Advertisement

அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் பரிமளம். மனதின் கொதிப்பு தீருமட்டுமில்லை,

‘என்னமா பேசிட்டு போயிட்டான் அவனோட வயசு என்னோட அனுபவம் ஏ முன்னாடி கை நீட்டி கேள்வி கேட்டுடானே, என்னால தான் எம்பொண்ணோட வாழ்க்கை வீணா போச்சா, எந்த தாயாவது தன்னோட பொண்ணு நல்லா இருக்க கூடாதுன்னு நினைப்பாளா? நல்ல இடம் போற இடத்துல சந்தோஷமா வாழ்வான்னு தானே கல்யாணம் பண்ணி அனுப்பி வச்சேன் அந்த பாவி பையன் இப்டி பண்ணுவான்னு எனக்கு என்ன தெரியும்’ என்று மனதோடு குமைந்தார் பரிமளம்.

டைட் ஜின்சும் உடலை இறுக்கி அங்கத்தின் அழகை அபத்தமாய் காட்டிய சட்டையுமாய் படு ஸ்டைலாக கூலிங்கிளாசை கண் திரையில் இருந்து விளக்கியவள் அதை லாவகமாக சட்டையின் முன் பகுதியில் மாட்டி கொண்டு, பேண்ட் பாக்கெட்டில் இருந்த சுவிங்கத்தை பிரித்து வாயில் போட்டு கொண்டு, இருசக்கர வாகனத்தின் சாவியை ஆள்காட்டி விரலில் மாட்டி அதை சுழற்றி கொண்டே வீட்டினுள் நூழைந்தாள் அந்த நாகரிக மங்கை.

“ஆன்ட்டி பாரி ஆன்ட்டி” என்று பார்வையை நாலாபுறமும் அலைபாய விட்டபடியே பூஜை அறையின் பாக்கவாட்டில் திறந்திருந்த அறைக்குள் நுழைந்தவள்,

“நீங்க இங்க இருக்கீங்களா எத்தனை தடவை கூப்பிடுறது ஆன்ட்டி” என்று அவர் தோளில் கைவைத்து நடப்பு உணர்த்த, 

“நீ எப்போ வந்த ரஞ்சி”. 

“என்னாச்சு ஆன்ட்டி நா வந்தது கூட தெரியாத அளவுக்கு  அப்டி என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க”.

“ப்ச் என்னனு சொல்றது” என்று அலுத்து கொண்டவர் கட்டிலில் அமர்ந்து கொண்டு”காலையில இந்த நந்து பையன் வந்தான்” என்று சொல்லி முடிக்க,

“யாரு நம்ம நந்தனா நிஜமாவா ஆன்ட்டி அவரு இங்க வந்தாரா?” என்று அதிசயித்து கேட்டவளின் விழிகளும் புருவ மயிர்களும் அரை இன்ச் வியப்பில் விரிந்தன.

“அட இவ வேற, அவன் தான் வந்தான் நல்லா ஏறு ஏறுன்னு ஏறிட்டு போயிட்டான் எப்ப பாரு கடுவன் பூனையாட்டம் முகத்தை வச்சிகிட்டு” என்று முகத்தை சுண்டி வைத்து பேச,

“ஏன் ஆன்ட்டி அவர திட்டுறீங்க அவர் என்ன பண்ணார்” என்றாள் சுணங்கிய குரலில்.

“காலையில நடந்த கூத்து உனக்கு தெரியாதே, நீ தான்  இந்த வீட்டுக்கே வர்றது இல்லையே வந்தா தானே என்ன எதுன்னு தெரியும். நீயோ ஆடிகொரு முறை அமாவாசைக்கு ஒரு முறைன்னு எட்டி பாத்துட்டு போற” என்று நொடித்து கொண்டவர், 

“கவிதா புருஷன் டைவர்ஸுக்கு அப்ளே பண்ணிருக்கானாம் அதுக்கு என்மேல கோபப்டுறான். இப்படியெல்லாம் நடக்கும்னு எனக்கு என்ன முன்னாடியே தெரியுமா?, நல்ல பையன் நல்ல குடும்பம்னு நினைச்சு தான் கட்டி வச்சேன் அஞ்சு வருஷம் கழிச்சு அவள வேணாம்னு சொல்லி விவாகரத்து கேஸ் போட்டுருக்கான் பாவி. 

எல்லாம் என்னோட தலையெழுத்து வாச்சது தான் சரியில்லைன்னா வந்ததும் சரியில்லை நா ஒருத்தி உயிரோட தானே இருக்கேன் என்கிட்ட பிரச்சனைய சொல்றதுக்கு என்ன எதுகெடுத்தாலும் அவன் கிட்ட தான் போய் நிக்கணுமா?” என்று ஆற்றமாட்டாமல் வசைபாட,

ஏன் கேட்டோம் என்றாகிவிட்டது ரஞ்சனிக்கு. சளைக்காமல் வாய் பேசுபவரை காண எரிச்சலாய் இருந்தாலும், இடையில் குறுக்கிட்டால் மொத்த கோபமும் தன் மீது திரும்பி விடும் என்று அமைதியாகவே இருந்தாள்.

“சரி விடுங்க ஆன்ட்டி தேவையில்லாம நீங்க எதுக்கு டென்ஷன் ஆகிட்டு, நடக்குறது தான் நடக்கும் பாத்துக்கலாம் நீங்க கவிதா அண்ணிக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லுங்க”.

“ஏன் வாங்குனது பத்தாதா. மறுபடியும் வாங்கி கட்டிக்க என்னால முடியாது அவனே கவிக்கிட்ட எப்டி சொல்லணுமோ சொல்லிப்பான், சரி நீ என்ன விஷயமா வந்துருக்க அதை முதல சொல்லு” என்றவர் அவள் முன்னே தன் அருமை பெருமையை காட்ட வேண்டி,

“ஏய் காவேரி குடிக்க ஜூஸ் கொண்டாடி சீக்கிரம் கொண்டா” என்று பணி பெண்ணிடம் உத்தரவை பிறப்பிக்க, சரி என்று மறுகுரல் கொடுத்தவளுக்கு புரிந்து போனது. 

சீக்கிரம் என்றால் எவ்வளவு தாமதமானாலும் சரி பொறுமையாக, வந்தவள் சென்ற பின்பு கொண்டு வாவென அர்த்தம் கொள்ள வேண்டும் என்று.

“இதுக்கு வேற வேலையே இல்ல எப்ப பாரு அதை கொண்டு வா இதை கொண்டு வான்னு உசுர வாங்குது. ஜுஸ் கேட்க வேண்டியது எடுத்துட்டு போனா எதுக்குடி கொண்டு வந்தன்னு திட்ட வேண்டியது, இந்தம்மா வீட்டுல வேலை பாக்குறதுக்கு வேலையே வேணாம் சரி தான் போமான்னு போயிடலாம்ன்னு தோணுது” என்று தனியாக புலம்பியவள் பிரிட்ஜில் இருந்த ஆரஞ்சு பழத்தை எடுத்து தோல் உரிக்க தொடங்கினாள்.

“சும்மா உங்கள பாத்துட்டு போலாமேன்னு..” என்று ரஞ்சனி ராகம்  இழுக்க,

‘சோழியன் குடுமி சும்மா ஆடுமா’ என்று மனதில் நிந்தனையாய் எண்ணி கொண்டவர் “உன்ன பத்தி எனக்கு தெரியாதா, சொல்லு நந்தன் விஷயம் தானே? அதுக்கு தானே மெனாகெட்டு என்ன பாக்க வந்திருக்க” என்று பல்லை காட்டினார் பரிமளம்.

“ஆமா” என்று வெட்க புன்னகை சிந்தியவள் “ஆன்ட்டி உங்க பிளான் என்னனு இப்ப வரைக்கும் என்னால யூகிக்க முடியலை எப்டி எனக்கும் நந்தனுக்கும் மேரேஜ் பண்ணி வைக்க போறீங்க அதை நினைச்சாலே தூக்கம் வர மாட்டேங்கிது” என்று, வெட்கம் ததும்பிய முகத்தில் கவலை வந்து குடியேறிட,

“நானும் அதுக்கான சந்தர்ப்பம் தான் பாத்துகிட்டு இருக்கேன் பையன் சிக்க மாட்டிங்கிறான், என்ன பாத்தாலே முகத்தை உர்ருன்னு வச்சுகிறான். சரி இந்த ரிஷி பையனாவது அவனுக்கு எடுத்து சொல்லி புரிய வைப்பான்னு பாத்தா அவனுக்கு மேல இருக்கான் இவன். கொஞ்சம் விட்டு பிடிப்போம் எங்க போயிட போறான்” என்று மெத்தனமாக பேச,

“அப்டி நினைக்காதீங்க ஆன்ட்டி நந்தனை பத்தி உங்களுக்கு சரியா தெரியலை அதைவிட இந்த ரிஷிய பத்தி உங்களுக்கு அவ்வளவா தெரியாது, நண்பனுக்காக என்ன வேணாலும் பண்ணுவான் அன்னைக்கு ஏதோ நம்ம ட்ராமவ நம்பி நமக்கு உதவி செஞ்சான் அப்ப போலவே இப்பவும் நமக்கு சாதகமாக நம்ம பக்கம் இருப்பான்னு நினைக்க கூடாது,

நந்தன் சும்மா இருந்தாலும் ரிஷி அமைதியா இருக்க மாட்டான் அவ எங்க இருக்கா என்ன பண்றான்னு நமக்கு தெரியாம நோட்டம் விட்டுட்டு தான் இருப்பான் அவனை குறைச்சு எடை போட்டுடாதீங்க” என்று பயத்தை காட்டியவள், 

“அவளுக்காக நந்தன் என்ன வேணாலும் பண்ணுவாரு, அவ காணாம போய் அஞ்சு வருஷமாச்சு ஆனா இப்ப வரைக்கும் அவள தான் நினைச்சுகிட்டு இருக்காரு அவ நினைப்புல தான் வாழ்ந்துட்டு இருக்காரு. முதல அந்த நினைப்ப மாத்தணும் அப்ப தான் நாம பிளான் பண்ண மாதிரி எல்லாம் நடக்கும்” என்றாள் தீவிரமான குரலில் குரூரம் கலந்து.

“நீ சொல்றது சரி தான் யாரையும் நம்பி செயல்ல இறங்க கூடாது நமக்கு என்ன தோணுதோ அதை செஞ்சிட்டு போய்கிட்டே இருக்கணும். எனக்கு காரியம் ஆகணும் அது எப்டி யாரால நடந்தா என்ன? நீ என்ன பண்ணணுமோ பண்ணு ரஞ்சி நீ செய்ய போற காரியத்தில எப்பவும் 

உனக்கு துணையா நா இருப்பேன், கவிக்கிட்டயும் இந்த விஷயத்தை போட்டு வைக்கிறேன் அவ சொன்னா நிச்சயம் அவன் கேட்பான்” என்று நம்பிக்கை அளிக்க,

“ரொம்ப தங்கஸ் ஆன்ட்டி, நா ரெண்டு நாள் கேரளா ட்ரிப் போறேன் போயிட்டு வந்து பாத்துக்கலாம் அப்பப்ப இங்க நடக்குறதை எனக்கு அப்டேட் பண்ணுங்க” என்று எழுந்து கொண்டாள் ரஞ்சனி.

“இரும்மா ஜூஸ் குடிச்சிட்டு போ உனக்கும் சேர்த்து தான் சொல்லிருக்கேன்” என்றவரை மெலிதாக புருவங்கள் நெறிக்க பார்த்தாள்.

‘தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்கவே ஆயிரம் முறை யோசிக்கும் எனக்கு ஜூஸ் சொல்லிருக்கா?, ம்ஹும் கூடவே குப்பை கொட்டுற எனக்கு தெரியாது’ என்று சில நிமிடங்கள் நிந்தனையில் சிந்தனையை ஓட விட்டவள் பெருந்தன்மையை முகத்தில் காட்டியபடி, 

“இருக்கட்டும் ஆன்ட்டி இன்னொரு நாள் சாவகாசமா பேசிட்டே ஜூஸ் குடிக்கலாம் நா கிளம்பிறேன் பேக் பண்ற வேலை இருக்கு”என்று விடைபெற்று கொண்டு சென்றுவிட,

‘எங்கே சரியென்று அமர்ந்துவிடுவாளே’ என்று எண்ணி பயந்தவருக்கு அவளின் மறுப்பு “ஹாப்பாடா” என்று பெருமூச்சை சொரிய வைத்தது.

பரிமளத்திடம் இருந்து எதையும் சுலபத்தில் வாங்கிவிட முடியாது அத்தனை கெடுபிடி, பணமாய் இருந்தாலும் சரி பாசமாய் இருந்தாலும் சரி. மகளின் வாழ்வையே பணத்தை கொண்டு தான் தீர்மானித்தார் அதன் பின் விளைவு தான் இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. அதை பற்றி துளியும் கவலை இல்லாது ரஞ்சனி சென்றதும் அருகிலிருந்த மேடாவை முன்னால் இழுத்து

அதில் வாகாக காலை நீட்டி கொண்டார் பரிமளம்.

வந்தவள் சென்று சில நிமிடங்கள் கடந்தும் வரவேண்டியது வரவில்லையே என்று ஆவலோடு அறை வாயிலை பார்த்தவர்,

“ஏய் காவேரி ஜூஸ் கொண்டாடி தொண்டை காஞ்சு போச்சு” என்று கடுப்பில் கத்த, அடுத்த நொடி அவர் முன்னே வந்து நின்றாள் காவேரி.

கிடைக்க போகும் மண்டகபடியில் இருந்து தப்பிக்க “இந்தாங்கம்மா ஜுஸ், ரெண்டு மூணு ஐஸ் கட்டி போட்டுருக்கேன் சும்மா ஜில்லுன்னு இருக்கும் குடிங்க டென்ஷன் குறையும்” என்று தாஜா பண்ணியவாறே கண்ணாடி டம்ளர் தழும்ப ஆரஞ்சு பானத்தை நீட்டினாள்.

முதல் மிடறு பருகியவர் பானத்தின் சுவையை வாயில் சில நொடி வைத்திருந்து தரம் பார்த்துவிட்டு “ஏண்டி இதை போடுறதுக்கு உனக்கு இவ்ளோ நேரமா?”என்று சிடுசிடுப்பை காட்ட,

“அப்பவே போட்டு வச்சிட்டேன் ம்மா நீங்க தான் லேட் ஆனாலும் பரவாயில்ல அந்த பொண்ணு போன பிறகு கொண்டு வான்னு சொல்லுவீங்களே அதான் காத்துட்டு இருந்தேன்” என்றாள் உள்ளே சென்ற குரலில்.

“சரி சரி மசமசன்னு நிக்காம நைட்டுக்கு டின்னர் ரெடி பண்ணு, லிஸ்ட் சொல்லிருந்தேனே எல்லா வாங்கிட்டு வந்துட்டியா” என்றார் பானத்தை அருந்தியபடி.

“ம் வாங்கிட்டேன் ம்மா”.

“சரி சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா எல்லாம் செஞ்சிருவ தானே?” என்று கேட்க, 

தலையயை சொரிந்தாள் காவேரி.’பே’வென அவள் விழித்த விழிப்பே சொல்லிற்று அனைத்தும் மறந்து போனாள் என்று.

Advertisement