Advertisement

இரவு ராகவன் வர தாமதமாகும் என்று முன்பே தெரிவித்து விட்டதால் மூவரும் இரவு உணவை விரைவாகவே முடித்து கொண்டனர். உணவை கொடுத்து சுபர்ணாவை உறங்க வைக்க தன்னுடன் அழைத்து சென்றுவிட்டார் சாரதா. ஒரு வயது வரை தான் வருணாவின் அணைப்பில் உறங்கினாள் சுபர்ணா. அதன்பிறகு வந்த இரவுகள் எல்லாம் சாரதாவின் மடி தான் அவரின் அணைப்பு தான்.

அறைக்கு சென்ற வருணா எப்போதும் போல நாட்குறிப்பில்  கிறுக்க தொடங்கினாள். கடந்த சில வருடங்களாகவே அவளுக்கு இது தான் அதிமுக்கியமான வேலை, எழுதவில்லை என்றால் உறக்கம் வராது மனதில் தோன்றுவதை எல்லாம் வடித்துவிட வேண்டும். உள்ளே இருந்தவைகளை காகிதத்தில் வடித்து கொண்டிருக்க,சுபர்ணாவை உறங்க வைத்து விட்டு அவள் அறைக்கு வந்தார் சாரதா.

என்னம்மா பாப்பா தூங்கிட்டாளா?, எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு அதை முடிச்சுட்டு தூங்குறேன் நீங்க போங்கஎன்றாள் பார்வையை நிமிர்த்தாமலே.

வந்தவர் எதுவும் பேசாமல் தயங்கி நிற்கவும் நிமிர்ந்து பார்த்தவள்என்னம்மா ஏதாவது சொல்லானுமா?”என கேட்க,

ஆமா வருணா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்என்றதும் நாட்குறிப்பை மூடி ஓரமாக வைத்தவள்,

சொல்லுங்க என்ன பேசணும்என நேரடியாக விஷயத்திற்கு வர,

ரவிய பத்தி நீ என்னம்மா நினைக்கிறஎன மெதுவாக மனதில் உள்ளதை வெளிப்படுத்த தொடங்கினார் சாரதா.

என்ன நினைக்கிறேன்னா எனக்கு புரியலை ம்மா? அவர பத்தி நினைக்க என்ன இருக்கு நல்ல மனுஷன். பிரதிபலன் பார்க்காம உதவுற குணம் உள்ளவரு, நல்ல கேரக்டர் மொத்தத்துல நல்ல மனுஷன். இதுல நா மட்டும் குறிப்பிட்டு நினைக்கிறது என்ன இருக்கு, அவர பத்தி உங்களுக்கு தெரியும் தானே?” என பேசியவளிடம் விஷயத்தை சொல்ல முடியாமல் மருகினார்.

நா சொன்னா நீ தப்பா எடுத்துக்க கூடாது வருணா அந்த தம்பி ரொம்ப நல்ல பையனா தெரியிறான், பாப்பா கிட்ட கூட நல்ல விதமா பழகுறான் பேசுறான்என தயக்கத்துடன் பேச,

அவரின் இயல்பை மீறிய பேச்சு ஐயத்தை விளைவிக்க, “அதுக்கு?” என்று பார்வை இடுங்க அவரை ஏறிட்டவள் அடுத்து கூறிய செய்தியில் சற்று திடுகிட்டுத்தான் போனாள் வருணா.

ம்மா என்ன பேசுறீங்க யோசிச்சு தான் பேசுறீங்களா? அவர் கூட போய், ச்சே எப்டிம்மாஎன்றாள் ஆவேசமாக.

ஏன் அந்த தம்பிய கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னடி என்னமோ உலகத்துல யாருமே செய்யாத விஷயத்தை செய்ய சொல்ற மாதிரி பேசுற. உனக்கு துணையா மட்டுமில்லாம பாப்பாவுக்கும் அப்பா கிடைச்ச மாதிரி இருக்கும் எத்தனை நாளைக்கு இப்டி தனியா இருப்ப உனக்குன்னு சொல்லிக்க ஒரு உறவு வேணாமாஎன வேகமாக தொடங்கி ஆதங்கத்தில் முடித்தார் சாரதா.

அவரின் பேச்சு அவளுக்குள் அருவருப்பை ஏற்படுத்த, விசுக்கென எழுந்து கொண்டவளுக்கு ஆத்திரத்தை கட்டுபடுத்த முடியவில்லைஎனக்கு துணை வேணும்ன்னு நா கேட்டேனா இல்ல பாப்பா அப்பா வேணும்ன்னு கேட்டாளா?,

உங்களுக்கு நா இங்க இருக்குறது பாரமா இருந்தா சொல்லிருங்க எங்கயாவது போயிடுறேன்!” என ஆத்திரமும் அழுகையும் ஒன்றுசேர பேசினாள் வருணா.

என்னடி இப்படியெல்லாம் பேசுற? உன்ன பாரமா நினைப்பேனா நீ தனியா இருந்து கஷ்டப்படுறத பாக்க முடியல. என்னோட காலம் முடியிறதுக்குள்ள உனக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுத்துட்டா எனக்கு நிம்மதியா இருக்கும்

உனக்கு நல்லது நடக்காம கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்றான் உன்னோட அண்ணே அவனுக்கும் வயசு ஏறிட்டு இருக்கு அதை அவனும் புரிஞ்சுக்க மாட்டிங்கிறான் நீயும் பிடிவாதம் பண்ற உங்க ரெண்டுபேருக்கும் நடுவுல நான் தான் கிடந்து தவிக்கிறேன்என ஆற்றாமையில் மனதை அழுத்திய வார்த்தைகளை கொட்டினார் சாரதா.

இப்போ ரவிக்கு என்னடி குறைச்சல் அவன கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கென்ன கஷ்டம்“.

அவர் பேச பேச உள்ளே இருந்த ஜீவன் அனைத்தும் வற்றி போனதாய் உணர்ந்தாள் வருணா.

கஷ்டம் தான் ம்மா மனசார ஒருத்தர விரும்பி கல்யாணம் பண்ணி ஒரு மாசம் மட்டுமே வாழ்ந்திருந்தாலும் ஒரு யுகம் வாழ்ந்தத இப்ப வரைக்கும் நினைச்சு திருப்தி பட்டுகிட்டு இருக்குற எனக்கு கஷ்டம் தான்சந்தர்ப்ப சூழ்நிலையால இப்ப வரைக்கும் பிரிஞ்சு இருக்குற எனக்கு இன்னொருத்தர கல்யாணம் பண்ணிக்கிறது ரொம்ப கஷ்டம் தான்என வெறுமையாய் உரைத்தவள்,

ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல சட்டுன்னு தூக்கி எறிஞ்சிட்டு எனக்குன்னு ஒரு வழிய பாத்துட்டு போறதுக்கு, ஒரு மாசம் அவர் கூட குடும்பம் நடந்திருக்கேன் அந்த மாதிரி ஒரு வாழ்க்கை யாருக்கும் அமையாதும்மா. அப்டி ஒரு வாழ்க்கைய கொடுத்த அவர மறந்துட்டு வேற ஒரு வாழ்க்கைய அமைச்சுக்கு சொல்றிங்க? அவரு எனக்கு துரோகம் பண்ணிருக்கலாம் அதையே நானும் பண்ணனுமா? அவர நா உண்மையா நேசிச்சேன் ம்மா,

அவர் கூட நா வாழ்ந்ததுக்கான அடையாளமா என்னோட குழந்தை இருக்கா, அதுவே போதும். அவள வளர்த்துகிட்டே என்னோட வாழ்க்கைய ஓட்டிருவேன் தயவு செய்து இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்தாதீங்க இந்த பேச்சை இப்டியே விட்ருங்க ம்மா

அண்ணனோட கல்யாணத்துக்கு என்னைக்கும் நா தடையா இருக்க மாட்டேன், ஒருவேளை நா இங்க இருக்குறது தான் அவரோட வாழ்க்கை ஆரம்பிக்கிறதுக்கு தடையா இருக்குன்னா நா இங்க இருந்து போயிடுறேன் யாருக்கும் பாரமாவோ சங்கடத்தையோ கொடுக்க எனக்கும் விருப்பமில்லைஎன்றவள்என்னோட மனச காயப்படுத்தாமா முதல இங்க இருந்து போங்கம்மாஎன கோபத்தில் எரிச்சலை காட்டி பேசினாள் வருணா

நா வாயவே திறக்க கூடாது ஏதாவது சொன்னா இதை சொல்லி வாய அடைச்சிறு. போறேன் நா வாங்கிட்டு வந்த வரம் அப்டி பொத்ததுக சந்தோஷமா இருக்குறதை பாக்க இந்த ஜென்மத்துல எனக்கு கொடுப்பினை இல்லைஎன மூக்கை உறிஞ்சி கொண்டே சென்றுவிட்டார் சாரதா.

அவர் சென்றதும் கதவை அறைந்து சாத்தியவள் அக்கதவில் சாய்ந்தபடி சரிந்து அழத் தொடங்கினாள்.

ஏன் இப்டி பண்ணிங்க அபி உங்களுக்கு நா என்ன பாவம் பண்ணேன். எனக்கு துரோகம் பண்ண எப்டி உங்களுக்கு மனசு வந்துச்சு உங்கள போய் உயிரா நினைச்சு உருகி உருகி காதலிச்சேனே அதை நினைச்சாலே கேவலமா இருக்குஎன புதையலாய் புத்தகத்தில் பதுக்கி வைத்த அவன் புகைப்படத்தை எடுத்து கண்ணீரில் கரைந்தாள் வருணா.

அழுது கொண்டே தன்னையும் மறந்து உறங்கி போனவள் அதிகாலை ஆதவன் விழித்த நேரம் உறக்கம் கலைந்து எழும் போதே சிரத்தின் இருபுறமும் விண்விண்னென்று வலிக்க தொடங்கியது.

இரவு சாரதா பேசிய பேச்சுக்கள் மெல்ல நினைவில் அசைபோட, அடுத்த நொடி மனம் சோர்வை அப்பி கொண்டது. ‘நினையாதேஎன்று வலிய வற்புறுத்தினாலும்,  ‘நினைப்பேன் அவனை தான் நினைப்பேன்என்று அடங்காத மனம் அவன் நினைவை அதிகமாய் அள்ளி தெளித்து, மனம் மொத்தத்தையும் ஆக்கிரமித்திருந்தது.

இத்தனை நாள் அடக்கி அதட்டி வைத்த அவனின் திருமுகம் நினைவை தீண்டிட, முதன் முதலாக அவனை சந்தித்த தருணம் பசுமரத்தாணியை போல நினைவில் உயிர்தெழ,

வேணா வருணா ப்ளீஸ் நினைக்காத நீ தூக்கி போட்டது போட்டதாவே இருக்கட்டும் இத்தனை நாள் எப்டி இருந்தியோ அப்டியே இரு அது தான் உனக்கு நல்லதுஎன மூளை எச்சரிக்க, அவன் மீது சரிய தொடங்கிய மனதை இறுக்கி இழுத்து பிடித்தாள்.கடிவாளமிட்டு நிறுத்த மனம் என்ன குதிரையா?. 

அவனை பற்றிய எண்ணமே தோன்ற கூடாது என்பதற்காகவே பள்ளியிலேயே செய்து முடிக்க வேண்டிய வேலைகளை இல்லத்தில் வைத்து செய்வாள் வருணா.

வேலைக்கு சென்றதற்கு காரணமே அவன் தான். கனிவாய் காதலாய் அக்கறை காட்டி பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும்.பொய்யான அன்பில் சிலிர்க்க வைத்து சிணுங்க வைத்த பல இரவுகளும் என துன்பத்தை தூபம் போடும் நாட்கள் எல்லாம் தூங்கா இரவு தான் அவளுக்கு.

சில நேரங்களில் அனுமதியில்லாமல் தொற்றி கொள்ளும் அவன் நினைவில் தவியாய் தவித்து போவாள் வருணா. ‘ஏமாற்றிய ஒருவனுக்காக தவிப்பாதா மானம் கெட்ட மனதுஎன அடுத்த நொடியே தன்னை நொந்தும் கொள்வாள்.

பள்ளிக்கு செல்வோமா? வேண்டாமா?’ என மனம் பட்டிமன்றம் நடத்த, ‘எழுந்து வேலைக்கு செல்வது தான் உசிதம் சிவனே சிவனே என இருந்தாலும் அவனே அவனேஎன அவன் பின்னொடு தான் மனம் செல்லும் என்று மூளை இடித்துரைக்க,

அதுவும் சரிதான் வீட்டில் இருந்தால் தேவையில்லாத நினைவுகள் தான் தோன்றும். அடிபட்ட மனதிற்கு அம்மா என்னும் ஆயுர்வேத மருந்து, மேலும் வலியை தான் கூட்டும் பள்ளிக்கு சென்றலாவது வேலையில் ஈடுபட்டு சற்று ஆறுதல் அடையலாம்என்று எண்ணியவள் படுக்கையை விட்டு எழுந்து அன்றாட வேலையில் கவனம் செலுத்தினாள்.

கர்வமும் கம்பீரமும் மிளிர அழுத்தமான நடையுடன் முகத்தில் புன்னகையை பூசிக்கொண்டு அலுவலகத்தின் உள்ளே வந்தவனை கண்டு பணிபுரிபவர்கள் எழுந்து வணக்கம் தெரிவிக்கஒவ்வொருவருக்கும் தலை அசைத்து வணக்கத்தை ஏற்று கொண்டவன் அவனுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் மறைந்து கொண்டான்.

ஏசியை ஆன் செய்து மிதமான நிலையில் வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தவன் அலைபேசியை எடுத்து பார்க்க, நந்தனிடமிருந்து பல வாட்ஸ்அப் செய்திகள். செய்திகளை பார்த்த அடுத்த நொடியே அவனுக்கு அழைப்பு விடுத்தான் ரிஷி, நந்தனின் நண்பன்.

மறுமுனையில் அழைப்பை ஏற்றதும்சொல்லு ரிஷி?” என வேகமாக வார்த்தைகள் வந்து விழ,

நா சொல்றது இருக்கட்டும் நீ இன்னும் அங்க என்ன பண்ற? அக்கா பையன் கூட ஒரே குஷி தான் போல விதவிதமா போட்டோ எடுத்து அனுப்பிருக்க, யார்டா போட்டோ எடுத்தது பிக் எல்லாம் நல்லா இருக்குஎன அலைபேசியில் புகைபடத்தை ரசித்து கொண்டே பேசினான் ரிஷி.

தருண் தான் எடுத்தான், எடுத்தது மட்டுமில்லாம எனக்கே தெரியாம சோஷியல் மீடியால அப்லோட் பண்ணிட்டான்என்று அலுத்து கொண்டவன், “சாரிடா வர ரெண்டு நாள் ஆகும். நேத்து இன்ஃபார்ம் பண்ண மறந்துட்டேன். சரி டெண்டர் விஷயம் என்னாச்சு? அமௌண்ட் கோட் பண்ணி அனுப்பிட்டியா அதை கேட்க தான் போன் பண்ணேன்“.

நேத்து ஈவ்னிங்கே சென்ட் பண்ணிட்டேன் நந்து. டெண்டர் நமக்கு தான் கிடைக்கும் நீ வொரி பண்ணிகாத, ரெண்டு நாள் இல்ல ரெண்டு வாரம் கூட தங்கி என்ஜாய் பண்ணிட்டு வா ஆபிஸ் வேலைய நா பாத்துகிறேன்என்று சொல்ல,

ரெண்டு வாரம் இங்க இருந்தா எனக்கு பைத்தியம் பிடிச்சிரும்என்று மறுமுனையில் சிரித்தவன்என்னோட பொக்கிஷம் எல்லாம் அங்க இருக்கும் போது இங்க என்னால இருக்க முடியாது ரெண்டு நாள் அவங்கள பிரிஞ்சு வந்துருக்கேன் பாவம் என்ன காணோம்னு இப்பவே கேட்க ஆரம்பிச்சுறுப்பாங்க“.

அதுவும் சரி தான் நீ இல்லன்னா அவங்க ரெண்டு பேரையும் சமாளிக்க முடியாது சீக்கிரம் வந்து சேரு, முத்து பாவம். நேத்து ஈவ்னிங் ரெண்டுபேரையும் சமாளிக்க முடியாம திணறி போயிட்டாருஎன்ற ரிஷி, பொதுவான விஷயங்களை பேசிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டான்.

இடை நிறுத்திய நடைபியிற்சியை மீண்டும் தொடர, மனம் சற்று லேசாய் இருப்பதாய் உணர்ந்தான் அபிநந்தன். ரிஷியிடம் பேசிய பிறகு புது தெம்பு தொற்றி கொள்ள, நடையின் வேகத்தை கூட்டியவன் வியர்வை சொட்டி வழியும் வரை பயிற்சியை தொடர்ந்தான்.

Advertisement