Advertisement

ரஞ்சனி சென்ற சில நொடிகளிலியே ரிஷியிடம்  இருந்து அழைப்பு.

அனுப்பி வைத்தானே தவிர மனமெல்லாம் என்ன பேசுவாளோ எப்படி பேசுவாளோ என்ற தவிப்பு தான்.

வேலையில் கவனத்தை செலுத்த முடியாமல் நண்பனுக்கு அழைப்பு விடுத்தவனிடத்தில் அத்தனை படபடப்பு. மறுமுனையில் அழைப்பை ஏற்று பேசும் முன்னே ஏதேதோ எண்ணங்கள் புடை சூழ்ந்து கற்பனையை தட்டிவிட,

அழைப்பு ஏற்கப்பட்ட நொடி “எங்கடா போயிட்டு இருக்கீங்க எதுவும் ப்ராப்ளம் இல்லையே கோபம் வர மாதிரி அவ ஏதாவது பேசுனாலா?” என மூச்சு விடாமல் பேசியவனின் நிலை எண்ணி சத்தம் எழுப்பமால் சிரித்தான் அபிநந்தன்.

“டேய் கொஞ்சம் கேப் விட்டு பேசு, எதுனாலும் நிதானமா அமைதியா கேளு எதுக்குடா இவ்ளோ டென்ஷன் ஆகுற அவ எப்டி பேசுவான்னு உனக்கு தெரியாதா?. நா எதையும் கண்டுக்கலை சின்ன பொண்ணு தானே” என அவளுக்காக பரிந்து பேசியவன்,

“சரி நீ என்ன பண்ணிட்டு இருக்க ஆபீஸ் போயிட்டயா?” என கேட்டான்.

“ம் வந்துட்டேன்” என்றவனின் குரல் ஸ்ருதி இறங்கி ஒலித்தது.

“ரஞ்சி கூட அனுப்பி வைக்க எனக்கு விருப்பமில்லை நந்து ஏதாவது தில்லங்காடி வேலை பண்ணுவா அதான் கொஞ்சம் பயமா இருக்கு டேஞ்சரை கூடவே கூட்டிட்டு போயிருக்க பாத்து பத்திரமா இருடா சின்ன பொண்ணு தானேன்னு அசால்ட்டா இருக்காதா அசந்த நேரம் பாத்து ஆட்டத்தை ஆட ஆரம்பிச்சுருவா” என எச்சரிக்கும் விதமாய் பேசினான் ரிஷி.

“ஒரு அளவுக்கு தான் ஒருத்தரை வெறுக்க முடியும். போதும் ரிஷி எனக்காக கூட பிறந்தவளை வெறுக்காத உன்ன விட்டா அவளுக்கு யார் இருக்கா சொல்லு?, ஏதோ புத்தி கெட்டு போய் இப்டியெல்லாம் பண்ணிட்டு இருக்கா அவளை சரி பண்றது உன்னோட வேலை தண்ணி தெளிச்சு விட்ட மாதிரி எப்டியோ போகட்டும் யாருக்கு வந்த நோவுன்ற மாதிரி பேசாதா எனக்கு கஷ்டமா இருக்குடா”.

“நீ அவளுக்காக பாவம் பாக்குற ஆனா அவ உன்ன படுத்தி எடுக்குறாளேடா, வெறுத்து போச்சு நந்து அது திருந்தாத ஜென்மம் அவகிட்ட பேசுறதும் சுவருக்கிட்ட பேசுறதும் ஒன்னு தான் எதுவும் மாறாது” என அலுத்து கொண்டான் ரிஷி.

“சரி அதை விடு அக்காவுக்கு கால் பண்ணி பேசுனியா?, விஷயத்தை சொல்லிட்டியா இல்ல…”.

“இன்னும் சொல்லலை இப்போதைக்கு எதுவும் தெரிய வேணாம் பங்சனை அட்டன் பண்ணிட்டு நேர்ல போய் சொல்லிக்கலாம்னு இருக்கேன். அதுவுமில்லாம போன்ல பேசுற விஷயம் இல்லை அவங்க என்ன மாதிரி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரியாம எதையும் சொல்லிட கூடாது இல்லையா?, நேர்ல பாத்து சொல்லிக்கிறேன் உனக்கு கால் பண்ணா என்ன எதுன்னு மட்டும் கேளு பேசு சரியா” என்றான் அபிநந்தன்.

“கெடுதல் நினைக்கிறவங்க எல்லாம் நல்லா இருக்காங்க உனக்கு மட்டும் ஏன் தான் இப்டி ஒண்ணுக்கு மேல ஒண்ணா சோதனை வருதுன்னு தெரியலை” என்று வருத்தம் கொண்டவன்,

“திருச்சியில தங்குறதுக்கு ரூம் புக் பண்ணிட்டேன் ரெஸ்ட் எடுத்துட்டு ஈவ்னிங் ஆறு மணிக்கு கிளம்பி மண்டபம் போனா போதும், அங்கிள் கிட்டயும் நீ வர்ற விஷயத்தை சொல்லிட்டேன் பாத்துகிறேன்னு சொல்லிட்டாரு திருச்சி போனதும் அவருக்கு கால் பண்ணி பேசிடு” என்றவன், அலுவல் சம்பந்தமான விஷயங்களை பேசிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டான் ரிஷி.

அழைப்பு துண்டிக்கப்பட்ட நொடியில் இருந்து சிந்தையில் சிந்தனைகள் தறிகெட்டு ஓட தொடங்கியது. ‘எப்படி தொடங்குவது? எங்கிருந்து தொடங்குவது? நிலைமையை எப்படி சொல்லி புரிய வைப்பது, ‘இத்தனை வருடம் அவருடன் நீ வாழ்ந்த வாழ்விற்கு அவர் அளித்த சிறப்பு பரிசு’ என விவாகரத்து பத்திரத்தை நீட்டினால்,என்ன மாதிரி எடுத்து கொள்வாள்?.

அழுவாளா கோபம் கொள்வாளா அல்லது தவறான முடிவை நோக்கி…?’ என்று மனம் கற்பனைகளில் கலைபயில, சட்டென தலையை உலுக்கி தன்னை நிதானித்து கொண்டான் நந்தன்.

“ச்சே அக்கா அந்த மாதிரியெல்லாம் யோசிக்க மாட்டாங்க ரொம்ப தைரியமானவங்க கண்டதையும் யோசிக்காத நந்து” என தன்னை தானே வஞ்சித்து திடப்படுத்தியும் கொண்டான்.

“கிளம்பலாம்” என்ற குரலில் திரும்பி பார்த்தான்.

காலை உணவை திருப்தியாய் உண்டு விட்ட நிறைவு ரஞ்சனியின் முகத்தில் தெளிவாய் தெரிந்தது. எத்தனை கோபம், மனக்கசப்பு என்றாலும் உணவை மட்டும் விட்டு கொடுக்க மாட்டாள்!.

மென்னகை இதழை வருட தலை குனிந்து பணத்தை எடுப்பது போல சிரிப்பை உதிர்த்தவன்,

“பில் கொடுத்துட்டியா இல்ல.. நா கொடுக்கவா” என உணவகத்தின் உள்ளே பார்வையை பதித்து கேட்க,

“நானே கொடுத்துட்டேன் நீங்க கொடுக்க வேணாம், கிளம்பும் போது ஆன்ட்டி எனக்கு பணம் கொடுத்தாங்க!, திருச்சி வந்ததும் சொல்லுறீங்களா?”, அவனின் ஏன் என்ற பார்வை உணர்ந்து பேச்சை தொடர்ந்தாள்.

“ரிஷப்ஷனுக்கு கிஃப்ட் கொடுக்கணும் போகும் போதே வாங்கிட்டு போயிட்டா பெட்டர்” என்றவள் அவனின் பதிலை எதிர்பாராமல் காரில் ஏறி அமர்ந்து கொள்ள, எதுவும் பேசாமல் வானகத்தை கிளம்பினான் நந்தன்.

திருச்சி பேருந்து நிலையம் காலை நேர பரபரப்பிற்கு சற்றும் குறைவில்லாமல் இயங்கி கொண்டிருந்தது. வருணாவும் சாரதாவும் கிளம்பி வருவதை முன்பே ஸ்ரீதரிடம் ராகவன் தெரிவித்துவிட, அவர்களுக்காக காரை பேருந்து நிலையத்திற்கு அனுப்பி வைத்திருந்தான் ஸ்ரீதர்.

வருணாவை பார்த்து அருகில் சென்றவர் “நீங்க சென்னையில இருந்து தானே வர்றிங்க” என கேட்டு உறுதிப்படுத்தி கொண்டு,

“ஸ்ரீதர் தம்பி வண்டி அனுப்பிருக்காரு உங்களுக்கு ஹோட்டல்ல ரூம் போட்டுருக்காங்கம்மா பத்திரமா கொண்டு போய் விட சொல்லிருக்காறு போலாங்களாம்மா” என மிகவும் பணிவுடன் பேசினார் மூவரையும் அழைத்து செல்ல வந்தவர்.

“உங்களுக்கு எதுக்கு சிரமம் அட்ரஸ் அனுப்பியிருந்தா நாங்களே போயிருப்போமே”, சங்கடத்துடன் உரைத்தாள் வருணா.

“இதுல என்னம்மா இருக்கு கல்யாணத்துக்கு வந்துருக்கீங்க உங்களை கவனிக்கிறது தான் எங்களோட வேலை” என பெருந்தன்மையாய் உரைத்தவர், கொண்டு வந்த உடமைகளை வாங்கி காரின் பின்னால் வைத்து கதவை மூடினார்.

அதற்கு மேல் விவாதம் செய்து அவரை சங்கடத்தில் ஆழ்த்த விருப்பமில்லாமல் மூவரும் ஏறி கொள்ள, வாகனம் உயர்தரமான விடுதியை நோக்கி வேகம் பெற்றது.

கார் கண்ணாடியை இறங்கி விட்டு சுபர்ணாவும் சாரதாவும் வேடிக்கை பார்த்து கொண்டே வர, பார்வையையை வெளி செலுத்தி தீவிர சிந்தனையில் கடந்து செல்லும் உயிரற்ற கட்டிடங்களை பார்த்து கொண்டே வந்தாள் வருணா.

இதே பிரதான சாலையில் இருந்து விலகி உள்ளே சென்று இடது புறம் திரும்பி சற்று தூரம் சென்றால் இன்பமாய் வாழ்ந்த இல்லம். அங்கிருந்து வலது புறம் திரும்பி அடுத்த பிரதான சாலையில் இணைந்தால் விரும்பி உண்ணும் ஐயர் உணவகம். வெண்பொங்கலும் இஞ்சி சேர்த்த சட்னியும்..!நினைவில் தித்திக்க, தொண்டை அடைத்தது.

சில நிமிட பயணத்தில் விடுதியை வந்தடைய,

அறையின் சாவியை வாங்கி கொடுத்து முன்னே அனுப்பியவர் உடமைகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு சென்று வைத்துவிட்டு, கிளம்பியவரிடம் ஒரு பச்சை நிற தாளை நீட்டினாள் வருணா.

நோட்டை கண்டு பயத்தில் விதிர்விதிர்த்து இரண்டடி பின்னால் சென்றவர் “என்னமா பண்றிங்க எனக்கு எதுக்கு பணம். நீங்களே வச்சுக்கோங்க தம்பிக்கு இந்த விஷயம் தெரிஞ்சது ரொம்ப கோபப்படுவாறு வேணாம்மா, நீங்க கொடுக்கணும்னு நினைச்சதே எனக்கு சந்தோஷம். இந்த பணம் எனக்கு வேணாம், நா செய்யிற வேலைக்கு மாசம் ஆனா சம்பளம் வந்திடுது,

அதுவுமில்லாம இன்னைக்கு ஒரு நாள் நீங்க கொடுகிறதை வாங்கிட்டேனா அப்றம் யாராவது கொடுக்க மாட்டாங்களான்னு எதிர்பார்ப்பு வந்திடும் என்னோட பழக்கத்தை மாத்திடாதீங்க” என தன்மையாய் மறுப்பு தெரிவித்துவிட்டு வேக நடையில் சென்று விட,

சிறு வியப்பு மேலோங்க செல்பவரை பார்த்து கொண்டே “எவ்ளோ நல்லவரா இருக்கருல்ல ம்மா இந்த காலத்துல இப்டி ஒருத்தரா! பாக்கவே ஆச்சர்யமா இருக்கு” என்றாள் வருணா.

“நல்லவங்க உலகத்துல இருக்க தான் செய்யிறாங்கடி நாம தான் அவங்க நல்லவங்களா இல்லையான்னு புரிஞ்சுக்காம போயிடுறோம்” என சாதரணமாய் உரைக்க,

சுருக்கென்றது வருணாவிற்கு.

தன்னை குறிப்பிடுவது போல தோன்ற, சாரதாவை பார்த்தவள் வந்த கோபத்தை அடக்கி அமிழ்த்தி கொண்டு,”சரிம்மா கொஞ்ச நேரம் படுக்குறதா இருந்தா படுத்து தூங்குங்க” என்றுவிட்டு மாற்று உடையை எடுத்து கொண்டு நகர,

“வருணா தைலம் தேச்சுவிட்டு போடி கைகாலெல்லாம் குடையிது”என்றார் சாரதா வலியில் முகம் சுருக்கி.

நீண்ட தூரம் பிரயாணம் சற்று உடலை சோதிக்க அப்படியும் இப்படியாக உடலை வளைத்து அலுப்பை போக்கியபடி,

“அவன்கிட்ட சொன்னா கேக்குறானா நீயும் கூட போயிட்டு வான்னு அனுப்பி வச்சுட்டான். ட்ரையின் கிடைக்காம பஸ்ல வந்தது உடம்பெல்லாம் வலி எடுக்குது நீ தான் நல்லா தேச்சு விடுவியே. அது என்னமோ தெரியலைடி பிறந்த குழந்தைக்கு கைகாலை நீவி விடுற மாதிரி பதமா தேச்சு விடுற கொஞ்ச நேரத்துல வலி இருந்த இடம் தெரியாம போயிருது”என பெருமையாய் சொல்ல,

“போதும் ம்மா ரொம்ப ஐஸ் வைக்காதீங்க உருகிட போறேன்”என கேலியாய் உரைத்தாள் வருணா.

“தைலம் தேச்சு கொஞ்சநேரம் படுத்து எந்திரிச்சு சுடு தண்ணியில குளிச்சா உடம்பு சுணங்காம இருக்கும்” என பேசி கொண்டே, கொண்டு வந்த பையினுள் கைவிட்டு தைல டப்பாவை எடுத்து மகளிடம் நீட்டினார் சாரதா.

“பாத்தி நா தேச்சு விதுறேன்” என அவர் கையில் இருந்த டப்பாவை வேகமாக வாங்கி கொண்டவள் அதை திறக்க போக,

“சுபர்ணா..” என்று கடுமையும் கண்டிப்பும் கலந்த குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள் மழலை.

“கையெல்லாம் மருந்தா ஆகிடும் நீ அம்மாகிட்ட கொடுத்துட்டு அமைதியா உக்காரு அம்மாச்சிக்கு நா மருந்து தேச்சு விடுறேன்” என சிரித்து கொண்டே வாங்கி கொண்டவள், மருந்தை தேய்த்து விட ஆயத்தமானாள்.

“ஏண்டி வருணா இன்னைக்கு சாயங்காலம் திருவானைக்காவல் போயிட்டு வரலாமா? ரொம்ப நாள் ஆகுது தரிசனம் பண்ணி”.

“ம் போயிட்டு வரலாம்மா ஈவ்னிங் ரிஷப்சன் ஆரம்பிக்கிறதுக்குள்ள போயிட்டு வந்துறலாம் அப்டியே மலைகோட்டைக்கும் போயிட்டு வந்துறலாம் ரூம்ல இருந்து என்ன பண்ண போறோம்” என பேசி கொண்டே ஓரபார்வையால் மகளை பார்த்தாள்.

Advertisement