Advertisement

இரவின் நிசப்தத்தில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றியது. காற்றோடு கலந்து உடன் செல்லும் கார்மேகமாய் வருணாவின் நினைவுகள் திருச்சியை நோக்கி படையெடுத்தன. பழைய நினைவுகளை அசை போடுவதில் தான் எத்தனை ஆனந்தம் அவளையும் அறியாமல் இதழை நிறைந்தது புன்னகையின் மிச்சங்கள்.

காலை நேர சூரிய உதயம், கண்களுக்கு பரவசம் அளிக்கும் மலைகோட்டையின் அழகு, உச்சி பிள்ளையாரை எண்ணி கன்னத்தில் போட்டுக் கொள்வது, இவை அனைத்தையும் விட மாடிக்கே வந்து விடும் பில்டர் காஃபி.

“ஆஹா பேஷ் பேஷ் சாரதா காஃபிக்கு தனியா மார்க்கெட்டிங் பண்ணலாம் தொழில் பிச்சுகிட்டு போகும்” என கிண்டல் செய்தவாறே காஃபியை ருசித்து பருகும் மகளின் அழகையும் வாய் துடுக்கையும் கண்டு சிரிக்கும் சாரதாவின் புன்சிரிப்பு,

அவையெல்லாம் மீண்டும் வருமா என்று தெரியவில்லை ஆனால் நினைவின் வாயிலாக கடந்த கால நிகழ்வுகளை தழுவி கொள்ளலாம், தொலைந்து போனவைகளை நினைவின் வாயிலாக தழுவி கொள்ள தொடங்கினாள் வருணா.

திருச்சி மாநகரம், எழுந்ததும் தெரியும் மலைகோட்டையை பார்த்து கன்னத்தில் போட்டு கொண்டு தான் அடுத்த வேலையை தொடங்குவாள் வருணா.

பள்ளி படிப்பை முடித்து அடுத்ததாக கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் நேரம். பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்ததால், நல்ல கல்லூரியில் சேர வேண்டும் அதுவும் சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டிருக்க, கல்லூரியின் விவரங்களை சேகரித்து, அதை பற்றி சாரதாவிடம் கூறியதும் காச் மூச்சென்று கத்த தொடங்கினார் அவர். 

“ஏண்டி திருச்சியில எல்லாம் காலேஜ் இல்லையா? அவ்ளோ தூரம் போய் தான் படிக்கணும்ன்னு என்ன அவசியம்? இங்க படிச்சா படிப்பு ஏறாத?” என்று கோபமாக கேட்க,

“அம்மா ப்ளீஸ்ம்மா நா எடுத்த மார்க்குக்கு சென்னையில நல்ல காலேஜ்ல இடம் கிடைக்க போகுது. காலேஜ் ஆபிஸ்ல பேசிட்டேன் நாளைக்கு மறுநாள் வர சொல்லிருகாங்க, அதுமட்டுமில்ல அந்த காலேஜ்ல படிச்சு முடிச்சதும் நல்ல கம்பெனியில வேலை கிடைக்கும் நம்மளோட கஷ்டம் குறையும் ப்ளிஸ் ம்மா” என்று கெஞ்சி கொஞ்சி தாஜா பண்ண,

“முடியாதுடி நா இதுக்கு சம்மதிக்க மாட்டேன் அங்க தான் போய் படிப்பேன்னு பிடிவாதம் பண்ணாத அப்டி ஒன்னும் நீ படிக்க வேண்டிய அவசியமில்லை. பேசாம வீட்டுலயே கிட அது தான் நல்லது காலா காலத்துல கட்டி கொடுத்தோமா கடமையா முடிச்சோமான்னு இல்லாம படிக்க வச்சேன்ல அதான் தைரியமா வந்து வெளிய படிக்க போறேன்னு கேக்குற நீ படிச்சு கிழிச்சது போதும் அடுத்த வாரமே பொண்ணு பாக்க வர சொல்றேன்” என கறாராக பேசிவிட்டு சென்று விட்டார் சாரதா.

வருணா எதிர்பார்த்தது தான். விஷயத்தை கூறினால் சாரதா கொதித்தெழுவார் என தெரியும் ஆனால், திருமணம் வரை செல்வார் என அவள் நினைக்கவில்லை. கொண்டவன் துணையில்லாமல் இத்தனை வருடம் ஒற்றை மனுஷியாய் பிள்ளைகளை வளர்ந்து ஆளாக்கி. பருவத்தோடு கூடிய பொறுப்பு வந்ததும், குடும்பத்தின் பாரத்தை பங்கு போட்டு கொண்ட மகனை கரை சேர்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவரிடத்தில் முதன்மையாய் நிறைந்திருந்தது. 

‘வீட்டிலிருந்து படித்தால் சில செலவுகளை தவிர்க்கலாம் பெண் பிள்ளையை வெளியே அனுப்பிவிட்டு என்னவோ ஏதோ என்று பதறி கொண்டிருக்க முடியாது, சொற்ப வருமானத்தில் இல்லத்தின் செலவுகளை நிறைவு செய்யவே சரியாக இருக்கும் சில நாட்களில் இருந்தும் இல்லாத நிலை தான். 

உடல் நலத்தோடு, இருக்கும் போதே மகளுக்கு நல்ல வாழ்வை அமைத்து கொடுத்துவிட்டால் மகனின் சுமை சற்று குறையும். போகிற வீட்டில் படிக்க அனுமதி கொடுத்தால் படிக்கட்டும் இல்லையென்றால் குடும்பத்தின் பொறுப்புகளை கவனிக்கட்டும்’ என்று அசைபோட்டு மனதில் ஆழ பதிய வைத்து கொண்டவைகளை தகர்க்கும் வண்ணமாக, வெளியூர் சென்று படிக்கிறேன் என்றால் அத்தனை சுலபத்தில் மனதை மாற்றி கொண்டு அனுமதி அளிக்க முடியுமா என்ன?,

அவர் சென்ற திசையை வாடிய முகத்துடன் பார்த்தவளின் வதனத்தில் அடுத்த நொடி பளிச் என மின்னலாய் வெட்டியது புன்னகை.

“ச்சே இதை எப்டி மறந்தேன் மக்கு, எங்க சொன்னா வேலை சுலபமா முடியுமோ அங்க சொல்றதை விட்டுட்டு இங்க வந்து கெஞ்சிக்கிட்டு இருக்க” என தன்னையே வாய் திறந்து வஞ்சித்து கொண்டவள்  பிரமாஸ்திரத்தை குறிபார்த்து எய்ய, ராகவனின் அறைக்கு விரைந்தாள் வருணா.

அவனே ஒரு முறை அவளிடம் கூறியிருக்கிறான், ‘பெண்பிள்ளைகள் வீட்டோடு பெற்றவர்களின் கை வளைவிலேயே இருக்க வேண்டியதில்லை, குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாமல் வெளியுலகம் என்னவென்று தெரிந்து அறிவையும் அனுபவத்தையும் வளர்த்து கொள்ள வேண்டும்’ என்று, அவ்வாக்கியங்கள் நினைவில் எட்டி அவளுக்கு நம்பிக்கை அளிக்க,

‘இன்று தன் ஆசையை நிராகரிக்க மாட்டார்’ என ஆசையும் ஆவலும் கலந்த பதட்டத்தோடு அவன் அறைக்குள் நுழைய, மடிக்கணினியில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தான் ராகவன்.

தாயும் மகளும் பேசி கொண்டது அருகில் குடியிருந்தவர்களின் செவியையே நிறைத்திருக்கும். ஆனால் அறையில் இருப்பவனோ இருவரின் பேச்சு குரல் உரக்க கேட்டும் எதையும் கண்டுகொள்ளாமல், மாறாக அவர்கள் இருவரும் பேசிமுடித்து விட்டு வரட்டும் என அறையில் அமைதியாக தன் பணியில் முனைப்புடன் அமர்ந்திருந்தான்.

மெதுவாக அவன் அருகில் வந்து அமர்ந்தவள் “அண்ணா” என்று அழைக்க, 

அண்ணா என்ற விளிப்பின்  காரணத்தை புரிந்து கொண்டவன் தலையை நிமிர்த்தாமலேயே “என்ன?” என கேட்டான்.

“ராகவண்ணா நா சென்னையில படிக்கிறதுக்காக காலேஜ்ல விவரம் கேட்டு அப்ளிகேஷன் அனுப்ப சொல்லிருந்தேன் ண்ணா”.

“அதுக்கு என்ன இப்போ?”.

“அவங்க அப்ளிகேஷன் அனுப்பி வச்சுருக்காங்க ண்ணா நாளைக்கு மறுநாள் வர சொல்லிருக்காங்க ண்ணா” என தயங்கி கொண்டே கூற,

காரியம் கைகூட அவள் அழைக்கும் அழைப்புகள் கேட்கவே அத்தனை இனிமையாய் இருந்தன அவனுக்கு. இத்தனை நாள் ஒருமையில் திட்டி அதட்டி அடவாடி தனம் செய்தவள் இன்று ‘அண்ணா’ என்று பாசத்துடன் அழைப்பதை கேட்டதும் சிரிப்பு பீறிட்டது. ஆனால், உணர்ச்சிகள் எதையும் வெளி காட்டது ‘ம் ம்’ என்று ஏதோ கதை கேட்பது போல முணங்களை மட்டும் வெளிபடுத்தினான் ராகவன்.

அவன் செய்கையில் கடுப்பானவள் “என்ன ண்ணா கதை கேக்குற மாதிரி ம் சொல்லிட்டு இருக்கீங்க” என அவன் முகத்தை நிமிர்த்தி கவனத்தை தன் புறம் திருப்பினாள்.

“ப்ச் என்ன வருணா”என போலியாய் சலித்து கொள்ள,

“அம்மா கிட்ட சைன் வாங்கணும் சென்னை போய் படிக்க வேணான்னு சொல்லறாங்க அவங்க கிட்ட நீ தான் பர்மிஷன் வாங்கி கொடுக்கணும் ப்ளீஸ் ண்ணா”என கெஞ்சினாள்.

“அம்மா சொல்ற மாதிரி இங்க இருந்தே படிக்கலாமே, சென்னை போய் தான் படிக்கணும்னு அவசியம் இல்லையே, படிப்புல ஆர்வம் இருக்குற பொண்ணு எங்க இருந்து படிச்சாலும் படிப்பு மண்டையில ஏறும்” என கூறி மடிக்கணினியில் கவனத்தை செலுத்தினான் ராகவன்.

“டேய் அண்ணா” என முந்தி கொண்டு விழவிருந்த வார்த்தையை விழுங்கி கொண்டவள் காரியத்தில் முனைப்பு செலுத்தினாள்.

“என்ன ண்ணா நீயே சொல்லிருக்க பொண்ணுங்க தைரியமா இருக்கணும் வெளியுலகம் என்னன்னு தெரிஞ்சிக்கணும்னு. எனக்கு அட்வைஸ் மழையா பொழிஞ்சுட்டு இப்போ இப்படி பேசுறயே ப்ளீஸ் ண்ணா” என்றாள் உள்ளே சென்ற குரலில்.

“நா இதுவரைக்கும் ஆசைபட்டு எதுவும் உன்கிட்ட கேட்டதில்லை இது ஒன்னும் மட்டும் தான் கேக்குறேன் சரின்னு சொல்லு ண்ணா, அது மட்டுமில்ல எத்தனை நாளைக்கு தான் பாத்த முகத்தையே பாத்துட்டு இருக்குறது போர் அடிக்குது” என்றவள் அவன் பார்வையை கண்டு அமைதியானாள்.

“ஆக எங்க ரெண்டு பேரோட முகத்த பாக்க பிடிக்காம தான் சென்னைக்கு போற, படிக்கிறதுக்கு இல்ல” என்றான் பார்வையில் கண்டிப்பை நிலை நிறுத்தி,

“அய்யோ என்ன ராகவண்ணா நா அப்டி சொல்லல, எத்தனை நாளைக்கு தான் என்னோட இம்சைகளை சகிச்சுட்டு இருப்பிங்க கொஞ்ச நாளைக்கு உங்களுக்கு ரெஸ்ட் கொடுக்காலாம்ன்னு நினைச்சேன், நீங்களும் பாவமில்லையா என்னோட தொல்லைகளை எவ்வளவு தான் தாங்குவீங்க”என முகத்தை பாவமாய் வைத்து கொண்டு பேச,ராகவனுக்கு சிரிப்பு பீறிட்டது.

“ஏய் வாலு உனக்கு இருந்தாலும் இவ்வளவு வாய் பேச்சு ஆகாது. எங்க போனாலும் வாய வச்சே பிழைச்சுக்கிறுவ, எப்போ போகணும்” என மடியில் இருந்த கணத்தை ஓரமாய் வைத்தான்.

“நாளைக்கு மறுநாள் கிளம்பனும் ஆனா அம்மா…?” என இழுத்தவள் வாசலை பார்த்தாள்.

“அம்மாகிட்ட நா பேசிக்கிறேன் அப்ளிக்கேஷன் பார்ம் கொடு” என்றதும்,

கையில் சுருட்டி வைத்திருந்ததை அவனிடம் கொடுத்தவள் “அண்ணா..” என்றாள் மீண்டும் தயங்கியபடி.

“இப்போ என்ன?”.

“ஒரு சின்ன விண்ணப்பம் எனக்கு காலேஜ் ஹாஸ்டல் வேணாம், வெளிய வீடு பாத்து தங்கி படிக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணு, அதையும் அம்மாகிட்ட நீ தான் பக்குவாமா எடுத்து சொல்லி புரிய வைக்கணும். படிச்சுகிட்டே பார்ட் டைம் ஜாப் பாக்க அது தான் தோதா இருக்கும்” என கூறவும் அதிர்ந்து விட்டான் ராகவன்.

“என்ன வருணா சொல்ற? அதெல்லாம் முடியாது படிக்க போறேன்னு சொன்ன சரி, தனியா வீடு எடுத்து தங்கி வெளிய வேலை பாத்து அப்படியெல்லாம் நீ அங்க போய் படிக்க வேணாம் அது சரி வராது, தெரியாது ஊர்ல அங்க இருக்குற மனுசங்க கூட நல்லா பழகவே பல நாள் ஆகும்” என கண்டிப்பு கலந்து மறுத்து பேச,

“ப்ளிஸ் புரிஞ்சுக்கோ ராகவண்ணா வேலைக்கு போய்கிட்டே படிக்கிறதுக்கு, தனி வீடு தான் வசதியா இருக்கும் என்னோட பாரத்தை உன்மேல ஏத்துறது சரியா இருக்காது ப்ளீஸ் ண்ணா” என கம்மிய குரலில் உரைத்தவள் தலை தாழ்த்தி கொண்டாள்.

அவளின் பொறுப்பான வார்த்தைகள் மனதுக்கு இதம் அளித்தாலும் பழக்கமில்லாத இடத்தில் தனியே வீடு பார்த்து தங்க வைக்க மனம் ஒப்பவில்லை ராகவனுக்கு.

Advertisement