Advertisement

கல்பனாவின் கண்ணீரை நிறுத்தும் பொருட்டு, ஜீவிதா அந்த வருடம் பெரிய பெண்ணாகி இருந்தாள்.

விடுமுறை நாளிலே நிகழ்ந்துவிட, ஜீவிதாவிற்கு முதலில் அப்படி ஒரு அழுகை. தாரணி தான் முழு நேரமும் தங்கை உடன் இருந்து அவளை சமாளித்தாள்.

ஊரில் இருந்து உறவுகள் ஒவ்வொருவராக வந்தனர். சகுந்தலா தினமும் எதாவது செய்து கொண்டு வருவார். அங்கே இருக்கும் ஹாலில் சிறிய அளவில் பங்க்ஷனும் வைத்தனர்.

அஜய் கமினியூட்டி நண்பர்களுடன் சென்று உணவு மட்டும் உண்டு வந்தான். ஜீவிதாவிற்கு அவர்கள் தன்னை பார்க்க  வாரததில் ஒரு மாதிரி உணர்ந்தாள்.

அவளின் பாட்டி, அத்தைகள் வேறு அறிவுரை மழை பொழிந்து அவளை படுத்திவிட்டனர். இனி குனிந்து தான் நடக்க வேண்டும். ஆண்களிடம் பேச கூடாது. அவர்கள் அருகில் அமர கூடாது. உன் அப்பா மடியில் உட்காருறதை எல்லாம் விட்டுடணும் என்று ஆயிரம் கட்டுப்பாடு. தாத்தா தான் அவர்களை அதட்டி செல்ல பேத்தியை காப்பாற்றி விட்டார்.

பலராமும் மகள் தலையை தடவி விடுவதோடு சரி. முன் போல இல்லை. ஜீவிதாவிற்கு இந்த வேற்றுமையை ஏற்று கொள்ளவே முடியவில்லை.

அன்றிரவு அக்காவுடன் மொட்டை மாடிக்கு வந்துவிட்டவள், மடியில் படுத்து கொண்டாள். “பெரிய பெண்ணாவே ஆகியிருக்க வேண்டாம்க்கா” என்றாள்.

தாரணி இதை எல்லாம் கடந்து வந்தவள் தானே. தங்கைக்கு சமாதானம் சொல்ல, “உன் ப்ரெண்ட், என் ப்ரெண்ட்ஸ்ன்னு யாரும் என்கிட்ட பேசவே இல்லை” என்றாள் குறையாக.

“நீ ஸ்கூல் போக ஆரம்பிச்சா பேசுவாங்க ஜீவி” என, ஜீவிதா அடுத்த நாள் உற்சாகத்துடனே பள்ளிக்கு சென்றாள்.

ஆனால் ஏமாற்றம் தான். மாணவர்கள் கொஞ்சம் தள்ளி நிற்க, ஜீவிதா நடைமுறையை ஏற்று கொள்ள முயன்றாள். ஆனாலும் முடியாமல், அன்று வேனில் வைத்து அங்கும் இங்கும் செல்ல, அஜய் கண்டித்தானே தவிர, அவளை அடிக்கவில்லை.

“பெரிய பெண்ணாகியும் அமைதியா இருக்க மாட்டேங்கிறியே பாப்பா” என்று அட்டண்டர் அக்கா உட்கார வைத்து அறிவுரை சொன்னது தான் மிச்சம்.

“போங்கடா நீங்களும் உங்க பெரிய பொண்ணும்” என்று தன்னை குறுக்கி கொண்டாள். வீட்டில் வைத்து தாராணியுடன் மல்லு காட்டுவதோடு சரி.

அதிலும் சத்தம் உயர்ந்துவிட்டால், கல்பனா அடி வைத்துவிடுவார். பலராம் மகளுக்கு ஏற்று கொண்டு எல்லாம் வருவதில்லை. பாசத்தில் குறை இல்லை என்றாலும், இயல்பு அங்கு தொலைந்துவிட்டது.

அந்த வருட பிறந்தநாளில்  சகுந்தலா குடும்பத்திற்கு  கேக் எடுத்து சென்றாள் ஜீவிதா. படித்து கொண்டிருந்த அஜய் அவள் கை பிடித்து குலுக்க, “என்னை தொட்டுட்டீங்க அஜு. தப்பு தானே?” என்று கேட்டு வந்தாள் சின்னவள்.

அஜய் ஒரு நொடி அதிர்ந்து தான் போனான். சிறு பெண் மாற்றங்களை ஏற்க திணறுகிறாள் என்று உடன் இருந்த தாரணி மேலோட்டமாக அவளின் மனநிலையை சொன்னாள்.

அஜய்க்கு புரிய விட்டுவிட்டான்.  பனிரெண்டாவதில் நல்ல மார்க் எடுக்க வேண்டும் என்ற அழுத்தம் அவர்களுக்கு அதிகமாக இருந்தது. ஜீவிதா கணிதத்திற்கு டியூஷன் வைத்து கொண்டாள்.

பொது தேர்வு அன்று ஜீவிதா இருவருக்கும் ‘பென்’ பரிசாக கொடுத்தாள். அஜய் அவள் தலை பிடித்து ஆட்டிவிட்டு சென்றான். நல்ல முறையில் பள்ளி படிப்பை பெரியவர்கள் முடித்தனர்.

ரிசல்ட்டும் வந்துவிட்டது. இன்ஜினீயரிங் படிக்க வேண்டும் என்ற ஆசையில் இருவரும் நல்ல மதிப்பெண்களே எடுத்திருந்தனர்.

சென்னை, கோயம்பத்தூர் போன்ற கல்லூரிகளுக்கு செல்ல இளையவர்கள் ஆசைப்பட, பெற்றவர்களோ பக்கத்திலே சேர்த்துவிட்டனர்.

“உன்னை விட்டு அம்மா எப்படி இருப்பேன் கண்ணு” என்று சகுந்தலா மகனை தன்னுடன் நிறுத்தி கொள்ள, “பொம்பிளை பிள்ளையை தனியா எல்லாம் அனுப்ப முடியாது” என்று பலராம் மகளை நிறுத்தி கொண்டார்.

“உங்களுக்கு சண்டை போட தெரியல. நான் எல்லாம் காலேஜ்க்கு சென்னை தான்” என்று ஜீவிதா சொல்ல, நண்பர்கள் சிரித்தனர்.

ஜீவிதா பத்தாவதில் நல்ல மதிப்பெண் எடுத்து முதல் குரூப் எடுத்தாள்.

இரு வருடங்கள் செல்ல, பலராம் ஜெனரல் மேனேஜராக பதவி உயர்வு பெற்று, தனி குடியிருப்புக்கு மாறினார். சங்கரின் பதவி உயர்வு நிறுத்தி வைக்க பட்டிருந்தது.

இத்தனை வருடங்கள் உடன் இருந்துவிட்டு பிரிவதில் பெண்களுக்கு ஏகப்பட்ட வருத்தம். ஒரே காம்பவுண்ட் என்பதில் மனதை தேற்றி கொண்டனர்.

அஜய், தாரணி இருவரும் கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்க, ஜீவிதா பனிரெண்டாம் வகுப்பில் இருந்தாள்.

சரியாக அவளின் இறுதி தேர்வு நேரம் ஜீவிதாவின் தாத்தா தவறிவிட்டார்.  வீட்டினர் அடுத்து என்ன செய்ய என்று முழித்தனர்.

சகுந்தலா தான் நிலைமை புரிந்து, “ஜீவிதாவை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார்.

 ஏற்கனவே மூன்று தேர்வுகள் முடிந்திருக்க, அடுத்து கணிதம். ஜீவிதா திணறவே செய்தாள். டியூஷன் சென்று வந்தாலும், தாத்தா பாசத்தில் படிப்பில் கவனம் குறைந்தது.

கடைசி கடமையை மட்டும் முடித்து வந்திருக்க, ஒரே அழுகை. சகுந்தலா அவளை தேற்ற, “போதும் ஜீவிதா. நாளைக்கு எக்ஸாம் வைச்சுக்கிட்டு இதென்ன? எழுந்திரு முதல்ல” அஜய் ஒரு அதட்டல் இட்டான்.

“பாவம் அஜய். பொறுமையா சொல்லு” என்று சகுந்தலா சொல்ல,

“அவளுக்கு பதில் எக்ஸாம் நீங்க எழுதுறீங்களா?” என்று அம்மாவிடம் கேட்டவன், “அஞ்சு நிமிஷத்துல புக்கோட ஹாலுக்கு வந்திருக்கணும்” என்றான்.

ஜீவிதா “முடியாது போ” என்றாள் கொஞ்சம் கோவம் கலந்த அழுகையுடன்.

“எழுந்திரு முதல்ல” என்று படுத்திருந்தவளின் முழங்கை பிடித்து எழுப்பி விட்டான்.

ஜீவிதா திரும்ப படுக்க போக, விடாமல்  இழுத்து சென்றவன் ரெஸ்ட் ரூமில் விட்டான்.

“இரண்டு டீ கொண்டு வாங்கம்மா” என்றவன், அதன் பின் அவளை விடவே இல்லை. விடிய விடிய படிக்க வைத்தான். பிளாஸ்கில் காபி வைத்துவிட்டு, சகுந்தலா ஹாலிலே படுத்து கொண்டார்.

“மூணு மணி ஆகிடுச்சு. தூங்க விடு அஜு” கெஞ்சவே செய்தாள் ஜீவிதா.

“அதுக்கு நீ ஒழுங்கா படிச்சிருக்கணும். இந்த போர்ஷன் மட்டும் படி. நாலு மணிக்கு தூங்க விடுறேன்” என்றான் கண்டிப்புடன்.

‘எனக்காக தானே இந்த கண்டிப்பு’ என்ற எண்ணத்தில் ஜீவிதா அதிகம் முரண்டு பிடிக்கவில்லை.

வருடம் முழுதும் படித்திருக்க, கடைசி நேர ரிவிஷன் மட்டுமே நடந்தது. சொன்னது போல நான்கு மணிக்கு தூங்கவிட்டு, ஏழு மணிக்கு எழுப்பிவிட்டான்.

குளித்து சாப்பிட, அஜய் வேனை மறுத்து பைக்கில் அவளை பள்ளிக்கு அழைத்து சென்றான். எக்ஸாம் முடித்து வந்தவளை பிக்கப் செய்த அஜய் அவள் பதிலில்  திருப்தி கொண்டான்.

அடுத்தடுத்த எக்ஸாமும் அப்படியே. கல்பனா குடும்பம் வர முடியவில்லை. ஜீவிதா தேர்வு முடிந்து ஊருக்கு கிளம்பிவிட்டாள்.

தாரணிக்கு செமஸ்டர் இருக்க,  அவள் மட்டும் பலராமுடன் வீடு வந்தாள். சில நாட்கள் கழித்து தான் கல்பனா, ஜீவிதா வீடு திரும்பினர்.

அதற்குள் இங்கு சில விரும்பாதகாத மாற்றங்கள் நிகழ்ந்திருந்தது. சகுந்தலாவை சந்திக்க கல்பனவால் முடியவில்லை.

கல்பனாவிற்கு ஒன்றும் புரியவில்லை. இதற்கு முன்னும் இருவருக்கும் இடையில் வேறுபாடுகள் வந்திருந்தது தான். ஆனால் இந்த முறை காரணமே தெரியாமல் கல்பனா திகைத்தார்.

ஜீவிதாவிற்கு அங்கு ரிசல்ட். கொஞ்சம் அச்சமே. இஷ்ட தெய்வத்திடம் விழுந்து விழுந்து வேண்டி கொண்டாள். பயத்தில் அஜய்க்கு போன் செய்தாள். அவன் எடுக்காததும் கூடுதல் டென்சன்.

வேண்டுதல் வீண் போகவில்லை. ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்ணே எடுத்திருந்தாள். சந்தோஷத்தில் குதித்தாள். கல்பனா செய்திருந்த பாயசத்தை எடுத்து கொண்டு அஜயை பார்க்க ஓடினாள்.

சங்கர் தான் கதவை திறந்தார். “என்ன” என்றார் வாசலிலே வைத்து.

சின்னவளுக்கு முகம் சுருங்கி போனது. “ரிசல்ட் வந்திடுச்சு அங்கிள்” என்று மதிப்பெண் சொன்னாள்.

“குட்” என்றதோடு  நிறுத்தி கொள்ள, “அத்தை” என்றாள்.

“அவ கோவிலுக்கு போயிருக்கா” என்றார் அவர்.

“அஜு” என்று கேட்டாள்.

“அவனும் தான்” என, அங்கு மேலும் நிற்க முடியாமல் வந்தவளுக்கு கண்ணீர் தானே வழிந்தது.

ஒரு மாதிரி அவமதிப்பாக உணர்ந்ததோடு, அஜய் சகுந்தலாவிடம் மகிழ்ச்சியை பகிந்து கொள்ளாதது அழுகையை தந்தது.

வீட்டிற்கு வந்தவள் மாறி மாறி இருவருக்கும் அழைத்தாள். முன் மாலை போல அம்மாவும், மகனும் வீடு வர, கல்பனா வீட்டினருக்கு ஆனந்தம்.

ஜீவிதா வேகமாக சென்று சகுந்தலா கை பிடித்து மதிப்பெண் சொன்னவள், அஜய் கையையும் பிடித்து கொண்டாள்.

கல்பனா இருவருக்கும் பாயசம் கொடுக்க, “ஏன் அஜய் காலேஜ்க்கு வரலை. போனும் எடுக்க மாட்டேங்கிற” என்று தாரணி நண்பனிடம் கோவமாக கேட்டாள்.

அஜய் மௌனம் காக்க, “அவன் காலேஜ் மாற  போறான்” என்றார் சகுந்தலா.

அதிர்ந்து போனார்கள். ஜீவிதா அவன் கையை கெட்டியாக பிடித்து கொண்டாள். “என்னாச்சு சகு. ஏன் காலேஜ் மாறணும்? என்ன நடக்குது?” கல்பனா கேட்க,

சகுந்தலா பெருமூச்சுடன், “இவங்க அப்பா ஊருக்கே போலாம்ன்னு முடிவெடுத்துட்டார்” என்றார்.

காரணத்தை விடாமல் கேட்க, “உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு இருந்தேன். ஆனா சொல்லாம முடியல” என்ற சகுந்தலா,

“இவருக்கு வர ப்ரோமோஷனை ஜீவிதா அப்பா தான் நிறுத்தி வைச்சிருக்கிறதா சொல்றாங்க. அதான் இவர் எனக்கு அப்படி ஒரு வேலையே வேண்டாம்ன்னு இந்த முடிவு எடுத்திட்டார். வேலையும் விட்டுட்டார். இந்த வாரம் மொத்தமா ஊருக்கு  கிளம்பனும்” என்றார்.

கல்பனா குடும்பத்திற்கு பெரிய அதிர்ச்சி, “பலராம் இப்படியா?” என்று பெண்கள் நம்ப மறுத்தனர்.

ஆனாலும் சகுந்தலா சொல்வதால் வாயடைத்து போனார்கள்.

Advertisement