Advertisement

மெல்லிய புன்னகை அவன் இதழை தழுவ “சரி சரி டென்ஷன் ஆகாத  நாளைக்கு விஷயத்தை நாளைக்கு பேசலாம் டையர்டா இருக்கு சாப்டுட்டு தூங்கணும்” என்றவன் தட்டில் இருந்ததை வேகமாக விழுங்க,

“டேய் மெதுவா சாப்டு விக்கிக்க போகுது” என தண்ணீர் கிளாஸை அவன் புறம் நகர்த்தி வைத்தான் ரிஷி.

இரவின் குளுமையில் மாடியில் நின்று செயற்கை விளக்குகளால் ஜொலிக்கும் பெங்களூர் நகரின் அழகை வெறித்துக் கொண்டிருந்தாள் வருணா. பார்வை தான் அழகை அளவிட்டதே தவிர மனம் அவன் நினைவில் உழன்றது. 

‘இன்னேரம் குடும்பம் குழந்தைகள் என்று வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியாக  இருப்பான், என் நினைவுகளின்றி’ என நினைத்து பெருமூச்சை சொரிந்தவள், 

‘குடும்ப வாழ்வில் மட்டுமல்ல தொழிலிலும் முன்னேறி இருப்பான் கனவு கண்ட தொழில் அல்லவா?’,நிந்தனை கலந்த யோசனைகள் எழ,

“வருணா” என்ற குரலில் நினைவு கலைத்து திரும்பி பார்த்தாள்.

சிநேகம் பொதிந்த புன்சிரிப்புடன் அவள் அருகில் வந்தவன் “என்னாச்சு எதுக்கு இப்டி தனியா வந்து நின்னுட்டு இருக்கீங்க”. 

“வாங்க ரவி சார் சும்மா காத்து வங்கலாம்னு வந்ததேன் நா வந்தது இருக்கட்டும், நீங்க என்ன? என்னைக்குமில்லாத அதிசயமா மாடிக்கு வந்துருக்கிங்க” என்று சிறு புன்னகையுடன் கேட்டாள்.

“காரணம் இருக்கு வருணா உங்கள தேடி வீட்டுக்கு போயிருந்தேன் அம்மா தான் சொன்னாங்க நீங்க மாடிக்கு போயிருக்கிங்கன்னு. உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்” என்று தயங்கி வார்த்தைகளை நிறுத்த,

“எதுனாலும் வெளிப்படையா பேசிட்டுறது நல்லது தயங்காம விஷயம் என்னனு சொல்லுங்க சார் நீங்க இழுக்கிற மாடுலேஷனா பாத்தா விவகாரமான விஷயம் போலயே, காரணமில்லாம என்ன தேடி வர மாட்டிங்களே” என்றாள் அவன் குணம் அறிந்து.

“உங்கள மாதிரி என்னால பேச முடியலை வருணா” என்றான் தொண்டை அடைத்த குரலில்.

“சார் பீடிகை போட்டது போதும் தயவுசெய்து விஷயம் என்னனு சொல்லுங்க”.

“உங்கள தேடி வீட்டுக்கு போயிருந்தப்போ அம்மா எல்லாம் சொன்னாங்க” என்று மீண்டும் தயங்கியவன் வருணாவின் முகம் காண,

“ஓ.. நீங்க எதை பத்தி பேச வர்றீங்கன்னு இப்போ புரிஞ்சிருச்சு சார். அண்ணனுக்கு நல்ல சம்பந்தம் தேடி வந்துருக்குன்னு அம்மா சொல்லிருப்பாங்க அதானே”.

“அது மட்டுமில்ல இன்னொன்னும் சொன்னாங்க”.

“எனக்கு கல்யாணம் ஆன பிறகு தான் அண்ணா கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டு போனது, அதுவரைக்கும் கல்யாணத்த பத்தி பேச வேணான்னு சொன்னது இது தானே” என்று சலித்து கொள்ள,

“ஏன் வருணா உங்க அம்மா சொல்ற மாதிரி நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாமே, அவங்க ரொம்ப மனசு கஷ்டப்பட்டு பேசினாங்க. சாரி வருணா என்னால பேசாம இருக்க முடியலை இப்ப வரைக்கும் என்னோட மனசுக்குள்ள ஒரே ஒரு கேள்வி அரிச்சிக்கிட்டே இருக்கு அதை கேட்டுட்டுறது நல்லதுன்னு நினைக்கிறேன், 

கல்யாணம் ஆகிருச்சுன்னு சொல்றிங்க ஆனா இப்ப வரைக்கும் அவரு யாரு என்னனு சொல்லவே இல்ல, ஏதோ கோவில்ல தாலி கட்டி, யாருமே பாக்காத, முடிஞ்சு போன உறவுக்கு இவ்ளோ மதிப்பு கொடுகுறிங்களே ஏன் வருணா. உங்கள ஏமாத்தினதா சொல்ற அந்த ஆள் இன்னேரம் வேற யாரையோ கல்யாணம் பண்ணி சந்தோஷமா குடும்பம் சகிதமா வாழலாம் இல்லையா? அப்டி இருக்குறப்போ நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாது” என பேசியவனின் குரலில் கண்டனம் தொனித்திருந்தது.

“ப்ச் என்ன ரவி சார் அவங்க தான் புரியாம பேசுறாங்கன்னா நீங்களும் அவங்கள மாதிரியே புரியாம பேசுறீங்களே” என்று எரிச்சலாய் மொழிந்தவள்,

“எனக்கு கல்யாணம் ஆனதை யாரும் பாக்கலை தான் ஆனா அவர் கூட வாழ்ந்த வாழ்க்கை நிஜம். அதை இல்லைன்னு சொல்ல முடியாது இல்லையா?”. 

“நீங்க தான் புரியாம பேசுறீங்க இன்னும் எத்தனை வருஷத்துக்கு இப்டி இருக்க போறீங்க வாழ்க்கையில சில மாற்றங்கள் வரும் வருணா அப்டி வரலையா அதை நாமளே ஏற்படுத்திகணும் அப்ப தான் லைஃப் உயிர்ப்போட இருக்கும். சோ உங்க வாழ்க்கையில ஏதோ என்னால முடிஞ்ச மாற்றத்தை ஏற்படுத்தலாம்னு இருக்கேன் நீங்க என்ன சொல்றிங்க”என்று கேட்டு நிறுத்தினான் ரவி.

அவன் கூற்றின் அர்த்தம் விளங்காமல் கண்கள் இடுங்க பார்த்தவள் “புரியலை என்ன மாற்றத்தை ஏற்படுத்த போறீங்க”.

“உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் ரொம்ப நாளா நானும் பேசணும் பேசணும்னு நினைக்கிறேன் ஆனா அதுக்கான சந்தர்ப்பம் தான் கிடைக்கல அதுக்கான நேரம் இது தான்னு நா நினைக்கிறேன்” என்று பீடிகை இட்டு நிறுத்த,

“ப்ச் சார் விஷயம் என்னனு சொல்லுங்க? ஒரே வார்த்தையை மாத்தி மாத்தி பேசிட்டு இருக்காதீங்க” என்றாள் எரிச்சல் மண்டிய குரலில்.

“அது வந்து..” என்று உள்ளத்தின் படபடப்பை பெரும்பாடுபட்டு அடக்கியவன் ஆழ்ந்து மூச்சை வெளியிட்டு “எனக்கு உங்கள பிடிச்சிருக்கு உங்கள மேரேஜ் பண்ணிக்கலாம்ன்னு ஆசைப்படுறேன். உங்களுக்கு ஒரு நல்ல கணவனாவும் சுபர்ணாவுக்கு ஒரு நல்ல அப்பாவாவும் நா நடந்துப்பேன் வருணா, 

உங்கள பாத்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு அன்னையில இருந்து எனக்குள்ள ஒரு மாற்றம் அதை எப்டி சொல்றதுன்னு தெரியலை வெறும் வார்த்தையா உங்கள நேசிக்கிறேன்னு சொல்லிட முடியாது வருணா அந்த அளவுக்கு உங்க மேல இனம் புரியாத ஒரு அன்பு இருக்கு, என்னோட எண்ணம் மட்டுமில்லை என்னோட ஒவ்வொரு செய்கையிலயும் நீங்க தான் இருக்கீங்க,

உங்க பாஸ்ட் லைஃப் பத்தி எனக்கு தெரியும். உங்க அம்மா முன்னாடியே என்கிட்ட சொல்லிட்டாங்க அவங்க சொன்ன பிறகு தான் ஸ்டராங்க முடிவே எடுத்தேன் வாழ்ந்தா உங்க கூட தான்னு நீங்க தான் எல்லாமேன்னு இதுவரைக்கும் நினைச்சிட்டு இருக்கேன் வருணா” என்று தன் போக்கில் அவளை பேசவிடாது மனதில் உள்ளதையெல்லாம் வடிக்க,

“போதும் நிறுத்துறீங்களா என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதா பேசுறீங்களா?” என ஆத்திரத்தில் அவனை உறுத்து விழித்தவள் “இது நாள் வரைக்கும் இந்த மாதிரி எண்ணத்தோட தான் என்கிட்ட பேசுனிங்களா. அவங்க தான் மனசு தாங்காம ஏதோ சொன்னாங்கன்னா உடனே காதல் கத்திரிக்கான்னு மனசுல ஆசைய வளத்துகிறதா?” என கோபத்தில் முகம் சிவக்க கேட்டாள் வருணா.

“இதுல என்ன இருக்கு  கல்யாணமாகி விவாகரத்து வாங்குனவங்க, இல்ல ஏதோ ஒரு சந்தர்பத்துல புருஷனை வேணான்னு சொல்லி பிரிஞ்சு வாழுறவங்க! வேற ஒரு நல்ல வாழ்க்கை தேடி வந்தா அதை ஏத்துகிட்டு சந்தோசமா வாழலாமே, பழசையே நினைச்சுகிட்ட இருக்க வேண்டிய அவசியமில்லையே” என்று வாதம் செய்ய,

“நா அப்டி சொல்லலயே சார் அவங்க அவங்க வாழ்க்கை அவங்க விருப்பம் அதுல நா எதுவும் சொல்ல முடியாது, ஆனா எனக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல” என்று அழுத்தமாய் சொல்ல,

“ஏன்னு தெரிஞ்சுக்கலாமா காரணமே இல்லாம கல்யாணம் வேணான்னு சொல்றிங்களே வருணா”.

“காரணம் இருக்கு சார் என்னோட வாழ்க்கையில காதலும் சரி கல்யாணமும் சரி ஒரு தடைவ தான் அது நடந்து முடிஞ்சு போச்சு”.

“நீங்க பேசுறது முட்டாள் தனமா இருக்கு இன்னைக்கு இருக்குற காலத்துல இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறது ஒன்னும் உலக மகா தப்பு இல்லையே”.

“தப்புன்னு நா சொல்லல ரவி சார் சுடுபட்ட பூனை அவ்ளோ சீக்கிரம் அதோட எண்ணத்தை மாத்திக்காது, நானும் அது மாதிரி தான் ஆரம்பத்துல இனிப்பா இருந்த வாழ்க்கை தான் கடைசியில மறக்க முடியாத காயத்தையும் உண்டு பண்ணிருச்சு காயம் வேணா ஆறிருக்கலாம் ஆனா காயத்தோட தழும்புகள் இன்னும் மறையல” என்று வலியை உள்ளடக்கி பேசினாள்.

“நீங்க வாழ்க்கையே முடிஞ்சு போச்சுன்ற மாதிரி விரக்தியா பேசுறீங்க, யாரோ ஒருத்தர் உங்கள ஏமாத்திடாங்கன்றதுக்காக மத்தவங்களும் அப்டிதா இருப்பாங்கன்னு நினைக்கிறது தப்பு வருணா”.

“இந்த விதண்டாவத பேச்செல்லாம் வேணாம், நம்ம பேசிக்கிட்டே போனா தேவையில்லாத மனஸ்தாபம் தான் வரும் உங்கள நா ஒரு நல்ல ஃபிரெண்டா வெல்விஷரா தான் பாத்துருக்கேன் பாக்குறேன், இதை தாண்டி உங்கள வேற மாதிரி நினைச்சு கூட பாத்ததில்ல சார்,

உங்களுக்குன்னு ஒரு நல்ல பியூச்சர் இருக்கு நீங்க படிச்ச படிப்புக்கும் உங்க நல்ல குணத்துக்கும் என்னை விட அழகான அன்பான குணமான பொண்ணு கிடைப்பாங்க”.

“ஆனா உங்கள மாதிரி கிடைக்க மாட்டாங்களே நீங்க என்னோட தேவதை வருணா உங்கள விட்டுட்டு வேற ஒரு பொண்ண என்னால நினைச்சு கூட பாக்க முடியாது” என்று குரலில் வேதனையை கலந்து பேசினான் ரவி.

“ப்ச் சார் காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கணும்னா இந்த உலகத்துல யாருக்கும் கல்யாணமே நடக்காது. உங்களுக்கென்ன தலையெழுத்தா ரெண்டாம் தாரமா என்ன கல்யாணம் பண்ணிக்க” என்று நிதானமாக எடுத்து சொல்லி புரிய வைக்க,

“இது தான் உங்க பிரச்சனையா நா அப்டி நினைக்கவே இல்லயே வருணா” என்று மீண்டும் தொடங்கினான் அவன்.

“திரும்பவும் முதல இருந்து ஆரம்பிக்காதீங்க ரவி சார்” என்று அலுத்து கொள்ள,

“இது தான் உங்க முடிவா வருணா”.

“ஆமா சார் உங்களுக்கு வேற ஒரு நல்ல பொண்ணு கிடைப்பாங்க என்ன உங்க நினைப்புல இருந்து தூக்கி போட்டுருங்க அது தான் உங்க ஃபியூச்சர் லைஃப்புக்கு நல்லது” என்றவள் படிகளில் இறங்கி செல்ல எத்தனிக்க,

“ஒரு நிமிஷம் நீங்க பேசுறதுல இருந்தே தெரியுது அவர எந்த அளவுக்கு நீங்க காதலிச்சு இருப்பிங்கன்னு, இந்த அளவுக்கு உங்க மனசை ஆக்கிரமிச்ச அவரோட பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா” என ஆவலுடன் கேட்டான்.

சில நொடி நிதானித்து உள்ளே அவன் நாமத்தை உறுபோட்டவள் “அவர் பேரு அபிநந்தன் எனக்கு மட்டும் அபி அவர நா அப்டி தான் கூப்பிடுவேன் அது தான் அவருக்கு பிடிக்கும்” என வலியோடு சேர்ந்த வாசமில்லாத புன்னகையை உதிர்த்தவள் “போதுமா! நா கிளம்பலாமா?”.

“இல்ல இன்னொன்னு இருக்கு, இதுக்கப்றம் நீங்க என்கிட்ட பேசுவீங்களா வருணா நா உங்க கிட்ட இந்த மாதிரி பேசுனேன்னு என்ன ஒதுக்க மாட்டீங்களே!”.

“ஒரு பிரெண்டா உங்க கிட்ட நா பேசுவேன் சார் அதுக்கு மேல எதுவும் எதிர்பாக்காதீங்க ” என கூறிவிட்டு விறுவிறுவென படியிறங்கி சென்று விட்டாள் வருணா.

ஏதேதோ எதிர்பார்த்து வந்தவனுக்கு அவளின் பதில்கள் ஏமாற்றத்தை கொடுக்க, தன்னை நிராகரித்து விட்டாளே என்ற கோபம் வரவில்லை. இளவம் பஞ்சு மெத்தையில் ஊசியை வைத்து உறங்குவதை போல சுகமான வலியை கொடுத்தது.

கண்களில் நீர் வழிய அழுதான், நகரின் மறுபுறம் ஆக்கிரமித்திருந்த இருளை வெறித்து மௌனமாக அழுதான். 

வருணாவை சந்தித்த முதல் தருணம் இன்றும் அவன் நினவலைகளில் பத்திரமாய் இருந்தது. கையில் குழந்தையை ஏந்தி முகத்தில் சிறிதும் தாய்மையின் பூரிப்பில்லாது சோகமே உருவென உச்சபச்ச விரக்தியின் உருவாய் இருந்தவளை கண்டதும் கனிவு பிறக்க,

உண்மை தெரிந்து அதுவே காதலாகி கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக சேமித்து வைத்த காதல் நொடியில் கருகி தடம் தெரியாமல் போய்விட்டதை நினைக்கவே மனம் தாளவில்லை அவனுக்கு. 

‘அவள் காதலுக்கு அவன் தகுதியில்லை என்பதை விட எனக்கு தகுதியில்லை, இன்றும் அவனை எண்ணி அவன் மீதான நேசம் குறையாமல் அவனை எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கிறாளே’,வியப்பா வலியா என்று பிரிதரியா முடியாத எண்ணம் தோன்றியது.

‘அவள் வாய் மொழியாய் சொல்லவில்லை என்றாலும்  கண்கள் காதலை பிரதிபலிதத்தே, என்ன பெயர் அபிநந்தன் அவளுக்கு மட்டும் அபி எத்தனை ஆசையாய் சொல்லிவிட்டு செல்கிறாள், அவளை மறக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் இதுவும் கடந்து போகும் மாற்றத்தை ஏற்படுத்த வந்த எனக்கு நல்ல மனமாற்றம்’ என்று எண்ணங்கள் தோன்றி மனதை தேற்ற முற்பட,

சற்று நேரம் மாடியில் இருந்து மனதை சமாதானம் செய்யலாம் என வெறும் தரையில் உடலை சாய்த்து பரந்து இருண்ட ஆகாயத்தில் பார்வை செலுத்த தொடங்கினான் ரவி.

ரவியிடம் பேசிவிட்டு அறைக்கு வந்தவளுக்கு தூக்கம் வர மறுத்து அழிசாட்டியம் செய்ய, புரண்டு புரண்டு படுத்தவளின் மனம் மலரும் நினைவுகளாக, அவனை முதன் முதலில் சந்தித்த தருணங்களையும் அதன் பின் நடந்த நிகழ்வுகளையும் தத்தெடுத்து கொண்டது.  

அவள் நிலைக்கு காரணமானவனோ உறக்கம் கொள்ளாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். 

“டேய் தூங்காம என்னடா பண்ற தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு கபடி விளையாடிட்டு இருக்க ஒழுங்கா நேரா படுடா” என்றவன் “மனுஷனா சாவடிக்கிறான்” என புலம்பியபடி போர்வையை தலைவரை போர்த்தி மறுபக்கம் திரும்பி படுத்து கொண்டான் ரிஷி.

பொறுத்து பார்த்த அபிநந்தன் நித்திரை தேவியிடம் சரணாகதி அடையாமல் எழுந்து பால்கனியில் வந்து நின்று கொண்டான். பௌர்ணமி நிலவு பளிச்சென்று ஜொலிக்க குளிர் காற்று உடலை துளைக்க, காற்றோடு கலந்து மிதந்து அவன் செவிகளை சேர்ந்தடைந்தது மகிழுந்தில் இடை நிறுத்திய இசையின் பரிமாணம்.

வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை

காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை 

உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி எங்கே சென்றாயோ கள்ளி 

ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா…

தரிசனம் தொடரும்…

Advertisement