Advertisement

மேகமகள் சொட்டு சொட்டாக தூரலை தூவி கொண்டிருந்த காலை வேளை. இல்லம் இருந்த இருப்பை கண்டு சாரதாவிற்கு கோபம் சிரத்திற்கு ஏறியது.

“ஏண்டி, நீ சென்னை கிளம்பி போறதுக்கு வீட்டையே இப்டி அலங்கோல படுத்தி வச்சுருக்க, இனி எல்லாத்தையும் நான் ஒருத்தியே எடுத்து வச்சு சுத்தம் பண்ணனும்.எடுத்ததை எடுத்த இடத்தில வைக்கணும்னு தெரியாது”என சிடுசிடுக்க,

“கத்தாதீங்க ம்மா கொஞ்சம் மெதுவா பேசினா தான் என்னவாம் காலையிலயே உங்க சுப்ரபாதத்தை ஆரம்பிக்கணுமா?” என சலித்து கொண்டவள் “என்னோட திங்கஸ் எல்லாம் சரியா எடுத்து வைக்க வேணாமா? எதையாவது மறந்து வச்சுட்டு போய்ட்டேன்னா யார் கொண்டு வர்றது” என தன் ட்ராவல் பேக்கில் அனைத்து துணிகளையும் அடக்கி, பள்ளி சான்றிதழ்கள் அடங்கிய

ஃபைலையும் பைக்குள் அடக்கம் செய்தாள் வருணா.

“வரு கிளம்பியாச்சா சீக்கிரம் கிளம்புடா இன்னும் ஒரு மணி நேரத்துல நாமா ஸ்டேஷன்ல இருக்கணும்” என அறையில் இருந்தவாறே அவசரப்படுத்தினான் ராகவன்.

“இதோ பத்து நிமிஷத்துல கிளம்பிடுவேன் ண்ணா”என துணிகள் அடங்கிய பையை மர நாற்காலியில் வைத்துவிட்டு, மாற்று உடையை எடுத்து கொண்டு மின்னலாய் மறைந்து விட,

“இப்டி பண்ணி வச்சிருக்காளே இப்போ தான் சுத்தம் பண்ணேன் இவள..!” என பல்லை கடித்தவர் புலம்பி கொண்டே வீட்டை ஒழுங்கு படுத்த,

“விடுங்கம்மா இந்த நிமிஷம் தானே, இனி அவளே நினைச்சாலும் கொஞ்ச நாளைக்கு உங்கள தொந்தரவு பண்ண முடியாது, இன்னும் கொஞ்ச நேரத்துல ட்ரெயின் ஏறிடுவா” என அறையில் இருந்து வெளிபட்டவனின் கூற்றில் சாரதாவின் முகத்தில் கவலை படர தொடங்கியது.

அமைதியாக,செய்யும் வேலையில் கவனத்தை செலுத்த, உடன் உதவி புரியலானான் ராகவன். ஒருவழியாக இருவரும் வீட்டை ஒழுங்கு படுத்திவிட்டு ஆசுவாசம் கொள்ள,

“அண்ணா நா ரெடி வாங்க போகலாம்” என்றவாறே வந்து நின்றாள் வருணா.

பீச் நிற காட்டன் சுடிதாரை உடுத்தி கொண்டு வந்து நின்றவளை கண்ட சாராதவுக்கு பெருமையாகவும் அதே சமயம் பயமாகவும் இருந்தது.

கோதுமையை அலசி வெயிலில் காய வைத்து எடுத்தார் போன்ற நிறம். இடையை தாண்டிய கூந்தலின் அடர்த்தியும், சிரித்தாள் அம்சாய் எடுத்து காட்டும் தும்பை நிற பல் வரிசையும், பார்வையில் தெளிவும், நிமிர்வும் என தன் மகள் அனைத்திலும் அழகு தான் என்பதை பெருமையாக உணர்ந்தவரின் எண்ணங்களின் ஓரமாய் அதே அழகு அவளை பாழ்படுத்தி விடுமோ என்ற பயமும் தொற்றி கொண்டது.

“இப்பவும் சொல்றேன் சென்னைக்கு போய் தான் அவ படிக்கணுமா? இங்க இருந்தே படிக்கலாமே ராகவா. இங்க இல்லாத காலேஜ்ஜா மனசுக்கு சரியா படலை, என்னமோ தப்பா நடக்க போற மாதிரியே பயமா இருக்குடா” என கவலை தேய்ந்த குரலில் பேசினார் சாரதா.

“அம்மா நீங்க கவலைபடுற மாதிரி எதுவும் நடக்காது அவ மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? நா வருணாவை முழுசா நம்புறேன். என்மேல இருக்கிற நம்பிக்கைய விட அவ மேல அதிக நம்பிக்கை வைச்சிருக்கேன்,

காரணம் நீங்க. இந்த குடும்பம் இவ்ளோ தூரம் வந்துருக்குன்னா அது உங்களால தான் ம்மா. அவள சந்தேகபடுறது உங்கள சந்தேகபடுற மாதிரி கவலைய விடுங்க சந்தோஷமா அவள வழி அனுப்பி வைங்க”,திடமான குரலில் ராகவன் பேச,

“இல்லடா மனசுக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு அதான்…! அவ மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என்னோட பசங்களை நா நம்பாமா வேற யார் நம்புவா?” என்றவர்,

“இத்தனை வருஷம் கைகுள்ளயே இருந்தவ வெளிய படிக்க போறான்னதும் கஷ்டமா இருக்கு அதுவும் தனியா.எந்த வேலையும் செய்ய தெரியாது எப்டி எல்லாத்தையும் சாமாளிப்பா அவள பாக்காம எப்டி இருக்க போறேன்னு தெரியலை அதுவே..!” என்றவருக்க தொண்டை அடைக்க,

“ம்மா” என அணைத்து கொண்டவள்

“எனக்கு எதுவும் ஆகாது என்னை நினைச்சு நீங்க கவலைபடாதீங்க,அதான் ராகவனோட ஃபிரெண்ட் இருக்காரே அப்றம் என்ன?. எனக்கு நீங்க தான் தைரியம் சொல்லி அனுப்பணும் நா உங்களுக்கு சொல்லிட்டு இருக்கேன் எல்லாம் தலைகீழாக நடக்குது.

என்ன ராகவா உன்னோட அம்மா இவ்ளோ சென்சிட்டிவ்வா இருக்காங்க இதெல்லாம் கேட்க மாட்டியா? பாரு கிளம்பி போற நேரத்துல ஸ்கூல் பிள்ளை மாதிரி அழுதுட்டு இருக்காங்க” என முகம் சுருக்கி சொன்னவளின் பாவனையில்

பட்டென சிரித்து விட்டான் ராகவன்.

“ஏய் குட்டி பிசாசே உன்னோட அலம்பல் தாங்க முடியாம இத்தனை நாள் நொந்து நூலான அம்மா இன்னைக்கு உன்ன பிரியிறதை நினைச்சு அழுகுறாங்க அதை நினைச்சு சந்தோஷப்படு”.

“அட ஆமால்ல மறந்தே போனேன்” என தலையில் தட்டி கொண்டவள், “கொஞ்ச நாளைக்கு என்னோட தொந்தரவு இல்லாம ஜாலியா இரு சாரதா, மாசத்துல ரெண்டு முறை விசிட் வறேன். சாரதா பில்டர் காஃபிய டேஸ்ட் பண்ணாம என்னால இருக்க முடியாதுப்பா, காலையில எந்திரிச்சதும் உங்க காஃபிய ரொம்ப… மிஸ் பண்ணுவேன்” என்று உதட்டை பிதுக்கி அழுவது போல பாவனை செய்தாள் வருணா.

மிதமான சூட்டில் கால்கடுக்க நின்று காஃபி கொட்டையை வறுத்து, அரைத்து, அதன் மணம். வெளியே சென்றுவிடாமல் காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து, சுவைக்க தோன்றும் போது பில்டரில் வெந்நீர் ஊற்றி பவுடர் கலந்து, சில நிமிடங்கள் கரைந்து, காய்ச்சிய பாலில் தண்ணீருடன் ஐக்கியமான கலவையை கலந்து, சர்க்கரையை அளவாய் சேர்த்து, நுரை பொங்க எடுத்து வரும் சாராதவின் பில்டர் காஃபிக்கு அந்த தெருவில் ரசிகைகள் பலருண்டு.

“சாரதாம்மா நானும் தான் காஃபி போடுறேன் ஆனா உங்க அளவுக்கு டேஸ்டா வர மாட்டேங்கிது நீங்க சொன்ன பக்குவத்துல தான் நானும் பண்ணேன் மனுஷன் கிளாஸை தூக்கி வீசாத குறையா முறைச்சு பாத்துட்டு ஒன்னுமே சொல்லாம போயிட்டாரு” என அருகில் குடியிருப்போர் நடத்தும் கூட்டத்தில் குறைகளை வைப்பர் சிலர். அத்தனை பெயர் போன சாரதாவின் குளம்பிக்கு அடிமையாகாமல் இருக்க முடியுமா என்ன?,

“கஷ்டப்பட்டு ஏன் போகணும் இங்க இருந்தா பில்டர் காஃபி என்ன, வாய்க்கு ருசியா நினைச்சதை சாப்பிடலாம்” என சாரதா கூற,

“அண்ணா வா கிளம்பலாம் கொஞ்ச நேரம் இங்க இருந்தேன் என்னோட மனச மாத்துனாலும் மாத்திருவாங்க எனக்கு பில்டர் காஃபிய விட என்னோட கேரியர் தான் முக்கியம் அதனால நா போய்ட்டு வாரேன் ம்மா”என சாரதாவின் கன்னத்தில் முத்தமிட்டவள், கொண்டு செல்ல வேண்டிய உடமைகளை எடுத்து கொண்டாள்.

“சரிம்மா அவள ட்ரெயின் ஏத்திவிட்டுட்டு வறேன்” என்றவனை பிடித்து நிறுத்தி,

“ராகவா நானும் வறேண்டா”என இறைஞ்சும் விதமாய் மெல்லிய குரலில் கேட்டவரை சங்கடம் நிறைந்து பார்த்தான் ராகவன்.

என்ன பதில் சொல்வது என தெரியாமல் வருணாவை பார்க்க, பார்வையை திருப்பி கொண்டு நின்றவள் மறந்தும் இருவரின் புறமும் திரும்ப வில்லை.

சாரதாவின் கண்ணீரை கண்டதும் தொண்டை அடைத்து அழுகை வெளிப்படவிருக்க, அழுகையை அழுத்தமாய் விழுங்கி கொண்டு இயல்பாய் பேசி அவரை சமாதானம் செய்தவள் இப்போது சாரதாவின் வாய் மொழி கேட்டும் முகம் காட்டமால் பிடிவாதமாய் திரும்பி நின்றாள்.

“வரு அம்மாவும் வரட்டுமேடா”, அவனும் கெஞ்சலாய் இழுக்க,

“சரி” என எங்கோ பார்வையை பதித்து கமரிய குரலில் அனுமதி அளித்துவிட்டு நகர்ந்து விட, இருவரையும் ரயில் நிலையத்திற்கு அழைத்து சென்றான் ராகவன்.

செல்லும் வழியெங்கும் பள்ளி நினைவுகளே, புத்தக பையை சுமந்து கொண்டு நடந்த பாதை, நண்பர்களுடன் கதைத்து கொண்டே சிரித்து பேசி சண்டையிட்டு சமாதானம் அடைந்த பேருந்து நிறுத்தம், பேருந்தை தவற விட்டு மணி கணக்காய் காத்திருந்த தருணங்கள், என அனைத்தும் அவள் நினைவை தொட்டு விட்டு சென்றன.

‘முதல் பிரிவு சற்று கடினமாய் தான் இருக்கும் தவம் போல சில வருடங்கள்’ என எண்ணத்தில் அசைபோட்டவள் “டேய் அண்ணா” என அழைக்க,

“என்ன வரு?”.

“கொஞ்சம் வண்டிய நிறுத்த சொல்லு சாப்டுட்டு போலாம் பசிக்கிது” என்றாள் முகம் சுருக்கி,

என்ன நினைத்தானோ அவள் முகத்தில் தெரிந்த பசியையும் மீறிய ஏதோ ஓர் உணர்வை கண்டு வாகனத்தை எப்போதும் பிரியமாய் அழைத்து செல்லும் உணவகத்திற்கு விட சொன்னான் ராகவன்.

“வீட்டுலயே சொல்லிருந்தா உனக்கு பிடிச்சதை செஞ்சு கொடுத்துருப்பேன்ல” என ஆரம்பித்தவரை,

“விடுங்க ம்மா” என அடக்கியவன் “என்னைக்காவது ஒரு நாள் தானே நிதமுமா கேக்குறா” என கூறியதும் வாயை மூடி கொண்டார் சாரதா.

உணவகத்தின் முன் காரை நிறுத்த மூவரும் இறங்கி உள்ளே சென்றனர். அவளுக்கு பிடித்தமான பொங்கலும் அதற்கு துணையாக இஞ்சியை தூக்கலாக போட்டு

செய்த தேங்காய் சட்னியும், சிறிது கிண்ணத்தில் நெய்யும்  கொண்டு வந்து வைத்துவிட்டு கடை உழியர் நகர்ந்து சென்றிட,

“சாப்டு வரு” என்றவன் ஆவி பறக்கும் பொங்கலில் நெய்யை பரப்பி விட்டான். சூடான பொங்கலில் சுகமாய் கரைந்தது நெய். வழிந்து ஒடியதை ஒற்றை விரலால் வழி மறித்து கொண்டவன், ஒரு கவளத்தை எடுத்து உள்ளே தள்ளினான்.

எப்போதும் ஆசையாய் உண்ணும் உணவு ஏனோ உள்ளே இறங்க மறுத்தது வருணாவிற்கு. சிறிய உணவகம் என்றாலும் தரமான சுவையான உணவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் சற்றும் தயக்கம் காட்டுவதில்லை.

அந்த உணவகத்தின் சிறப்பே,

இல்லத்தில் அவர்களே தயார் செய்யும் நெய் தான். அதற்காகவே பெரும்பாலும் ராகவனை அழைத்து கொண்டு வந்து விடுவாள் வருணா. பருப்போடு குழைந்த சாதத்தில் நெய் விட்டு இறக்கி நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறி, பார்க்கும் போதே நாவில் நீர் சுரந்து பசியை தூண்ட செய்யும்.

Advertisement