Advertisement

பால் காய்ச்சி குடியேறி அன்றைய நாளோடு ஒரு வாரம் கழிந்திருந்தது. அக்காவையும் அவரின் மகனையும் குடியமர்த்தி விட்டு சென்றவன் இக்கட்டான வேலையில் சிக்கி கொள்ள, அதை சீக்கிரம் முடித்துவிட்டு பெங்களுர் வந்து சேர்ந்தான் அபி நந்தன்.

முப்பதை கடந்த வயது,

வட்டசாமான தேகம் எவரென தெரியாமலே புன்னகை பூக்கும் இதழுக்கு சொந்தக்காரன். 

உள்ளே இருக்கும் பல ஆழமான காயங்களையும் கசப்புகளையும் அமிழ்த்தி கொண்டு, வெளியுலக வாழ்க்கைக்கு புன்னகை தான் பலம் என நினைத்து, அப்புன்னகையை இதழில் தரித்திருக்கும் வேஷதாரி.

காரை போர்டிகோவில் நிறுத்தி லாக் செய்தவன் அந்த விசாலமான வீட்டிற்குள் நுழைய, மகனுக்கு உணவு கொடுத்து கொண்டிருந்தாள் கவிதா.

“அக்கா” என்ற குரலில் திரும்பி பார்த்தவர் அதிசயித்து புருவங்களை உயர்த்தி பார்க்க,

“மாமா” என்று ஓடி வந்து காலை கட்டிகொண்டான் தருண் உத்ராயன்.

“ஏய் குட்டி” என்று தூக்கி கொஞ்சியவன் “என்ன க்கா உனக்கு வீடு பிடிச்சிருக்கு தானே” என கேட்க,

“ரொம்ப பிடிச்சுருக்குடா நந்து இந்த இடமே ரொம்ப அமைதியா இருக்கு. தருண் படிக்கிற ஸ்கூல் பக்கத்துலயே இருக்கு நா நினைச்ச மாதிரியே வீடு பாத்துட்ட, எல்லாமே நல்லா இருக்கு ஆனா நீயும் எங்க கூட வந்துருன்னு சொன்னா கேட்க மாட்டிங்கிறயேடா” என குறைபட்டு கொள்ள,

“ப்ச் அக்கா உனக்கு தான் எல்லாம் தெரியுமே. நா இங்க வந்துட்டேனா அங்க ஆபிஸ் வேலை யார் பாத்துகிறது கஷ்டப்பட்டு உருவாக்குனதை போனா போகுதுன்னு விட்டுட்டு வர முடியாதுக்கா” என்றவன் “கொஞ்ச நாள் பொறுங்க இன்னொரு பிரன்ச் ஓபன் பண்ணற ஐடியா இருக்கு. பாப்போம் முடிஞ்சா அதை பெங்களுர்ல ஓபன் பண்ணிடுறேன், அடிக்கடி உங்கள பாக்க வர்றதுக்கு தனியா செலவு செய்ய வேண்டியது இருக்கு. புது பிரன்ச் ஓபன் பண்ணிட்டா கம்பெனிக்காகன்னு போயிரும்” என்று கிண்டல் பேசியவனை போலியாய் முறைத்தாள் கவிதா.

“போடா உனக்கு எல்லாமே விளையாட்டு தான் சீரியஸா பேசிட்டு இருக்கேன் கிண்டல் பண்ற. ஊர் உலகத்துல எவனும் பிஸ்னஸ் பண்ணலையா என்ன? என்னமோ நீ தான் உழைக்கிற மாதிரி சொல்ற பொல்லாத ஆபிஸ் அங்க உக்காந்து பாக்குற வேலைய இங்க வீட்டுல இருந்துகிட்டு பாத்தா என்ன? ஏதாவது சாக்கு சொல்லி தப்பிக்கணும். அங்க நீ மட்டும் எப்டிடா தனியா இருப்ப” என கவலை தேய்ந்த குரலில் பேசினாள் கவிதா.

கவிதா நந்தனை விட சில வயது தான் மூத்தவள் சிற்றன்னையின் மகள் என்றாலும் பேதம் வகுத்து பார்த்ததில்லை உடன் பிறந்தவள் என்ற எண்ணத்தோடு தான் இன்று வரை பார்க்கிறான். கவிதா என்றால் நந்தனுக்கு அத்தனை பிரியம், பிராயத்தில் தரையில் இறக்கிவிட மனமில்லாமல்  நந்தனை இடுப்பில் தூக்கி வைத்து கொள்வாள் கவிதா.கொழுக்மொழுக் கன்னங்களுடன் பொக்கைவாய் தெரிய வத்சலய புன்னகையில் மற்றவர்களின் கவனத்தை மட்டுமல்லாது மனதை ஈர்த்துவிடுவான் மாய கண்ணனை போல.

சிந்திய புன்னகை சன்னமாய் மறைந்திட “விடுக்கா கடைசி வரைக்கும் தனியாவே இருகணும்னு எழுதியிருக்கு என்ன பண்ண. பழகிப்போன வாழ்க்கை தானே நா பாத்துகிறேன்” என சமாளிப்பான புன்னகை உதிர்க்க, அவனை கவலையுடன் பார்த்தார் கவிதா.

அவனை பார்க்கும் தருணமெல்லாம் கவலை மேலோங்கியது கவிதாவிற்கு ‘என்ன காரணமோ இன்று வரை திருமணம் செய்து தனக்கென குடும்பம் அமைத்து கொள்ளாமல் ஆண்டியை போல எதிலும் நாட்டமில்லாமல் இருக்கிறானே’ என்று எண்ணியவர் அவன் கரத்தினை பற்றி கொண்டாள். கண்கள் கலங்கி ததும்பியது.

“அக்கா” என்று அணைத்து கொண்டவன் “என்ன பத்தின கவலை உனக்கு வேண்டாம் எதை பத்தியும் நினைக்காம போய் சாப்பாடு எடுத்து வை பசிக்கிது ஆசைய உன்ன பாக்க வந்ததுக்கு ஒரு காஃபி கூட கொடுக்காம நிக்க வச்சு பேசிட்டு இருக்க” என்று சீரியஸாக சொல்ல,

“போடா” என்று லேசாக அவன் தோளில் தட்டி சிரிக்க, சிரிப்பில் சுருங்கிய கண்களில் இருந்து உப்பு நீர் வடிந்தது.சற்று நிமிடத்தில் காஃபி தயாரித்து கொண்டு வந்து கொடுத்த கவிதா, 

“தருண் வா ஸ்கூலுக்கு கிளம்பனும் டைம் ஆச்சு” என்று நினைவுபடுத்தினாள்.

“ம்மா இன்னைக்கு நா லீவ் போடுறேனே மாமா வந்துருக்காரு அவர் கூட இருக்குறேனே ப்ளீஸ் ம்மா” என்று கெஞ்சினான் தருண் உத்ராயன்.

“டேய் இன்னைக்கு தான் பர்ஸ்ட் டே ஜாயின் பண்ண போற முதல் நாளே லீவ்வா முடியாது தருண் கிளம்பு டைம் ஆச்சு இன்னைக்கு  ஜாயின் பண்றதா உன்னோட கிளாஸ் மிஸ் கிட்ட சொல்லிட்டேன் குளிச்சிட்டு வா” என்று கண்டிப்புடன் சொல்ல,

“ம்மா” என்றவன் நந்தனை பார்த்தான்.

“நோ நா இந்த மாதிரி விஷயத்துக்கு சப்போர்ட் பண்ண மாட்டேன் லீவ் போட கூடாது தருண் இன்னைக்கு உன்னோட நியூ பிரெண்ட்ஸ் எல்லாரும் வருவாங்க அவங்க கூட ஜாலியா என்ஜாய் பண்ண வேணாமா?, மாமா நாளைக்கு தான் சென்னை கிளம்புறேன் சோ இப்ப சமத்தா குளிச்சு யூனிஃபார்ம் மாட்டிக்கிட்டு வருவியாம்”என்று கொஞ்சினான் நந்தன்.

“நீங்க என்ன டிராப் பண்றிங்களா நிஜமாவா?” என்று வியந்து கேட்டான் தருண்.

“நிஜமா” என்றவன் போய் டிரெஸ் மாத்திட்டு ரெடியாகி வா கிளம்பலாம்” என்றதும் துள்ளி குதித்து அறைக்கு ஓடினான் தருண்.

“சரிடா நியும் குளிச்சிட்டு வா அவன ரெடி பண்ணிட்டு டிபன் எடுத்து வைக்கிறேன்” என்று நகர்ந்து சென்றுவிட,

கைகளை மேலே தூக்கி சோம்பல் முறித்தவன் உடமையை எடுத்து கொண்டு அறைக்கு சென்றான். கொண்டு வந்த பையில் இருந்து பூந்துவாலையை எடுத்து கொண்டு குளியலறை புகுந்தவன் சற்று நேரத்தில் ஈர தலையை துவட்டி கொண்டே வெளியே வந்தான்.

பிடித்த ப்ராண்டில் தேடி பிடித்து வாங்கிய பெர்முடாஸை மாட்டி கொண்டவன் அதற்கேற்றார் போல கண்ணையும் கருத்தையும் கவராத நிறத்தில் டீசர்ட்டை அணிந்து கொண்டு தயாராகி கிழே வர,கவிதா உணவு பாத்திரங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

“அக்கா தருண் கிளம்பிட்டானா?” என்றவாறே அமர்ந்தவன் முன் தட்டை வைத்தவள்,

“ம் கிளம்பிட்டான் நந்து” என்றவள் தட்டில் உணவை வைக்க,

“ம்ம் எனக்கு பிடிச்ச கார அடை எப்டி க்கா” என்று அதிசயித்தவன் அடைக்கு வலிக்கமால் மெல்ல பிய்த்து வாயில் போட்டு கொண்டு கண்களை மூடி அசைபோட்டான்.

அவன் ரசித்து உண்பதை வாஞ்சையுடன் பார்த்தவள் அடைக்கு தொட்டு கொள்வதற்கு அவியலை வைத்தாள்.

“ம் பிரமாதம் க்கா ஒரு வாரம் ஆச்சு நல்ல சாப்பாடு சாப்ட்டு செத்து போன நாக்குக்கு உயிர் கொடுத்துட்ட” என புகழாரம் சூடியவன் நிதானமாக உணவை சாப்பிட தொடங்கினான்.

“ம்மா” என்று பள்ளி செல்ல தயராகி வந்த மகனை பார்த்தவள் “மாமா சாப்ட்டதும் போலாம்” என்ற கவிதா,

“டேய் நந்து” என்று தயக்கத்துடன் அழைத்தாள்.

“என்னக்கா?”. 

“ரஞ்சனி” என்று மெல்ல பேச்சை தொடங்க,

செய்யும் வேலையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தவன் எதுவும் சொல்லாமல் உணவை பிசைந்தான்.

“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத நந்து இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பிரம்மச்சாரி வாழ்க்கை. உனக்குன்னு ஒரு குடும்பம் வேணாமா தருண தூக்கி கொஞ்சுற மாதிரி உனக்கு பிறக்க போற குழந்தைய  கொஞ்ச வேணாமா?”. 

“ஆசை தான் அதுக்கு நா என்ன பண்ண முடியும்?”,விட்டேரியாக பேசினான்.

“என்னடா இப்டி பேசுற? வீம்பு பண்ணாம ரஞ்சனிய கல்யாணம் பண்ணிக்கோ நந்து. அவளும் உன்ன விரும்புறா கட்டுனா உன்ன தான் கட்டுவேன்னு பிடிவாதமா காத்துட்டு இருக்கா”. 

“அக்கா ப்ளீஸ் இதை பத்தி இப்போ எதுவும் பேச வேணாம்  ரஞ்சிய என்னால மனைவியா நினைக்க முடியலை க்கா இதுவரைக்கும் அவள ரிஷியோட தங்கச்சியா தான் பாத்துருக்கேனே தவிர,

எனக்கு இணையா ஒருநாளும் நினைச்சு பாத்ததில்லை தயவுசெய்து ரஞ்சிய கட்டிக்க சொல்லி என்கிட்ட பேசாதிங்க. எனக்குன்னு பிறந்தவ இந்த உலகத்துல ஏதோ ஒரு மூலையில இருப்பா நிச்சயம் அவளே என்ன தேடி வருவா ஆனா அதுக்கு கொஞ்சம் பொறுமையும் காத்திருப்பும் தேவை” என்றவன் பேச்சை முடித்து கொள்ளும் விதமாய் தட்டில் கையை கழுவி எழுந்து கொண்டான் நந்தன்.

கவிதாவினால் எதுவும் பேச முடியவில்லை. ரஞ்சனி நல்ல பெண் தான் கூடாத சகவாசம் அவளை தவறான வழியில் கூட்டி சென்றுவிட்டது. அதுவும் நந்தனை வைத்தே அவளை ஆட்டி வைக்கும் வல்லமை கவிதாவின் தாய் பரிமளத்திற்கு கைவந்த கலை. இதுவரை ‘நந்தனை கலியாணம் செய்து வைக்கிறேன்’ என்று சொல்லி சொல்லியே அவளது மனதில் ஆழமாக அவனை பற்றிய எண்ணத்தை விதைத்துவிட்டார். 

அதன் பின்விளைவுகள் எத்தகையது என்பதை பற்றி சிறிதேனும் சிந்தனை செய்ய முயற்சிக்கவில்லை, அவளும் அவனை தான் மணப்பேன் என்று செய்ய கூடாத செயல்களை செய்து நந்தனின் வாழ்வில் விலக்க முடியாத வினையாக இருக்கிறாள்.

அவனின் பிடிவாதம் பற்றி அறிந்து அமைதியாகி போனாள் கவிதா.

“டேய் தருண் சமத்தா இருக்கணும் அந்த ஸ்கூல்ல சேட்டை பண்ண மாதிரி இங்க பண்ண கூடாது. புது ஸ்கூலுக்கு போறதால எல்லாருக்கும் சாக்லேட் கொடுக்கணும் சரியா அம்மா சாக்லேட் பாக்ஸ் உள்ள வச்சுருக்கேன்” என்றவள் “டேய் இங்கயும் என்ன சோதிக்காதட சேட்டை எதுவும் பண்ணிறாத தருண், சமத்தா போனமா வந்தோமான்னு இருக்கணும் படிப்புல கவனம் செலுத்து வம்பு வழக்க வீட்டுக்கு இழுத்துட்டு வந்துறாதா”என பாவமாக முகத்தை வைத்து அறிவுரைகளை அள்ளி வழங்கினாள். 

அவள் கூறிய அனைத்திற்கும் சரி சரியென பவ்யமாய் நின்று தலையாட்டினான் தருண்.அவன் அமைதியான தோரணை வயிற்றில் புளியை கரைக்க கவிதாவின் மனம் கலவரப்பட்டது.

“ப்ச் நீ எதுக்கு க்கா பயப்படுற தருண் சேட்டை பண்ணாம இருப்பான் அவனுக்கு நா கேரண்டி” என்று உத்தரவாதம் அளித்தவன் தருணை அழைத்து கொண்டு சென்றான்.

காரில் ஏறி அமர்ந்ததும் சீட் பெல்ட்டை மாட்டிவிட்டவன் “ஏண்டா உங்க அம்மா சொன்னதுக்கு நேர்மாறாதா நடந்துக்க போற அதுக்கு இவ்ளோ ஆக்டிங் தாங்க முடியலடா” என்று நந்தன் சிரிக்க,

“நீ வேற மாமா நா அந்த மாதிரி ஆக்ட் பண்ணலனா இன்னும் கொஞ்ச நேரம் நிக்க வச்சு கிளாஸ் எடுத்துருப்பாங்க. நா என்னமோ வேணும்னே போய் வம்பிலுத்துட்டு வர்ற மாதிரி பேசுறாங்க சீண்டாம இருக்குற வரைக்கும் தான் தருண். சீண்டி பாத்தாங்க சிங்கமா மாறி சிக்கெடுத்துடுவேன்” என்று வசனம் பேசியவனை புருவம் மேலே உயர பார்த்தான் நந்தன்.

“பிழைக்க தெரிஞ்ச பிள்ளைடா” என சிரித்தவன் நான்கு சக்கர வாகனத்தை உயிர்ப்பித்து கிளம்பினான்.

சுபர்ணாவை பள்ளியில் இறக்கி விட்ட ராகவன் “சுபா குட்டி லன்ச் மிச்சம் வைக்காம சாப்பிடணும் ஈவ்னிங் அம்மா வர்ற வரைக்கும் ஸ்கூல் காம்பௌண்ட் உள்ளதா இருக்கணும் சரியா!” என்றவன் அவளிடம் விடைபெற்று செல்ல,

மெல்ல பள்ளி நுழைவாயிலில் வழுக்கி கொண்டு வந்து நின்றது மெர்குரி நிற இன்னோவா.

“சரிடா தருண் அம்மா சொன்ன மாதிரி நடந்துக்கோ இன்னைக்கு ஒரு நாளாவது உன்னோட வால் தனத்த மூட்டை கட்டி வச்சுறு, பாவம் என்னோட அக்கா உன்ன ஸ்கூலுக்கு அனுப்பவே ரொம்ப பயப்படுறா வந்த முதல் நாளே ஆரம்பிச்சுறாத”என்றவன் அவனை இறக்கி விட்டு செல்ல, 

சொல்லி சென்ற சில நிமிடங்களிலேயே தன் சேட்டையை ஆரம்பித்திருந்தான் தருண் உத்ராயன்.

மகிழம் பூக்கள் வான மழையாய் தூவ மகிழ மரத்தின் அடியில் நின்று அண்ணாந்து பார்த்தாள் வருணா. மரம் அவளிடம் உரையாடுவது போலவே தோன்றியது. புன்னகையை அவள் பதிலாக அளிக்க, காற்றில் அலைமோதிய மரம் இன்னும் சில பூக்களை கீழே உதிர செய்தது. இயற்கையிடம் ஒன்றி போனால் அதன் பாஷைகள் மனித மனங்களுக்கு அத்துபடி அதன் நிலை வைத்தே யூகித்து விடலாம். இயற்கை சில நேரங்களில் சிரிக்கும் சிலிர்க்கும் உயிரை தழுவி குதுகலிக்க செய்யும்.

Advertisement