுக்கு கண்கள் கலங்கி போனதுடன் ரோஷமும் பொத்து கொண்டது. வேகமாக காருக்கு சென்றுவிட்டாள்.

“ஜீவிதா அத்தைகிட்ட சொல்லிக்கோ, இறங்கு முதல்ல. இதென்ன பழக்கம்” என்று கல்பனா திட்ட,

“என்னாச்சு” என்று தனியே பேசி கொண்டிருந்த சங்கரும், பலராமும் வந்தனர்.

“விடுங்க அத்தை” என்ற அஜய், அவர்களுக்கு எடுத்து போக விளைச்சல் பொருட்களை காரில் ஏற்றினான்.

விடைபெற, சகுந்தலா காரில் இருந்த ஜீவிதா தலையை வருடிவிட்டார். அதன்பின்னே சின்னவள் இறங்கி பெரியவர்களுக்கு சொல்லி கொண்டாள்.

சங்கருக்கு அன்று ஜீவிதாவை வாசலில் வைத்து பேசியது நினைவிலே இல்லை. உடல் என்னமோ செய்த நேரம் அது. ஜீவிதாவிற்கும் அதெல்லாம் இப்போது நினைவிலே இல்லை.

“போன் பண்றேன் அஜய்” என்று தாரணி காரில் ஏற, ஜீவிதா அவன் பக்கமே திரும்பவில்லை.

“முன்ன பக்கத்தில இருந்தோம். சண்டை போட்ட, இப்போவோவும் இப்படியே பண்ணுவியா ஜீவி. ஒழுங்கா அஜய்க்கு சொல்லிட்டு வா. போ” என்று தாரணி சொல்ல,

“முடியாது” என்று அடமாக அவனை பார்க்காமலே கிளம்பினாள்.

ஊரை கடக்க, கண்ணீரை துடைத்தும் கொண்டாள். தாரணிக்கு மட்டுமில்லை ஜீவிதாவிற்கும் அப்பாவிற்கு அடுத்து ஆண் துணை, வழி நடத்தியது எல்லாம் அஜய் தான்.

இப்போது அவன் அவளை பற்றியே கேட்காமல் இருந்தது கொள்ளை வருத்தமே. குழப்பத்தில் இருந்தவள் அவனின் கைடன்ஸை எதிர்பார்த்து வந்தாள்.

அஜய் பைக்கில் ஏற்றாததில் ஆரம்பித்து, அவளின் மேற்படிப்பு பற்றியும் அவன் அக்கறை கொள்ளவில்லை என்பது சின்னவளுக்கு பெரிய அடியே.

‘அப்போ தாரணிக்கு மட்டும் தான் எல்லாம் செய்வாங்க. அவ தான் அவருக்கு ப்ரெண்ட். நான் யாருமே இல்லை. போ. பரவாயில்லை’ என்று ஏமாற்றத்தை தனக்குள் அடக்கி கொண்டாள்.

Advertisement