Advertisement

செடிக்கொடியில் பனி துளிகள் இன்னமும் விடைபெறாமல் உறங்கி கொண்டிருந்தன.கதிரவன் கண் பார்க்க மெல்ல வண்ண வண்ண மலர்கள் வாசனையை பரப்பியவாறே மொட்டவிழ தொடங்கிய அதிகாலைநேரம்.  

சிறுக சிறுக சேமித்து வைத்த காசில் சிரத்தையில்லாமல் வாங்கிய, கௌடா அப்பார்மெண்ட் குடியிருப்பின் இரண்டாவது தளத்தின் முதல் வீட்டில் கந்த சஷ்டி கவசம் டேப்ர்காடில் ஒலித்து கொண்டிருந்தது. 

அன்று வைகாசி விசாகம் என்பதால் எப்போதும் எழும் நேரத்திற்கு முன்பாகவே எழுந்து கொண்டார் சாரதா.அவசர குளியலை போட்டுவிட்டு கீழே இறங்கி சென்று பால் பாக்கெட்டும் பூஜைக்கு தேவையான பொருட்களையும் வாங்கி வந்தவர் அவசரமாக பாயசம் செய்து நெய்வேத்தியமாக கடவுளுக்கு படைத்து,

சாமி படங்கள் அனைத்திற்கும் பூ வைத்து பூஜை செய்தவர் தீபாராதனையை கண்களில் ஒற்றி கொண்டு “முருகா சரணம்” என்று இரண்டு முறை ஜெபித்துவிட்டு அடுத்த வேலையை கவனிக்க தொடங்கினார் சாரதா. 

பில்டரில் காஃபி பவுடரை வெந்நீரை ஊற்றி கலந்து வைத்துவிட்டு காலை மதியம் இரு வேளைக்கான உணவை தயார் செய்ய தொடங்கினார். சற்று நிமிடத்தில் டிக்காஷன் தயாராகிட கொதிக்க காய்ச்சிய பாலை டம்ளரில் ஊற்றி டிக்காஷன் கலந்து மணக்கும் குளம்பியை ஓரமாக வைத்துவிட்டு,

“சுபர்ணா” என அழைக்க,

மழலை தனம் மாறாத கீச்சு குரலில் “சொல்லுங்க அம்மாச்சி” என ஓடி வந்தாள் அகவை ஐந்தை தொடவிருக்கும் சாராதவின் பேத்தி. 

“இந்தா மாமாவை எழுப்பி காஃபியை கொடு” என டம்ளர் அடங்கிய டிரேயை அவளிடம் கொடுத்தனுப்பினார் சாரதா.

அறைக்குள் நுழைந்தவள் டிரேயை டேபிளின் மீது வைத்துவிட்டு “ராகவ் மாமா எந்திரி நேரமாச்சு. இன்னும் தூங்கிட்து இருக்க எந்திரி மாமா” என ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவனை எழுப்ப,

“என் செல்ல பால்கோவால இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேனே ப்ளீஸ்டா குட்டி” என கண்களை திறக்காமலேயே கெஞ்சியவன் போர்வையை நெஞ்சுவரை இழுத்து கொண்டு புரண்டு படுத்தான்.

“காஃபி ஆறித போகுது மாமா எந்திரி தைம் ஆச்சு அம்மாச்சி வந்தா தித்தும்” என்று மிழற்றிய குழந்தை  போர்வையை இழுக்க,

“ப்ளீஸ்டா பட்டு குட்டி” என்று கொஞ்சியவன் அவளையும் சேர்த்து இழுத்து கொள்ள,

“விது மாமா அழுக்கா இருக்கு” என்று சிரிப்பின் சுவடு மறையாமல் அவனிடமிருந்து திமிறினாள் சுபர்ணா.

“பாப்பு குட்டி கொஞ்ச நேரம் மாமா கூட நியும் படுத்து தூங்கு இன்னைக்கு உன்ன நானே ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறேன்”  பிடியை தளராது வளைத்து கொள்ள, 

பள்ளி அழைத்து செல்கிறேன் என்றதும் சலுகையாய் அவனிடம் ஒட்டி கொண்டாள் சுப்ரணா.எப்போதும் அவளது தாய் தான் அவளை பள்ளிக்கு அழைத்து செல்வது, வீட்டில் தொடங்கி பள்ளியின் உள்ளே செல்லும்வரை ஓயாத அறிவுரைகள் தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அறிவுரை ஆனால் பொருள் ஒன்று தான். சொல் பேச்சை கேட்க வேண்டும் சேட்டை பண்ண கூடாது ஆசிரியரிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொள்ள கூடாது சிந்தாமல் உண்ண வேண்டும் அவ்வபோது  தண்ணீர் குடிக்க வேண்டும் அது இது என்று நீண்டு கொண்டே செல்லும் அறிவுரைகளிலிருந்து இன்று விடுதலை என்றதும் குஷியாய் இருந்தது சுபர்ணாவிற்கு.

மருமகள் மாமனை எழுப்பினாள் என்றால் தாயோ மகளை எழுப்பி கொண்டிருந்தார். “பிள்ளை எந்திருச்சுட்டா இன்னும் அம்மாகாரி தூங்கிட்டு இருக்கா. ஏய் வருணா எந்திரிடி மணி என்னாகுது இன்னும் இழுத்து போர்த்திட்டு தூங்கிட்டு இருக்க நேரமாச்சு கிளம்ப வேணாமா” என தட்டி எழுப்ப,

“ம்மா இன்னும் கொஞ்ச நேரம் துங்கிக்கிறேனே நைட் லேட்டா தான் படுத்தேன் ப்ளீஸ் ம்மா” என கெஞ்சினாள் அவரின் அருமை புதல்வி வருணா.

தனியார் பள்ளியில் ஆசிரியராக  பணி புரிகின்றாள்.

“உன்னோட பொண்ணு எனக்கு முன்னாடியே எந்திருச்சு என்ன எழுப்பிவிட்டுட்டு ஸ்கூலுக்கு கிளம்பிட்டா நீ என்னடான்னா இன்னும் தூங்குறதுக்கு டைம் கேக்குற இன்னிக்கு சீக்கிரம் போகணும்னு சொன்னயே எந்திரிம்மா”என அன்றைய நாளின் பணியை நினைவுபடுத்த, 

அன்றைய நாளின் பணி எண்ணத்தில் எழுந்து உறக்கத்தை விரட்டி அடித்தது. சட்டென எழுந்து கொண்டவள் அவசரமாக மாற்று உடையை எடுத்து கொண்டு “அம்மா நா குளிச்சுட்டு வந்துடுறேன் எனக்கு சாப்பாடு எடுத்து வச்சுறுங்க” என கூறிவிட்டு குளியலறை புகுந்து கொள்ள,

“ம்ஹும் என்ன பொண்ணோ” என சலித்து கொண்டவர் படுக்கையை சரி செய்து அறையை சுத்தம் செய்ய தொடங்கினார்.

“மாமா தைம் ஆச்சு எந்திரி போதும் தூங்குனது” என அவனிடமிருந்து விலகி அமர்ந்து கொண்டு தட்டி எழுப்பினாள் சுபர்ணா.நா

மெதுவாக கண்களை திறந்து பள்ளி உடையில் கிளம்பி தயாராய் இருந்தவளை பார்த்தவன் கண்களை கசக்கி கொண்டே “என்னடா குட்டி இவ்ளோ சீக்கிரமா கிளம்பிட்டீங்க”.

“போ மாமா மணி என்னாச்சுன்னு பாரு கொந்த நேரத்துக்கு முன்னாதி என்ன சொன்ன?”, சில வார்த்தைகளை முழுவதுமாக உச்சரிக்க முடியாமல் அவளுக்கு தெரிந்த பாஷையில் தத்தி தத்தி மழலை மொழி பேசினாள் சுப்ரணா.

“என்ன சொன்னேன்?” சொன்னதை மறந்து சிந்தனை செய்த வண்ணம் கேள்வி கேட்க,

“இன்னைக்கு நானே உன்ன ஸ்கூலுக்கு கூத்தித்து போறேன்னு சொன்ன. இன்னும் தூங்கித்து இருக்க போ நா உன்கித்த பேசமாத்தேன்” என முகத்தை திருப்பி கொண்டாள்.

“அச்சோ அப்டியா சொன்னேன் சாரிடா செல்லம் இன்னும் பத்து நிமிஷத்துல மாமா ரெடியாகிட்டு வந்துடுறேன். சொன்ன மாதிரி நானே ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறேன் சரியா” என அவளின் முகம் திருப்பி கன்னத்தை பிடித்து கொஞ்சியவன் கொண்டு வந்த குளம்பி ஆடை கட்டி தலும்ப முகம் சுளிக்காமல் எடுத்து மடமடவென பருக்கியவன் அவளிடம் டிரேயை கொடுத்துவிட்டு குளியலறை நோக்கி சென்றான் ராகவன்.

“அம்மாச்சி என்னோட லன்த் ரெதியா?” என கத்திகொண்டே சமையலறைக்குள் வந்தவளிடம், 

“ம் ரெடியாகிருச்சு குட்டி அப்பவே பேக் பண்ணி பேக்ல வச்சுட்டேன் இந்தா நீ கேட்ட நூடுல்ஸ்” என கிண்ணத்தை நீட்ட, அதை வாங்கிக்கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்தாள் சுபர்ணா.

சற்று நிமிடத்தில் பள்ளி செல்ல தயாராகி வெளியே வந்தவள் “என்னடி கிளம்பிட்டியா சீக்கிரம் சாப்டு எனக்கு டைம் ஆச்சு உன்ன ஸ்கூல்ல விட்டுட்டு நானும் ஸ்கூலுக்கு போகணும்” என பரபரப்பாக பேசிய வருணா,

சுபர்ணாவின் முன்னே கிண்ணத்தில் இருந்த உணவை பார்த்து “அம்மா” என கத்தினாள். 

என்னவோ ஏதோ என பதறி அடித்து கொண்டு “ஏண்டி இப்டி கத்துற என்னாச்சு”?.

“உங்களுக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன் நூடுல்ஸ் பண்ணி கொடுகாதிங்க அவளுக்கு ஒத்துக்காதுன்னு” என்றவள்”ஏய் சாப்பிடுறது நிறுத்து இது வேணாம்” என தட்டை எடுத்து கொள்ள, 

“ஏய் என்னடி பண்ற பச்ச புள்ள ஆசையா சாப்டுட்டு இருக்கு அதை போய் எடுத்துட்டு போற”.

“நீங்க சும்மா இருங்கம்மா ரொம்ப செல்லம் கொடுத்து அவள கெடுத்து வச்சுருக்கிங்க” என விறைத்து கொண்டு நின்றாள் வருணா.

“என்ன காலங்காத்தலயே ரெண்டுபேரும் ஆரம்பிச்சிட்டீங்களா?” என்றபடியே அறையிலிருந்து வெளிபட்டான் ராகவன்.

இருவருக்கும் நடுவில் சாப்பிடவா? வேண்டாமா? என வருணாவின் கையில் ஆறி அலைமோதி கொண்டிருந்த கிண்ணத்தை ஏக்கமாக பார்த்து கொண்டிருந்தவளை பார்த்த ராகவனுக்கு சிரிப்பு பொங்கியது. 

“விடு வரு இன்னைக்கு ஒரு நாளைக்கு தானே, ஆசையா கேட்டிருக்கா பாவம் சாப்டட்டுமே” என சுபர்ணாவுக்கு ஆதரவாக பேச, 

“என்னமோ பண்ணுங்க ஆனா இது தான் முதலும் கடைசியுமாஇருக்கணும்” என்றவள் “சரி சீக்கிரம் சாப்பிடு டைம் ஆச்சு” என அவசரப்படுத்த,

“நீங்க கிளம்புங்கம்மா நா மாமா கூத வண்தியில போய்கிறேன் மாமா கூத்தித்து போறேன்னு சொல்லிருக்கு” என்றவள் உணவை உண்ண ஆரம்பித்தாள்.

“ஆமா வரு நானே பட்டுவ ட்ராப் பண்ணிடுறேன் எனக்கு ஆபிஸ் மதியத்துக்கு மேல தான் நீ கிளம்பு” என ராகவன் கூற,

” சரி  ண்ணா”என்றவள் “ம்மா எனக்கு லன்ச் பேக் பண்ணிடியா”என்றவாறே கைப்பையை எடுத்து கொண்டு மகளின் கிண்ணத்தில் இருந்த நூடுல்ஸை ஒரு வாய் திணித்து கொண்டாள்.

இது சரியா செய்வது முறையா? என்ற ரீதியில் பார்த்த மகவிடம் “நா சாப்டலாம் எனக்கு விதிவிலக்கு இல்ல ஏன்னா அம்மா பெரிய பொண்ணு நீ தான் சாப்ட கூடாது சின்ன பொண்ணு வயிறு ரொம்ப கெட்டு போயிடும்” என்று சீரியஸாக முகத்தை வைத்து கொண்டு கூறினாள்.

“போடி அங்கட்டு சின்ன பிள்ளைய பயமுறுத்திக்கிட்டு. இந்தா பிடி அவள சொல்றதுக்கு முன்னாடி நீ நல்லா சாப்டு, உன்ன மாதிரி தானே அவளும் இருப்பா தாயை போல பிள்ளை நூலை போல சேலைன்னு சும்மாவா சொல்லிருக்காங்க” என அங்கலாய்த்து கொண்டே டிஃபன் பாக்ஸை நீட்டியவர், “உக்காருடி தோசை எடுத்து வைக்கிறேன்” என்று சொல்ல,

“இல்லம்மா சாப்பாடு வேணாம் டைம் ஆச்சு ஒரு கிளாஸ் பால் மட்டும் கொடு போதும்” என்றதும் பாலை காய்ச்சி டம்ளர் ததும்ப கொண்டு வந்து கொடுத்தார் சாரதா.

“ராகவா நீ உக்காரு தோசை ஊத்தி எடுத்துட்டு வைக்கிறேன்” என சொல்லிவிட்டு சென்ற சில நிமிடங்களில் தட்டில் தோசையுடன் வந்தார் சாரதா.

“சரிம்மா  நா போய்ட்டு வரேன்” என்ற வருணா ராகவனிடம் “ண்ணா கூட்டிட்டு போறது சரி அவளுக்கு ஐஸ்கிரீம் சாக்லேட் எதுவும் வங்கி தர கூடாது” என்று கண்டிப்புகளை பிறப்பிக்க,

மாமனை பாவமாய் பார்த்தாள் சுப்ரணா’விடு மாமா வாங்கித்தறேன்’ என பார்வையாலேயே கூற, 

முகம் கூம்பிட அமைதியாக எழுந்து கை கழுவ சென்றாள் சுபர்ணா.

“நா எதுவும் வாங்கி தரல நீ எப்டி கூட்டிட்டு போவயோ அதே மாதிரி எங்கயும் வண்டிய நிறுத்தாம நேரா ஸ்கூல்ல போய் ட்ராப் பண்ணிடுறேன் போதுமா” என ராகவன் சொல்லிய பின்பே கிளம்பி சென்றாள் வருணா.

“சரிடா குட்டி. நாம கிளம்பலமா அம்மாச்சிக்கொரு கிஸ் கொடுத்துட்டு வா” என அவள் புத்தக பையையும் உணவு பையையும் எடுத்துக்கொண்டான்.

“அம்மாச்சி” என கூறியதும் கீழே குனிந்தவரின் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு “மாமா லன்த் பேக்க வேணா நா கொண்து வரேன் என்கித்த கொது மாமா” என கூற,

“அது ரொம்ப வெய்ட்டா இருக்குமே என்னோட பட்டுவால தூக்க முடியாதே” என உதட்டை பிதுக்கி பாவமாக முகத்தை வைத்து கொண்டு கூறினான் ராகவன்.

“நா ஸ்த்ராங் மாமா பாத்தியா என்னோத ஆம்ஸ் எப்தி இருக்குன்னு” என கண்கள் மிளிர கையை மடக்கி காட்டினாள் குழந்தை.

“ஏய் வாலு கையே வெண்டைக்கா சைஸ்ல தான் இருக்கு. இதுல ஆம்ஸ் வேற இருக்குன்னு கட்டுற” என சிரித்தவன், 

“பைக் வரை நானே தூக்கிட்டு வரேன் எப்படியும் ஸ்கூலுக்குள்ள நீ தானே தூக்கிட்டு போகணும்” என்று புத்தகங்கள் அடங்கிய பையை வாங்கி கொண்டு,

“சரிம்மா நா போய் விட்டுட்டு வந்துடுறேன்” என சாரதாவை பார்த்து கூறிய ராகவன் பதறி போனான்.

“என்னம்மா இப்போ எதுக்கு கண்கலங்குறீங்க” என குரலில் பதட்டத்தை நிரப்பி தணிவாக கேட்டவன் குழந்தையை பார்க்க,

சாரதாவையும் அவனையும் என்னவோ ஏதோ என்ற ரீதியில் பார்த்து கொண்டிருந்தது. 

“சுபா குட்டி நீங்க கீழ போய் வெய்ட் பண்ணுங்க மாமா வந்துடுறேன்” என அவளை அனுப்பி விட்டு “சொல்லுங்க எதுக்கு அழுகுறிங்க?” என கேட்டான் ராகவன்.

“என்னனு சொல்றது இப்டி ஒரு புள்ளைக்கு அவளோட அப்பன பாக்க கொடுத்து வைக்கலையே” என்று மூக்கை சிந்தியவர்,

“இந்த உலகத்துல எந்த மூலையில இருக்கிறானே தெரியல. அவகிட்ட கேட்டா அதை பத்தி பேசவே கூடாதுன்னு  சொல்றா. மீறி கேட்ட வீட்ட விட்டு போயிருவேன்னு மிரட்டுறா, இந்த பிஞ்சு முகத்த பாக்கும் போது பாவமா இருக்குடா” என சேலை தலைப்பால் சாரதா கண்களை துடைத்து கொள்ள,

“ப்ச் விடுங்கம்மா அவளோட பிடிவாதம் தான் தெரியுமே? அவளுக்கு எப்போ சொல்லணும்னு தோணுதோ அப்ப சொல்லட்டும் அதுவரைக்கும் நாம எதுவும் கேக்க வேணாம்”. 

“ஆமா இப்டி சொல்லி சொல்லியே அஞ்சு வருஷம் ஓடிப்போயிருச்சு அவளுக்கு கொஞ்சம் விவரம் தெரிஞ்சு அப்பா எங்கன்னு கேட்டா என்னனு சொல்றது? ஒருத்தர் முகத்தை ஒருத்தர் சங்கடத்தோட பாத்துகிட்டு முழிக்க வேண்டியது தான்” என்றார் கோபமாக.

“அப்டி ஒரு விஷயம் நடக்கும் போது பாத்துக்கலாம். இன்னொரு முறை இந்த மாதிரி பாப்பா முன்னாடி அழாதீங்க.நா அவள விட்டுட்டு வந்துடுறேன்” என கூறிவிட்டு சென்றான் அவன்.

ராகவன் ஐடி துறையில் அவன் பணிபுரியும் அலுவலகத்தில் லட்சங்களில் சம்பளம் வாங்கும் ஊழியர்களில் அவனும் ஒருவன். திறமையானவன் எந்த ஒரு காரியத்தையும் சலிப்பில்லாமல் செய்து முடித்துவிடுவான், சாந்தம் பொறுமையை இன்று வரை கையாண்டு வருகின்றான்.

வருணா பிறந்த சில வருடங்களிலேயே அவன் தந்தை இறந்து விட, பகுதி நேர வேலை பார்த்து தன் படிப்பையும் வீட்டின் பொறுப்பையும் தகப்பன் ஸ்தானத்தில் இருந்து வழி நடத்தினான். அவனின் பாசத்திற்கு பாத்திரமானவள் வருணா, வெற்றியடைந்த காதல் வாழ்க்கை சில நேரங்களில் கசப்பாகவும் மாறலாம் கலகலப்பாக தொடரலாம். கலகலப்பாக தொடங்கிய காதல் வாழ்க்கை சிலரின் சூழ்ச்சியினால் கசப்பாக மாறிப்போனது கசப்பின் கடைநிலை தான் சுப்ரணா. 

கர்ப்பமாக உள்ளேன் என வீட்டில் கூறியதும் பொங்கி எழுந்த சாரதா கருவை கலைக்க சொல்ல, வேண்டாம் என மறுத்து அச்சூழ்நிலையிலும் அவளுக்கு நம்பிக்கையூட்டி தைரியமாக வாழ வழி செய்தவன். சுபர்ணாவிற்கு முன்னுதாரணமே அவன் தான்.

பள்ளிக்கு அழைத்து செல்லும் வழியிலேயே “மாமா” என்று மெதுவாக குரலெழுப்பினாள்.

அவன் செவிகளை வார்த்தைகள் எட்டவில்லை என்றதும் மாமா என்று ஹண்ட்பாரை இறுக பிடித்திரிந்த கையை சுரண்டினாள் சுப்ரணா.

“என்னடா பட்டு”.

“ஒரே ஒரு ஐஸ்கிரீம் ப்ளீஸ் மாமா” என கெஞ்சலாய் கேட்க, 

“ம்ஹும் முடியாது வருணாக்கு தெரிஞ்சது என்ன திட்டியே தீத்துருவா நா வாங்கி கொடுக்க மாட்டேன்” பிடிவாதமாய் மறுத்திட,

“ப்ளீஸ் மாமா ஐஸ்கீரிம் சாப்பிதாம போனா மனசு உறுத்தும், பாதத்துல கவனம் செலுத்த முதியாது. கவனம் செலுத்தலான ஒழுங்கா பதிக்க முதியாது அப்றம் நா ஃபெயில் ஆவேன் அம்மாகித்த தித்துவாங்குவேன். இதெல்லாம் தேவையா? நா தித்து வாங்குனா உனக்கு சந்தோசமா?”என முழு நீளத்திற்கு முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு பேசியவளை வியந்து பார்த்தான் ராகவன்.

 “ஒரு ஐஸ்க்ரிமுக்கு மிஸ் பண்ணா இப்படி ஒரு வரலாற்று சம்பவம் நடக்கும்னு எனக்கு தெரியாம போச்சே”என அவள் சாமர்த்திய பேச்சை எண்ணி ரசனையுடன் சிரித்தவன்,”சரி வா ஒண்ணு மட்டும் தான்”என கண்டிப்போடு கூறியே கடைக்கு அழைத்து சென்றான்.

இவர்கள் இருவரும் கடைக்குள் நுழையும் நேரம் சாலையில் சிக்னல் விழ, வாகனத்தை நிறுத்தி தலை கவசத்தை கழட்டி சற்று காற்று வங்கிய வருணா எதேச்சையாக உள்ளே நுழையும் இருவரையும் பார்த்து விட, கோபத்தில் மூச்சு வாங்கியது.

‘வீட்டுக்கு வாங்க உங்க ரெண்டுபேருக்கும் இன்னைக்கு இருக்கு கச்சேரி” என மனதில் கருவி கொண்டவள் பச்சை விளக்கு எரியவும் ஸ்கூட்டியை கிளப்பி கொண்டு பறந்தாள்.

தரிசனம் தொடரும்..

Advertisement