கிருபா அடுத்த நான்குநாட்களும் கடைக்கு வரவில்லை. இரண்டு நாளில் உடல் சரியாகிவிட்டதுதான். ஆனாலும் தாத்தா அவளை ரெஸ்ட் எடு என சொல்லி, ஈசனோடு கடைக்கு சென்றார். அந்த டயர் கடைக்காரனிடம் பேசுவதற்கு. அதன்பின் கடைக்கும், அவனையே கூட்டி சென்றார். தாத்தாவிற்கு, ஈசன் மேல் நல்ல எண்ணமோ வந்திருந்தது, அன்று இரவு அவன் நடந்துக் கொண்ட விதத்தில். கேஸ் பற்றி அவனே பார்த்து செய்வான் என்ற நம்பிக்கை வர.. ஈசனோடு கடைக்கு சென்றார் தாத்தா.
கிருபாவிற்கு, இது பொறாமையை கொடுத்தது. தாத்தா கடையிலிருந்து வந்ததும்.. தாத்தாவின் மடியில் படுத்துக் கொண்டவள் “தாத்தா, நீங்க என்னை விட்டுட்டு போறீங்க, ஈவின்னிங் நான்தான் வருவேன்..” என்றாள்.
தாத்தா “என்ன டா, இப்படி பேசுற.. நீ உடம்பு தேறி வரவரை மட்டுமே ஈசன் பயலை கூட்டி போவேன். அப்புறம் நீதான் அந்த கடைக்கு பொறுப்பு. சீக்கிரம் உடம்பை தேத்திக்க” என்றார் அதட்டலாக.
கிருபா “ம் அப்படி வாங்க வழிக்கு.. புரியுதா மத்த எல்லோருக்கும்” என்றாள், ஈசனை ஓரபார்வையாக பார்த்துக் கொண்டு.
பாட்டி “கோகிலா, இந்த கிருபாவை பாரேன்.. ஈசன்னோடு போட்டிக்கு நிக்குறா.. பாவம் ஈசன், தன் வேலையையை விட்டுவிட்டு.. தாத்தாக்கும் பேத்திக்கும் வேலையை மிச்சம் செய்ய.. கடைக்கு போனால்.. இவ என்னமோ, அவன்மேல் கோவப்படுறா.. என்ன கிருபா ஆச்சு உனக்கு” என்றார்.
ஈசன் “பாட்டி, எல்லாம் நம்ம மேல ஒரு பயம்தான் பாட்டி. எங்க நான் நல்லா மேனேஜ்மென்ட் பார்த்து.. கடையை டெவலாப் செய்திட்டா.. என்ன பண்றதுன்னு பயம்” என்றான்.. வேண்டுமென்றே.
தாத்தாவும் சிரித்தார்.
கிருபாவிற்கு.. ஈசனின் இந்த குரல்.. பழைய ஈசனை நினைவுப்படுத்த.. “ம்.. செய்வார் செய்வார்.. இப்படி ஒரு மார்கெட்டினை நான்தான் பில்ட் செய்திருக்கேன். தாத்தா.. ரீடைல் செய்துகிட்டு.. லாஸ்சில் இருந்தார்.. என்னதாத்தா இதெல்லாம் என்னோட ஐடியாதானே.. சொல்லுங்க சிரிக்காதீங்க தாத்தா” என்றாள் கோவமாக.
ஈசன் “அஹ.. நம்பும்படி இல்லையே” என்றான்.
கிருபா தாத்தாவை முறைக்க, தாத்தா “டேய்.. சும்மா இருடா.. அவளே இப்போதான் தேறி வர.. கிருபா ம்மா.. அவன் சும்மா சொல்றான். நீதான் காரணம்ன்னு அவனுக்கு தெரியும் டா.. கடையில் உட்கார்ந்து.. இந்த ஹோல்சேல் ஐடியா நல்லா இருக்கு.. பல்க் ஆர்டர்ஸ் போகுது நார்த் இந்தியாவிற்கு.. எப்படி மார்கெட் செய்தீங்க என கேட்டுக் கொண்டிருந்தான் டா..” என்றார் ஈசனை பார்த்துக் கொண்டு.
கிருபா ஈசனை அப்படியா எனும் வண்ணம் பார்த்தாள்.
ஈசன் “எப்படி ஆர்டர்ஸ் எடுத்தீங்க கிருபா” என்றாள் உண்மை என்பது போல..
கிருபா “தாத்தாவோட ப்ரெண்ட் கடை வைர வியாபாரம். அவங்க ஆளுங்க.. நார்த் போவாங்க.. அப்போது, நம்ம கடையையும் மார்கெட் செய்ய சொன்னேன். அப்புறம், அங்கேயே டீலர் வைச்சிருக்கோம் இப்போது நாம்.. தெரியுமா?.” என்றாள் பெருமையாய்.
ஈசன் “ம்..” என கேட்க..
கிருபாவே “பீஸ் கணக்கில் கொலுசு.. சுவாமி சிலைகள் எல்லாம் அங்கே நல்ல மூவ்.. அத்தோடு அந்த தாத்தாவின் ஹெல்ப்.. எல்லாம் சேர்ந்து ஆறு மாதத்தில் நல்ல ரீச்.. இப்போ, அவங்களுக்குன்னு இருக்கிற இடத்தில் நம்ம கடைக்கும் ஒரு பேர் இருக்கு. “ என சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஈசன் “உனக்கு லங்க்வஜே ப்ரோப்லம் இல்லையா” என்க..
கோகிலா வந்து எதோ கேட்க.. தாத்தாவும் பாட்டியும் எழுந்து உள்ளே சென்றனர்.
கிருபா ஈசன் பேச்சுகளை தொடர்ந்தனர்.. கிருபா “தாத்தாக்கு ஹிந்தி தெரியும். எனக்கு புரியும். மத்தது.. காமன் லங்க்வேஜ்ல தான்.” என தொடர்ந்தது பேச்சுகள்.
ஈசன் பேச்சு வாக்கில் “அன்று சொன்ன.. நான் இந்த வீட்டு ஆளு இல்லைன்னு.. இப்போவும் அதேதான் சொல்றீயா” என்றான்.
கிருபாவின் முகம் சட்டென மாறிவிட்டது.. நேரம் பார்த்து கேட்க்கிறான் என தோன்ற அதை மறைக்காமல் “நேரம் பார்த்து கேட்க்குறீங்க” என்றாள்.
கிருபாவின் முகம் இப்போது இறுகி போகிற்று.. ஈசன் அமர்ந்திருந்தான் அமைதியாக.
ஈசன் மெதுவான குரலில் பேசினான் “திடீர்ன்னு ஏன் இப்படி சொல்றேன்னு தெரியலை. நீதான் முதல்முதலில் எனக்கு போன் செய்த.. நான் ஏதேதோ பேசிய போதும்.. நீ பொறுமையா பேசின.. இப்போது நினைத்து பார்க்கும் போது.. உனக்கு என் நிலை புரிந்து எல்லாம் செய்தேன்னு எனக்கு தெரியுது. ஆனால், இப்போ என் நிலை உனக்கு புரியலையா” என்றான்.
கிருபா ஈசனின் கண்களை பார்த்தாள்.. அது இமைக்காமல் அவளையே பார்க்க.. கிருபா “அப்போது இந்த வீடு பத்தி உங்களுக்கு தெரியாது. இப்பவும் உங்களுக்கு தெரியாதா..” என்றாள்.
ஈசன் “அதான் தெரியுதே.. அமைதியாக இந்த வீட்டின் நடைமுறைக்கு என்னை பழகிக் கொண்டுதானே இருக்கேன்.” என்றவன் எழுந்து நடந்தான்.. அமர முடியாமல்.. “என்னால், இப்படி ஒரே இடத்தில் இருக்கவே முடியாது. ஆனாலும், இது என் வீடு.. என்னோட உறவுகள்ன்னு நினைச்சிகிட்டு தானே இங்கே இருக்கேன்.. கிருபா.. உனக்கு தெரியலையா” என்றான்.நிமிர்ந்து அவளை பார்த்து.. கொஞ்சம் வசீகரிக்கும் குரலில்தான் கேட்டான்.
கிருபா அவனின் பார்வையை தாங்கி நின்றாள்.. “என்ன சொல்றீங்க” என்றாள், தயங்கி கொண்டு..
ஈசன் “இல்ல.. நான் அமைதியாக இருப்பதே.. இந்த உறவுகளை தக்க வைக்கத்தானேன்னு உனக்கு தெரியாதா” என்றான், இயல்பான குரலில், ஆனால், பார்வை அவளையே ரசனையாக பார்த்தது.. என்னை புரியாதா உனக்கு என.
இருவரும் அழகாக நடிக்க தொடங்கினர். நேரடியாக பேசிக் கொள்ள பயம். தவறாகிவிட்டால்.. காலம் முழுவதும்.. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாது போகுமே.. என தயக்கம் இருவருக்கும். எனவே, நடிக்க தொடங்கினர். ஆனால், ஓரளவுக்கு மேல் முடியவில்லை.
கிருபா “நான் நேரடியாக சொல்றேன், மாமா இல்லாமல் எந்த உறவையும் தக்க வைக்க முடியாது ஈசன்” என்றாள்.
ஈசன் “யாரு ஷண்முகமா” என்றான். இதுவரை இருந்த ஒரு குறுகுறுப்பு விடைபெற.. எரிச்சல் குரல் வந்திருந்தது.. ஏனோ அவனுக்கு சண்முகத்தின் மீதிருக்கும் கோவம் மட்டும் போகவேயில்லை. அதை போக்கிக் கொள்ளும் வழியும் அவனுக்கு தெரியவில்லை.
கிருபா இன்னமும் இப்படி மரியாதையில்லாமல் பேசுபவனை என்ன செய்வது என தெரியாமல்.. எழுந்துக் கொண்டாள்.
ஈசன் நக்கலாக “ரொம்ப பாசமோ உங்க மாமா மேல” என்றான்.
இருவருக்கும் நடுவில் இருந்த மெல்லிய இழை சட்டென விடைபெற்றது போல..
கிருபா “கண்டிப்பா..” என்றவள் உள்ளே செல்ல போக.. ஒரு வேகத்தில் அவளின் கையை பிடித்து நிறுத்தினான்.. கிருபா தடுமாற.. நன்றாக அவளின் கையை அழுத்தி பிடித்து நிறுத்தினான். நொடிநேரத்தில் எழுந்து அவளின் அருகே மிக நெருக்கமாக வந்தவன் “கிருபா..” என்றான் ஆசையாக..பெண்ணவளுக்கு கைகள் நடுங்கியது.
கிருபா நின்றதும்தான்.. தன்னை ஈசன் பிடித்திருப்பதையே உணர்ந்தாள். எங்கே இருக்கிறோம்.. என்ன இது இப்படி நிற்கிறார்.. எனதான் அவள் மனதில் ஓடுகிறது.. அவனின் அழைப்பு அவளின் காதுகளை எட்டியது, மனதை அல்ல.. எனவே, கிருபா கையை உதறினாள். ஈசனும் விட்டுவிட்டான், அவளின் பதட்டம் பார்த்து.
அவள் சற்று தள்ளி நிற்க.. லேசாக இருவருக்கும் தடுமாற்றம்.. கூச்சமாக இருந்தது இருவருக்கும்.
ஈசன் “நாங்க, என்னை.. க்கும்..” என தலைகோதி தானும்.. தள்ளி நின்றான், என்ன பேசுவது என தெரியவில்லை.. எதையாவது பேசி.. உள்ள உறவும் கொட்டுவிட்டால் என்ன செய்து என எண்ணி.. நின்றான். உறவுகளுக்குள் எழும் நேசம் அழகானது. கேட்கவும் முடியாது.. சொல்லவும் தெரியாது.. மலையிலிருந்து அருவி பிறக்குமிடம் யார் சொல்லுவர் என்பது போல.. பலபல ஊற்றுகண்களின் வழியே பொங்கி பெருகும் அருவிதான் நேசம்.. உறவுகளில். எல்லா கண்களும் முக்கியம்.. அப்போதுதானே ஆர்பரிக்கும் அருவி.
கிருபாவிற்கு நிறைய தயக்கம் இந்த நான்கு நாட்களாக.. ஈசனுக்கும் தனக்கும் நடுவில் நடப்பது என்னவென ஆராய்ந்துக் கொண்டுதான் இருந்தாள்.. ஆனால், இதுதான் என அவனும் கேட்கவில்லையே.. இப்போதுதான் எதோ கேட்க்கிறான்.. அதனால் கிருபாவும் தயங்கி தயங்கி “எ..னக்கு எல்லோரை..யும் பிடிக்கும்.. க்கும், அதிலும் குடும்பத்திற்காக சுயநலமில்லாமல் நடக்கும் எல்லோரையும்.. க்கும், அதனால்தான் அப்போ உங்களோட கஷ்ட்டம் தெரிந்துக்க நினைச்சேன். உங்க அப்பாக்காக எல்லாம் செய்தீங்க.. அதான் பேசினேன். இனி.. அப்படி இல்லையே” என்றவள்.. அடுத்து என்ன சொல்லுவது என தெரியாமல் நின்றாள்.
கிருபா “அப்படி இல்லை, எங்க மாமா இல்லைன்னா இந்த குடும்பம் இல்லையே அப்போ.. இப்போ.. சொன்னால் நீங்க பொறுமையா கேட்கமாட்டீங்க. குடும்பத்திற்காக எல்லாம் செய்த மாமாவை எப்படி தள்ளி இருக்க சொல்லலாம் நாங்க” என்றாள்.
ஈசன் “நமக்குள் எதுக்கு அவர்” என்றான்.
கிருபா பொறுமையாக திடமான குரலில் “அதெப்படி ஈசன், அவர் இல்லைன்னா.. நாம் என்பதேயில்லை” என்றாள்.. சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.
ஈசனுக்கு அவளின் பேச்சு புரியவே இமைக்கும் நொடிகள் தேவையாக இருக்க.. அவள் செல்வதைத்தான் பார்த்தான்.. ஈசன். என்னமோ நடந்துவிட்டது எங்களுக்குள்.. ‘அதென்ன அவரில்லாமல் நாம இல்லையாமே.. எப்படி முடியும்’ என தலை வலித்தது. அவளை தடுக்கும் வழி தெரியவில்லை.. தோன்றவும் இல்லை.. ஒருமாதிரி தோற்றுவிட்டதாக எண்ணம் ஈசனுள் பரவ தொடங்கியது.
“போட்டு வைத்த கோட்டுக்குள்ளே
காதல் என்றும் நின்றதில்லை..”
அமைதியாக அறைக்கு சென்றுவிட்டான். அவன், அவளை மட்டுமே பார்க்க.. அவளோ, அவளின் இயல்பாக.. எல்லோரிடமும் பாசம் கொண்டாள். அதனால், ஈசனின் பேச்சில் உடன்பட முடியவில்லை அவளுக்கு.
கிருபாவிற்கு தெரியுமே தாத்தா பாட்டியின் கவலை. ஷண்முகம் மாமா இன்னமும் தாத்தாவிடம் பேசவில்லை. போனில் கூட பேசவில்லை. ஈசன் இன்னமும் கேஸ்’சினை வாபஸ் வாங்கவில்லை. தாத்தாவும் எப்படி கேட்பது என அமைதியாக இருக்கிறார். ஆனால், ஈசனுக்கு அதெல்லாம் புரியவில்லை, தாத்தா பேசுகிறார்.. நன்றாக இருக்கிறார் என்றால்.. எல்லாம் சரியாகிடுமா.. அவரின் வேதனை இவனுக்கு தெரியாதா.. இதில் நமக்கு நடுவிலா என கேள்வி வேறு.. என எண்ணிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
தாத்தா “சரி ப்பா, செய்.. நீ இங்கே இருந்தே வேலையை பாரேன். அங்க போய் தனியாக தானே இருக்க போற” என்றார்.
ஈசன் “எனக்கும் அப்படிதான் தோணுது.. ஆனால், எல்லோரும் என்னை ஏற்றுக்கனும்ன்னு எதிர்பார்க்க கூடாதில்ல” என்றான் இரண்டு நபர்களையும் ஒரே போல குறிப்பிட்டு சொன்னான்.
கிருபா அரண்டு போய்விட்டாள்.
தாத்தா “யார் ப்பா.. சண்முகத்தை சொல்றீயா” என்றார்.
ஈசன் “அஹ.. ம்.. நான் இங்கே இருந்தால், அவர் வர போக நல்லா இருக்காதில்ல. நீங்களும் கஷ்ட்டபடுவீங்க.. “ என்றான்.
தாத்தா “பேசித்தான் ப்பா புரிய வைக்கணும். அவனுக்கு கோவம், கொஞ்சநாள் ஆறப்போட்டு போசலாம்ன்னு இருந்தோம்.. அதுக்காக நீ போகனுமா” என்றார்.
ஈசன் “அதான் சொன்னேனே தாத்தா கேஸ் விஷயம்ன்னு. நீங்க சென்னை வருவது போல் இருக்கும் தாத்தா.. கேஸ் கோர்ட்டில் போய்தான் முடிக்கணும்ன்னு வக்கீல் சொல்றாங்க.. எப்படியும் பத்துநாளில் நீங்க சென்னை வருவது போல் இருக்கும்.. பார்த்துக்கோங்க, உங்க வக்கீலிடம் பேசுங்க.” என்றான்.
யாருக்கும் என்ன சொல்லுவது என் தெரியவில்லை. உணவு கூட உண்ணவில்லை.. அப்படியே காரெடுத்து கிளம்பிவிட்டான், ஈசன்.
பெரியவர்கள் எல்லோரும் தளர்ந்து அமர்ந்துக் கொண்டனர்.
கிருபாவிற்கு, கண்களில் நீர் நிறைந்து போனது. எல்லோருக்கும் பின்னால் நின்றிருந்தவள் அப்படியே உள்ளே தனதறைக்கு சென்றுவிட்டாள்.
அடுத்த ஷனம் யோசிக்ககூட இல்லை உடனே ஈசனுக்கு அழைத்தாள், கிருபா.
ஈசன் சலிப்பாகவே அந்த அழைப்பை ஏற்றான். அவனை பேச விடவில்லை பெண். கிருபா ஆவேசமாக இருந்தாள்.. பேச்சும் அப்படியே “என்ன நல்லவன்னு நினைப்பா.. அதை மதியம் நீ என்கிட்டே பேசுவதற்கு முன் யோசித்திருக்கணும்.. இல்லை, என்னை நினைப்பதற்கு முன் யோசிச்சிருக்கணும்.. இப்ப என்னவோ எல்லாம் நான்தான் செய்தேன்ற மாதிரி கிளம்பிட்ட.. போய்டு, அப்படியே போய்டு.. வந்திடாத.. ஒரு குடும்பத்தில் நல்லது கெட்டதை பார்க்க தெரியலை, உறவுகளை மதிக்க தெரியலை.. உன்னை போய்.. ச்சே.. என்மேலேயே எனக்கு கோவமா வருது.. நல்லதுதான் போய்டு” என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டாள்.
ஈசன் காரினை ஓரமாக நிறுத்திவிட்டு.. தலைசாய்ந்து அமர்ந்துக் கொண்டான். ‘என்னதான் செய்யணும் நான் புரியவில்லை எனக்கு.. உறவுகள் வேணும்.. அதேபோல அவளும் வேண்டும்.. ஆனால் அதற்காக சண்முகத்தை எப்படி ஏற்க முடியும் என்னால்.. அவர் நினைத்திருந்தால்.. எங்களை எப்போதோ சேர்த்துக் கொண்டிருக்கலாம்..’ என சங்கடம்தான் மிச்சமானது.
நேசம் என்பது விவரிக்க முடியாத சந்தோஷத்தை தரவேண்டும்.. இப்படி இக்கட்டில் நிறுத்த கூடாது என தனக்கு தானே சொல்லிக் கொண்டான். ஏதும் பிடிபடாமல் அப்படியே காரில் வேகமெடுத்து சென்னை வந்து சேர்ந்தான்.