Advertisement

“அசடு எல்லாத்தையும் மறந்துரு உன்ன செய்ய சொல்றதுக்கு நானே சமைச்சிறலாம். சரி சொல்றேன் கேட்டுக்கோ இது தான் லாஸ்ட் மறுக்கா கேட்டா என்னால சொல்ல முடியாது வேலைய விட்டுட்டு பேசாம போயிரு வேற யாரையாவது வேலைக்கு வச்சுக்கிறேன் ஆளா இல்ல” என்று கடுமையை காட்டி பேச,

“அய்யோ வேணாம் ம்மா இனிமே இப்டி மறக்க மாட்டேன் இந்த ஒரு முறை மட்டும் மன்னிசிறுங்க” என்று இறைஞ்சியவளை, போனால் போகட்டும் என்பது போல பார்த்தவர்,

“சரி சொல்றேன் கேட்டுக்கோ நாட்டு கோழிய குழம்பு வச்சுரு நண்டு வாங்கிருக்க தானே அதை பெப்பர், மசாலா எல்லாம்

தூக்கலா போட்டு ஃபிரை பண்ணிரு ரெண்டு முட்டையை உடைச்சு ரெண்டு வெங்காயம் சேத்து கொஞ்சமா சிக்கன் பீஸை எண்ணெயில பொறிச்சு உடைச்ச முட்டையில சேத்து ஆம்லெட் போட்டுரு,

அப்றம் தக்காளி ரசம் வச்சுரு கடைசியா சாப்ட்டு முடிக்கவும் செரிமானம் ஆகுறதுக்கு ஏதாவது ஸ்வீட் பாண்ணிடு

சரியா? போ போய் மடமடன்னு வேலைய பாரு கொஞ்ச நேரத்துல பசிக்க ஆரம்பிச்சிரும்” என்றவர் கண்ணாடி கிளாசில் இருந்ததை ஒரே மூச்சாக குடித்து முடித்து டம்ளரை நீட்ட, ஆயாசமாய் அவரை பார்த்தாள் காவேரி.

“ஏம்மா வீட்டுக்கு விருந்தாளி யாரும் வர்றாங்களா?”, வஞ்சித்தாலும் பாரவாயில்லை மனதில் தோன்றியதை கேட்டு விட

“ஏண்டி கேக்குற?”.

“இல்ல இவ்ளோ ஐட்டம் செய்ய சொல்லிருக்கீங்களே அதான்  யாராவது வர்றாங்களான்னு கேட்டேன், சும்மா தெரிஞ்சுக்கலாமேன்னு..” என்றாள் தயக்கத்துடன்.

“ஏன் நா மனுஷியா தெரியலையா இல்ல இதெல்லாம் நா சாப்பிட கூடாதா? அதிகபிரசங்கி தனமா கேள்வி கேட்காம போய் வேலைய பாரு கேக்க வந்துட்டா கேள்வி” என்று எரிந்து விழுந்தார் பரிமளம்.

“சாரிம்மா” என்றவள் முகம் சுருங்க அவ்விடம் விட்டு நகன்று சென்றாள் காவேரி.

நீண்டு கொண்டே சென்ற நெடுஞ்சாலையில் நீட்சியில்லாத சிந்தனைகளை சிரத்தில் ஏற்றி, எதிரில் வரும் வாகனத்தின் அரவம் கூட அறியாது தன் போக்கில் வாகனத்தை செலுத்தி கொண்டிருந்தான் அபிநந்தன். 

எதிரில் வரும் வாகனங்களை ஒட்டி உரசுவது போல சென்று பிறகு காரை வளைத்து திருப்பும் வண்ணமாக இருக்க, அவன் நடவடிக்கையை அடி வயிற்றில் பயப்பந்துக்கள் உருள அருகில் பயம் கவ்விய முகத்துடன் பார்த்து கொண்டிருந்தான் ரிஷி.

‘இவன் ஓட்டுறத பாத்தா நிச்சயம் ஆக்சிடன்ட் பண்ணாம விட மாட்டான் போலயே’ என்று மனதோடு புலம்பியவன் “டேய் வண்டிய நிறுத்துடா” என்று நடுங்கும் குரலில் சொல்ல,

“ப்ச் உனக்கென்னடா பிரச்சனை இப்போ வண்டிய எதுக்கு நிறுத்த சொல்ற?” என்று சலிப்பாய் வந்து விழுந்தன வார்த்தைகள்.

“எனக்கு என்னோட உயிர் முக்கியம் நீ வண்டி ஓட்டுற தினுசே சரியில்லை நீ இந்த பக்கம் வா வீடு வரைக்கும் நானே ஓட்டிட்டு வரேன்”  என்றவனை முறைத்து பார்த்தவன் எதுவும் பேசாமல் வாகனத்தை ஓரமாக நிறுத்த, இருவரும் இடம் மாறி அமர்ந்து கொண்டனர்.

வாகனத்தின் கட்டுப்பாடு அவன் கைக்கு வந்த பின்பு தான் உயிர் வந்தது ரிஷிக்கு, மூச்சை உள்ளிழுத்து ஆசுவாசம் கொண்டவன் அதுவரை அனுபவித்த படபடப்பை தணிக்க, வானொலியை உயிர்பித்தான். காரின் உள்ளே நிலவிய அமைதியை கிழித்து கொண்டு வந்து விழுந்தது “வானம் எங்கும் உன் பிம்பம்” என்ற வரிகள்.

இமை மூடியவனின் திரையில் வந்து வரிசை கட்டி நின்றன அவள் நினைவுகள், சட்டென தலையை உலுக்கி கொண்டவன்,

“இப்போ இது எதுக்கு தேவையில்லாத தலைவலியா?, இதை கொஞ்சம் ஆஃப்  பண்றியா” என்றான் எரிச்சல் மண்டிய குரலில். 

“ஏண்டா நல்ல பாட்டு தானே  இந்த பாட்டு முடியிற வரைக்கும் ப்ளே ஆகட்டும்” என்றவன் நந்தனின் முறைப்பை கண்டு, “நீயும் பேச மாட்ட நா பேசினாலும் கேட்க மாட்ட இதாவது புலம்பிட்டு வரட்டுமே” என்றான் ரிஷி.

“ப்ச் சொன்னா கேட்க மாட்ட ஆஃப் பண்ணுன்னா பண்ணனும்” என்றவன் வேகமாக வானொலியை அமர்த்திட,

“ஏன் நந்து இப்டி இருக்க நீ தான் ரசிக்க மாட்டிங்கிற அட்லீஸ்ட் நானாவது கேட்டுட்டு போறேன்னு விடுறியா நல்ல சாங்” என்று குறைபட்டு கொள்ள,

“ரோட்டை பாத்து வண்டி ஓட்டு இல்ல நா டிரைவ் பண்றேன் நீ இந்த பக்கம் வா” என்றதும் “வேணாம் நானே டிரைவ் பண்றேன் ஒத்த பாட்டுக்கு ஆசைப்பட்டு உசுரை விட முடியாது” என்றான் தீவிரமாக.

அவன் பாவனை சிரிப்பை உண்டு பண்ண அடக்கி கொண்டவன் “வண்டிய ஸ்டார்ட் பண்ணி கிளம்பு” என்றான் அபிநந்தன்.

‘வாய்விட்டு சிரிச்சா தான் என்னவாம் எல்லாத்தையும் உள்ளயே வச்சுக்கிட்டு மருக வேண்டியது’ என்று எண்ணியவன் வாகனத்தை இயக்கினான்.

சற்று தூரம் இருவரும் பேசவில்லை, ரிஷியின் மனம் அமைதியில் அல்லல்பட, 

“என்னடா முடிவு பண்ணிருக்க”என்று காரை வளைத்து திருப்பிய வண்ணம் கேட்டான்.

எதை கேட்கிறான் என்பதை அறிந்தவன் “ஆல்ரெடி எடுத்த முடிவு தான் ரிஷி அதுல எந்த மாற்றமும் இல்ல இப்போதைக்கு அக்காகிட்ட எதுவும் சொல்ல வேணாம், விஷயம் தெரியும் போது தெரியட்டும் அந்த ஆள் எப்டி போனா என்ன?, எனக்கு என்னோட அக்கா லைஃப் தான் முக்கியம்” என்றவனின் குரலில் அத்தனை திண்ணம்.

“டிவோர்ஸ் பேப்பர்ல சைன் வாங்கணுமே எப்டி வாங்க போற அக்கா கேட்டா என்ன சொல்லுவ?”.

“அந்த ஆள் செத்துட்டாருன்னு சொல்வேன் அவன் ஒரு மனுஷன்னு அவன பத்தி பேசிட்டு இருக்க, போதும் ரிஷி அவன பத்தி நினைக்க கூட நா விரும்பலை. அவன் யாரை வேணாலும் கல்யாணம் பண்ணிகட்டும் என்ன வேணாலும் பண்ணி தொலையட்டும் எனக்கு கவலை இல்லை இனிமே இதை பத்தி பேச வேணாம்” என்று முடிவாக கூறிட, 

‘எதற்கெடுத்தாலும் கோபம் கொள்கிறானே’ என நினைத்து, அமைதியாக வாகனத்தை செலுத்தினான் ரிஷி.

ஆனால் நந்தனின் மனம் அமைதியை இழந்து விட்டிருந்தது. கவிதாவிடம் உண்மையை, எப்படி எடுத்து சொல்லி புரிய வைப்பது என தெரியமால் மருக்கினான்.

“இந்தா அவளை கையெழுத்து போட்டு தர சொல்லு பிடிவாதம் பண்ணாம சொல்றதை செஞ்சா ஜீவனாம்சமாவது மிஞ்சும் இல்லன்னா அதுவும் கிடைக்காது” என்று கவிதாவின் கணவன் சுரேந்திரன் பேசிய பேச்சுகள் இடைவிடாமல், இம்சித்தது.

கவிதாவை அவனுடன் சேர்த்து வைக்கும் எண்ணம் துளியும் நந்தனுக்கு இல்லை ஆனால் அவள் என்ன நினைக்கிறாள் என்பது தெரியாமல் தானாக எந்தவொரு முடிவிற்கும் வர முடியாதே, விரும்பி ஏற்று கொண்டவன் இல்லை என்றாலும் இத்தனை வருடம் அவனுடன் வாழ்ந்தவள் என்ன சொல்வாளே விஷயத்தை சொன்னால் தாங்கி கொள்வாளா? என்ற எண்ணம் மட்டுமே அந்த சின்னஞ்சிறு  மூளையில் சுழன்று கொண்டிருந்தது.

காரை போர்டிகோவில் நிறுத்திவிட்டு இறங்கிய ரிஷி காரின் உள்ளே அமர்ந்திருத்தவனை புருவம் நெறிக்க பார்த்தவன், 

அவன் பக்க கதவை திறந்து “டேய் இறங்காம என்ன யோசனை பண்ணிட்டு இருக்க வீடு வந்துருச்சு” என்று நடப்புணர்த்த,

“ஒன்னுமில்ல” என உரைத்தவன் அலுவலக பையை எடுத்து கொண்டு கதவை சாத்த, வாகனத்தின் சத்தம் கேட்டு வெளியே வந்தார் முத்து.

“வாங்க தம்பி இன்னைக்கு என்ன லேட்” என்றவாறே பையை வாங்கி கொண்டவர் “குளிச்சிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என உள்ளே சென்றுவிட்டார்.

இல்லம் வந்தால் முத்துவின் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத கவனிப்பும், ஸ்கூபி ஸ்மோக்கியின் பாசமும் தான் ஆறுதல் அளிக்கும் விஷயங்கள். 

நாய்குட்டிகள் இரண்டும் நாந்தனின் காலை சுற்றி வர புன்னகையோடு இரண்டையும் கையில் எடுத்து கொண்டவன் “சாரி இன்னைக்கு கொஞ்சுற மூட்ல இல்லை அதனால சமத்தா உங்க இடத்துக்கு போங்க” என இறக்கிவிட,

“ஆமா ஐயா இன்னைக்கு மீள முடியாத சோகத்துல இருக்காரு, நீங்க ரெண்டு பேரும் கம்முன்னு போய் உக்காருங்க” என்று வெறுப்பேற்றும் விதமாய் பேச, முறைப்பை காட்டினான் நந்தன்.

“ப்ச் இந்த முறைப்பெல்லாம் இங்க வேணாம் கொஞ்சுறதுக்கு மூட் இல்லையாம் போடா.., எவ்ளோ ஆசையா உன்ன சுத்தி வருதுக அதுககிட்ட கொஞ்ச நேரம் விளையாடி ரிலாக்ஸ் ஆவியா மூட் இல்ல மந்திரம் இல்லன்னு சொல்லிட்டு இருக்க, போ போய் சோக கீதம் வாசி அப்ப தான் எல்லா பிரச்சனையும் சரியாகும்” என்றான் சிறு கோபத்தை தாங்கிய முறைப்புடன்.

அவன் வாதம் சரியென்றாலும் அதை பற்றி அவனுடன் விவாதிக்க தோன்றவில்லை, நந்தன் வேகமாக மாடியேறி செல்ல, அவன் பின்னோடு ரிஷியும் சென்றான். இருவரும் குளித்துவிட்டு இரவு உடைக்கு மாறி கிழே வர, உணவு டேபிளில் பாத்திரங்களை பரப்பி வைத்திருந்தார் முத்து.

“என்ன முத்து ண்ணே ஸ்பெஷலா சமைச்ச மாதிரி இருக்கு என்ன விசேஷம்”, ரிஷி கேட்க,

“விசேஷம் எதுவும் இல்ல தம்பி எப்பவும் போல தான் சமைச்சிருக்கேன் என்னைக்காவது ஒரு நாள் வர்றிங்க அதான் உங்களுக்கு அப்டி தெரியிது” என்றவர் இருவருக்கும் தட்டை எடுத்து வைத்து சப்பாத்தியை பரிமாறினார்.

“வாவ் சூப்பர் முத்து ண்ணா பாக்கும் போதே நாக்குல எச்சி ஊறுது” என்று கைகளை பரபரவென தேய்த்து கொண்ட ரிஷி, சப்பாத்தியை காய்கறி சொதியில் குளிப்பாட்டி வாய்குள் திணிக்க, அதுவரை நமத்து போயிருந்த நாக்கிற்கு சுவை உணச்சிகளை அளித்தது.

சுவாரஸ்யமின்றி உணவை வெறித்து கொண்டிருந்தான் நந்தன்.

“தம்பி சாப்டாம என்ன யோசனை பண்ணிட்டு இருக்கீங்க, சாப்டுங்க” என முத்து ஊக்க, 

“அதானே சாப்டாமா தட்டுல கோலம் போட்டுட்டு இருக்க சாப்டுடா ஏற்கனவே சொன்னது தான். எதையும் யோசிச்சிட்டே இருந்தா சரியாகாது என்ன பண்ணனுமோ அதை பண்ணு, இப்போ முத்து ண்ணா சமையலை மிஸ் பண்ணாம சாப்டு செம்ம டேஸ்டா இருக்கு நந்து” என்றதும் உணவை விழுங்க தொடங்கினான் அபிநந்தன்.

“டேய் ரகுபதி மாமா பையன் கல்யாணத்துக்கு எப்போ கிளம்புற நாளைக்கு ஈவ்னிங் ரிசப்ஷன்” நந்தனின் மனதை இயல்பாக்க பேச்சை திசை திருப்பினான் ரிஷி.

“போகவா வேணாமான்னு யோசனையா இருக்குடா அங்க போய் நா என்ன பண்ண” என விட்டெரியாக பேச,

“கல்யாணத்துக்கு எதுக்கு போவாங்க நீ பேசுறதை கேட்டா எனக்கு தான் கடுப்பாகுது”  என்றான் ரிஷி பல்லை கடித்தபடி.

Advertisement