Advertisement

மிதமான புன்னகை சிந்தி”எனக்குன்னு ஒரு வாழ்க்கை எனக்காக ஒரு உயிர் இருக்கு மலர் அவளுக்காக தான் இந்த வாழ்க்கை அவ இல்லன்னா எப்பவோ நா பைத்தியம் ஆகிருப்பேன்” என பார்வையை சுழல விட்டு புன்னகை பொதிந்த வண்ணமாய் “அதோ” என கைகட்டினாள் வருணா.

“என்னோட பொக்கிஷம் என்னோட பொண்ணு சுபர்ணா எனக்கு மறு வாழ்வு கொடுத்தவ” என ரசனையோடு உரைத்தவளை அதிர்ச்சி விலகாமல் பார்த்தாள் மலர்கொடி.

“என்னடி அப்டி பாக்குற?,இதழ்விரியா சிரிப்பை உதிர்த்து கேட்க,

“உனக்கு பொண்ணு இருக்கா? அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியா கொடுக்கிற வருணா இந்த விஷயம்  நந்தன் சாருக்கு தெரியுமா”, தயக்கம் இழையோட கேட்டாள் மலர்.

“அவருக்கு ஏன் தெரியணும்” என வேகமாக கேட்டவள் “முதல இருந்து ஆரம்பிக்காத ப்பா முடியலை” என்றாள் அவனை பற்றிய பேச்சை தவிர்க்கும் விதமாக.

“அழகா இருக்கா வரு சார் மாதிரியே நல்ல நிறம்” என மெய்மறந்து சொன்னவளிடம் முறைப்பை காட்டினாள் வருணா.

“சரி சரி முறைக்காத உன்ன மாதிரியும் தான் இருக்கா”என சமாதானம் செய்தவள்,

“இன்னைக்கு எங்க வீட்டுல தான் தங்குறீங்க ரொம்ப நாள் கழிச்சு பாத்துருக்கேன் போயிட்டு வாம்மா கண்ணுன்னு மண்டபத்துல பாத்து பேசின கையோட அனுப்பி வைக்க முடியாது. பேச நிறைய விஷயங்கள் இருக்கு வரு அவர்கிட்ட சொன்னா நிச்சயம் சரின்னு தான் சொல்வார்” வருணாவின் எண்ணம் என்னவென்பதை அறிந்து கொள்ள முற்படாமல் குதுகலமாய் திட்டமிட்டு பேசினாள் மலர்.

“சான்ஸே இல்ல நாளைக்கு காலையில ஊர்ல இருக்கணும் என்னால இங்க ஸ்டே பண்ண முடியாது ப்ளீஸ் ப்பா புரிஞ்சுக்கோ”என்றாள் வருணா இறைஞ்சும் குரலில்.

“முடியாது வரு நா முடிவு பண்ணிட்டேன் இந்த நாள் இன்றைய தினம் நமக்கானதா இருக்கட்டும் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றவள் கணவனை அழைத்து விஷயத்தை சொல்ல,

“உன்னோட விருப்பம் தான் என்னோட சந்தோஷம் தாராளமா அவங்களை நம்ம வீட்டுக்கு கூட்டுட்டு வா” என்றதோடு நில்லாமல், “எனக்காக நீங்க வீட்டுக்கு வரணும் வருணா மலர் வாடினா நானும் வாடிருவேன் ஏன்னா பசி தாங்க மாட்டேன்”, கூற்றின் அர்த்தம் விளங்காமல் முதலில் சிரித்தவள் இறுதி வாக்கியத்தில் போலியாய் முறைப்பு காட்டி யாரும் அறியாமல் அவன் கையில் கிள்ளினாள் மலர்கொடி.

வலியை பொறுத்து கொண்டவன் மலரை பார்த்து வலிக்காதது போலவே பாவனை  செய்தான்.

இருவரின் செய்கையும் வருணாவிற்கு சிரிப்பை வரவழைக்க “சரி சரி வீட்டுக்கு வறேன் என்னால உங்க நடுவுல பிரச்சனை வேணாம்” என இடையிட்டு சமாதானம் அறிவித்தாள் வருணா.

மலர் ராஜீவின் பேச்சு வருணாவை இயல்பாக்க சகஜமாய் பேச்சை தொடர்ந்தாள்.நீண்ட வருடங்களுக்கு பிறகு அவளின் இயல்பான குணம் அவளையும் மீறி எட்டி பார்த்தது.

மண்டபத்தின் தோரனையை பார்வையிட்டவாறே முன்னால் சென்றவனை நிறுத்த, “நந்..” என அவசரமாக ஒலிக்க முற்பட்ட வார்த்தை அவன் பார்வையில் அடங்கி ஒடுங்கியது.

என்னவென பார்த்தவனிடம் “நீங்களும் வாங்க சேர்ந்தே கொடுக்கலாம்” என அழைத்தாள் ரஞ்சனி.

“நா வரலை நீ போயிட்டு வா நா அப்றமா கொடுத்துகிறேன் தலைவலிக்கிது கொஞ்ச நேரம் தனியா இருந்தா பெட்டரா இருக்கும்” என முகத்தில் அடித்தார் போல தணிவான குரலில் பேசியவனை கோபமாக பார்த்தாள்.

இத்தனை வெளிப்படையாய் தன்னை யாரும் அவமதித்தது இல்லை அதுவும் பொது வெளியில் என்ற எண்ணம் கடுப்பை உண்டாக்க,

“நா போறேன்” என்று விறுவிறுவென ரஞ்சனி முன்னே சென்றிட,

தலையை உலுக்கி கொண்டவன் ஓரமாய் யாரும் கண்டு கொள்ளாத இடத்தில் சென்று அமர்ந்து கொண்டான்.

கூட்டத்தில் அத்தனை குழந்தைகள் ஓடி பிடித்து விளையாட,சற்று தள்ளி தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாச உணர்வை ஏக்கத்துடன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் சுபர்ணா.

நடந்தேறும் நிகழ்வுகளை சுவரஸ்யமின்றி வெறித்து கொண்டிருந்தவனின் கவனத்தை மழலையின் முகம் ஈர்க்க, எழுந்து அருகில் சென்று அமர்ந்தவன் அவளை போலவே  சோகமாக கன்னத்தில் வைத்து  அவள் பார்வை சென்ற திசையில் பார்வையை பதித்தான்.

மகளின் கொஞ்சலை சமாளித்து அவளை போலவே பாவனை காட்டி சிரிக்க வைக்கும் தந்தை மகளின் விளையாட்டை கண்டு, மெல்லிய புன்னகை சிந்தியவன்,

“என்னாச்சு குட்டி பொண்ணுக்கு” என்று கேள்வி தொடுக்க,

திடீரென கேட்ட ஆண் குரலில் கவனத்தை கலைத்து  திரும்பியவள் முகம் அறியாத ஆணை கண்டதும் அமைதியாய் எழுந்து செல்ல முற்பட்டாள்.

கை பிடித்து நிறுத்தியவன் “என்னாச்சுன்னு கேட்டேன் பதில் பேசாமா போனா நா என்ன மாதிரி அர்த்தம் எடுத்துகிறது”, சோகம் ததும்பிய முகத்துடன் கேட்டவனை அசராமல் பார்த்தாள் குழந்தை.

“தெரியாதவங்க கித்த பேச கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காங்க அதான் பேசாமா போறேன்” என்றாள் கள்ளமில்லா உள்ளத்துடன்.

“ஓ ஓ..” என புருவம் உயர்த்தி ராகம் இழுத்தவன், “தெரியாதவங்க கிட்ட தானே பேச கூடாது நாம ஒருத்தரை பத்தி ஒருத்தர் தெரிஞ்சுகிட்டு அப்றமா பேசலாம்” என கூற,

“ம்ஹும் அம்மா பாத்தா தித்துவாங்க” என பார்வையை நாலாபுறமும் உருட்டி விழிகளில் பயத்தை காட்டினாள் குழந்தை.

அவள் பார்வை கண்டு மனம் இளகியவன் “அம்மாகிட்ட நா பேசிக்கிறேன் பெரியவங்க சொன்னா திட்ட மாட்டாங்க, என்னோட பேர் அபிநந்தன் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா கூப்பிடுவாங்க உனக்கு எப்டி கூப்பிட தோணுதோ அப்டியே கூப்பிடு பேர் சொன்னா எனக்கு கோபம் வராது” என அவளை தன்னருகே அமர்த்தி கொண்டான்.

“பெரியவங்களை பேது சொல்லி கூப்பித கூடாது தப்பு. அம்மா சொல்லிருக்காங்க”, விழிகளை விரித்து அவள் கூறிய விதம் அவனுக்குள் இனம் புரிய இன்பத்தை அளித்தது.

அவளிடம் பேச அத்தனை பிடித்திருந்தது நந்தனுக்கு, அவள் பேச்சில் மனம் லயித்து இசையின் பரிமாணம் முற்று பெறுவதை போல வேதனை மறைந்து இதம் பரவுவதை உணர்ந்தான். காரணம் தெரியவில்லை ஆனால் ஏதோ ஒரு பந்தம்,பரிச்சயமான முகம், பார்த்து பழகிய பிம்பத்தை அவனுக்குள் தோற்றுவித்தது.

கன்னம் பிடித்து கொஞ்சியவன் “சரி கொஞ்ச நேரம் முன்னாடி ஏன் சோகமா இருந்திங்க என்னாச்சு குட்டி பொண்ணுக்கு” என கேட்க,

“நா குட்டி பொண்ணு இல்ல என்னோட பேர் சுபர்ணா” என்றாள் மிடுக்கு குலையாமல்.

அவள் கூறிய விதம் சிரிப்பை வரவழைக்க அடக்கி கொண்டவன் “சரி விஷயம் என்னனு சொல்லுங்க என்னால முடிஞ்சா சரி பண்றேன்”.

“உங்களால முதியுமா பிராமிஸ்” என்று சட்டென கையை அவன் முகத்திற்கு முன்னாள் நீட்ட,

கண்களில் புன்னகை மின்ன, “பிராமிஸ்” என்றான்.

“நானும் அப்பா கூத அது மாதிரி இருக்கணும்னு ஆசை அவரை என்கித்த கூட்டிட்டு வருவீங்களா?” என எதிர் திசையில் கைகாட்டி கேட்க,

அவள் கைகாட்டிய திசையில் பார்த்தவன் “அப்பானா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா எங்க இருக்காருன்னு சொல்லுங்க கூட்டிட்டு வறேன்”.

“அது எனக்கு.. அப்பா… அப்பா” என தினறியவள் “அவங்க யாதுன்னே தெதியாதே” என உதட்டை பிதுக்கி பாவமாய் கூற, நெஞ்சில் தீ சுட்டது போல சுர்ரென்று காய்ந்து எரிந்தது அவனுக்கு.

முதலில் குழம்பி, பின் இதுவாக தான் இருக்கும் என சற்று தெளிந்து “தெரியாதா?, ஏன் அவரு உன்ன பாக்க வர மாட்டாரா?”என கேள்வி கேட்க, பதில் கூற தெரியமால் அமைதியாய் இருந்தாள் சுபர்ணா.

அடுத்து என்ன பேசுவது என தெரியமால் குழந்தையை வெறித்தவன் எண்ணத்தில் ஏதேதோ கற்பனைகள் தாண்டவம் ஆடியது.

“அப்பா வெளியூர்ல இருக்காரா அதனால தான் பாக்க வரமட்டாரா?” என கேட்க,

வாட்டம் நிறைந்த குரலில் “இல்ல நா அவர பாத்ததே இல்ல அம்மாக்கு அப்பாவை பிதிக்காது கோபம் வரும் தனியா அழுவாங்க” என்றவள், “எனக்கும் அப்பா இதுந்தா இது மாதிரி தானே என்கிட்டயும் நடந்துப்பாங்க”,விழிகள் ஜொலிப்பில் மிளிர உற்சாகம் பீறிட கேட்டு,

“ஆனா அவரு யாதுன்னே எனக்கு தெரியாதே”என அடுத்து வந்த வார்த்தையில் கலங்கி துடித்து போனான் நந்தன்.

“யாரு சொன்னது குட்டி பொண்ணுக்கு அப்பா இல்லைன்னு நிச்சயம் வருவாரு அதே மாதிரி இல்ல அதை விட அதிகமா உன்மேல பாசம் காட்டுவாறு” என்றான் நந்தன்.

“நிஜமாவா! என்ன தூக்கி கொஞ்சுவாரா?, என்கூட விளையாடுவாரா?, என்ன வெளிய கூட்டிட்டு போவாரா? எனக்கு பிடிச்சத்தை வாங்கி தருவாரா? சொல்லுங்க அங்கிள்” என விழிகள் விரித்து அவள் கேட்ட விதம் தொண்டை குழியில் கணத்தை நிரப்பியது.

“உன்னோட ஆசைய நிறைவேத்த நிச்சயம் உன்னோட அப்பா வருவாரு” என்றவன் சுபர்ணாவை நெஞ்சோடு அணைத்து உச்சிமுகர்ந்தான்.

“உங்களை எனக்கு தொம்ப….பிடிச்சிருக்கு லவ் யூ அங்கிள்” என கன்னத்தில் கள்ளமில்லா முத்தத்தை கொடுக்க,

அகமகிழ்ந்து பெற்று கொண்டவன் “குட்டி பொண்ணுக்கும்” என்று கன்னம் வருடி இதழில் ஒற்றி கொண்டான் அபிநந்தன்.

“குரல் இனிது யாழ் இனிது என்பர் மழலை சொல் கேளாதவர்”, அவனுக்கு பிடித்தமான குறள்.

ரசனையோடு அவள் கன்னம் பிடித்து சொன்னவன் “என்னோட மனசை ரொம்ப லேசாகிட்ட என்னோட அம்மா தான் உன்னை என்கிட்ட அனுப்பிருக்காங்கன்னு நினைக்கிறேன்  நல்லா இருக்கு இந்த உணர்வு” என்றவாறே அணைத்து கொண்டான்.

 அவன் கேட்கும் கேள்விக்கு அவளும் அவள் கேட்கும் கேள்விகளுக்கு அவளும் என நேரம் போவதே தெரியாமல் சுற்றுப்புறம் மறந்து, ஒருவரை பற்றி ஒருவர் அறிந்து தெரிந்து அனுபவங்களை பேசினர். சுபர்ணாவின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் கூறினான் நந்தன்.

“ஓகே அங்கிள் அம்மா தேதுவாங்க நா போறேன்” என முகத்தில் எல்லையில்லா புன்னகையும் நிறைவும் ததும்ப துள்ளி குதித்தபடி சென்றவளை விழியால் பின் தொடர்ந்தவனின் புன்னகை  மெல்ல மெல்ல குறைந்து முழுவதும் மறைந்து போனது.

கண்ணெதிரே காண்பது மெய்யா இல்லை பொய்யா என்பதை அறிந்திட, கண்களை கசக்கி பார்த்தவன் மெய் தான் என்று உள்ளம் உரைத்த செய்தியில் துவண்டு தரையில் மண்டியிட்டு அமர்ந்தான் அபிநந்தன்.

ஐந்து வருட யாத்திரையின் தேடல் முற்று பெற்றிட, பாரம் மொத்தமும் நெஞ்சை விட்டு அகலுவதை உணர்ந்தான் நந்தன்.

கண்களில் கண்ணீர் திரண்டது. காலத்தை எண்ணியா? அல்லது காதலியை எண்ணியா? என தெரியாமல் சிந்தினான். சூழ்நிலை மறந்தான் சுற்று புறம் மறந்தான், அழுது கொண்டே சிரித்தான். இழந்தவிட்டோம் என எண்ணிய ஒன்றை மீண்டும் பார்ப்பதில் தான் எத்தனை ஆனந்தம்.

மெல்ல இதழ் அசைத்து “வருணா…”என பெயருக்கும் வலிக்கமால் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து உச்சரித்த அவள் நாமம், அவன் செவிகளையும் சென்றடையவில்லை.

தரிசனம் தொடரும்..

Advertisement