Advertisement

அவள் செயலை ஆசிரியர்கள் அறையில் இருந்து கண்கொட்டாமல் ரசித்து கொண்டிருந்தான் ரவி. மகிழ மரத்திடம் விடை பெற்று கொண்டு ஆசிரியர்கள் அறைக்குள் நுழைய,

“என்ன வருணா இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டீங்க. வீட்டுல கேட்டேன் அம்மா சொன்னாங்க” என்றவனுக்கு சட்டென புன்னகையை பதில் அளித்தவள்,

“ஆமா ரவி சார் கொஞ்சம் ரைட்டிங் ஒர்க் இருந்துச்சு காலையில சீக்கிரமா வந்து பண்ணிக்கலாமேன்னு வச்சுட்டு போய்ட்டேன் பாப்பாவ கூட அண்ணா தான் விட போயிருக்கான்” என்றவள்  கையிலிருந்த பேப்பர் கட்டில் கவனத்தை செலுத்தினாள்.

‘கேட்கும் கேள்விக்கு மட்டும் அளவான அமைதியான பதில்’ என்று எண்ணி கொண்டவன் இதழ்விரியா புன்னகையை உதிர்த்து விட்டு “சரி நீங்க வேலைய பாருங்க வருணா எனக்கு கிளாஸ் இருக்கு நா கிளம்புறேன்” என வெளியேறிட,

பேப்பர் கட்டுகளை புரட்டியவள் கவனம் மொத்தத்தையும் அதில் செலுத்தி கொண்டாள்.

ராகவனின் குடும்பம் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருக்கிறான் அவள் மீது தீராத காதல் கொண்டவன் ஆனால் ஒரு முறை கூட உரைத்ததில்லை பார்வையில் கூட கண்ணியத்தை மட்டுமே காட்டி வருகிறான். தான் வேலை பார்க்கும் பள்ளியிலேயே வருணாவிற்கும் வேலை வாங்கி கொடுத்திருந்தான் ரவி.

அன்றைய நாள் சுபர்ணாவிற்கு போதாதா நாள் போல, எப்போது மாலை வரும் மனை திரும்பலாம் என்று எதிர்பார்த்த குழந்தைகள் பள்ளி முடிந்துவிட்டதற்கான பெல்லை அடிக்க, நெல்லிக்காய் மூட்டையை கொட்டியது போல சிதறி கொண்டு ஓடின.சற்று நேரத்தில் பள்ளி வளாகம் வெறிச்சோடி போனது.

பள்ளி முடிந்ததும் மகளை வீட்டிற்கு அழைத்து வந்தவள் கோபமாக அறைக்குள் சென்றுவிட, என்றுமில்லாமல் அமைதியாய் அமர்ந்திருந்த பேத்தியின் அருகில் சென்று அமர்ந்தார் சாரதா.

“என்னடிம்மா என்னாச்சு எதுக்கு உன்னோட அம்மா கோபமா உள்ள போறா” என சுபர்ணாவிடம் மெதுவாய் கேட்க,

“அம்மாச்சி நா எதுவும் பண்ணல அவன் தான் முதல என்கித்த வம்பிழுத்தா அப்பவும் நா ஒதுங்கித்தான் போனேன்” என பாடம் ஒப்பித்தாள்.

“யாரு யார வம்பிழுத்தாங்க புரியிற மாதிரி சொல்லுடி தங்கம்”.

“இன்னைக்கு தா புதுசா சேந்துருக்கான். நா ஒரு ஓதமா தான் நதந்து போயித்து இருந்தேன் அம்மாச்சி அவன் தான் வேணுன்னே வந்து இதித்தான், எதுக்கு என்ன இதிக்குறன்னு கேத்ததுக்கு அப்தித்தா” என்றதில் அழுத்தம் கொடுத்தவள் “இதிப்பேன் என்ன பண்ணுவன்னு சொல்லி மதுபதியும் என்ன இதிச்சு தள்ளிவித்து போய்த்தான்” என உதட்டை பிதுக்கி கூறியவள்,

“நா மிஸ் கித்த காம்ப்லைன்த் பண்ணே, மிஸ் அவன எல்லார் முன்னாதியும் தித்தினாங்க. அதுக்கு ஈவ்னிங் ஸ்கூல் முதிஞ்சு வதப்போ என்னோத தலைமுதிய பிதிச்சு இழுத்தான் அம்மாச்சி. நீயே சொல்லு அம்மாச்சி ஒரு பொண்ணோத தலைமுதிய பிதிச்சா கோபம் வருமா வராதா?” என்று கேள்வி கேட்க,

“கண்டிப்பா கோபம் வரும் தங்கம்” என்றார் சாரதா.

“எனக்கு கோபம் வந்துச்சு அதான் அவன அதிச்சு தள்ளிவித்தேன், அத மிஸ் பாத்துதாங்க. அம்மாகித்த சொல்லிதாங்க அதான் கோவமா உள்ள போதாங்க” என பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கூறியவள்,

“நீயே சொல்லு அம்மாச்சி எம் மேல ஏதாவது தப்பு இதுக்கா” என சாரதாவிடம் நியாயம் கேட்க,

வெளியே நடந்த சம்பாஷணைகளை கேட்டு கொண்டிருந்தவள் வேகமாக அறையில் இருந்து வெளிவந்து  “அந்த பையன் தான் அடிச்சான்னா இவளும் திருப்பி அடிக்கணுமா?” என வேகமாக கேட்டு மகளை உறுத்து விழித்தாள் வருணா.

“சரி விடு கோபத்துல அடிச்சிட்டா இனிமே இந்த மாதிரி நடக்காது. நீ உள்ள போய் ட்ரெஸ் மாத்திட்டு வா காஃபி கொண்டு வறேன்” என மகளை அனுப்பி வைத்தவர்,

“நீ எதுக்கு தங்க முகத்த தொங்க போட்டு உக்காந்திருக்க போ போய் ட்ரெஸ் மாத்திட்டு வா உனக்கு பிடிச்ச பால் சாதம் செஞ்சு வச்சுருக்கேன்” என்றவர் வருணாவிற்கு காஃபியும் ஓம பொடியும் கொண்டு வந்து கொடுத்து விட்டு சுபர்ணாவிற்கு பால் சாதத்தை ஊட்டிவிட தொடங்கினார் சாரதா. 

பள்ளி முடிந்ததும் அழைக்க சென்றவளின் செவிகளில் விழுந்த செய்தியில் பன்மடங்கு பெருகிய கோபத்தை கட்டுபடுத்தி கொண்டு இல்லம் வந்தவள் காலணிகளை கழட்டி வீசி எறிய திக்திக் என தருணின் நெஞ்சம் துடித்தது.கையைகட்டி கொண்டு அழுவது போல முகத்தை வைத்து நின்று கொண்டிருந்தவனிடம் கோபத்தின் உச்சகட்ட ஸ்ருதியில் கத்த தொடங்கினாள்  கவிதா.

“காலையில சொல்லிதானே அனுப்புனேன் இப்போ இப்டி பண்ணிட்டு வந்துருக்கியேடா  என்னோட பேச்சுக்கு நீ கொடுக்குற மரியாதை இதுதானா?” என்றவள் அவனை அடிக்க கை ஓங்க, 

 இடை புகுந்து தடுத்தவன் “அடிக்கிற வேலை வச்சுக்காத க்கா ஏதோ விளையாட்டு தனமா பண்ணிட்டான் மன்னிச்சு விட்ரு. சின்ன பசங்க இன்னைக்கு சண்டை போடுவாங்க நாளைக்கு ஒன்னு சேந்து விளையாடுவாங்க அதையெல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது. நாளைக்கு அந்த பொண்ணோட அம்மாகிட்ட நா பேசிக்கிறேன் நீ ஃபிரியா விடு டென்ஷன் ஆகாத க்கா” என்றான் நந்தன்.

“எப்டிடா விட முடியும் அப்டியே அவன் அப்பன மாதிரியே முன்கோபம். இவன் நடந்துகிறத பாத்தா பயமா இருக்குடா எங்க அந்த ஆள் மாதிரியே வந்துருவானோன்னு” என அழுகையில் கூடினாள் கவிதா.

மருமகனை மாமனுடன் ஒப்பிட்டு பேசவும் சுறுசுருவென கோபம் உச்சந்தலைக்கு ஏற “என்ன பேசுற க்கா யார யார் கூட கம்பேர் பண்ற அந்த ஆளும் நீ பெத்த பிள்ளையும் ஒண்ணா?. அவன் உன்னோட வளர்ப்பு உன்மேல நம்பிக்கை இல்லையா ஏதோ பேசனும்னு கற்பனை பண்ணி பேசாத இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டான் நா அவன் கிட்ட பேசுறேன்” என தருணை அறைக்கு அழைத்து சென்றான் நந்தன்.

முகம் சோகத்தை பிரதிபலிக்க கண்கள் கலங்கி ததும்பி வடிய காத்திருந்தது.அமைதியாக அமர்ந்திருந்தவனிடம் “மாமா சொன்னா கேப்பியா தருண்”.

“சொல்லுங்க மாமா நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன்” என வாட்டம் நிறைந்த குரலில் சொன்னான் தருண்.

அவன் அருகில் அமர்ந்த நந்தன் “அம்மா பாவம் இல்லையா அவங்க அத்தனை தடவ சொல்லி தானே அனுப்புனாங்க. அம்மா சொன்னா அது உன்னோட நல்லத்துக்கு மட்டும் தான் சொல்லுவாங்கன்னு உனக்கே தெரியும் பின்ன எதுக்கு இப்டி பண்ண”.

“இல்ல மாமா அந்த பொண்ணு தான் மிஸ் கிட்ட போட்டு கொடுத்தா”.

“நீ பண்ண தப்ப அவ சொல்லிருக்கா உன்னவிட சின்ன பொண்ணு தான அட்ஜஸ்ட் பண்ணி போலமே தருண் காலையில அவ்ளோ பேசுன நீயா போய் தானே சண்டை போடுற மாதிரி நடந்துகிட்ட, நீ பண்ணது தப்பு தானே இப்போ உனக்கு புரியிதா என்ன பண்ணிருக்கோம்னு”.

“சாரி மாமா” என்று தலை குனிந்து கொண்டான் தருண்.

“பரவாயில்ல இனிமே அந்த பொண்ணு உன்னோட சிஸ்டர் ஓகே  அப்டி நினைச்சேனா அந்த பொண்ணு மேல கோபமே வராது பாசம் தான் வரும். நீ கூட அம்மா கிட்ட சின்ன பையனா இருக்கும் போது கேட்பியே எனக்கு தங்கச்சி பாப்பா வேணும்னு, இந்த பொண்ண உன்னோட சிஸ்டரா ஏத்துக்கோ இனிமே ரெண்டு பேரும் க்ளோஸா தான் இருக்கணும் ஓகே” என தருணின் தலையை கோதிய படி அவனுக்கு புரியும் விதமாய் எடுத்து கூறினான் நந்தன்.

“நிஜமா வா மாமா சொல்ற? அந்த பொண்ணு என்னோட சிஸ்டரா”. 

“நிஜமா தான்” என்றதும்,

நந்தனை கட்டிக்கொண்டு “தங்க்ஸ் மாமா” என்றான் தருண். அவன் முகத்தில் அத்தனை மலர்ச்சி.

“சரி அம்மா கிட்ட போய் சாரி கேளு பாவம் அவங்க” என கூறி அவனை அனுப்பி வைக்க, 

வேகமாக அறையில் இருந்து வெளிப்பட்டவன் “சாரி ம்மா இனிமே அப்டி பண்ண மாட்டேன் என்ன மன்னிச்சிருங்க இனி அவ என்னோட சிஸ்டர். மாமா இப்போ தான் சொன்னாங்க இனி சுபர்ணா கிட்ட மட்டுமில்ல யார்கிட்டயும் சண்டை போட மாட்டேன் பிராமிஸ் ம்மா. நா பண்ணது தப்புன்னு இப்போ புரிஞ்சுகிட்டேன் என்ன விட சின்ன பொண்ணு அவள தள்ளிவிட்டுருக்க கூடாது நாளைக்கு அவ கிட்ட சாரி கேட்டுறேன் சாரிம்மா…” என கவிதாவிடம் கெஞ்சி கொஞ்சினான் தருண்.

அவன் கெஞ்சல் மொழி கேட்டு வெளிய வந்த நந்தன் சிரிப்புடன் அவன் செயலை பார்த்து கொண்டிருக்க, நந்தனை பார்த்தவள் அவன்

தலையசைப்பை உத்தரவாய் ஏற்று கொண்டு “சரி அம்மா மன்னிச்சிட்டேன் இனி இந்த மாதிரி பண்ண கூடாது சரியா?”.

“ம் சரிம்மா” என்றபடியே கவிதாவை அணைத்துக் கொண்டான் தருண் உத்ராயன்.

பாசபிணைப்பை இளநகை பொங்க ரசித்து கொண்டிருந்தவன் “போதும், அம்மாவும் பிள்ளையும் அப்புறமா கொஞ்சிக்கோங்க. இப்ப எனக்கு பசிக்கிது சாப்பாடு எடுத்து வைக்கிறயா க்கா” என கேட்க,

“சாரிடா” என்றவள் டேபிளில் உணவு பாத்திரத்தை எடுத்து வைத்து பரிமாறினாள் கவிதா.  மூவரும் கலகலப்பாக பேசிக்கொண்டே இரவு உணவை முடித்தனர்.

படுக்கும் முன்பு இருவருக்கும் பால் காய்ச்சி கொடுத்தவள் “சரிடா நந்து நீ தூங்கு நாளைக்கு இவனுக்கு ஸ்கூல் உன்கிட்ட விட்டா நிச்சயம் தூங்க மாட்டான் விடிய விடிய ரெண்டு பேரும் கதை பேசிட்டு இருப்பீங்க நானே இவனை அழைச்சிட்டு போறேன் இன்னைக்கு என்கூட படுத்துக்கட்டும்” என தருணை அழைத்து கொண்டு அறைக்கு சென்றுவிட்டாள் கவிதா.

பெருமூச்சை சொறிந்தவன் எழுந்து சென்று பால்கனியில் நின்று கொண்டான் இரவின் நீட்சி இருமடங்கு இம்சையை கூட்டியது. அனுதினமும் நினைவில் அவளை அனுசரிப்பவனின் மனம் இன்று காரணம் தெரியாமல் தவிப்பை ஏற்படுத்தியது. எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்த மல்லிகையின் வாசனை நாசியை துளைத்து நுரையீரலை அடைந்து மூளையை விழிக்க செய்ய,

நினைவுகளை மெல்ல மெல்ல அபகரிக்க தொடங்கினாள் அவனின் அவள்.

மடியில் படுத்திருந்தவளின் தலையை வருடியபடி”வரும்மா உனக்கு மல்லிகை பிடிக்குமா?” என கேட்க,

“ம்ஹும் கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு சுத்தமா பூவோட வாசமே ஒத்துக்காது அபி. ஒரு மாதிரி தலைசுத்தம் வலிக்கும் ஆனா, இப்போ ரொம்ப பிடிச்சிருக்கு தினமும் வச்சுக்கணும்னு ஆசையா இருக்கு”,நாணத்துடன் சொன்னவளை ஆசையோடு பார்த்தான் நந்தன்.

“ஏன் என்ன காரணம்?”, வேண்டுமென்றே கேட்க,

“காரணம் நீங்க தான் அபி உங்களுக்கு பிடிச்சது எனக்கு பிடிக்காம போகுமா? அதுவும்..” என்றவள் வார்த்தைகளை முடிக்காமல் நிறுத்தி கொள்ள,

“அதுவும்” என அவளை போலவே கேட்டு நிறுத்தியவன் குறும்பு மின்ன அவளை பார்த்தான்.

அவனின் குறும்பான பார்வை ரசவாதங்களை பொங்கி எழ செய்ய, “ப்ச் போங்க அபி தெரியாத மாதிரி கேட்பீங்க” என்று கன்னம் சிவந்தவள் முகத்தை இரு கரம் கொண்டு மூடி கொள்ள,

“ப்ச் சொல்லு வரும்மா வாய் வரை வந்த வார்த்தைய சொல்லாம விட கூடாது சொல்லு?. அதுவும்?” என விடாமல் கேட்டு அவளை தவிப்பில் ஆழ்த்தினான் நந்தன்.

அவளின் வெட்கம் நிறைந்த முகத்தை காண தெவிட்டவில்லை நந்தனுக்கு “சொல்லு வரும்மா ப்ளீஸ் ப்ளீஸ் எனக்காக ஒரே ஒரு முறை சொல்லு அதுவும்?” என சொல்ல சொல்லி கேட்டு நச்சரிக்க,

எழுந்து அமர்ந்து கொண்டவள் “ப்ச் போங்க அபி என்னால சொல்ல முடியாது வேணா பாடி காட்டுறேன் சொல்றதை விட பாடுறது பெட்டர் அதுலயே புரிஞ்சுகோங்க” என்று குரலை சீர்படுத்தி சற்று நாணம் பூசிய விழிகளை தாழ்த்தி “மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..” என பாடியவள் அவனை காண முடியாது நந்தனின் நெஞ்சில் கண்புதைத்து கொண்டாள்.

சிரிப்போடு ஒட்டிய சிருங்காரம் வெளிப்பட்டது அவனிடத்தில். அணைப்பை இறுக்கி கொண்டவனிடமிருந்து விலக மனமில்லாமல் ஒன்றி போனவளை தன்னுள் அடக்கி கொண்டவனின் செய்கையில் திரவியமாய் கரைந்து போனாள் பெண்ணவள்.நெருக்கம் இணக்கம் பிணைப்பு காதல் அனைத்தும் கலந்து நீரும் வேறுமாய் இருந்த பட்சகளின் கடைசி இரவு அது தான். 

தலையை சிலுப்பி கொண்டவன் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு படுக்கையில் விழுந்தான். மல்லிகையோடு மனையாளின் வாசமும் தொற்றி கொள்ள நித்திரை தேவி அவனை தழுவிட வழித்தெரியாது தவித்து போனாள். அலைபேசியை எடுத்து இருவரின் மனதிற்கும் நெருக்கமான பாடலை ஒலிக்க விட்டவன் கண்களை மூடி ரசிக்க தொடங்கினான் அபிநந்தன்.

தரிசனம் தொடரும்..

Advertisement