Advertisement

உணவை வெறித்து கொண்டிருந்தவளின் தோளில் தட்டிய சாரதா “என்னடி யோசனை பண்ணிட்டு இருக்க சாப்டு பசிக்கிதுன்னு சொன்னியே” என ஊக்க,

சரியென தலை அசைத்தவள் தட்டில் இருந்ததை காலி செய்ய தொடங்கினாள். தொண்டையில் சிக்கி கொண்ட முள்ளை போல பிரிவை எண்ணுகையில் மனம் கணத்தது அவளுக்கு.

காலை உணவை முடித்து கொண்டு நேராக ரயில் நிலையம் வர உடமைகளை எடுத்து கொண்டவன் “நீங்க உள்ள போங்க நா டிக்கெட் வாங்கிட்டு வறேன்” என்றதும்,

சாரதாவை அழைத்து கொண்டு உள்ளே சென்றாள் வருணா.

பயண சீட்டை பெற்று கொண்டவன் “வரும்மா இந்தாடா டிக்கெட். பத்திரமா வச்சுக்கோ மிஸ் பண்ணிடாத” என கூறியவாறே அவளிடம் நீட்ட,

வாங்கி கைபையில் வைத்து கொண்டவளுக்கு பொறுப்பான தமையானாக அறிவுரைகள் கூற தொடங்கினான் ராகவன்.

“ரெண்டு நாள் கழிச்சு ஆபிஸ்ல லீவ் கேட்டு வறேன் வரும்மா கூட யாரும் வரலைன்னு ஃபீல் பண்ணாத, பயப்படாமா தைரியமா இரு திருச்சி மாதிரி தான் சென்னையும், காலேஜ்ல கண்டிப்பா சீட் கிடைச்சிரும் சோ இப்போதைக்கு படிப்புல மட்டும் கவனம் செலுத்து பார்ட் டைம் ஜாப் கொஞ்ச நாள் கழிச்சு பாத்துக்கலாம்,

முதல அங்க இருக்குற மனுஷங்களோட சகஜமா பழகு சரியா. நேரத்துக்கு போகணும் வரணும், மொபைல்ல காவல் உதவி ஆப்பை டவுன்லோட் பண்ணி வச்சுக்கோ அவசரத்துக்கு யூஸ் ஆகும். நல்லா சாப்டு நேரத்துக்கு தூங்கு, கேட்க ஆள் இல்லைன்னு நைட்டு முழுக்க மொபைலை நோண்டிட்டு இருக்காதா காலையில சீக்கிரம் எந்திரிக்க பாரு” என கண்டுப்பு கலந்த அக்கறையை அளவில்லாமல் காட்டினான் ராகவன்.

அனைத்திற்கும் சரி சரியென தலையாட்டி கொண்டிருந்தாள் வருணா “வேற வீடு கிடைக்கிற வரைக்கும் பாலாஜி வீட்டுலயே தங்கிக்கோ அவங்க வீட்டுல பேசிட்டேன் சரின்னு சொல்லிட்டாங்க. மதியம் சென்னை ரீச் ஆகிருவ இறங்குனதும் எனக்கு கால் பண்ணு மறந்துடாத” என்றான் அழுத்தம் பொதிந்து.

“ராகவா முடியலடா” என சோர்ந்த குரலில் இழுத்தவள் “அட்வைஸ் பண்றேன்னு அறுவையா அறுக்குற மீ பாவம், முழுசா சென்னை போய் சேரணும் இப்பவே என்னை டையர்ட் ஆக வச்சுட்ட இதுக்கு மேல நீ பேசுறதை கேட்க முடியாதுப்பா.

ஆசையா ஐயர் கடையில பொங்கல் வாங்கி கொடுத்து அது மொத்தமும் ஜீரணமாக வச்சுட்டியே இது உனக்கே நல்லா இருக்கா?”, ஊர்ரென முகத்தை வைத்து பேசியவளின் கூற்றில் ஒளிந்திருந்த கேலியை உணர்ந்து மெல்லிய புன்னகை உதிர்த்தான் ராகவன்.

“வாலு எவ்ளோ பொறுமையா சொல்லிட்டு இருக்கேன் அறுவைன்னு சொல்ற” என தலையில் லேசாக குட்ட, இருவரின் சீண்டல்களையும் கலைத்து கவனத்தை ஈர்த்தது சன்னமாய் கேட்ட விசும்பல் ஒலி.

திடுகிட்டு இருவரும் திரும்பி பார்க்க, கண்கள் குளம் கட்டி அதை மறைக்க தெரியாமல் பார்வையை தாழ்த்தி கொண்டு அமர்ந்திருந்தார் சாரதா. அடிக்கொரு தரம் மூக்கை உறிஞ்சி கொண்டு சேலை தலைப்பால் கண்ணீரை வழிய விடாமல் துடைத்து கொண்டும் இருக்க,

“அம்மா..! உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை,என்னமோ கல்யாணம் பண்ணி மாமியார் வீட்டுக்கு போற மாதிரி ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க. காலேஜுக்கு படிக்க போறேன் நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்கி பெரிய கம்பெனியில வேலைக்கு சேந்து என்னோட சம்பளத்துல சென்னையிலயே சொந்தமா வீடு வாங்கி நாம ரெண்டுபேரும் சந்தோஷமா இருக்கணும்னு ஆசிர்வாதம் பண்ணுவீங்களா… அதைவிட்டுட்டு அழுது வடிஞ்சிட்டு இருக்கீங்க” என குறைபட்டு கொண்டாள்.

“நீங்க ரெண்டு பேர் மட்டும் தானா நா இல்லையா?” என கேட்டவனை மிடுக்குடன் பார்த்தவள்,

“ம்ஹும் இல்ல, நா வீடு வாங்குற வரைக்கும் நீ கல்யாணம் பண்ணாம இருப்பியா ராகவா”.

“நீ படிச்சு வேலைக்கு போய் சம்பாதிக்கிற வரைக்கும் நா கல்யாணம் பண்ணாம இருக்காணுமா?”,அவன் வார்த்தையின் உள்ளே ஏன் என்ற கேள்வியின் தர்க்கம் நிறைந்திருந்தது.

“ஆமா உனக்கு கல்யாணமானா உனக்குன்னு ஒரு குடும்பம் வந்துரும் எங்களை கண்டுப்பியா, நான் தான் அம்மாவை பத்திரமா பாத்துக்கணும் அதுக்கு நல்லா படிக்கணும் மார்க் வாங்கணும் வேலைக்கு போகணும்” என மீண்டும் முதலில் இருந்து தொடங்க,

“பகுமான கோழி பறந்து பறந்து முட்டை போட்டுச்சாம்”, படக்கென சாரதா கூறிய கூற்றின் அர்த்தம் உணர்ந்து வாய்விட்டு சிரித்தான் ராகவன்.

“ம்மா செம்ம டைமிங்” என மெச்சியவனை முறைத்து பார்த்த வருணா,

வேகமாக சாரதாவின் புறம் திரும்பி “எவ்ளோ ஆசையா என்னோட கனவை சொல்லிட்டு இருக்கேன் இப்டி மட்டம் தட்டுற மாதிரி பேசுறீங்க”.

“பின்ன என்னடி இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள என்ன பேச்சு பேசுற? முதல நல்லா படி அப்றம் பேசலாம், வேலைக்கு போறது வீடு வாங்குறதுன்னு” என நொடித்து கொண்டார்.

“இந்தா அம்மாவங்களே இப்டி தான் பையன பத்தி பெருமையா பேசுவாங்க அதுவே  பொண்ணை பத்தி கொஞ்ச கூட பெருமையா பேச மாட்டாங்க, பேசுறது என்ன பெருமையா நினைக்க கூட மாட்டாங்க போல” என சாரதாவை ஓராக்கண் பார்வையால் நோட்டம் விட்டபடி இதழ் வளைத்து பேசியவள்,

“வருணா இவங்களுக்கவே நீ படிச்சு சொன்ன மாதிரி செஞ்சு காட்டுற இது இந்த ராகவா மேல சத்தியம்” என அவன் தலையில் கைவைக்க எத்தனிக்க,

வேகமாக அவளின் கரத்தினை  பற்றி நிறுத்தினான்.

“நீ நல்லாவே வருவ ஆனா நா நல்லா இருக்கு வேணாமா, வீட்டுக்கு ஒரே பையன் என்ன விட்டுரும்மா” என பாவமாக சொல்ல,

அந்தரத்தில் நிறுத்திய கையை இறக்கி கொண்டவள் சிந்தனை முகமாய் அவனிடத்தில் பார்வையை படர விட்டு “சரி பிழைச்சு போ” என அசட்டையாக தோளை குலுக்கி கொண்டாள்.

“பாத்து பத்திரமா இருடி உன்ன தனியா அனுப்பவே மனசு இல்ல உடம்பு நல்லா இருந்தா கூட நானும் வருவேன் பழப்போன உடம்பு எதுக்கும் ஒத்துழைக்க மாட்டேங்கிது, ரெண்டு நாள் கழிச்சு ராகவன் கூட வர பாக்குறேன் மனசுக்கு சரின்னு பட்டா திருச்சி கிளம்புவேன் இல்லன்னா சென்னை தான்” என கண்டிப்புடன் சாரதா சொல்ல,

“உங்க விருப்பம் அது தான்னா நா எதுவும் சொல்ல மாட்டேன். தாராளமா வாங்க கூடவே இருங்க ஆனா இப்போ சந்தோஷமா வழி அனுப்பி வைங்க எல்லாத்தையும் நா தைரியமா ஹேண்டில் பண்ணுவேன் ம்மா” என சாரதாவின் முகவாயை பிடித்து கொஞ்சி சமாதானம் செய்தாள்.

“என்னோட இடத்துல இருந்தா அந்த கவலை உனக்கு புரியும் சின்ன பொண்ணு விளையாட்டு தனமா பேசுற வேற வழியில்லாம நீ சொல்றதையெல்லாம் நானும் கேட்டு இருக்கேன். பொம்பள பிள்ளைய தனியா அனுப்புறோமேன்னு மனசு கிடந்து தவிக்குது,

தெரியாத ஊர்ல எப்டி தனியா எல்லாத்தையும் சமாளிக்க போறாளோன்னு கவலையா இருக்கு உனக்கு கல்யாணமாகி ஒரு பொம்பள பிள்ளை பிறக்கும் போது என்னோட மனசு புரியும் “என சாதாரணமாக உரைத்தவரின் வார்த்தையில் கவலை கலந்தோடியது.

“அது நடக்கும் போது பாத்துக்கலாம் இப்போ நா கேட்டதை மட்டும் பண்ணுங்க” என பொறுமையிழந்து வந்த குரலில் அமைதியாகி போனார் சாரதா.

ஒலிபெருக்கியில் ரயில் வருவதை அறிவிக்க, “சரி ராகவா பாத்துக்கோ போனதும் கால் பண்றேன்” என வருணா உடமையை எடுத்து கொள்ள, அவள் கண்களில் ஈரம் சுரந்து விறுவிறுப்பை உண்டு பண்ணியது.

வருத்தத்தை வெளி காட்டாமல் உள்ளேயே அடக்கி கொண்டவள் ஏதேதோ சொல்ல நினைக்க, வார்த்தைகள் வம்பு செய்தது. வருணாவின் மனநிலை உணர்ந்து சாரதா அறியாமல் அவள் கரம் பற்றி அழுத்தம் கொடுத்தான் ராகவன்.

இருவரிடமும் விடைபெற்று  கிளம்பியவள் பல கனவுகளை சுமந்து கொண்டு பயணத்தை தொடங்கினாள். ஆறு மணி நேர பயணத்தில் சில மணி துளிகளே பிரிவின் கவலை சூழ்ந்திருந்தது, அதன் பிறகு முதல் நாள் கல்லூரி எப்படி இருக்கும் புது இடம் புதிய மனிதர்கள் அவர்களின் பழக்க வழக்கங்கள் என தீர்மானித்த பாதையை பற்றி எண்ணியவளுக்கு சிறு பயம் கூட தொற்றி கொண்டது.

‘எல்லை வகுத்தாயிற்று இனி அந்த வழியில் பயத்தை புறம் தள்ளி செல்வது தானே சிறந்தது’ நடுங்கிய மனதிற்கு அவளே தைரியம் சொல்லி கொண்டாள்.

நேரம் நண்பகல். ஆதவன் கர்ண கொடூரமாக தன் வீரியத்தை பூமகளின் மீது காட்டி கொண்டிருந்தான். என்ன கோபமோ எத்தனை நாள் பகையோ சற்றும் தணலின் தாக்கத்தை குறைக்காமல் வதைத்து கொண்டிருக்க, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தன் உடைமைகளை எடுத்து கொண்டு இறங்கினாள் வருணா.

சென்னையின் பரப்பான வாழ்கையை உணர்த்தும் விதமாய் ரயில் நிலையத்தில் கேட்ட ஜன இரைச்சல் செவியை நிரப்ப, சுற்றிலும் பார்வையை சுழல விட்டாள்.

அவள் வரும் ரயிலின் நேரமறிந்து சற்று முன்னதாகவே காத்திருந்தான் பாலாஜி. கையில் இருந்த அலைபேசியில் விழி இடுங்க பார்வை பதித்தவன் அவள் அருகில் சென்று “ராகவன் சிஸ்டரா” என கேட்க,

திருதிருவென விழித்தவள்  ஆமாம் என்பது போல தலையாட்டினாள்.

“நான் தான் பாலாஜி ராகவனோட பிரெண்ட் என்ன பத்தி சொல்லிருப்பானே” என தன்னை அறிமுகபடுத்தி கொள்ள,

“ஹான் சொன்னான் சொன்னான் ‘பாலாஜி வருவான் காத்திருந்து உன்னை கூட்டி செல்வான்னு’ சொன்னான். அது நீங்க தானா? உங்கள முன்ன பின்ன பாத்தது இல்ல போட்டோ அனுப்பி வச்சான் ப்ச் நான் தான் பாக்கலை சாரி”என்றவளை வியப்பு மேலோங்க பார்த்தான் அழைத்து செல்ல வந்தவன்.

“சரி வாங்க ண்ணா போலாம் எவ்ளோ நேரமா தான் என்னோட முகத்தையே பாத்துட்டு இருப்பீங்க வீட்டுல போய் சாவகாசமா பாக்கலாம் டிராவல் பண்ணதுல டயர்டா இருக்கு” என கூறிவிட்டு முன்னே செல்ல,

அழைக்க வந்தவன் நானா இல்லை அவளா என்ற வியப்பின் ரேகைகள் விலகாமல் அவளை பின் தொடர்ந்து சென்றான் பாலாஜி.

Advertisement