Advertisement

தேவியின் திருமுக தரிசனம் 8

“அபி காரை நிறுத்துறீங்களா” என பின்புறமிருந்து கேட்ட குரலில் திரும்பி பரமலாலேயே, “எதுக்கு என” கேட்டான் அபிநந்தன்.

“பசிக்கிது, ஹோட்டல் இருக்குற இடமா பாத்து நிறுத்துறீங்களா கிளம்பின அவசரத்துல சாப்பிடாம வந்துட்டேன்” என பசியின் வாட்டத்தில், குரலில் சோர்வை காட்டி பேசினாள் ரஞ்சனி.

பசி என்றதும் அவள் மீதிருக்கும் கோபத்தை பின்னிறுத்தி கொண்டு, வாகனத்தின் வேகத்தை மிதப்படுத்தி கவனத்தை சாலையில் பதித்தபடி பார்வையை வெளியே பரப்பினான்.

உணவகம் எங்கேனும் தென்படுகிறதா என தேடியவன் நெடுஞ்சாலையை ஒட்டி இருந்த சிறிய உணவகத்தின் முன்பு காரை நிறுத்தி,

“நீ போய் சாப்ட்டு வா நா கார்லயே வெய்ட் பண்றேன்” என்றதும் ரஞ்சனியின் முகம் கூம்பி போனது.

“நீங்க இல்லாம நா மட்டும் போறதா, நீங்களும் வாங்களேன் உங்களுக்காக தான் காரை நிறுத்த சொன்னேன் நீங்க பசி தாங்க மாட்டீங்கன்னு தான்..”என சொல்வதை முழுதும் முடிக்காமல் நிறுத்தியவள், முன் கண்ணாடி வழியாக நந்தனின் முகம் பார்க்க,

உணர்ச்சிகளை துடைத்து இறுகிய களிமண்ணின் தோற்றத்தை பிரதிபலித்தது.

முயன்றளவு பொறுமையை அடக்கி கொண்டவன் “எனக்கு வேணாம் நீ போய்ட்டு வா டைம் ஆச்சு” என சுருக்கமாய் வார்த்தையாடலை முடித்து கொண்டு, அவளை சட்டை பண்ணமால் அலைபேசியில் கவனத்தை செலுத்த தொடங்கினான் அபிநந்தன்.

உதாசீனம் செய்ததில் முகம் கறுத்த ரஞ்சனி’கொஞ்சம் சிரிச்சு பேசுனா தான் என்னவாம் எப்ப பாரு கடுகடுன்னு முகத்தை வச்சுக்கிட்டு, எவ்ளோ அன்பா தன்மையா பேசுனாலும் சிடுசிடுன்னு தான் விழுகுறாறு இருக்கட்டும் எத்தனை நாளைக்கு இந்த கோபம்னு பாக்குறேன்’ என மனதோடு குமைந்தவள், மண்டிய எரிச்சலை அவனிடம் காட்ட முடியாமல் சுணங்கிய முகத்துடன் உணவகத்தின் உள்ளே சென்றாள்.

சரியான சந்தர்பத்திற்காக காத்திருந்த பரிமளம் நந்தன் திருச்சி செல்வதை பற்றி அறிந்து, ரஞ்சனியை அழைத்து விஷயத்தை அவளுக்கு புரியும் விதமாக, அவனை வழிக்கு கொண்டு வரும் யுத்தியையும் அதை எப்படி கையாள வேண்டும் என்ற சூத்திரத்தையும் எடுத்துரைத்தார்.

முதலில் தயங்கியவள் பின் நந்தனுடன் வாழ போகும் வாழ்வை பற்றி பரிமளம் விவரித்து சொல்ல, கற்பனையில் விழிகள் ஜொலிக்க காரியத்தை வீரியமாக்க சரியென ஒப்பு கொண்டாள் ரஞ்சனி.

கேரளாவிற்கு செல்லும் பயணம் மழையினால் தடைபட்டு போனதில் கோபமாக இருந்தவளுக்கு பரிமளம் கூறிய செய்தி இரண்டு மடங்கு குதூகலத்தை அளித்தது.

“ஆன்ட்டி இப்டி நடக்கணும்ன்றதுக்குகாக தான் டிரிப் கேன்சல் ஆச்சு போல” என பரிமளத்திடம் சொல்லி சொல்லி அகம்மகிழ்ந்து போனாள்.

அவசரமாக கிளம்பி அடுத்த சில மணி துளிகளில் நந்தனின் இல்லத்தில் அவனுடன் செல்ல ஆயத்தமாய் இருந்தாள் ரஞ்சனி.

ரிஷியின் வற்புறுத்தலால் ஒருவழியாக திருமணத்திற்கு செல்ல ஒப்பு கொண்ட நந்தன், அவசரமாக கிளம்பி அறையில் இருந்து வெளியே வர, கூடத்தில்  கால்மேல் கால்போட்டு திமிராய் அமர்ந்திருந்தவளை கண்டு கோபம் கொப்பளித்தது.

சிறு பெண் கோபத்தை காட்டினாள் தாங்க மாட்டாள் என்று எண்ணியிருந்தவனுக்கு அதை கடைபிடிக்கும் வழி இல்லாமல் போக, கோபத்தில் ஏதாவது பேசிவிடுவோமோ என்று அவசரமாக ரிஷிக்கு தொடர்பு கொண்டு ரஞ்சனியின் வரவை பற்றி பேசினான்.

“அவகிட்ட நீ எதுவும் பேச்சு வச்சுக்காத நா வர்ற வரைக்கும் ரூம்லயே இருடா, அவளுக்கு எத்தனை தடவை பட்டாலும் புத்தி வராது மழுங்கி மரத்து போச்சு” என அலைபேசியில் கடுகடுத்தவன், தமாதிக்காமல் செய்த வேலையை நிறுத்திவிட்டு அடித்து பிடித்து இல்லம் வந்தான் ரிஷி.

உள்ளே நுழையும் போதே அய்யனாரின் ஆங்காரம் அப்பட்டமாய் பிரதிபலித்தது அவன் முகத்தில். சில நேரங்களில் ஆற்றாமையும் இயலாமையும் கோபமாய் வெளிப்படும்.

‘எத்தனை முறை எடுத்து சொல்லியும் தரம் இறங்கி செய்ய கூடாத செயலை செய்கிறாளே அதை எடுத்து சொல்லி புரிய வைக்க முடியவில்லையே’ என்ற ஆற்றாமை கோபமாய் வெளிப்பட,

பாசம் மறைத்து மூன்றாம் நபரிடம் நடந்து கொள்வது போல “ஏய் நீ எதுக்கு இங்க வந்த உனக்கு இங்க என்ன வேலை, அவன் நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா? மரியாதைய இங்க இருந்து கிளம்பு உன்னோட முகத்துல முழிச்சாலே அவனுக்கு பாவம் தான் வந்து சேரும்” என சீறியவனை பார்த்து முதலில் புரியாமல் விழித்தவள், அவனது பேச்சில் உள்ளே கடுகடுக்க முறைத்து பார்த்தாள் ரஞ்சனி.

“நா எதுக்கு போகணும் எதுக்கு வந்துருக்கேனே தெரியாம குதிக்கிற உன்கிட்ட என்னால பேச முடியாது, எதுனாலும் நந்தன்கிட்ட பேசிக்கிறேன்” என்று திமிராய் பத்திலுறைத்து வெடுக்கென முகத்தை திருப்பி கொள்ள,

“அவனை பாக்கவே கூடாதுன்னு சொல்லிட்டு இருக்கேன் இதுல பேச போறியா?, உனக்கு கொஞ்சம் கூட ரோஷம் மானமே கிடையாதா அன்னைக்கு அவ்ளோ தூரம் அசிங்கப்படுத்துன பிறகும் எப்டி உன்னால அவன்கிட்ட பேசிக்கிறேன்னு சொல்ல முடியிது”.

“ரிஷி உனக்கு இது தேவையில்லாத விஷயம். இது அவரோட வீடு அவரு சொல்லட்டும் நா இங்க இருந்து போறேன்” என துடுக்காய் பதில் பேசியவளின் கவனம் மாடியில் இருந்து இறங்கி வந்தவனின் மீது படிந்தது.

அவளுக்கு தெரியும் ஒருநாளும் அவன் போவெனும் வார்த்தையை பிரயோக்கி மாட்டான் என்று இல்லம் தேடி வந்தவர் எதிரியாய் இருந்தாலும் பக்குவமாய் பேசி பதிலுறைப்பான் என்பதை அறிந்து வைத்திருந்தவள் ரிஷியிடம் தைரியமாய் பேசினாள், இருந்தாலும் ஒரு படபடப்பு.

தன் மீதிருக்கும் அளவற்ற கோபத்தில் சொல்லிவிடுவானோ! என்று, அமைதியின் மறு உருவமாய் நின்றாள் ரஞ்சனி.

வந்தவன் அவளை பொருட்படுத்தாது “ரிஷி நா திருச்சிக்கு கிளம்புறேன் திரும்பி வர வரைக்கும் கொஞ்சம் மேனேஜ் பண்ணிக்கோடா நாளைக்கு டெண்டர் அறிவிக்கிறாங்க, என்ன பண்ணனுமோ பாத்து பண்ணிரு” என கூறிவிட்டு விறுவிறுவென வாசல் புறம் நோக்கி செல்ல,

“ஒரு நிமிஷம் நந்த்” என பெயரை முழுதும் உச்சரிக்காமல் நிறுத்தி கொண்டாள்.

விஷயம் என்னவென்பதை அறிய வேண்டி நடையை நிதானித்தவன் லேசாய் திரும்பி பார்க்க,

அதையே சந்தர்ப்பமாக எடுத்து கொண்டவள் “நானும் திருச்சிக்கு வறேன்” என்றாள் சற்று படபடப்புடன்.

“நீ எதுக்கு அங்க” என வேகமாக இடையிட்டவனை முறைத்து பார்த்தவாறே,

“கொஞ்ச நேரம் பேசாமா இருக்கியா எப்ப பாரு எரிச்சலை கிளம்பிக்கிட்டு” என எரிந்து விழுந்தவள் நந்தனின் புறம் திரும்பி,

“ரகுபதி அங்கிள் பையன் கல்யாணத்துக்கு பரிமளம் ஆன்ட்டியால வர முடியாததுனால என்னை அட்டன் பண்ணிட்டு வர சொன்னாங்க. நீங்களும் அங்க தான் போறீங்களாமே அதான் எதுக்கு தனியா போய்க்கிட்டு  உங்க கூட போயிட்டு வான்னு சொன்னாங்க” என பவ்யமாய் சொன்னாள்.

நிதானித்த நடையை நிறுத்தி கொண்டவன் உடலை முழுதும் திருப்பி நேரடியாக ரஞ்சனியை பார்த்தான். முகத்தில் கோபம் இல்லை துளி புன்னகை மட்டும் இதழை நிறைத்திருக்க,

“இது மட்டும் தான் சொன்னங்களா இல்லை வேற எதுவும் சொல்லி அனுப்புனாங்களா?” என எள்ளல் தொனிக்க கேட்க,

எதிர்பாரா கேள்வியில் என்ன சொல்வது என தெரியமால் திருதிருவென விழித்தவள், “அது..வேற என்ன சொல்லி அனுப்ப போறாங்க, இது மட்டும் தான் சொன்னாங்க” என திணறி கூறியவளின் சமாளிப்பே அவனுக்கு உணர்த்திற்று, பரிமளத்தின் திட்டம் என்னவென்பதை.

“சரி வா போலாம்” என்றவன் வாயிலை நோக்கி செல்ல,

அதுவரை அமைதியாய் இருவருக்கும் இடையே நடந்த சில நொடி பேச்சு வார்த்தையை கேட்டு கொண்டிருந்த ரிஷி, நந்தனின் முன்னே சென்று இடைமறித்து நின்றான்.

“நந்து இவளை பத்தி முழுசா தெரிஞ்சிருந்தும் ஏண்டா கூடவே கூட்டிட்டு போறேன்னு சொல்ற? அவ எப்டியோ திருச்சிக்கு போகட்டும் நீ கூட்டிட்டு போகாத இவலாள நீ பட்டதெல்லாம் போதும், இந்த கல்யாணத்தை சாக்கா வச்சு ரெண்டுபேரும் ஏதோ பெருசா பிளான் பண்ணிருக்காங்க நீயே அவங்களுக்கு இடம் கொடுத்துறாதடா” என்றான் கிட்டத்தட்ட இறைஞ்சும் குரலில்.

ரிஷியின் தோளை தட்டி கொடுத்தவாறே “பாத்துக்கலாம் பயப்படாதாடா, இவங்களால என்ன பண்ணிற முடியும்னு நினைக்கிற நானும் என்னோட மனசும் உறுதியா இருக்குற வரைக்கும் என்னை மாத்த முடியாது. என்னைக்கும் வரு மட்டும் தான் என்னோட காதல் மனைவி” என அழுத்தமாய் சொன்னவனின் பார்வை ரஞ்சனியிடம் படிந்து மீண்டது.

வருணாவின் பெயரை கேட்டதும் அடிவயிறு அக்னி பர்வதமாய் கொதிக்க, அதை வெளிக்காட்டாமல் “போலாமா.. ந..” என இழுத்தவள் அவன் பார்வை கண்டு, “டைம் ஆச்சு” என பேச்சை திசை திருப்பினாள்.

“சரிடா போயிட்டு வறேன்” என தலையசைத்து கூறியவன் விறுவிறுவென வெளியேறினான்.

திட்டத்தை நிறைவேற்றி விடலாம் என்ற எண்ணமே அவளுக்குள் உற்சாகத்தை கொடுக்க அவனுடன் செல்லும் பயணத்தை அகம் மகிழ்ந்து அனுபவிக்க தயாரானாள் ரஞ்சனி.

தமையனை கடந்து செல்லும் போது இகழ்ச்சியாய் புன்னகைத்தவள்,

“போயிட்டு வறேன்” என கூறி மேலும் கீழும் அவனை ஏளனமாக பார்க்க,

அவள் வாழ்வை பற்றிய பயத்தையும் அதனால் உண்டான கோபத்தையும் அடக்கி கொண்டவன் எதிராளியை போல முகத்தை வெடுக்கென திருப்பி கொண்டான்.

ரஞ்சனியை உடன் அழைத்து செல்வதில் ரிஷிக்கு துளியும் விருப்பமில்லை ஆனால், செல்லும் போது விவாதம் செய்ய வேண்டாம் என்றே அமைதியாக அனுப்பி வைத்தான்.

அவளின் கடந்த காலத்தை பற்றி நினைக்க நினைக்க மனம் வெதும்பியது. அமைதியான நடையும், தணிவான பேச்சும், எதற்கும் சிரிப்புடன் பதில் அளிக்கும் பக்குவமும், உடையின் மீதான அதீத கவனமும், உறவுகளின் மீது வைத்திருந்த பாசமும் என ரஞ்சனியின் இறந்த காலத்தின் செயல்களை நிகழ்காலத்தில் அசைபோட விழிகள் அவளுக்காக கண்ணீர் வடித்தது.

‘ரஞ்சனியின் எண்ணத்திற்கு நந்தன் ஒரு நாளும் பலியாக போவதில்லை’ என மனம் திண்ணமாய் உரைக்க, அதுவே அவனை அச்சமயம் நிம்மதியடைய செய்தது.

Advertisement