Advertisement

கோபத்தில் நறநறவென பல்லை கடித்தவள் “நைட்டு வீட்டுக்கு தானே வரணும் அப்போ வச்சுக்கிறேன்” என அவன் மீது காட்ட முடியாத கோபத்தை பாத்திரங்களின் மீது காட்டினாள்.

சற்று தூக்கம் சிறிது நேரம் மைதிலியுடன் பேச்சுவார்த்தை தொலைக்காட்சியில் சில மணி துளி என மாலை வரை பொழுதை நெட்டி தள்ளியவள் “சரிக்கா நா மேல போறேன் ரொம்ப நேரமா நானே பேசிட்டு இருக்கேன் ஒன்சைடா கோல் அடிக்க ரொம்ப போரீங்கா இருக்கு நீங்க வேலைய பாருங்க” என கூறிவிட்டு மாடிக்கு வந்து விட,

சற்று நேரத்தில் பளிச்சென பல்லை காட்டிய ஆதவன் கார்மேகங்களுக்கு பின்னால் ஒளிந்து கொள்ள வானம் இருட்ட தொடங்கியது.

மழை வரும் அறிகுறியாய் காற்றும் அதன் பங்கிற்கு வேலையை காட்ட, மழலையின் ரசனை மிகுந்த அழுகையாய் சற்று நேரத்தில் சடசடவென மாரி மண்ணை குளிர்விக்க தொடங்கியது.

“சூப்பர் வருணா செம்மையா மழை பெய்யிது இந்த வருணா வந்த நேரம் வருண பகவான் கருணை காட்டிட்டான்” என குதூகளித்தவள் மழை நீரை கையில் ஏந்தி முகத்தில் தெளிக்க, ஜில்லென்ற உணர்வு உயிரை நனைத்தது.

இதே திருச்சி என்றால் மழை வரும் அறிகுறிகள் தென்பட்டதும் குடையும் கையுமாய் பள்ளி வாசலில் காத்திருந்து இல்லம் அழைத்து வந்திருப்பார் சாரதா. வீட்டை விட்டு வெளியே போகாதே எட்டி பார்க்காதே என பல உத்தரவுகளையும் பிறப்பித்திருப்பார்.

“ஏம்மா இப்டி பண்றிங்க ஒரு நாள் மழையில நனைஞ்சா என்ன?, குறைஞ்சா போயிடுவேன் இல்ல கரைஞ்சு போயிருவேனா ரொம்ப கண்டிப்பு காட்டுறீங்க ம்மா”,வேகமாய் ஆதங்கம் வெளிப்படும் .

“சும்மா இருடி பெரிய மனுஷி மாதிரி பேசிக்கிட்டு, எனக்கு தெரியாது உனக்கு எது ஒத்துக்கும் ஒத்துக்காதுன்னு. எதுகெடுத்தாலும் விவாதம் பண்ணிக்கிட்டு” என அவளை அடக்கிவிடுவார்.

கேட்க ஆள் இல்லை ஆசையும் குறைந்த பாடில்லை ஒரு நாள் நனைந்தால் என்ன என்ற எண்ணம் துளிவிட முகத்தை முத்து முத்தாக தெளிக்கும் மழை துளிகளிடம் காட்டி கிளுக்கி சிரித்தவள் முழுதும் அதன் வசமாகி போனாள்.

யாருக்கு தான் மழையை வெறுக்க தோன்றும் ஆடினாள் பாடினாள் நீண்ட கால ஆசையை தீர்த்து கொள்ளும் வேகத்தில் மாரியின் அணைப்பில் தன்னையே மறந்து அமிழ்த்தி கொண்டாள் வருணா.

அவள் செயலை இமைகள் இடுங்க உதட்டில் உறைந்த குறும்பு புன்னகையுடன் விழி இமைக்கமால் அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாம் தளத்தின், பால்கனியில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்தவன் ‘யார்’ என அறிந்து கொள்ளும் ஆவலில் பார்வையை கூர்மையாக்கினான்.

நொடி பொழுதில் பளிச்சென்று வெட்டிய மின்னல் கீற்றில் பிரதிபலித்த, தேவியின் திருமுகம் அவன் இதழில் புன்னகையை விரிவடைய செய்தது. மழையின் மாருதம் சுகமாய் வீச சில நிமிடங்கள் அவள் குதூகளிப்பதை கண்டு கழித்தவன் “வேடிக்கையான பெண்” என முணுமுணுத்து கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டான்.

“வருணா…” என்ற அழைப்பு குரல் மிகசமீபத்தில் கேட்டதும் திரும்பி பார்த்தவள், திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள்.

“என்னம்மா” என சுணங்கியவளிடம் சோர்வும் எரிச்சலும் கலந்து ஒலித்தது.

“எவ்ளோ நேரமா கூப்டுட்டு இருக்கேன் காது கேக்கலையா? முழிச்சுகிட்டே கானா கண்டுட்டு இருக்க எழுந்து வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன் வெறும் வயித்தோட படுக்காத” என சாரதா கண்டுப்பு கலந்து சொல்லி விட்டு செல்ல,

‘எழுத தெரியாத பிள்ளையை எழுத சொல்லியது போல எத்தனை அழகாய் விதியை கிறுக்கி விட்டான் படைத்தவன். வெற்று காகிதமாய் இருந்த மனதில் முதல் எழுத்தை அச்சிட்டவனை பார்க்காமல் இருந்திருந்தால் இன்று இத்தனை துன்பம் நேர்ந்திருக்குமா?’ என எண்ணியவள் வலி நிறைந்த புன்னகை சிந்தினாள்.

“வேணா வருணா ஆறிபோன காயத்தை கீறி பாக்காத அது நல்லது இல்ல மேலும் மேலும் வலியையும் வேதனையையும் உண்டு பண்ணும், நீ மறந்ததது மறந்ததாவே இருக்கட்டும். இனி அந்த உறவு உனக்கு வேணாம் சுபர்ணா இருக்கா அவளே போதும்” என நிலை கண்ணாடியின் முன்பு நின்று தனக்கு தானே சொல்லி கொண்டாள்.

எப்போதும் போல சில நிமிடங்கள் வரை உடன் வந்து ஒட்டிகொள்ளும் உறுதி இப்போதும் அவள் வதனத்தில் தோன்றிட, அதே உறுதியுடன் சாராதவின் அழைப்பு குரல் மீண்டும் கேட்கும் முன்னே எழுந்து சென்றாள் வருணா.

உன் காதலில் சப்தங்களுக்கு கூட அர்த்தம் சரியாக விளங்கவில்லை

ஆனால், உன் பிரிவில் மௌனத்திற்கும் கூட உரையெழுத முடிகிறதே..”

நினைவால் அவளை அணைத்தவனின் மனதை குளிர்விக்க சத்தம் கலந்த சங்கீதமாய் மண்ணில் இறங்கியது மழை. சற்று நேரம் மழையை ரசித்தவனின் நினைவில் நிழலாடியது முதன் முதலாக மின்னல் வெளிச்சத்தில் அவளை கண்ட தருணம்.

“வேடிக்கையான பெண்” என உதடுகள் முணுமுணுக்க, ரிஷியின் அருகில் சென்று படுத்து கொண்டான்.

உறக்கம் கொள்ளவில்லை விடி விளக்கின் வெளிச்சத்தில் விழிகள் விட்டத்தை வெறித்தபடி இருக்க, மன உந்துதலில் எப்போதும் போல தானாக தழுவி கொண்டது தலையணையின் அடியில் மறைத்து வைத்திருந்த புகைப்படத்தை.

“எப்ப பாரு வேலை வேலைன்னு ஒடுறிங்க கொஞ்சம் என்னையும் கவனிக்கலாமே” என முறுக்கி நின்றவளை புன்சிரிப்புடன் அணைத்து கொண்டவன்,

“கவனிச்சிட்டா போச்சு சொல்லு என்ன மாதிரி கவனிக்கணும் எப்டி கவனிக்கணும். சொல்லு டாம்மா என்னோட கவனிப்பை காட்டுறேன்” என புருவம் உயர்த்தி கேட்டவனின் குரல் தழைந்து குழைந்தது.

“நீங்க பேசுற விதமே சரியில்லை முதல இடத்தை காலி பண்ணுங்க அபி லேட் ஆச்சுன்னு சொன்னீங்களே” என இடையை வளைத்திருந்த கரத்தினை விலக்கி விட்டு பிடிவாதமாக அவனை தள்ளி நிறுத்தினாள் அவள்.

“குறையா சொல்லிட்ட அதை நிவர்த்தி பண்ண வேணாமா மனைவி சொல்லே மந்திரம் சொல்லு” என பிடிவாதமாய் கேட்டு பார்வையால் துளைத்தவனை எதிர் கொள்ள முடியாமல் தவித்து போனாள் பெண்ணவள்.

தவிப்பில் கன்னங்கள் சிவந்திட அதை தடுக்கும் வழி அறியாது கால் விரலை தரையில் அழுத்தி கொண்டாள்.

அவளின் தவிப்பை குறுஞ்சிரிப்புடன் எதிர்கொண்டவன் தவிப்பின் நேரத்தை நீட்டிக்க விடாமல், அவளை தோளோடு அணைத்து “எல்லாம் கொஞ்ச நாள் தான்டா ம்மா சீக்கிரமே நம்ம பிரச்சனையெல்லாம் சால்வ் ஆகிரும். விட்டதை பிடிக்கணும்னா கொஞ்சம் இல்ல ரொம்பவே கஷ்டப்படணும் வரும்மா. உன்கூட டைம் ஸ்பென் பண்ண எனக்கும் ஆசை தான் ஆனா… இப்போ சூழ்நிலை சரியில்லை,

ஒரு மாசம் வரைக்கும் இப்டி தான் இருக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா ம்மா. நா நினைச்ச காரியம் சக்ஸஸ் ஆகிட்டா நம்ம வாழ்க்கையில சந்தோஷம் மட்டும் தான். உரிமையா உன்னோட வீட்டுக்கு வந்து நடந்ததை சொல்லி மன்னிப்பு கேட்டு உன்மேல எனக்கிருக்குற காதலை உரிமையோட காட்டுவேன்” என மூக்கை பிடித்து ஆட்ட,

“நிஜமாவா?” என விழி விரித்து கேட்டவளிடம் சொக்கி தான் போனான் நந்தன்.

“நிஜமா” என கண்மூடி திறந்து பதில் அளித்தவன்,

‘கொஞ்சம் பொறு நந்து மனதின் சலனம் மற்றதை மறக்கடித்து விடும் பொறுமை பொறுமை’ என தனக்கு தானே உறு போட்டுக்கொண்டவன், உணர்வுகளின் பிரளயத்தில் சிறு துண்டை கன்னத்தில் இதழ் பதித்து அவளிடத்தில் கடத்திவிட்டே கிளம்பி சென்றான் நந்தன்.

‘காலம் எத்தனை அழகாய் வாழ்வின் எல்லையை வரையறுத்து விடுகிறது. எண்ணத்தில் எழுதி வைக்கும் எழுத்துகள் எல்லாம் எதார்த்தங்கள் ஆவதில்லையே’ அவன் மனதின் ஓரம் ஊமையாய் ஒலித்தது ஒரு அவல குரல்.

“வரும்மா” என உதடுகள் முணுமுணுக்க, நினைவுகளின் ஓரம் கண்ணீர் துளிகளும் பாரபட்சமின்றி இமைகளை நனைத்தது.

“நீ எங்கடாம்மா இருக்க எதுவும் சொல்லாம என்ன விட்டு போக உனக்கு எப்டி மனசு வந்துச்சு நீ இல்லன்னா நானும் இல்லன்னு உனக்கு தெரியாதா? உன்ன கல்யாணம் பண்ணது இதுக்கு தானா?, இந்த பிரிவு உனக்கு நீயே கொடுத்துகிட்ட தண்டனை இல்ல எனக்கு கொடுத்த தண்டனை எத்தனை கனவு கண்டேன் உன்கூட எப்படியெல்லாம் வாழ ஆசைப்பட்டேன் ஆனா அது எல்லாமே கானல் நீரா போச்சே!,

தினமும் பைத்தியம் மாதிரி உன்ன நினைச்சு தூங்காமா அர்த்தராத்திரியில புலம்பிட்டு இருக்கேன் கடைசி வரைக்கும் கூட வருவேன்னு சொன்னியே இப்டி சொல்லாம பாதியிலயே விட்டுட்டு போயிட்டியே என்னால முடியலை உள்ள என்னமோ பண்ணுது யார்கிட்டயும் சொல்ல முடியலை, என்னோட வலி மத்தவங்களுக்கு அனுதாபமா மாறிட கூடாதுன்னு எல்லாத்தையும் உள்ள போட்டு அடைச்சு வச்சுருக்கேன். சொல்ல போனா தினம் தினம் செத்துட்டு இருக்கேன்” என வாய்விட்டு மெல்லிய குரலில் புலம்பியவனின், வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே வலி அடைத்து உயிரை பிசைந்தது.

“என்ன விட்டு போக உனக்கு எப்டி மனசு வந்துச்சு நா என்ன பாவம் பண்ணேன் என்மேல ஏதாவது தப்புனா நா வந்த பிறகு என்கிட்ட நேரடியா கேட்டுருக்கலாமே, அத விட்டுட்டு என்ன தனியா விட்டு போயிட்டியே வரும்மா. என்னோட ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறிச்சுக்கிட்டு கண்காணாத தூரத்துக்கு தப்பிச்சு போயிட்ட,

நாம முடிவுன்னு நினைக்கிற இடத்துல தான் சில விஷயங்கள் ஆரம்பமாகுது நீ எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு தூக்கி எறிஞ்சிட்டு போன வாழ்க்கை, இனிமே தான் ஆரம்பிக்கவே போகுது நீ எங்க இருக்கன்ற தகவல் எனக்கு கிடைக்கிற வரைக்கும் என்னோட தேடல் நீண்டுகிட்டே தான் போகும் வரும்மா எனக்கு நம்பிக்கை இருக்கு உன்ன நிச்சயம் கண்டு பிடிச்சுறுவேன்னு”என தன் போக்கில் புலம்பியவன் புகைப்படத்தை மார்போடு அணைத்து கொண்டு தலையணை நனைத்தான்.

அதுவரை உறங்குவது போல பாசாங்கு செய்து கொண்டிருந்த ரிஷிக்கு தூக்கம் மொத்தமும் தொலைந்து விட்டிருந்தது.

‘பண்றதெல்லாம் பண்ணிட்டு எப்டி உன்னால நிம்மதியா தூங்க முடியிது? உன்னோட பிரெண்ட் இன்னைக்கு இந்த நிலையில இருக்குறானா அதுக்கு காரணமே நீ தான் ரிஷி. அந்த குற்றவுணர்வு கொஞ்சம் கூட இல்லாம சந்தோஷமா நடமாடிட்டு இருக்க,

நல்லா இருந்த குடும்பத்தை பிரிச்சு உன்னோட சுயநலமான பாசத்துக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கைய அழிச்சிட்டயேடா, அந்த பொண்ணு உனக்கு என்ன பாவம் பண்ணா? உன்ன அண்ணா அண்ணா ன்னு தானே கூப்பிட்டா. உன்கூட பிறந்தவ ரஞ்சனி, அவ கூட அப்டி பாசமா இருந்தது இல்ல, ஆனா வரு இருந்தாளேடா,

உன்னோட தங்கச்சி சுயரூபம் தெரிஞ்ச பிறகும் அந்த பொண்ணு எங்க போனா என்ன ஆனான்னு விசாரிக்க தோணாலை?. இவ்ளோ நடந்த பிறகும் ரஞ்சனியோட வாழ்க்கை தான் முக்கியம்னு நினைச்சிட்டு இருந்த, இந்த உலகத்துல உன்ன விட ஒரு முட்டாள் யாரும் இருக்க மாட்டாங்க பாசம் இருக்க வேண்டியது தான் ஆனா அதுவே அளவை மீறின ஆபத்தா மாறிட கூடாது.

நந்துகிட்ட உண்மைய சொல்லி ரெண்டுபேரையும் சேத்து வைக்கிற வழிய பாரு ரிஷி செஞ்ச பாவத்துக்கு அது தான் சரியான பரிகாரம்’ என மனம் வில்லில் இருந்து வேகமெடுத்த அம்பாய் குறிபார்த்து அவனுக்கு உரைக்கும் விதமாய் வார்த்தைகளை எய்ய, திக்கு முக்காடி போனான் ரிஷி.

இருமனங்களும் அவரவர் நிலையை எண்ணி வேதனை கொள்ள, பிரிவிற்கு கரணமானவனோ பிரிந்த உறவை இணைப்பதற்கு வழி தெரியாமல் தவிப்பில் ஆழ்ந்தான்.

கனவு தொடரும்…

Advertisement