நஞ்சினாலான அமுதன்!

15

கிருபாவிற்கு, இந்த உணர்வுகளை சமாளிக்க முடியவில்லை.. இதயம் எதோ வெளியே துடிப்பது போல  சத்தம்.. வயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சு பறப்பது போல படபடப்பு.. என்ன நடக்கிறது.. என்ன சொல்லுகிறார் என உதடுகளை மூடி.. தன்னை தானே அமைதிபடுத்த நினைத்தவளுக்கு தோல்வியே. வீட்டினுள் வரவே கொஞ்சம் நடுக்கமாக இருந்தது.. அதே நேரம் யாரிடமாவது ‘என்ன நடந்தது தெரியுமா’ என சொல்லும் ஆவலும் எழுந்தது. பிரிய முடியாமல்.. பொறுமையாக வந்தாள் பெண்.

சம்பூர்ணா உள்ளே கிட்டத்தட்ட ஓடி வந்தாள்.. தன் அன்னையிடம்.

கிருபா வாசலிலேயே நின்று ஐந்து நிமிடம் சுதாரித்துதான் உள்ளே வந்தாள்.

சம்பூர்ணாதான் வாங்கி வந்தவைகளை எடுத்து காட்டிக் கொண்டிருந்தாள்.. “தாத்தாக்கு ஸ்மார்ட் வாட்ச்.. பாட்டிக்கு, புடவை.. அத்தைக்கு நீ கேப்.. எனக்கு குர்த்தி.. அம்மாக்கு அப்பாக்கும் டாப்ஸ்.. டி-ஷிர்ட்” என அடுக்கினாள் பேத்தி..

தாத்தா “யார் வாங்கினா இதெல்லாம்” என்றார்.

சம்பூர்ணா “கிருபா அக்காதான். நீங்கதான் எல்லோருக்கும் வாங்க சொன்னீங்கன்னு சொன்னாங்க.. எனக்கு ஈசன் அண்ணா.. ஜமிக்கி வாங்கிக் கொடுத்தாங்க. சஹா அக்கா ஐலைனெர்.. லிப்பாம்..” என எடுத்து காட்டினாள்.

பின் “கிருபா அக்காக்கு, இது..” என சம்பூர்ணா ஈசன் கொடுத்த பாக் எடுத்தாள்.. இதுவரை புன்னகையோடு பார்த்திருந்த கிருபாவிற்கு.. அதில் என்ன இருக்கோ என தோன்ற கொஞ்சம் பதறினாள்.

சம்பூர்ணா “ஓ.. சரீ.. டி-ஷர்ட்.. சூப்பர்..” என சொல்லி பிரித்தாள். ஒரு மைசூர் கிரேப் சர்ரீ.. வைன் ரெட் கலரில்.. உருகி வழிந்தது.. சம்பூர்ணாவின் கைகளிலிருந்து.. சம்பூர்ணா “எப்போ எடுத்தீங்க.. சூப்பர் அக்கா, ஈசன் அண்ணன் வாங்கி கொடுத்தாங்களா” என்றாலே பார்க்கலாம்.

கிருபாவிற்கு மூச்சு ஒருநிமிடம் வரவில்லை.. அவசரமாக “சஹாவும் நானும்தான் வாங்கினோம். நீ ஜிம்மிக்கிஸ் வாங்க போன போது..” என்றாள்.

குழந்தை அப்படியே நம்பியது.. மீனாட்சி உள்ளே இருந்து வந்தார்.. இப்போதுதான்.

தாத்தா “நீ என்ன வாங்கி கொடுத்தா கிருபாக்கு” என்றார்.

மீனாட்சிக்கு என்னமோ போலானது.. நாம் பிள்ளையிடம் சொல்லி அனுப்பவில்லையே என எண்ணிக் கொண்டார்.

சம்பூர்ணா “என்கிட்ட ஏது காசு தாத்தா..” என்றாள்.

தாத்தா “கடைக்கு போகும் போது என்கிட்டே கேளுடா.. நான் தரேன்.” என்றார்.

சம்பூர்ணா கண்கள் ஒளிர தலையசைத்தாள்.

சம்பூர்ணா “நாம நாளைக்கு வெளியே போறோம் அக்கா, நான்  வாங்கி தரேன்..” என்றாள் கிருபாவின் தோளில் சாய்ந்துக் கொண்டு.

கிருபா “அச்சோ, சம்பூர்ணா தாத்தா சும்மா கேட்க்கிறாங்க டா” என்றாள்.

தாத்தா “அப்படி இல்லை.. நீ வாங்கியிருக்கில்ல.. அக்கா உனக்கு வாங்கி கொடுத்திருக்கால்ல.. நீயும் வாங்கிக் கொடுக்கணும். இதெல்லாம் சொல்லி தரனும் பிள்ளைகளுக்கு.. நம்ம அத்தைக்கு, கிருபாக்கு.. பாட்டிக்கு.. நாமதான் வாங்கனும்ன்னு சொல்லி தரனும்.. நீ நாளைக்கு வாங்கி கொடு டா.. நம்ம கிருபா அக்காக்கு, நான் பைசா தரேன்..” என்றார்.. மீனாட்சியை முறைத்துக் கொண்டே.

புரிய வேண்டியவர்களுக்கு புரிந்துவிட்டது. எங்கே ஷண்முகம் போல.. தான்.. தனது.. தனக்கு என மட்டும் பிள்ளை இருந்துவிடுமோ என தாத்தா சொன்னார்.

மீனாட்சி குடிப்பதற்கு கொண்டு வந்து கொடுத்தார் இருவருக்கும்.. கிருபா அதை வாங்கிக் கொண்டு தான் தங்கும் அறைக்கு சென்றுவிட்டாள். மாடியில் விருந்தினர் அறையில்தான் தங்கி இருந்தாள்.. அங்கே வந்து தஞ்சம் புகுந்துக் கொண்டாள்.

என்ன நடக்கிறது.. என்னை பிடிக்குமா ஈசனுக்கு என முதல்முதலில்.. தன்னை பற்றி யோசித்தாள் கிருபா. அந்த புடவையை பிரித்து பார்த்தாள்.. அழகாக இருந்தது.. அவன் வாங்கி தந்ததாலோ என்னமோ இன்னும் பிடித்தது.. தன்மேல் போட்டுக் கொண்டு ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.

சண்முகத்தின் குரல் கீழே கேட்க்கும் வரை.. கிருபா ஈசனின் நினைவில் கட்டுண்டிருந்தாள். ஷண்முகம் பேச்சு சத்தம் கேட்கவும் அப்படியே எல்லாம் தொலைந்து போகிற்று பெண்ணுக்கு. அவசர அவசரமாக எல்லாவற்றையும் எடுத்து.. பேகில் வைத்து திணித்து விட்டு.. கீழே வந்தாள்.

அதன்பின் டிபன் பேச்சு.. அரட்டை என நேரம் சென்றது.

மறுநாள் விடுமுறை என்பதால்… எல்லோரும் தாமதாமாக எழுந்தனர். மதியம் சம்பூர்ணா, அக்காவோடு வெளியே போவேன் என அடம்பிடித்து சென்றாள். இருவரும் எதோ வாங்கிக் கொண்டு வந்தனர்.

இரவு, தாத்தாவும் பேத்தி கிருபாவும் ட்ரைன் ஏறிவிட்டனர்.

ஊர் வந்து சேர்ந்தனர். கிருபாவிற்கு எப்போதடா ஊர் வருவோம் என்றானது. அங்கே சண்முகத்தின் வீட்டில் அவளால்.. ஈசனை நினைக்க கூட முடியவில்லை. அத்தனை பயம்.. அவளுக்கு. 

இதோ இப்போது வந்து இறங்கியவள்.. மலர்ந்த முகமாக வந்தாள் தன்னறைக்கு. அப்படியே யோசனை.. பிடித்திருந்த விரல்களை பார்த்தாள்.. ஏதும் பேசியும் பேசாத வார்த்தைகளை தனக்கு சாதகமாக யோசித்து சிரித்தாள்.. பருவ பெண் போல.. இல்லை, காதல் வரும் போதெல்லாம்.. பெண்கள அழகாக மாறுகிறார்களே.. அதனால் பருவ பெண்தான் கிருபா..  படபடப்பு.. அவளுக்கு. எந்த மாப்பிள்ளை வந்து பார்க்கும் போதும் தோன்றாத புதிய படபடப்பு.. அதேநேரம் ஒரு மலர்ச்சி… முகத்தில் மனதில். எதுவாக இருந்தாலும் அவன் நினைவு.. இந்த பழைய வீடே.. புதிதாக, அவன் ஆங்காங்கே நிற்பதாக ஒரு தோற்றம்.. வந்தது முதல்.. அந்த வீட்டை இன்னொருமுறை சுற்றி வந்தாள் நிதானமாக.. ஈசனின் நினைவோடு.

உறக்கம் வரவில்லை.. ஜாக்கிங் செல்லவும் மனதில்லை.. ஈசனை எண்ணிக் கொண்டே அமர்ந்துக் கொண்டாள், தன்னறையில்.

காலையில் எட்டு மணிக்குதான் ஈசன் அழைத்தான் கிருபாவிற்கு. கிருபாவிற்கு, எடுப்பதா வேண்டாமா என எண்ணம்.. அப்போதுதான் குளித்து வந்திருந்தாள். பூஜைக்கு செல்ல வேண்டும்.. பாட்டி பாவம் அத்தனை சாமி படத்திற்கும் தனியே பூ வைப்பார்.. என யோசித்துக் கொண்டே நிற்க.. இரண்டாம் முறையும் அழைத்தான் ஈசன்.

கிருபா அழைப்பை ஏற்றுவிட்டாள்.

ஈசன் “என்ன ஊருக்கு போயிட்ட போல.. கால்ஸ் எடுக்க கூட யோசிக்கிற.” என்றான்.

கிருபாவின் முகம் அந்த நக்கல் பேச்சில் மலர்ந்து போகிற்று.. “அதான் தெரியுதுல்ல.. பாட்டிக்கு பூஜையில் ஹெல்ப் செய்ய போகனும், வைக்கிறேன், அப்புறம் மதியம் பேசுறேன்” என்றாள்.

ஈசன் “அதானே.. தெரியாமல் கூப்பிட்டேன்” என் சொன்னவன் உடனேயே அழைப்பை துண்டித்துவிட்டான்.

கிருபாவிற்கு என்னமோ போலானது.

பாட்டிக்கு தேவையான உதவிகள் செய்துவிட்டு, தன் அறைக்கு வந்து ஈசனுக்கு அழைத்தாள் பெண். எப்போதும் அங்கேயே அமர்ந்து ஏதேனும் தெரிந்த ஸ்லோகங்களை சொல்லுவாள். இன்று ஓடி வந்துவிட்டாள்.

ஈசன் அவளின் அழைப்பை பார்த்துவிட்டு புன்னகைத்தான்.. ஏற்று “என்ன பூஜை முடிந்ததா.. அந்த சாமி ஞாபகம் போய் என் ஞாபகம் ஒரு வழியா வந்திடுச்சா” என்றான்.

கிருபா “ஆமாம் ஆமாம் சாமி ஞாபகம் போகுது. சொல்லுங்க எதுக்கு கூப்பிட்டீங்க” என்றாள்.

ஈசன் “ம்.. புடவை வாங்கி கொடுத்தேன்.. ஏதும் கூப்பிடவேயில்ல” என்றான்.

கிருபா எதையும் யாரையும் மனதில் நினைக்காமல்.. ஈசனை மட்டும் மனதில் கொண்டு “என்ன ஈசன் இது. எனக்கு புரியுது.. ஆனாலும், சரியாக வருமா” என்றாள்.

ஈசன் சற்று நேரம் அமைதியாக இருந்தான். கிருபாவும் அவனின் அமைதியை கலைக்கவில்லை.

பின் ஈசன் நிதானமாக “எனக்கு கிருபாவை முழுசா பிடிச்சிருக்கு. அவளோட பொறுமை, திறமை.. எங்க காட்டுவது என தெரியாமல் எல்லோரிடமும் பாசம் வைப்பது.. குறிப்பா தாத்தாவையே அதட்டும்.. அந்த பெரியமனுஷிதனம்.. எனக்கு காலம் முழுக்க வேணுமே கிருபா..” என்றான்.

கிருபாவிற்கு கண்களில் ஆரென கண்ணீர் பெருகியது..

ஈசன் அவனின் அதட்டும் குரலினை விடுத்து.. மெல்லிய குரலில்  “கையில் ரோஸ் இல்லை.. எமோஜ் போடுறேன்.. ஆனால், ஹர்ட்டினை அப்போவே.. குடுத்திட்டேன். எனக்கு உடம்பு முடியாமல் இருக்கும் போதே.. கொடுத்திட்டேன்” என்றான் ரகசிய குரலில்.

கிருபா கிறங்கித்தான் போனாள்.

ஈசன் “என்ன பதிலே இல்லை” என்றான், இப்போது அதட்டலாக.

கிருபா தஸ் புஸ் என தன்னை சமாளிக்கும் சத்தம் கேட்டது..

ஈசன் “அப்படியே சொல்லு.. என்னை பார்த்துக்கிறீயா” என்றான் ஆத்மார்த்தமாக.

கிருபா “என்னோட கைகள் சின்ன கைகள்..” என்றாள் ரசனையாக.

ஈசன் “உன் சின்ன கைகளில் அடங்கும் அளவில்தான் என் மனசு இருக்குடி.. கிறுக்கி” என்றான் காதலாக.

கிருபா சிரித்துக் கொண்டாள்.. “ம்.. பார்த்துப்பேன். நீங்க எப்படி” என்றாள்.

ஈசன் “இனி, கிருபா.. ஈசனின் கிறுக்கி” என்றான் கவிதையாக.

கிருபா சிரித்தாள்.. ஈசனும் சிரித்தான்.

நிமிடங்கள் கடந்து “புடவை நல்லா இருக்கு.. எப்படி இவ்வளோ அழகா வாங்குனீங்க..” என பேச தொடங்கினாள்.

இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

ஈசன் பேச்சு வாக்கில் “நான் அப்ரோட் போறேன்னு சொன்னேன் எதுவுமே கேட்க்கலை” என்றான்.

கிருபா “என்ன கேட்கறது.. உங்கள் விருப்பம். என்கிட்டே எல்லாம் முடித்து.. போகிறேன்னு சொல்றீங்க. நான் என்ன சொல்றது” என்றாள்.

ஈசன் “ஆனால், எனக்கு சொல்லணுமே” என்றான்.

கிருபா “என்ன..” என்றாள்.

ஈசன் “நான் அங்க வந்தால்.. உன் மாமாவிற்கு பிடிக்காது. சென்னையில் இருக்கவும் கஷ்ட்டமா இருக்கு.. தங்கைக்கு கல்யாணம் செய்யணும். அதே போல.. நீயும் வேணும். அதான் ரெண்டு வருஷம் இங்கே போயிடுறேன்” என்றான்.

கிருபா “அப்போ, வீடு இதெல்லாம்.. வேண்டாமா” என்றாள்.

ஈசன் “வேணும்.. கொஞ்சநாள் சென்று வேண்டும்.” என்றான். 

இருவரும் பேசிக் கொண்டே இருந்தனர்.

தாத்தா கடைக்கு கிளம்பி.. கூப்பிட்ட பின்தான், கிருபா.. அழைப்பை வைத்து வந்தாள்.

நாட்கள் வேகமாக சென்றது. 

இரண்டு வாரத்தில் ஈசன் அப்ராட் கிளம்பிவிட்டான். 

வீட்டில் எல்லோரிடமும் அழைத்து பேசினான். ‘சஹாவை பார்த்துக்கோங்க தாத்தா’ என்றான். நீங்க இருப்பதால் கவலையின்றி கிளம்புகிறேன் என சொல்லி சென்றான்.

தாத்தாக்கு பொறுப்புகள் கூடியது. மாதத்தில் ஒரு தரம் சஹா வந்து சென்றாள்.

சென்னை வீட்டினை லீஸுக்கு விட்டான் ஈசன்.

கிருபா எப்போதும் போல பொறுப்பாக எல்லாம் பார்க்க நேரம் சரியாக இருந்தது.

சண்முகம் நிம்மதியாக எப்போதும் போல, தன் வீட்டிற்கு சீராட வந்தார் மாதத்தில் ஒருமுறை.

ஈசனும் கிருபாவும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசினார். வேலை புது இடம் என ஈசனுக்கு அதிகம் அவளிடம் பேச முடியவில்லை. ஆனாலும், நேரம் கிடைக்கும் போது.. கிருபாவின் வேலைகள் கேட்டுக் கொள்வான்.. நிறைய ரெஸ்ட் எடு.. ஓடாத.. அந்த கடையே உன்னை நம்பிதான் இருக்குன்னு தோளில் தூக்கி திரியாத.. என பேசுவான்.  

இப்படி சொல்லாதீங்க என கிருபா கண்டித்தால். அக்கறையா நான் பேசுவதை வேண்டாம்ன்னு சொல்றா.. கலிகாலம் என சலித்துக் கொள்வான். 

நடு இரவில் அழைப்பான். எப்போது அழைத்தாலும் கிருபா அவனின் அழைப்பை ஏற்று பேசுவாள். ஈசன், வீடியோ கால் அழைப்பை அதிகம் விரும்பமாட்டான். முகம் பார்த்தால்.. எனக்கு நாலுநாள் தூக்கம் வராது என அழைக்கமாட்டான்.  கிருபாவிற்கு சங்கடமாகவும்.. நெகிழ்ச்சியாகவும் இருக்கும். தன்னால் பார்க்க முடியவில்லையே என சங்கடம்.. உன்னை பார்த்தால்.. நாலுநாள் வேலை ஓடாது என்பதில் நெகிழ்ச்சி.

எதிர்காலம் பற்றி பேசவே பயம் கிருபாவிற்கு. அதனால், அதிகம் அதை பேசவே மாட்டாள். ஈசனுக்கு அதில்தான் கோவமே வரும்.. சென்னையில்தான் இருப்போம் என்பான். அவளுக்கோ.. காரைக்குடியை தாண்ட மனம் வராது. ஆக, சண்டைகளும் வரும்.

“சில இரவுகள் இரவுகள்தான்..

தீரா தீராதே..

சில கனவுகள் கனவுகள்தான்..

போகா போகாதே..

சில சுவடுகள் சுவடுகள்தான்..

தேயா தேயாதே..

சில நினைவுகள் நினைவுகள்தான்..

மூழ்கா மூழ்காதே..” 

அடுத்த ஒருவாரம் பேசாமலே நேரம் கடக்கும். கிருபாதான் சமாதானம் ஆகி இறங்கி வருவாள். 

தூரமும் காதலை கன்னாபின்னாவென வளர்க்க.. ஏக்கம் தாண்டி, ஒரு நிதானம் வந்திருந்தது இருவரிடத்திலும். முதலில் தங்களின் திருமணம். அதன்பின் சஹாவின் திருமணம்… என கனவுகளை கடைவிரித்து பேசிக் கொண்டனர்.

ஈசனுக்கு என கோகிலா பொடி வகைகளை செய்தார்.. கிருபாவும் தாத்தாவும் கூரியர் அனுப்பினர், அவனுக்கு. சில நேரம் என்ன எப்படி செய்வது என கோகிலாவிடம் அழைத்து கேட்டுக் கொண்டான். தாத்தாவோடு தவறாமல் பேசினான்.. உறவை வளர்த்துக் கொண்டான்.

மாதங்கள் கடந்தது..

தாத்தா ஈசனுக்கு அழைத்து அப்பாவின் திவசம் வருகிறது. நீ வந்தே ஆகவேண்டும் என்றார். ஈசனும் மறுக்கவில்லை, வருகிறேன் என்றான்.

தாத்தா, கிருபாவிற்கு இந்த வருடம் திருமணம் முடித்திட வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தார். அதை தொடர்ந்து.. ஷண்முகம் ஒரு வரன் கொண்டு வந்தார் கிருபாவிற்கு. 

தாத்தா பாட்டி கோகிலா என எல்லோருக்கும் சந்தோஷம். மீனாட்சியின் ஒன்றுவிட்ட அண்ணன் மகன். வேறு வார்த்தையே வரவில்லை. தாத்தா என் மகன் மாறிவிட்டான் என சந்தோஷத்தில் பேசி தீர்த்தார். 

தாத்தா, சங்கரின் திவசம் முடியட்டும் உடனே வைபவங்களை ஆரம்பிக்கலாம் என எண்ணிக் கொண்டே சுறுசுறுப்பாக நாட்களை கடத்தினார்.

மீனாட்சி, அடிக்கடி போனில் பேசினார் கோகிலாவிடம், ஜாதகம் இப்போவே பார்த்திடலாம் அண்ணி. கிருபாவை முன்னமே பார்த்திருக்காங்க. என விவரம் சொல்லி பேசினார்.

மீனாட்சியின் சொந்தம் என்றதும் எல்லோருக்கும் சந்தோஷம், கண்டிப்பாக இந்த வரன் அமைத்திடும் என்ற எண்ணம். பாட்டி சமையல் படி.. புடவை கட்டு என முன்போல அதட்டல் போட்டார்.

ஆனால், கிருபாவிற்கு கோவம் வந்தது இப்போதெல்லாம் “அதெல்லாம் நடக்கும் போது பார்த்தக்கலாம் பாட்டி. எனக்கு நேரமில்லை” என கடைக்கு ஓடி போனாள் நேரமாக.

தாத்தா “நான் வரேன் கடைக்கு” என்றாலும்.

கிருபா “தாத்தா நான் பார்க்கிறேன். நீங்க இருங்க” என்றாள். நின்று அவரை பார்க்கவில்லை. ஜாக்கிங் என அவரோடு வந்தாலும்.. முன்னே சென்றது விடுகிறாள் பெண்.

ஷண்முகம் ஊர் வந்தார் சென்ற வாரம்.. கிருபா எப்போதும் பேசுபவள்.. “வாங்க மாமா” என சொல்லி அப்படியே தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

பத்து நாளில் ஈசன் ஊர் வந்திடுவான்.. என நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள், கிருபா.

அடுத்த வாரம்.. சங்கரின் திவசம். மீனாட்சி நான்குநாட்கள் லீவில் வந்தார். ஜாதக பொருத்தம் பார்த்திடலாம் அண்ணி.. என வந்துவிட்டார் இன்று. சண்முகம், நாளை இரவுதான் வருகிறார்.

கிருபா, மீனாட்சி வந்தது முதல் அறையிலிருந்து வெளி வரவேயில்லை. தாத்தாதான் கடைக்கு போகவென.. கிருபாவை அழைத்துக் கொண்டு போனார். 

தாத்தா, கிருபாவை இந்த ஒருவாரமாக ஆராய்ந்தவர்.. கடையில் வைத்து பெண்ணிடம் பேச வேண்டும் என எண்ணி வந்தார் இன்று.