Advertisement

“என்ன பாத்தி சொல்திங்க எனக்கு தான் அம்மா எல்லாமே வாங்கி கொதுத்திருக்காங்களே” என்றாள் மழலை, சாராத பேசிய வார்த்தைகளின் உள்ளார்த்தம் புரியமால்.

வெளிப்படையாக சொல்ல முடியாத நிலை என்றாலும் என்றேனும் ஒரு நாள் உண்மை இவளுக்கு தெரிய தானே போகிறது தெரியும் போது தெரியட்டும் என எப்போதும் போல எண்ணி, கடந்து செல்பவர் இப்போதும் அதையே செய்தார்.

“புரியிறவங்களுக்கு புரிஞ்சா போதும் அதை விடு துணியை மாத்திட்டு ரெடியாகு உங்கம்மா கிளம்பிட்டானா நிக்க விட மாட்டா நா போய் குளிச்சிட்டு வறேன் எங்கயும் போயிறாத சரியா” என ரகசியமாய் கூறிவிட்டு குளிக்க சென்றுவிட்டார் சாரதா.

சற்று நேரத்தில் மூவரும் தயாராகி மண்டபத்திற்கு வர

மாலை நேர வரவேற்பு விழா சிறப்பாய் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தது.

“ரொம்ப அழகா இருக்கு, ஏண்டி இதெல்லாம் அலங்காரம் பண்ண ரொம்ப செலவாகிருக்குமே” என பணத்தின் சாயல் பகுமானத்தில் கொழிப்பதை பார்த்து வியப்பை காட்டினார் சாரதா.

“ஆமாம்மா எப்டியும் அலங்கார செலவு மட்டும் மூணு நாலு லட்சம் வந்துருக்கும்” என்றதும் நம்பமுடியாத பார்வையில் மகளை பார்த்தார்.

“மூணு நாலு லட்சத்துல கல்யாணத்தையே முடிச்சிரலாமே!”,அங்கலாய்த்து கொள்ள,

“ப்ச் சும்மா இருங்கம்மா எங்க போனாலும் பட்ஜெட் போட்டு பேசுறதே வேலையா போச்சு அவங்க காசு, அவங்களுக்கு இருக்கு, செலவு பண்றாங்க நமக்கு என்ன?” என தன்மையான குரலில் கடுகடுத்தவள் புன்னகையை ஏந்தியபடி உள்ளே சென்றாள் வருணா.

நேரில் பார்த்தது இல்லை என்றாலும் அலைபேசியில் குடும்பத்தின் புகை படத்தை ராகவன் காட்டி இருந்ததால் இருவரையும் பார்த்து சிநேகமாய் புன்னகைத்தான் ஸ்ரீதர். ராகவன் வராமல் போனத்திற்கான காரணத்தை கூறியவள் பெங்களூர் வந்ததும் இல்லம் வருமாறு கூறிவிட்டு ராகவன் கொடுத்தனுப்பிய பரிசு பொருளை மணமக்களிடம்  கொடுத்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

சாரதாவிடம் பேசிக்கொண்டே மேடையில் இருந்து இறங்க,”ஏய் வருணா” என்ற குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தாள்.

ஆச்சரியத்தை தாங்கிய விழிகளில் அளவில்லா புன்னகை அரும்ப அழைத்தவளை கண்டு “மலர்” என திகைப்பில் உதடுகள் முணுமுணுக்க,

வேக நடையில் அருகில் வந்தவள் “எப்டி டி இருக்க பாத்து எவ்ளோ வருஷம் ஆச்சு” என அணைத்து கொண்டாள் மலர் என்கிற மலர்கொடி.

“நா நல்லா இருக்கேன் நினைச்சு பாக்கலை உன்ன இங்க பாப்பேன்னு” என மேலிருந்து ஆராய்ச்சியை தொடர்ந்த வருணா, “பரவாயில்லையே முன்ன விட ஆள் இப்போ அம்சமா அழகா இருக்க”.

“பின்ன இருக்காதா என்ன அக்கறையா பாத்துக்க ஆள் இருக்குறப்போ அம்சமா தான் இருப்பேன்” என அருகில் ஒட்டி நின்றவனை பார்த்து கண்சிமிட்டினாள்.

“உனக்கு கல்யாணம் ஆகிருச்சா?”அதிர்ச்சியின் கலவைகள் வருணாவின் முகத்தில் பிரதிபலித்தது.

“ம் ஒரு வருஷம் ஆச்சு போன வாரம் தான் எங்க கல்யாண நாளை கொண்டாடுனோம். நீ எங்க இருக்கன்னு தெரியலை பழைய நம்பருக்கு கால் பண்ணா வேற யாரோ பேசுனாங்க அதான் விட்டுட்டேன் சாரிடி” என வருத்ததுடன் இயம்பினாள்.

“பரவாயில்லை விடு மலர்” என்றவள் “உன்ன பத்தி மட்டும் பேசுறியே உன்னோட வீட்டுக்காரரை எனக்கு அறிமுக படுத்த மாட்டியா?’ என கேட்க,

“சாரிடி உன்ன பாத்த சந்தோஷத்துல இவரை மறந்துட்டேன்” என கணவனை பார்த்தவள் “பேர் ராஜிவ் அக்ரி டிப்பார்ட்மெண்ட்ல ஒர்க் பண்றாரு” என வருணாவிடம் அவனை அறிமுகம் செய்தாள்.

“ராஜி இது வருணா என்னோட பெஸ்ட் பிரெண்ட்” என்றதும் அளவாய் புன்னகை சிந்தியவன் “வணக்கம்” என கைகூப்பினான்.

நீண்ட வருடங்கள் கழித்து சந்தித்து கொண்டவர்கள் பேச வார்த்தைகள் அதிகம் இருக்கும் மனம்விட்டு பேசட்டும் என சூழ்நிலை கருதி “நீங்க பேசிட்டு இருங்க நா வந்துடுறேன்” என நகர்ந்து சென்றுவிட்டான் ராஜீவ்.

அவன் செல்லும் வரை பொறுமையாய் இருந்த மலர்கொடி நொடியில் முகத்தில் கடுமையை தேக்கி “ஏண்டி அப்டி பண்ண நந்தன் சார் பாவம் உன்ன காணலைன்னு அன்னைக்கு எப்டி துடிச்சு போனாரு தெரியுமா? அவர்கிட்ட சொல்லாம அன்னைக்கு எங்க போன” என கோபமாக கேட்க,

முதலில் புரியாமல் விழித்த வருணா எதை பற்றி கேட்கிறாள் என்பதை உணர்ந்து

அமைதி காத்தாள்.

“நிஜமாவே அன்னைக்கு அவரை பாக்கவே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு வரு இனிமே அந்த மாதிரி பண்ணாத உன்ன எந்த அளவுக்கு நேசிக்கிறாரு தெரியுமா? அவரை போய் தவிக்க வச்சிட்டியே” என கவலைபடர பேசியவள்,

“போனது போகட்டும் சார் எங்க அவரும் வந்துருக்காறா இல்ல நீ மட்டும் தான் வந்துருக்கியா?” என உண்மை என்னவென தெரியமால் தன் போக்கில் பேசினாள் மலர்.

சங்கடத்தில் நெளிந்தவளின் கருத்தை சுற்று புறம் உறுத்த “அதை பத்தி அப்றமா சொல்றேன்” என்று, சற்று தள்ளி நின்றவாறு தெரிந்தவர்களிடம் பேசி கொண்டிருந்த சாரதாவை அழைத்தாள் வருணா.

“என்னம்மா” என்று அருகில் வந்தவரை, “இது என்னோட அம்மா” என அறிமுகம் செய்தவள்,

“இவளும் நானும் காலேஜ்ல ஒண்ணா படிச்சோம் ம்மா பேர் மலர்கொடி” என்றதும்,

சிநேகமாய் புன்னகைத்தவள் நலம் விசாரிக்க, பதில் உரைத்தவர் பாதியில் விட்ட பேச்சை தொடர வேண்டி வருணாவிடம் கூறிவிட்டு சென்று விட்டார் சாரதா.

“அப்ப சார் வரலையா?”.

அழுத்தமாக தணிவான குரலில் “வரலை! வர மாட்டாரு ஏன்னா நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா இல்லை” என்ற கூற்றை ஒப்பு கொள்ள முடியாமல் திகைத்து விழித்தாள் மலர்கொடி.

“அவரை பிரிஞ்சு கிட்டத்தட்ட அஞ்சு வருஷம் ஆச்சு மலர். அவரு எங்க இருக்காரு என்ன பண்றாரு எதுவுமே எனக்கு தெரியாது ஆனா, அவருக்குன்னு ஒரு குடும்பம் இருக்குன்னு மட்டும் தெரியும். அதனால தான் அன்னைக்கு அவர்கிட்ட சொல்லாம கிளம்பி போயிட்டேன்”என எந்த வித சலனமும் இல்லாமல் உரைத்தாள் வருணா.

அதிர்ச்சியில் வார்த்தைகள் மெல்ல நாவில் தவழ்ந்தது, “வரு நீ சொல்றது…”.

“ஆமா மலர், அவருக்கு ஏற்கனவே ஒருத்தி கூட கல்யாணம் ஆனதை மறைச்சு, கட்டாயத்தின் பேர்ல தான் என்னை கல்யாணம் பண்ணாரு. அதுக்கு பிறகும் உண்மைய சொல்லாம காதல்ன்ற பேர்ல பொய்யா நாடகமாடி நம்ப வச்சு என்னை உயிரோட கொன்னுட்டார்” என தான் ஏமாற்ற பட்டதை எண்ணி வெறுமையாய் புன்னகைத்தவள், ஏமாற்றபட்டதின் வலியை விழியில் காட்டினாள்.

“உண்மை தெரிஞ்ச பிறகும் எப்டி அவர் கூட வாழ முடியும்? அதுவும் கட்டுனவளே முகத்துல காரி துப்பாத குறையா அசிங்கப்படுத்திட்டு போன பிறகு எப்டி அவர்கூட வாழ முடியும் சொல்லு?” என நிதானமாக கேட்டவள் நடுங்கும் உதடுகளை பற்களுக்கு இடையே அழுத்தி கொள்ள,நொடியில் விழிகள் கலங்கி கன்னத்தை தொட்டது.

சுற்றுபுறம் உணர்ந்து வருணாவை தனியே அழைத்து சென்றாள் மலர்கொடி. கோபம் தாறுமாறாக ஏறியது, உண்மை என்னவென தெரியாமல் உளருபவளை அறையலாம் போல தோன்றியது அவளுக்கு.

“பைத்தியம் மாதிரி எதையாவது உளறிட்டு இருக்காத வருணா, அன்னைக்கு உன்ன காணோம்னு அவர் தவிச்ச தவிப்பு எனக்கு தான் தெரியும். அதுல கொஞ்சம் கூட பொய் இல்லைடி உண்மையான நேசிப்போட ஆழம் என்னனு எனக்கு தெரியும் வரு யாரோ ஏதோ சொன்னாங்கன்னு அவரை விட்டுட்டு போயிட்டியே அவர் மேல நீ வச்சுருந்த நம்பிக்கை இவ்ளோ தானா?” என ஆதங்கம் கொண்டாள் மலர்.

“ப்ச் நம்பிக்கை துரோகம் பண்ணவரு மேல எப்டி நம்பிக்கை வரும். யாரோ ஒருத்தர் வெறும் வாய் வார்த்தையா சொன்னாங்கன்றதுக்காக அவரை விட்டு போகலைடி, ஆதாரத்தை காமிச்சு புத்திக்கு உரைக்கிற மாதிரி என்ன பேச்சு பேசினாங்க தெரியுமா?,

எதையும் மறக்கல மலர் மறக்கவும் முடியலை எல்லாத்தையும் எனக்குள்ள போட்டு புதைச்சு வச்சுருக்கேன். மனசு ரணமா வலிக்கிதுடி, நிம்மதியா தூக்க மாத்திரையோட துணையில்லாம இயல்பா தூங்கி பல வருஷம் ஆச்சு தெரியுமா? கஷ்டமா இருக்கு பாரம் தாங்க முடியலை” என விசும்பியவள் வழிந்த கண்ணீரை அழுந்த துடைத்து கொண்டு,

“அவர் பாவம்னு சொல்றியே அப்ப நான்?. நா என்னடி தப்பு பண்ணேன் எதுக்காக என்னோட வாழ்க்கைய பகடை காயா உருட்டனும்”.

“வரு நீ தப்பா புரிச்சுகிட்டேன்னு நினைக்கிறேன் சம்திங் வென்ட் ராங். நந்தன் சார் உனக்கு துரோகம் பண்ணிருப்பாருன்னு என்னால நம்ப முடியலை. அவசரத்துலயும் ஆத்திரத்துலயும் எடுக்கிற முடிவுகள் சரியா இருக்காது வரு”,அவளுக்கு புரிய வைத்துவிடும் எண்ணத்தில் பொறுமையாய் பேசினாள் மலர்கொடி.

“மலர் ப்ளீஸ் என்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடு. எனக்கும் மனசு இருக்கு அது எவ்ளோ காயம் பட்டுருக்குன்னு எனக்கு மட்டும் தான் தெரியும், அவரை எந்த அளவுக்கு நேசிக்கிறேன்னு உனக்கு தெரியாதுடி,

கோபம் இருந்தாலும் இப்பவும் அவரை நேசிக்கிறேன் பூவோட வாசம் என்னைக்கும் மாறாது மலர். அவரை நேசிக்கிற அதே மனசு தான் ஏமாத்தி துரோகம் பண்ணதை நினைச்சு வெறுக்குது” என்றாள் வேதனை ததும்ப,

உண்மை எது பொய் எது என்ன சொல்லி வருணாவிற்கு புரியவைப்பது என தெரியமால் குழப்பத்தில் ஆழ்ந்தாள் மலர். அபி நந்தனின் மீது துளியும் சந்தேகம் கொள்ள மனம் இடம் கொடவில்லை நிச்சயம் ஏதோ தவறு நடந்திருக்கிறது என திண்ணமாய் நம்பினாள் மலர்கொடி.

காரணத்தை விட்டுவிட்டு காயம் பட்டவளை நோகடிப்பது எந்த வகையில் நியாயம்?.

“கேக்குறேன்னு கோபப்படாத வரு, எதை வச்சு யார் சொன்னாங்கன்னு அவரு துரோகம் பண்ணிட்டாருன்னு நம்புற” கேள்வியை பலம் தொடுக்க,

“ப்ளீஸ் மலர் இதை பத்தி இனி பேச வேண்டாம்”.

“அப்ப உன்னோட வாழ்க்கை”, திகைப்பை வெளிப்படுத்தினாள் மலர்கொடி.

Advertisement