ஈசனுக்கு, கிருபாவிற்கு அடிபட்டதும்.. அங்கே கூடி வந்த எல்லோரையும் பார்த்தவன் அதிர்ந்து போனான். என்ன இது.. லேசான சுளுக்கு.. அதுக்கு தாத்தா முதற்கொண்டு அருகில் அமர்ந்துக் கொண்டு.. பேசுவதும்.. பணிவிடை செய்வதும் என பார்த்தவன் கொஞ்சம் பொறாமை கொண்டான் எனலாம்.
ஒருமாதிரி மனம் பாரமாக இருந்தது இரவு முழுவதும். என்னமோ எங்களை தாங்க யாருமே இல்லையோ என யோசனை. என்னமோ, அவளுக்கு என்றால்.. எல்லோரும் பார்க்கிறார்கள் என எண்ணிக் கொண்டே வேலையை செய்தான். ஈசனுக்கு இந்த உறவுகளின் இணக்கம் பொறாமையை கொடுக்கிறது. அவனால், இந்த குடும்பத்தில் கலக்க முடியவில்லை. ஆனாலும், இதெல்லாம் வேண்டும் என தோன்றுகிறது.
ஈசன், காலையில் சீக்கிரம் எழுந்துக் கொண்டான். தங்கைக்கு அழைத்து பேசிக் கொண்டிருந்தான்.
இரண்டு நாட்கள் சென்று சஹா விடுமுறை என ஊர் வந்தாள், அவளின் அண்ணன் வர சொல்லி இருந்தான். ஈசன், தங்கையை வர சொல்லிவிட்டு.. அவன் சென்னை கிளம்பினான்.
சங்கர் கூட “சஹாவிற்கு அலைச்சல் ப்பா. நீ போய்ட்டு வா, இங்கதான் எல்லோரும் இருக்காங்களே” என்றார்.
ஈசன் “இருக்கட்டும் ப்பா, எங்களுக்கும் பொறுப்பு இருக்கனுமில்ல” என்றான்.
சங்கர் ஏதும் பேசவில்லை.. மகன் என்ன நினைக்கிறான் என தெரியவில்லை. ஒரே அறையில்தான் இருக்கிறோம். ஆனாலும் முன்போல அவன் பேசுவதில்லை. இரவில் எழும்போது எப்போதும் அவன் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.. உறங்குகிறானா தெரியவில்லை. மனதில் இருப்பதையும் சொல்லவில்லை.. என யோசனை ஓடிக் கொண்டே இருந்தது. ஏதும் பேச முடியவில்லை.
ஈசன் இரவு சென்னை கிளம்பினான்.. எல்லோரும் ஏன் என்றனர். “இல்ல.. வீட்டை நான் பார்க்கவேயில்லை. தேவையான திங்க்ஸ் எடுத்து வரணும்.. அப்படியே கார் எடுத்துட்டு வரேன்.” என்றான்.
தாத்தா “சரி ப்பா” என்றுவிட்டார். மனதில் தாத்தாவிற்கு ஒரு எண்ணம்.. பேரன் கேஸ் வாபஸ் வாங்க செல்லுகிறான் என. அதனால், கொஞ்சம் நிம்மதியாக இருந்தார். பெரிய மகனோ போன் செய்யும் போதெல்லாம் தந்தையை கேள்வியால் துளைத்தெடுத்தான். எனவே, எல்லாம் நல்லபடியாக நடக்கும் என எண்ணம்.
தாத்தா “நம்ம டிரைவரை பஸ் ஸ்டாப்பில் ட்ரோப் பண்ண சொல்றேன்” என்றார்.
அடுத்த இரண்டு நாளும் கிருபா வீட்டில் இருந்தாள். தாத்தா சனிக்கிழமை கடைக்கு, தான் செல்லுவதாக சொல்லி, சென்றுவிட்டார். எனவே, கிருபாவும் சஹாவும் வெளியே கிளம்பி சென்றனர். அந்தநாள் கோவில்.. சிற்றுண்டி உணவகம்.. துணி எடுக்க என இருவரும் சந்தோஷமாக சுற்றினார்.
ஞாயிற்று கிழமை காலையில்..
தாத்தா பாட்டி இருவரும் எதோ பேசிக் கொண்டிருந்தனர். கோகிலாவும் பேச்சில் கலந்துக் கொண்டாள். ‘கிருபாவிற்கு ஒரு வரன் வந்திருக்கிறது. அவர்களுக்கு ஜாதகம் பொருந்தி இருக்கிறதாம். ஆனால், பையன் வெளிநாட்டில் இருக்கிறாராம். அவர்கள் நாளை எதோ திருமணத்திற்கு வருகிறார்களாம். கிருபாவை பார்க்கனும்ன்னு சொல்றாங்க..’ என அவர்களுக்குள் பேச்சு காலையில் எழுந்தது. சங்கர் வீட்டில் உடல் நலமில்லாமல் இருப்பதால் சற்று கிருபாவின் விஷயத்தை தள்ளி வைத்திருந்தனர். இப்போது இவர்கள் வருகிறோம் எனவும் என்ன செய்வது என தெரியாமல் விழித்தனர்.
திங்கள் காலையில் ஈசன் ஊருக்கு வந்துவிட்டான். அன்று வீடே காலையில் பரபரப்பாக இருந்தது. பாட்டியும் தந்தையும் பட்டாசலையில் அமர்ந்திருக்கவும்.. அப்படியே சற்று நேரம் அமர்ந்தான் ஈசன்.
ஈசன் பதில் சொன்னான். அவளும் காஃபி குடிக்கிறீயா என்றாள்.
ஈசன் “இல்ல ப்ரெஷ்ஷாகி வரேன்..” என சொல்லி எழுந்து உள்ளே சென்றான்.
‘எங்க அந்த தியாகி எப்போதும் பரபரப்பாக சுற்றும். இன்னிக்கு எங்க காணோம்.. எங்க போயிட்டா இவ..’ என மனதில் ஒரு எண்ணம் எழுந்தது. அது கிண்டலாகவே எழுந்தது. எதையும் காட்டிக் கொள்ளாமல் தன் வேலையை பார்க்க சென்றுவிட்டான்.
சண்முகத்திடம் காலையில்தான் விஷயத்தை சொன்னார் அருணாசலம். சண்டையிட்டார் ‘இப்போதான் சொல்றீங்க. நான் அன்றே சொன்னேன்.. வெளிநாடு வரனும் பார்க்கலாம்ன்னு. இன்னும் என்ன யோசனை. எல்லாம் சரியாதாகதான் இருக்கும்.’ என்றார்.
பின் ஷண்முகம் தம்பி பற்றி பேசினார் ‘எல்லோரும், அவனை ஏனோ இப்படி தாங்குறீங்க. என்கிட்டே அம்மா கூட போன் பேசலை. அந்த அளவுக்கு அவன் முக்கியமா போயிட்டான்’ என தங்கையிடம் சண்டையிட்டார். கோகிலா ‘இல்ல அண்ணா, நீ கோவமா இருப்பேன்னு யாரும் பேசலை. அவ்வளவுதான். இரு அம்மாவை கூப்பிடுறேன்’ என சொல்லி உடனே அழைப்பை அம்மாவிடம் கொடுத்தார், கோகிலா.
சண்முகம் இந்த நேரத்திலும் தங்கையிடம் “எங்க க்கேஸ் வாபஸ் வாங்கிட்டானா” என்றார்.
கோகிலாவிற்கு என்ன தெரியும் “அண்ணா, நீ விடு. நம்ம வீட்டு பையன் அண்ணா.. இப்போ எல்லாம் சரியாகிடுவான்” என்றார். ஈசனை பற்றி ஏதும் தெரியாமல்.
சங்கர் பட்டாசலையில் இருப்பதால்.. தாத்தாவின் அறையில் பேச்சுகள் நடந்தது போனில்.
காலையில், கிருபா பூஜை முடித்து வந்தாள்.
அப்போதுதான் ஈசனும் காபி குடித்து முடித்து.. பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் வந்ததை ஓரகண்ணால் பார்த்தான்.. ‘தியாகி வந்துட்டாங்க’ என எண்ணிக் கொண்டான்.
கிருபா ஈசனை பார்த்ததும் “எப்போ வந்தீங்க” என்றாள்.
ஈசன் “இப்போதான்..” என்றவன் அவளை பார்த்தும் பார்க்காமல் பேப்பர் பார்த்தான்.
கிருபா, சங்கர் மாமாவிற்கு வீபூதி வைத்துவிட்டு.. சென்றாள்.
கிருபா உண்டு முடித்து கிளம்பும் நேரம் வீட்டிற்கு யாரோ வந்தனர். கிருபா பிளாஸ்க் எடுத்து கொண்டு வெளியே வரும் நேரம் தாத்தா பாட்டி சங்கர் என எல்லோரும் அவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர்.
பட்டாசலையில் அமர்ந்து பேச்சுகள் சென்றது.
கிருபா “கிளம்பறேன் அம்மா” என்றாள்.
கோகிலா “இந்தா, வந்தவங்களுக்கு தண்ணீர் கொடு” என சொல்லி ஒரு ட்ரேவை கொடுத்தனர் கையில்.
கிருபா “என்ன ம்மா” என்றாள்.
கோகிலா முறைத்தார். அன்னையை தட்ட முடியாமல் செய்தாள்.. இயந்திர கதியில். இப்போது ஒருபையன் வந்தான் உள்ளே. எங்க பையன் என அறிமுகம் செய்தனர்.
கிருபா அவனுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு டைனிங் ஹால் வந்துவிட்டாள்.
ஈசன் குளித்துவிட்டு.. என்ன சத்தம் என பார்க்க வந்தான். அவனையும் சங்கரின் மகன் என அறிமுகம் செய்தனர். ஈசன் பொதுவாக ஒரு வணக்கத்தை போட்டு விட்டு நின்றிருந்தான். சற்று நேரத்தில், பேச்சில் தெரிந்தது பெண் கேட்டு வந்திருக்கிறார்கள் என.. ‘மனதில் பொண்ணு பார்க்க வந்திருக்காங்களா..’ என எண்ணி தன் உதடுகளை பிதுக்கினான், ஈசன்.
கோகிலா காபியை கிருபா கையில் கொடுத்துவிட்டார்.
வந்த பையன் தனியா கிருபாவிடம் பேசணும் என்றான். தனியாக பேசவென டைனிங் அறை தாண்டி.. இருக்கும் பெரிய ஹாலில் இருவரும் பேசினர்.
கிருபா கேட்ட கேள்விக்கு பதில் சொன்னாள். ஏன் வேலைக்கு போகலை என்றான். டிரைவிங் தெரியுமா என்றான். எத்தனை லேங்வேஜ் தெரியும் என்றான்.. இன்னும் எதோ கேட்டான். பதில் எதுவும் அவன் எதிர்பார்த்து போல இல்லை.. அவனுக்கு, கிருபா அவுட்டேட் என தோன்றியது.
இருவரும் பேசி முடித்து டைனிங் ஹால் வந்தனர். அந்த பையன் பட்டாசாலைக்கு சென்றான். இருவர் முகமும் சரியில்லை.
சஹா, கிருபாவை பார்த்து கண்ணடித்து ‘ஓகேவா’ என்றாள்.
கிருபாவிற்கு எதோ முகமே சரியில்லை. அவன் எதோ தனக்கு தெரியாததை பற்றி மட்டுமே கேட்டது போல ஒரு எண்ணம். சட்டென அப்படி கலங்கமாட்டாள். ஆனால், இந்தமுறை வாடி போனாள்.
கோகிலா பெண்முகத்தை பார்த்துவிட்டு, திருப்தியானார். அவருக்கு, பெண்ணை வெளிநாட்டில் கொடுக்க இஷ்ட்டமில்லை. தந்தையின் விருப்பம்.. அத்தோடு.. அவளின் விருப்பம் எப்படியோ என இந்த வரனை அனுமதித்தார். பெண்ணின் முகம் சரியில்லை எனவும் ஒரு நிம்மதி.
தாத்தா பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர். சங்கரை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். பேச்சுகள் சென்றது. விடைபெற்று கிளம்பினர்.
ஈசன் அவர்கள் செல்லவும் உள்ளே வந்தான் உண்ணவென.. கிருபாவின் முகம் இயல்பான புன்னகையை தொலைத்திருந்தது. ஈசன் அங்கே யாருமில்லாததால்.. அவளை இரண்டு நிமிடம் ஆராய்ந்தான்.. ஒன்றும் புரியவில்லை. கண்ணாம்மா அக்கா வந்து “சாப்பிடுங்க தம்பி” எனவும்.
ஈசன் உண்ணத் தொடங்கினான்.
இப்போது, தாத்தா பேத்தியை தனதறைக்கு அழைத்து பேசினார்.
ஈசன் உண்டு முடிக்கவும்.. கிருபா, தாத்தாவின் அறையிலிருந்து நேராக.. வீட்டின் பின்பக்கம் சென்றுவிட்டாள்.
கிருபாவிற்கு, தனிமை வேண்டும் போலிருந்தது. அறையில் சஹா இருப்பதால், தனிமையை தேடி இங்கே வந்தாள். தன்னை தானே தேற்றிக் கொள்ள. மனதில் அந்த கேள்விகளே நினைவில் வந்தது.. வேலைக்கு என போயிருக்கனமோ.. கார் டிரைவிங் கத்திருக்கனுமோ.. எனக்கு அவ்வளவாக ஏதும் தெரியாதோ..என மனது அலைபாய்ந்தது.
ஈசன், அவள் செல்லுவதை பார்த்து அழுகிறாள் என எண்ணிக் கொண்டான்.. அவளை தேடி வந்தான். அவள் பாத்திரங்கள் அடுக்கும் திட்டில் அமர்ந்திருந்தாள். கண்கள் எங்கோ வெறித்திருந்தது.
ஈசன் வந்ததை கவனிக்கவில்லை. அவனோ அங்கும் இங்கும் நடந்தான்.. ஈசனுக்கு, அவளின் புன்னகையில்லா முகம் ஒருமாதிரி இருந்தது.. தாத்தாவின் அறைக்கு சென்றுவிட்டு, கடைக்கு செல்லாமல் இங்கே எதுக்கு வந்திருக்கா.. பீல் பன்றாலோ.. அழறாலோ.. என யோசனை.
கிருபா, வெறித்து பார்த்து அமர்ந்திருந்தாள். ஈசனும் அவளின் யோசனையை கெடுக்க தோன்றாமல், அதே சமயம் அவளை விட்டு நகரவும் தோன்றாமல் அங்கேயே நடந்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் பாவமாக இருந்தது அவனுக்கு. அவளை எல்லோரும் தாங்குவர்.. அவளும் எப்போதும் எல்லோரையும் புரிந்து நடப்பாள். இப்போது இங்க உட்கார்ந்து எதுக்கு அழனும்.. பிடிக்கலைன்னா சொல்ல வேண்டியதுதானே என எண்ணம் ஈசனுக்கு.
அரைமணி கடந்து.. கிருபா, தன்னை தானே சமாதானம் செய்துக் கொண்டு எழ.. ஈசன் அங்கே இருப்பது தெரிந்தது. கிருபா, ஈசனை பார்த்தாள். பெண்ணவளுக்கு அதிர்ச்சியான தடுமாற்றம்.. திரும்பிக்கொண்டாள் முன்போல.. கண்களை விரல்களால் நாசூக்காக ஒற்றிக் கொண்டாள்.
ஈசன், அப்படியே நின்று கிருபாவை பார்த்தான்.. எந்த லஜ்ஜையும் இல்லை போல அவனுக்கு. இருவருக்கும் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை.. எதோ தடுக்க.. தலை தாழ்ந்தனர். பின் ஈசன் “என்ன ஆச்சு” என்றான்.
கிருபா ‘க்கும்..’ என தொண்டையை சரி செய்துக் கொண்டு “நத்திங்” என்றவள் எப்போதும் போல புன்னகை செய்ய முயன்றாள்.
ஈசனுக்கு ‘பாவமேன்னு என்ன ஆச்சுன்னு கேட்க்கிறேன்.. பதிலை பாரு’ என எண்ணிக் கொண்டான். ஆனாலும் கிருபாவின் கண்கள் சிவந்து இருந்த்தை பார்க்க.. கொஞ்சம் தணிந்தான். பின், ஈசன் ஏதும் கேட்டு அவளை சங்கடப்படுத்தவில்லை. அவளும் ஏதும் சொல்லவில்லை.. எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு.. லேசாக புன்னகைத்தாள் அவனை பார்த்து.
ஈசன் புன்னகைக்க..
கிருபா எழுந்து உள்ளே சென்றாள்.
ஈசன் அப்படியே அவள் அமர்ந்திருந்த திட்டில் அமர்ந்துக் கொண்டான். வந்தவனை பிடிக்கலையோ அதுக்கு எதுக்கு அழனும். என யோசனை ஓடியது அவனுள்.
இங்கே, சஹாவும் சங்கரும் பேசிக் கொண்டிருந்தனர்.. அறையில். சங்கருக்கு பெண், வந்துவிட்டதால் உறக்கத்தை தள்ளி வைத்தார். பெண்ணோடு பேசிக் கொண்டிருந்தார். அப்பாவாக அவர் கண்களில் ஒரு சோகத்தின் சாயல்.. தன் பெண்ணுக்கு எப்போது இப்படி வரன் பார்த்து மணம் முடிப்பது. இந்த வயதில் நான் இப்படி படுத்துக் கொண்டேனே என அவர் மனம் வாட தொடங்கியது. பேசினால் பெண்.. கவலை கொள்ளுவாள் என பெண்ணோடு இயல்பாக பேசினார்.
இரவு சஹா பெங்களூர் கிளம்பினாள். சங்கர் “அம்மா, உனக்கும் சீக்கிரம் கல்யாணம் செய்யனும்மா.. கிருபாவிற்கு முடிந்ததும். உனக்கு பார்க்கணும் டா.. பார்க்கலாமா” என்றார்.
ஈசன் சஹா.. பாட்டி அங்கே இருந்தனர்.. எல்லோருக்கும் சங்கரின் பேச்சு மனதை அசைத்தது.
சஹா “உங்கள் விருப்பம் ப்பா” என்றாள் அழுத்தமான குரலில்.
சங்கர் “சந்தோஷம் டா.. பாட்டி தாத்தா.. எல்லாம் பார்த்து செய்வாங்க டா..” என்றார்.
பாட்டி “டேய் எல்லோரும் செய்வோம் டா.. சங்கர். ஜாம் ஜாம்ன்னு நம்ம சஹாக்கு எல்லாம் நடக்கும் நீயும் பார்க்கத்தானே போற” என்றார்.
பெண்ணவள் பாரமான மனதோடு கிளம்பினாள்.
அன்று இரவு ஈசனிடம் தந்தை பேசினார்..
சங்கர் “ஈசா, ஏன் இவ்வளவு அமைதியா இருக்க. நான் நல்லா இருக்கேன். உனக்கு இங்க ஏதும் பிரச்சனையில்லையே..” என்றார்.
ஈசன் “இல்ல ப்பா.. எந்த பிரச்சனையும் இல்ல.. என்ன இப்படி கேட்க்குறீங்க” என்றான்.
சங்கர் “ஒண்ணுமில்ல ப்பா, தெரிஞ்சிக்கத்தான். மனசில் ஒன்னு இருக்கு.. ஆனால், அதை சொல்ல முடியலை. சஹானாவை நல்ல இடத்தில் கொடுக்கணும். தாத்தா பார்ப்பார். நல்லபடியா” என எதோ பேச..
ஈசன் “நீங்க பார்ப்பீங்க ப்பா.. அவளுக்கு, கல்யாணம் நல்லபடியா நடக்கும் ப்பா” என்றான், அவனின் குரலில் ஆதங்கம் இருந்தது. தந்தைக்காக, மகனாக எதுவும் என்னால் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம்.. இறுதி நாட்கள் இவ்வளவு கொடுமையானதாக இருக்குமென தெரியவில்லை, ஈசனுக்கு.
மகனின் வார்த்தைகளில் தந்தை குழந்தையென புன்னகைத்தார்.
நாட்கள் ஓடியது. எதோ அவசரமாக செல்வது போலவே இருந்தது பெரியவர்களுக்கு. சங்கரின் பேச்சும் சிரிப்பும்.. எதையோ சொல்லியது.
அதேபோல ஒரு கருநாள் வந்தது. சங்கருக்கு இரவு உடல்நமில்லாமல் போனது. சென்னையில் உள்ள மருத்துவர்கள் சொல்லிய மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர்.
விடியல்வரை உயிருக்கு போராடினார் சங்கர். மகள் வந்து சேர்ந்துவிட்டாள்.. அவளை பார்க்கவே காத்திருந்தார் போல.. மகளை கண்ணார பார்த்துக் கொண்டார்.
இறுதியாக மகனையும் தந்தையையும் பார்க்க அனுமதி வேண்டினார் போல.. மருத்துவர்கள், அவர்களை மட்டுமே அனுமதித்தனர்..
சங்கர் தந்தையிடம் “என் பசங்களை விட்டுடாதீங்க பா” என்றார் உயிர் போகும் அவஸ்த்தையில். அருணாசலம் உடைந்து போனார்.
ஈசனிடம் “தைரியமா இரு. நிம்மதியா இருந்தேன். போறேன்.. உன்னையும் சஹாவையும் குடும்பத்திடம் சேர்த்திட்டேன். எப்போதும் ரெண்டுபேரும் சேர்ந்து இருங்க. தாத்தாவை பார்த்துக்கோங்க” என்றார்.
சங்கர் கண்கள் இமைக்க மறந்தது.. பேச முடியவில்லை.. அவரை இதுவரை.. காவல்காத்து வைத்திருந்த தந்தையும் மகனும் பார்த்திருக்க.. பார்த்திருக்க.. கொண்டு போக்கினான் போல எமதர்மன். சங்கரின் கண்கள் இமைக்கவில்லை.. அந்த எந்திரமும் அசையவில்லை.
மருத்துவர்கள் இருவரையும் வெளியே அனுப்பினர்.
தாத்தா தளர்ந்து அமர்ந்துக் கொண்டார். ஈசன் தலையை பிடித்துக் கொண்டான். ஜென் கதை ஒன்று உண்டு.. “வாழ்வில் எந்த குறையும் இல்லாத பெருவாழ்வு எனக்கு வேண்டும்” என தன் குருவை தேடி சென்றான், ஒரு சீடன். அவரும் வரம் கொடுத்தார்.. “வரிசை மாறாத மரணம் வரட்டும் உன் சந்ததிக்கு” என. வரம் கேட்டு வந்தவர்.. ‘வாழ கேட்டால்.. மரணம் பற்றி சொல்லுகிறீரே’ என்றார். குரு “உன்னுடைய தந்தை ஆண்டு அனுபவித்து.. சென்றபின்தான் அடுத்த தலைமுறையின் மரணம்.. முறைதப்பிய மரணம் இல்லாமல் இருப்பதே வாழ்வின் பெரிய வரம்” என்றாராம். அந்த நிலை அருணாசலத்திற்கு இப்போது. இந்த வயதில் புத்திர சோகம்.. அத்தனை கொடுமையானது. தன்முன் பிள்ளை வாழும்.. சிறக்கும் என எண்ணி வளர்க்கும் பொற்றோருக்கு கிடைக்க கூடாத தண்டனை. வேண்டாம் யாரின் வாழ்விலும் இந்த தண்டனை.
அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்தது. கிருபாதான் முன்னின்றாள்.
முதலில் ஷண்முகத்திற்கு அழைத்து பேசினாள். கேட்டுக் கொண்டவர்.. நான் வர லேட் ஆகும்மா.. நீ பார்த்துக்க என்றுவிட்டார்.
கிருபாதான் எல்லோருக்கும் அழைத்து சொன்னாள். தாத்தாவின் உறவுகள் எல்லாம் உள்ளூரில் இருந்தனர்.. பின், ஊரில் சங்கரின் நண்பர்கள் என வந்து பார்த்தவர்கள் எல்லோருக்கும் சொன்னாள்.
ஈசன் சஹா.. இருவரின் போனை வாங்கி யாரு யாருக்கு சொல்ல வேண்டுமோ எல்லோருக்கும் சொன்னாள், கிருபா.
வீட்டிலும் எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. ஈசன் எல்லோரும் வர தொடங்கவும் கொஞ்சம் தன்னை தேற்றிக் கொண்டான். திடமாக எல்லாவற்றையும் எதிர்கொண்டான்.
ஷண்முகம் வந்தார் மாலையில், சரியான நேரத்திற்கு. சடங்குகள் எல்லாம் நடந்தது சங்கரின் இறுதி யாத்திரை.. நல்லபடியாக நடந்தது. மாலையில் உணவு பந்தி நடந்து கொண்டிருந்தது.
தாத்தா பாட்டி இருவரையும் கவனிக்க என தங்களின் மருத்துவரை வர சொல்லிவிட்டாள் கிருபா. அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரையும் கொடுத்து சென்றனர்.