Advertisement

குனிந்த தலை நிமிராமல் பேசிய எதுவும் காதில் விழாதது போல கோபத்தின் வர்ணனை பிரதிபலிக்க அவள் அமர்ந்திருந்த தோரணை வருணாவிற்கு சிரிப்பை ஏற்படுத்தியது. கண்டு கொள்ளாதது போலவே பேச்சை தொடர்ந்தாள்.

“அம்மா… கோவிலுக்கு போயிட்டு அப்டியே உங்களுக்கும் எனக்கும் டிரெஸ் எடுக்கலாம்னு இருக்கேன் நீங்க என்ன சொல்றிங்க?”, ஓரவிழி பார்வை மகளிடம் உறவாட, கோபத்தை தணிக்க மெல்ல தூண்டில் போட்டாள்.

“போன மாசம்  சின்ட்ரெல்லா டிரெஸ் வேணும்னு பாப்பா கேட்டா அவளுக்கு வேணாம் நமக்கு மட்டும் எடுத்துக்கலாம்” என்றதும்,

“எனக்கு வேணும் நானும் வதுவேன்” என கோபத்தை கரையவிட்டு வேகமாக ஓடி சென்று வருணாவின் கழுத்தை கட்டி கொண்டு உறவாட,

“ஏய் குட்டி என்ன பண்ற? கையெல்லாம் மருந்தா இருக்கு. நீ தான் அம்மா மேல கோபமா இருக்கியே உனக்கு எதுக்கு அம்மா வாங்கி கொடுக்குற டிரெஸ். நீ மாமாகிட்ட சொல்லி வேற எடுத்துக்கோ”என வேண்டுமென்றே மகளிடம் வம்பு வளர்க்க,

“அம்மா நானும் வதுவேன் பீஸ் ம்மா என்ன கூத்தித்து போங்க பீஸ் ம்மா” என்ற மகளின் பேச்சில் புன்னகை அளவில்லாமல் விரிய, ஆரத்தழுவி கொண்டாள் வருணா.

இருவரின் அன்பையும் காண சித்திரமாய் தெரிந்தது சாராதவிற்கு.

“போதும் போதும் அம்மாவும் பொண்ணும் கொஞ்சிக்கிட்டது” என போலியாய் நொடித்து கொண்டவர்,”ரெண்டு பேரும் இப்டி சந்தோஷமா இருக்குறதை பாக்க ஆனந்தமா இருக்கு வருணா. ஒரே ஒரு குறை மட்டும் தான்” என புள்ளி வைத்தவரை கண்கள் இடுங்க பார்த்தாள்.

“இருக்க வேண்டியவனும் கூட இருந்திருந்தா மனசுக்கு நிறைவா இருந்துருக்கும் அதுக்கு தான் கொடுப்பினை இல்லையே” என ஆதங்கத்தை வெளிப்படுத்த,

“ம்மா..” என பல்லை கடித்து தணிவான குரலில் உறுமியவள், சுபர்ணாவின் இருப்பை கண்களால் ஜாடை காட்டினாள்.

“சரி போய் குளிச்சிட்டு வா நா எதுவும் பேசலைடிம்மா” என வருணாவிடம் பேச்சை முடித்து கொண்டவர், ” நீ வாடா குட்டிம்மா” என சுப்ரணாவை அழைத்து கொண்டு பால்கனிக்கு சென்றுவிட்டார் சாரதா.

நிஜத்தை விட அவ்வப்போது வந்து எட்டி பார்க்கும் நினைவுகளுக்கு வலிமையும் வலியும் அதிகம். சில நேரம் இன்பமான சில நேரம் துன்பமான விஷயங்களை மெல்ல வருடி கொடுத்து அலைப்புறுதலையும், ஆனந்தம் கொள்வதையும் வேடிக்கை பார்த்து மகிழும்.

“மறக்க நினைச்சாலும் எப்டியாவது ஏதாவது சொல்லி ஞாபகப்படுத்திடுறாங்க ச்சே”, வெறுப்புடன் வார்த்தைகளை முணுமுணுத்தவள் குளியலறை சென்று மறைந்து கொண்டாள்.

சற்று நேரம் பயணத்தின் களைப்பை போக்கி விட்டு மதிய உணவை முடித்து கொண்டு திருச்சியை சுற்றி பார்க்க கிளம்பிவிட்டனர். முதலில் திருவானைக்காவல் தரிசனத்தை முடித்து கொண்டு, அடுத்ததாக மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரின் தரிசனம். எண்ணி சென்றதை விட வெகு சிறப்பாய் அமைந்தது.

இறைவனை காண, செல்லும் இடமெல்லாம் பாரத்தை இறக்கி வைத்தால் தானே மனம் சற்று அமைதி அடையும் அடுத்தடுத்து ஏற்பட போகும் நிகழ்வுகளை கிரகித்து கொள்ளும். மனகுமுறலை வேண்டுதலாக வைத்து நிறைவேறினால் அதற்கு தக்க சன்மானமும் அளிப்பதாக கடவுளிடம் ஒப்பந்தம் போட்டு கொண்டார் சாரதா.

“அம்மாச்சி அங்க பாதுங்க தண்ணி எப்தி போகுதுன்னு எவ்ளோ… தண்ணி!” என கைதட்டி துள்ளி குதித்தாள் சுபர்ணா.

“இந்த வருஷம் மழை அதிகம் இல்லன்னா இவ்ளோ தண்ணிய பாக்க முடியுமா பாக்கவே பிரம்மிப்பா இருக்கு, இல்ல வருணா” என்றார் சாரதா.

“ஆமாம்மா பாக்கவே அழகா இருக்கு அண்ணனும் வந்துருக்கலாம். சரிம்மா கொஞ்ச நேரம் உக்காந்துட்டு போலாம்” என்றவளை தொடர்ந்து சாரதாவும் காலை நீட்டி அமர்ந்து கொண்டார்.

“அம்மாச்சி அங்க போலாம் நிடைய தண்ணியா இதுக்கு மாமாவுக்கு நா எங்க போனேன்னு காத்தனும் பீஸ் அம்மாச்சி கூத்தித்து போங்க” என்று கெஞ்ச தொடங்கினாள் குழந்தை.

“இல்ல அங்க போனா டைம் ஆகிடும் இப்போ போய் கிளம்ப ஆரம்பிச்சா தான் ரிஷப்ஷனுக்கு கிளம்பி போக சரியா இருக்கும்” என கண்டிப்பை முன்வைத்து இளையவள் பேச,

“ஏண்டி இப்டி இருக்க ஆசைப்பட்டு கேக்குறா கூட்டிட்டு போனா என்ன?, அரை மணி நேரம் லேட்டா போனா எதுவும் ஆகாது வா, போற போக்குல ஒரு எட்டு பாத்துட்டு போவோம்” என்ற சாரதா, “நீ வாடா அம்மாச்சி உன்ன கூட்டிட்டு போறேன் அவ கிடக்குறா, உங்கம்மா என்னைக்கு தான் மத்தவங்க ஆசைய பத்தி யோசிச்சுருக்கா” என சுபர்ணாவின் கைபிடித்து முன்னே சென்றார்.

சாரதாவின் பேச்சு சுருக்கென்று மனதை தைத்தாலும் அதில் இருந்த உண்மை அவளை அமைதியடைய செய்தது. ‘செய்த வினைக்கு வினையருக்கிறேன்’ என எண்ணி கொண்டவள் சாரதாவை பின் தொடர்ந்து சென்றாள்.

சில மணி நேர பயணத்தில் மிதமான வேகத்தில் வாகனத்தை செலுத்தியவாறே திருச்சி வந்து சேர்ந்தான் அபிநந்தன். உயர்தர விடுதியின் முன் வாகனத்தை நிறுத்த, இடத்தின் அமைப்பை கண்டு திருத்திருவென விழித்தாள் ரஞ்சனி.

ஒரு மாத சம்பளம் விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கான வாடகை, பரிமளம் கொடுத்தனுப்பிய பணம். பரிசு பொருள் வாங்கவும் அவசர தேவைக்கு மட்டுமே என அளவாய் இருந்தது.

‘ச்சே கொஞ்சம் அதிகமா பணம் கொடுத்தா தான் என்னவாம் இப்போ இங்க தங்குறதுக்கு பணம் வேணுமே, போன் போட்டு கேட்டா பேய் மாதிரி கத்துவாங்க , நேரா அங்கிள் வீட்டுக்கு போவாறுன்னு பாத்தா இங்க கூட்டிட்டு வந்துருக்காரே இப்போ என்ன பண்ணலாம்?’ என தீவிரமாக சிந்தனை செய்து கொண்டிருந்தவளின் சிந்தையை தொண்டையை செருமி கலைத்தான் அபிநந்தன்.

“இறங்காம என்ன பண்ணிட்டு இருக்க இறங்கு, காரை பார்க்கிங் பண்ணிட்டு வறேன்” என சிடுசிடுப்பை காட்டியவனிடம்,

தன்னிடம் இங்கு தங்க பணம் இல்லை என்று எவ்வாறு உரைப்பது என்ற தயக்கம் மேலோங்கியது.

“என்ன?” என எரிச்சல் மண்டிய குரலில் பொறுமையை அடக்கி கொண்டு கேட்டான் நந்தன்.

“இல்ல… என்ன மண்டபத்துல இறக்கிவிட்டுருங்களேன் நா அங்க தங்கிக்கிறேன்” என தயங்கி கொண்டே சொல்ல,

புருவம் இடுங்க அவளை திரும்பி பார்த்தவன்”ஏன் என்னாச்சு?, உங்க பிளான் சாக்ஸஸ் ஆகணும்னா இங்க தங்கினா தானே நடக்கும்” என்றான் நக்கல் தொனிக்க.

அவன் கூற்றில் முகம் கறுக்க “ப்ளீஸ் ங்க நா எது பண்ணாலும் தப்பான கண்ணோட்டத்துலயே பாக்காதிங்க, உங்க கூட வந்தது மேரேஜ் அட்டன் பண்றதுக்கு மட்டும் தானே தவிர வேற எந்த திட்டமும் இல்ல என்னை வில்லி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து பேசாதிங்க அந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போகலை” என்றாள் வேகமாக.

“ம்ஹும் எனக்கு வில்லி நீ தான் கூடவே இருந்து குழி பறிச்ச உன்மேல என்னைக்கும் நம்பிக்கையும் வராது காதலும் வராது வெறுப்பு மட்டும் தான் இருக்கும். அதுவும் நீயா உருவாக்கினது என்னைக்கும் அது மாறாது முதல இறங்கு வெட்டியா பேசிட்டு இருக்க எனக்கு நேரமில்லை” என்றான் கோபமாக.

‘இனி இவனிடம் பேசி பலனில்லை மீறி ஏதாவது பேசினால் வீணாக வாங்கி கட்டி கொள்ள வேண்டியது தான் கடுப்பை காட்டுபவனிடம் தற்சமயம் கருணையையும் காதலையும் எதிர்பார்ப்பது தவறு’ என எண்ணியவளுக்கு  பணம் இல்லை என்று கூறி பச்சாதாபத்தை பெற்று கொள்ள விருப்பமில்லை,

உண்மையை சொன்னால் அவனின் பார்வையும் இதழ் சுழிப்பு நிறைந்த புன்னகையும் அவளை மேலும் குன்றி குறுக செய்யும் என்று அமைதியாக காரில் இருந்து இறங்கி கொண்டாள் ரஞ்சனி.

வாகனத்தை பார்க்கிங் ஏரியாவில் விட்டுவிட்டு வந்தவன் நேராக உள்ளே சென்று பெயரை கூற, வரவேற்பில் இருந்த பெண் அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறை எண்ணின் சாவியை எடுத்து கொடுத்து மற்றோரு சாவியையும் எடுத்து நீட்டினாள்.

மற்றோரு சாவி யாருக்கு என தெரியாமல் புருவ மத்தியில் முடிச்சு விழ விளங்காத பார்வையை செலுத்தினான் நந்தன்.

“இது உங்க கூட வந்த பொண்ணுக்கு புக் பண்ண ரூம் சாவி” என்றவள் “சாரி சார் அவங்களுக்கு கீழ தான் ரூம் அவைய்லபிலா இருந்தது வேற ரூம் எதுவும் ஃப்ரியா இல்ல சோ..” என்று சங்கடத்தில் வார்த்தைகளை இழுத்தாள் வரவேற்பில் இருந்தவள்.

“பரவாயில்ல ரொம்ப நல்லது பண்ணிருக்கிறீங்க நல்லது தான்” என்று ரஞ்சனியை பார்த்து உரைத்தவன் சாவியை வாங்கி அவள் கையில் திணித்து விட்டு விறுவிறுவென மாடி ஏறி மறைந்தான்.

“ரிஷி…”என பல்லை கடித்தவள் கோபத்தை அவன் மீது காட்ட முடியாத இயலமையால் கையை உதறி காலடிகளை அழுத்தமாய் வைத்து அவளுக்கு ஒத்துக்கப்பட்ட அறையின் பக்கம் சென்றாள் ரஞ்சனி.

திருச்சி வந்ததில் இருந்தே மனம் நிலையில்லாமல் தவிப்பில் ஆழ்ந்தது வருணாவிற்கு. இன்னதென அறிய முடியவில்லை ஆனால் நடக்க போகும் ஒன்றை எண்ணி கலக்கம் கொண்டாள் முடிந்த மட்டில் வெளிக்காட்டி கொள்ளவில்லை. மண்டபம் செல்ல அமைதியாக தயாராகி கொண்டிருந்தாள்.

“அம்மாச்சி இந்த ட்ரெஸ் ஓகே வா” என கலைநயம் பொருந்திய ஆடையை அவள் மீது வைத்து அசைந்து காட்டினாள் சுபர்ணா.

“உனக்கு என்னடி குறை எது போட்டாலும் அழகா தான் இருக்கும். அம்சமா இருக்க ராஜாத்தி” என கன்னம் வழித்து திருஷ்டி கழித்தவர், “ம்ஹும் எல்லாம் இருந்தும் இல்லாதவ மாதிரி தான் இருக்க வேண்டியதா இருக்கு என்ன பண்ண. அவங்க அவங்க பிடிவாதமும் கோபமும் தான் பெருசா தெரியிது”, என பெருமூச்சை சொறிந்தார் சாரதா.

மெதுவாய் பேசினாலும் வார்த்தைகள் தெளிவாய் தான் வருணாவின் செவிகளை சென்றடைந்தது. தற்போதைய மனநிலையில் பேச்சை வளர்த்து பிரச்சனை செய்ய வேண்டாம் என கண்டும் காணாதது போலவே இருந்தாள்.

Advertisement