Advertisement

அவள் அழுது கொண்டிருந்ததால்… வாயிலில் கார் வந்து நின்றதை கவனிக்கவே இல்லை. அதில் இருந்த இறங்கிய ஆதவன் பார்த்தது அழுது கொண்டிருந்த மனைவியைத் தான். நேராக அவளிடம் சென்றவன், “எதுக்கு ஆருஷி அழுகிற…” என்றதும்தான் ஆருஷி கணவனைக் கவனித்தாள். அவள் உட்கார்ந்தபடியே அவனைக் இடையோடு கட்டிக் கொண்டு ஒரே அழுகை.

இலக்கியா….” என்று குரல் கொடுத்த ஆதவன், இலக்கியா வந்ததும் டாக்ஸியில் இருந்து சாமானை இறக்கிட்டுப் பணம் கொடுத்து அனுப்பிட்டு வா…” என, அப்போது தான் அவனின் குரல் கேட்டு சரத்தும் பார்கவியும் வந்தனர்.

ஆதவனைப் பார்த்ததும் சரத்திக்கு சர்வமும் நடுங்கி விட்டது. அவன் திடிரென்று வந்து நிற்பான் என யார் எதிர்பார்த்தார்கள்.

மாலை இருள் சூழ்ந்த நேரம். வாசலில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்த மனைவியைப் பார்க்க ஆதவனுக்கு மனம் தவித்துப் போனது. ஆனால் ஆதவனைப் பார்த்ததும், ஆருஷிக்கு அவளது கவலைகள், வருத்தங்கள் எல்லாம் பறந்து போக… தன்னைச் சமாளித்துக் கொண்டு கணவனைப் பார்த்தவள், அவனை வாங்க என உள்ளே அழைத்துச் சென்றாள்.

சரத்தும் சேர்ந்து தான் வாடகை காரில் இருந்த சாமான்களை எடுத்து வந்து உள்ளே வைத்தார். தந்தையைப் பார்த்ததும் யஸ்வந்துக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. அவன் தந்தையின் காலைக் கட்டிக் கொண்டு குதிக்க….

ஹே வாலு எப்படி இருக்க… அம்மாவை நீதான் அழ வச்சியா?” என்று ஆதவன் மகனிடம் கேட்க…. அப்போதுதான் யஸ்வந் தாயின் முகத்தை உற்றுக் கவனித்தான். அதைப் பார்த்து ஆருஷிக்குச் சிரிப்பு வந்து விட்டது.

ஹே… ஒன்னும் இல்லை போ டா…” என்றாள்.

ஆதவன் பின்கட்டுக்கு சென்று முகம் கைகால் கழுவிக்கொண்டு வர… ஆருஷி அவனுக்குத் துண்டை எடுத்துக் கொண்டு சென்றாள்.

“நானே வர மாட்டேனா?” என்றவன், “எதுக்கு டி அப்படி அழுத” என்றதும்,

எங்க அப்பாதான் வேற யாரு… பிஸ்னஸ் பண்ண போறாராம். இலக்கியா பேர்ல இருந்த பணத்தைக் கேட்டுட்டு இருந்தாரு…. அதுதான் சண்டை. அதோட நீங்க வேற இல்லையா… நீங்க யஸ்வந்த் பிறக்கும் போதும் இல்லை. அதை நினைச்சதும் ரொம்ப அழுகையா வந்திடுச்சு.” என்றாள்.

உங்க அப்பா பேசுறதை எல்லாம் கண்டுக்காத. நான் தான் வந்திட்டேன் இல்ல…. நான் பார்த்துக்கிறேன். வயித்துல குழந்தையை வச்சுகிட்டு இப்படியா அழுவாங்க.” என்றான்.

இரவு உணவு முடிந்து ஆருஷி சீக்கிரமே உறங்கி விட…. ஆதவன் வெளியே அவன் அம்மாவுடன் பேசியபடி நடந்து கொண்டிருந்தான்.

நான் முதல் குழந்தைக்கும் அவளோட இருக்கலை… அதுதான் ரெண்டாவது குழந்தைக்காவது கூடவே இருக்கலாம்னு வந்தேன். ஆனா இங்க அவ வீட்ல இருக்கிறது கஷ்ட்டம். வீடும் சின்னது.”

நம்ம ஊருக்கே நாங்க வந்திடட்டுமா…. இன்னும் ஏழாம் மாசம் முடியலை… இப்போ ட்ரைன்ல வரலாம் தானே…” என ஆதவன் கேட்க…

ஏன் டா கேட்டுட்டு இருக்க…. அவளுக்கு அவ அம்மா வீட்ல இருக்கணும்னு தோணுமே தான் அனுப்பி வச்சேன். அதோட வர்ஷாவும் சென்னை கிளம்பினாளா… இவ மட்டும் தனியா இருக்கணும். அங்க அவ தங்கச்சி இருக்கான்னு நினைச்சேன்.”

நமக்கு வீட்டுக்கு பக்கத்தில தெரிஞ்ச டாக்டர் இருக்கா…. ஒன்னும் கவலை இல்லை. நீ இங்கயே கூட்டிட்டு வந்திடு. அவங்க அம்மா வேணா பிரசவ நேரம் வந்து இருக்கட்டும்,.” என்றார் துர்கா மகிழ்சியாகவே.

ஆதவனுக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது. அவன் மாமனார் மாமியாரிடம் மனைவியின் பிரசவத்தை ஊரிலேயே பார்த்துக் கொள்கிறேன் என அப்போதே சொல்லி விட்டான். பார்கவி சரத்தை முறைத்தார். ஆதவன் அறைக்குள் சென்று மனைவியின் அருகே படுத்து உறங்கி விட்டான்.

இப்போது விஜயனும் வர்ஷாவும் இங்கே சென்னையில் தானே இருக்கிறார்கள். மறுநாள் ஆதவன் மனைவி மகனை அழைத்துக் கொண்டு தம்பி வீட்டுக்கு கிளம்பி விட்டான்.

சென்னையில் முக்கிய இடத்தில் பெரிய அபார்ட்மெண்ட் ஒன்றில் மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீட்டை விஜயன் வாடகைக்கு எடுத்திருக்க….. வர்ஷாவின் பெற்றோர் வந்து மகளைத் தனிக் குடித்தனம் வைத்து விட்டு தான் சென்றிருந்தனர்.

விஜயனும் வர்ஷாவும் அவர்களை வரவேற்க…. யஸ்வந்துக்கும் தர்ஷனுக்கும் ஒருவரையொருவர் பார்க்க அவ்வளவு சந்தோஷம்.

அத்தான் நீங்களும் சென்னைக்கே வேலை வாங்கிட்டு வந்திடுங்க. நாம சேர்ந்து இங்கயே இருக்கலாம்.” வர்ஷா சொல்ல… பார்க்கலாம் என்றான் ஆதவன்.

அது வாடகை வீடு போல இல்லை. சொந்த வீடு போல…. அவ்வளவு சாமான்களுடன் வர்ஷா வீட்டை வைத்திருந்தாள்.

இந்த வீடு இப்போ கட்டி முடிச்ச வீடு தான். இன்னும் பில்டர்கிட்ட தான் இருக்கு. ரேட் பேசிட்டு இருக்கேன். இதையே வாங்கிடலாம்னு பார்க்கிறேன்.” என விஜயன் அண்ணனிடம் சொல்லிக் கொண்டு இருந்தான்.

ஆமாம் திரும்ப ஒரு வீடு மாத்துறது ரொம்பக் கஷ்டம். இந்த வீடே ரொம்ப நல்லா இருக்கு. இதையே வாங்கிக்கலாம்.” என்றாள் வர்ஷா.

அன்றைய பொழுது அங்கயே சென்று விட… அன்று இரவு அங்கயே தங்கி மறுநாள் காலை உணவு முடித்து ஆருஷியின் வீட்டுக்கு கிளம்பினர்.

செல்லும் வழியில் “நாமும் இப்படி ஒரு வீடு வாங்கலாமா?” எனக் கணவன் கேட்டதும் “எதோ ஒன்னரை கோடின்னு சொன்னாங்க. அவ்வளவு போட்டு வாங்கனுமா?” என ஆருஷி யோசிக்க…

சும்மா கேட்டேன் டி… நான் எல்லாம் வாங்க மாட்டேன். அவனுக்கு அது ஓகே…” என்றான் ஆதவன். அன்று ஆருஷி வீட்டில் இருந்தனர்.

சரத் மாப்பிள்ளை இருப்பதால் பவ்யமாக நடந்துகொள்ள…

மாமா எதோ தெரியாம ஒரு தடவை தப்புப் பண்ணலாம். தெரிஞ்சே திரும்பப் பண்ணலாமா? இலக்கியாவுக்குக் கல்யாணம் முடியட்டும். அப்புறம் வேணா மத்ததைப் பத்தி யோசிக்கலாம்.”

ஆருஷியை பத்தி கவலை இல்லை. அவ எங்க வீட்ல இருப்பா… ஆனா அத்தையும் இலக்கியாவையும் நினைச்சா கவலையா இருக்கு. நீங்க இப்படித் தினமும் எதாவது பிரச்சனை பண்ணிட்டு இருந்தா… அவங்க எப்படி நிம்மதியா இருக்க முடியும்.” ஆதவன் பேச… சரத் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு மேல் அவனாலும் அவர்கள் வீட்டு விஷயத்தில் தலையிட முடியாது. ஆதவன் குடும்பம் மாலையே ரயில் மூலம் கன்னியாகுமரி கிளம்பி விட்டனர்.

இரண்டு வாரம் தான் ஆருஷி பிறந்த வீட்டில் இருந்திருப்பாள். அவளுக்கு அலைச்சலில் உடல் அசந்து போய் இருக்க…. இரண்டு நாட்கள் படுத்து உறங்கிக் கொண்டே இருந்தாள். ஆதவனே கொஞ்சம் பயந்து தான் போனான். தேவையில்லாமல் அலைய வைத்து விட்டோமோ என்று….

துர்கா அவர்களை மருத்துவரிடம் எதற்கும் சென்று விட்டு வர சொன்னார். மருத்துவர் எல்லாம் நார்மல் தான். சற்று ஓய்வாக இருக்கும் படி மட்டும் சொல்லி அனுப்பினார்.

மூன்றாம் நாள் ஆருஷி எப்போதும் போல இருந்தாள். அவளின் ஆசிரியர் படிப்பும் முடிந்திருக்க…. வீட்டில் ஓய்வாகத்தான் இருந்தாள்.

வீட்டில் இனி அதிக வேலை இருக்கும் என துர்கா, கவிதாவை மாலையும் வர சொல்லி விட்டார்.

துர்கா பார்கவியை அழைத்து, “இவ பிரசவ நேரத்துக்குத் தான் வருவான்னு நினைச்சேன், முன்னாடியே வந்துட்டான். அங்க உங்க வீட்ல சும்மா இருக்க முடியாது இல்லையா… இங்கன்னா எதாவது வேலை பார்த்திட்டு இருப்பான். அதுதான் வேற ஒன்னும் இல்லை. நீங்க தப்பா நினைச்கிக்காதீங்க.”

நீங்க பிரசவ நேரத்துக்கு உங்க மகள் கூட வந்து எவ்வளவு நாள் வேணாலும் இருங்க.” என,

எனக்கும் புரிஞ்சுது. மாப்பிள்ளை இங்க நாள் கணக்கில இருக்கிறதும் கஷ்ட்டம் தான். நான் பிரசவ நேரம் வரேன்.” என்றார் பார்கவி.

இலக்கியாவை எங்க விடுறதுன்னு நினைக்க வேண்டாம். அவளையும் கூட்டிட்டு வாங்க.” எனச் சொல்லிவிட்டு துர்கா வைத்தார்.

மூன்றாம் நாள் இரவு மனைவியின் அருகே கட்டிலில் உட்கார்ந்த ஆதவன், “பிரசவத்துக்கு உங்க வீட்ல இருக்கலைன்னு வருத்தமா ஆருஷி.” என்றதும்,

இல்லையில்லை அப்படி எல்லாம் எதுவும் இல்லை. ஆனா இங்க அத்தைக்குத் தான் வேலை அதிகம் இருக்கும். அதுதான் கவலையா இருக்கு.” என்றாள்.

அது பரவாயில்லை அம்மா அட்ஜஸ்ட் பண்ணிப்பாங்க. அவங்களுக்கும் ரெஸ்ட் இருக்கிற மாதிரி பார்த்துக்கலாம்.”

பிரசவம் முடிஞ்சதும் போயிடுவீங்களா?” என ஆருஷி கவலையாக கேட்க….

அப்படிப் போறதா இருந்தா இவ்வளவு நாம் ஏன் வராம இருந்தேன். மொத்தமா வரணும்னு தானே வரலை.”

கணவன் சொன்னதை ஆருஷியால் நம்பவே முடியவில்லை.

நிஜமாவா… நீங்க திரும்பப் போக வேண்டாமா?”

வேண்டாம், என்னைக் கம்பெனியில எப்போ விடுவாங்கன்னு தெரியாம இருந்துச்சு. சொல்லிட்டு நான் வரலைனா நீ ஏமாந்து போவ… அதுதான் உன்கிட்ட சொல்லலை…. நல்லவேளை இப்போவாவது விட்டாங்க.”

ஆருஷிக்கு இப்போதுதான் மனதுக்கு நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

அப்போ வேலைக்கு என்ன பண்ணுவீங்க?”

ம்ம்… வா வான்னு சொல்ல வேண்டியது, வந்த பிறகு வேலையாம். அது என்னன்னு இனிதான் யோசிக்கணும்., நீதான் டீச்சர் வேலைக்குப் படிச்சிருக்க இல்ல… நீ வேலைக்குப் போயிட்டு வா… நான் வீட்ல அம்மாவோட இருந்து பசங்களைப் பார்த்துக்கிறேன்.” என்றான்.

கணவன் சொன்னதைக் கற்பனையில் கண்டுவிட்டு ஆருஷி சிரிக்க…

ஓ… உங்களுக்கு அப்படி வேற நினைப்பிருக்கா மேடம்.” என்றவன் மனைவியின் காதை பிடித்துத் திருகினான்.

விஜயனின் தலைமை அலுவலகம் மும்பையில் தானே… அவன் மும்பைக்குச் சென்றிருக்க……. வர்ஷாவும் தர்ஷானும் இங்கே வந்து விட்டனர். ஏற்கனவே ஆருஷி வர்ஷா இல்லாமல் போர் அடிக்கிறது என்று சொல்லிக் கொண்டு தான் இருந்தாள். அந்த வார இறுதி நாத்தனர்களும் வந்துவிட…. வீடு களைகட்டியது.

“எங்ககிட்ட கூட நீ வர்றதா சொல்லலை…” என சகோதரிகள் இருவரும் தம்பியிடம் சண்டை பிடிக்க….

“வரே வேண்டிய நேரத்துல வந்தோம்முல…” என்றான் ஆதவன் கெத்தாக. 

ஆவடியில் பார்கவியின் பிறந்த வீட்டின் அருகே அரையடி மனையில் கட்டிய வீடு முடிந்திருக்க… ஆருஷியின் பெற்றோர் அங்கே குடிபெயர்ந்தனர். பார்கவியின் உடன்பிறப்புகள் அருகேயே இருந்தாலும், சரத்திற்குப் பயந்தே ரொம்பவும் இவர்களுடன் வைத்துக் கொள்வது இல்லை.

ஆருஷிக்குப் பிரசவத்திற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்க…. ஒருநாள் மட்டும் சென்னையில் வேலை இருப்பதாகச் சொல்லி ஆதவன் சென்னை சென்றான்.

விஜயன் வீட்டில் இறங்கியவன், அங்கே குளித்துக் கிளம்பி, வர்ஷா கொடுத்த காலை உணவை உண்டுவிட்டு, தம்பியையும் இவன் வாங்கி இருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

அப்போது தான் விஜயனுக்கு அண்ணன் தான் அந்த வீட்டை வாங்கி இருப்பது தெரியும். முன்புறம் வீடு சின்னது தான். ஆனால் பின்னால் நிறைய இடம் இருக்க… இடிச்சிட்டு மொத்தமா கட்டணும். “நீயே யாராவது ஆள் பார்த்து விடு.” என,

ம்ம்… நல்லா பெரிசாவே வரும்.” என்றான் விஜயன்.

வாடகைக்குத் தான் விடப் போறோம். கீழே முழுக்கப் பார்கிங் பண்ணிட்டு, மேல மூன்னு மாடியில் வீடு பண்ணிடலாம்.” என,

அந்தப் பகுதியில் நல்ல வாடகையும் வரும்,” என்பதால் தாராளமாகச் செலவும் செய்யலாம்.

அண்ணனும் தம்பியும் எப்படிக் கட்டுவது என அங்கயே நின்று பேசிவிட்டு, வீடு வந்தனர். ஆதவன் அங்கிருந்தே ஊருக்கு கிளம்பி விட்டான்.

இரவு விஜயன் துர்காவுக்கு அழைத்துப் பேசினான். “எங்களுக்கு முன்னாடியே தெரியும் டா… அவங்க அப்பா வேற யாருக்கோ விற்க கிளம்பினார். அப்புறம் தான் ஆதவன் அவனே வாங்கிகிட்டான். அவங்க சொந்த வீட்டுக்கு போற வரைக்கும் எதுவும் செய்ய வேண்டாம்னு தான் இருந்தான்.”

அந்த வீடு இருக்கிறது நல்ல இடத்தில தான். அதனால கட்டி விட்டா வாடகை நல்லா வரும்.” என்ற விஜயன், “வர்ஷாவுக்குச் சொல்லவா… வேண்டாமா?” என்று கேட்க…

இப்போதான் சொந்த வீட்டுக்கு தான போயிருக்காங்க. சொல்லு. நீதான் வீடு கட்டப் போற… அப்புறம் அவ எதாவது நினைச்சுக்கப் போறா. எப்படியும் எல்லோருக்கும் ஒருநாள் தெரியத் தான் போகுது.” என்றார்.

விஜயன் சென்று சொல்ல… “ஒ அவங்க வீட்டை இவங்களே வாங்கிட்டாங்களா…” என்றவள், அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை.

உங்க தம்பி இது போலச் சென்னையில் வீடு கட்டுகிறான் என்று பிரமிளாவிடமும் மஞ்சுளாவிடமும் துர்கா சொல்லி விட… அவர்கள் எப்படி வந்தது என்று எல்லாம் ஆராயவில்லை.

இந்தத் தம்பி வீடு பால் காய்ச்சும் போது, அந்தத் தம்பி வீட்டுக்கும் போயிட்டு வந்திடலாம்.” என்றவர்கள், “எங்களுக்கு டிரஸ் எடுத்துக் கொடுக்கணும்.” என்றனர்.

வாரவாரம் டிரஸ் வாங்குவாளுங்க, அப்புறமும் டிரஸ் தான் கேட்பாளுங்க என துர்கா முனங்கினார்.

அடுத்தப் பத்து நாட்களில் ஆதவனுக்கும் ஆருஷிக்கும் அவர்கள் விரும்பியது போலப் பெண் குழந்தையே பிறந்து விட… மொத்த வீடும் கொண்டாடி மகிழ்ந்தது.

சரத் வந்து குழந்தையைப் பார்த்து விட்டு மனைவியை இங்கே விட்டு சென்றார். அருகில் மாமா வீட்டினர் இருப்பதால்… இலக்கியா அப்பாவுடனே சென்று விட்டாள்.

இரண்டு வாரங்கள் பார்கவி மகளுடன் இருந்துவிட்டு கிளம்பி விட்டார். துர்கா அவரை நன்றாகப் பார்த்துக் கொண்டார்.

பார்கவி சென்ற பிறகு வர்ஷா வந்து சில நாட்கள் இருந்தாள்… பிரமிளா, மஞ்சுளா என ஆளாளுக்கு வந்திருந்து உதவி செய்தனர். தீபிகா வந்தால் அவள் அத்தையை விட்டு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகர மாட்டாள்.

இவளும் பிள்ளை பெத்த மாதிரி சேர்ந்து உட்கார்ந்திருக்காளே என மஞ்சுளா சொல்ல… எல்லோரும் சிரித்தனர்.

ஆதவனுக்கு மகள் பிறந்த நேரம், அவர்கள் ஊருக்குப் பக்கத்திலேயே இருசக்கர வாகனங்களுக்குத் தேவையான முக்கிய உதிறிப் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் விலைக்கு வர…. அதை நடத்திக் கொண்டிருந்தவருக்கு உடல்நிலை சரியில்லை. அடுத்து பார்க்க ஆளும் இல்லை. அதனால் தான் விற்க வேண்டிய நிலை. லாபத்தில் இயங்கிக் கொண்டு இருந்ததால்… ஆதவனே அதை வாங்கிக் கொண்டான்.

மகன் குடும்பத்துடன் இனி தங்களுடனே இருப்பான் என்பதில் ஈஸ்வருக்கும் துர்காவுக்கும் மகிழ்ச்சியே…. அதோடு சென்னையில் கட்டும் வீடும் வேகமாக வளர்ந்து கொண்டு இருக்க….. ஆதவன் ஆருஷியின் மகளுக்கு மூன்றாம் மாதம் யாழினி எனப் பெயரிட்ட வைபவமும் வீட்டளவில் நன்றாக நடந்து முடிந்தது.

இலக்கியாவுக்கு வரன் பார்க்க… சரத் ஆருஷியின் திருமணத்தில் செய்த குளறுபடிகள் பிரசித்தி பெற்றது என்பதால்… நல்ல வரன்கள் எதுவும் வரவில்லை. பிறகு துர்கா தான் அவருக்குத் தெரிந்த பையன் வீட்டாரிடம் பேசினார். இவர்கள் வீட்டில் வைத்து தான் இலக்கியாவை பையன் வீட்டிற்குக் காட்டினர்.

சரத் எப்போதும் போல் அது இது என்று வாய்விட… இப்போ நகை மட்டும் தான். மத்தது எல்லாம் இவங்களுக்குப் பிறகு தான் என துர்கா அடித்துப் பேசி விட்டார். இலக்கியாவுக்கு அந்த இடமே முடிவாகி திருமணம் நன்றாக நடந்து முடிந்தது.

ஆறு மாதங்களுக்குப் பிறகு….

சென்னையில் ஆதவன் ஆருஷியின் வீடு சீரியல் விளக்கால் ஜொலிக்க… ஊரில் இருந்து எல்லோரும் இரண்டு தினம் முன்பே வந்து விஜயன் வர்ஷா வீட்டில் தங்கி இருந்தனர். இன்று அதிகாலை எழுந்து குளித்துக் கிளம்பி இங்கே வீடு பால் காய்ச்ச வந்திருந்தனர்.

பிரம்ம முஹுர்தத்தில் ஓமம் வளர்த்து பூஜை முடிந்திருக்க… எல்லோரும் காலை உணவு உண்டு முடித்திருந்தனர். பெரியவர்கள் எல்லாம் அதிகாலை எழுந்த அசதியில் உட்கார்ந்திருக்க… பிள்ளைகள் எல்லாம் கீழே, மாடி என ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர்.

யஸ்வந்த எங்கே செல்வது என்றாலும் அவனுக்குத் தர்ஷன் வேண்டும். அதே போலதான் தர்ஷனுக்கும். அதைப் பார்த்து ஆதவனுக்கும் விஜயனுக்கும், இவன் அண்ணன் டா என்பதும், அவன் தம்பி டா என்பதும், முடியலை என இருவரும் சொல்லி சிரித்துக் கொண்டு இருந்தனர்.

ஆருஷி பெரிய பட்டுப் புடவை கட்டி, முகம் கொள்ளா புன்னகையுடன் உறவினர்களைக் கவனித்துக் கொண்டு இருந்தாள். மகளுக்கும் அவள் புடவை நிறத்திலேயே பாவாடை சட்டை அணிவித்து இருந்தாள். மனைவியும் மகளும் ஆதவனின் மனதை கொள்ளைக் கொண்டனர்.

அவள் தனியாக இருக்கும் நேரம் அவளிடம் சென்ற ஆதவன், “என்ன மா உன் முகம் ஜொலிக்குது. உன்னை இப்படி நம்ம கல்யாணத்துல கூடப் பார்க்கலையே டி.” எனக் கேலி செய்ய….

ஐயோ இப்போ எதுக்கு அதை நினைவு படுத்துறீங்க அன்னைக்கு நான் இருந்த டென்ஷன் எனக்குத்தான் தெரியும். நான் மயங்கி விழாம இருந்தது பெரிசு.” என்றாள் சிரிப்புடன்.

இப்போது அதை நினைத்துச் சிரிக்கலாம். ஆனால் அப்போது அவள் இருந்த நிலை என்றுமே அவளுக்கு மறக்காது. நல்ல கணவனும் புகுந்த வீடும் வாய்த்ததால்…. எப்படித் திருமணம் நடந்த போதும், அவளால் அவள் வீட்டில் நிம்மதியாகச் சந்தோஷமாக வாழ முடிகிறது. எல்லோருக்கும் இப்படி அமையுமா என்றால்…. உறுதியாக ஆமாம் என்று சொல்லிவிட முடியாது.

வாங்க எல்லாம் சேர்ந்து போட்டோ எடுக்கலாம் என விஜயன் அழைக்க…. ஈஸ்வர் துர்காவை நடுவில் வைத்து, வலது பக்கம் பிரமிளாவும் வினோத்தும் இருக்க… இடது பக்கம் மஞ்சுளாவும் ஸ்ரீதரும் இருக்க… குழந்தைகள் முன்பக்கம் கீழே வரிசையாக உட்கார்ந்துகொள்ள… பின் வரிசையில் ஆதவன் ஆருஷி, விஜயன் வர்ஷா ஜோடிகள் நின்றிருக்க…. ஈஸ்வர் துர்காவின் குடும்பப்படம் கண்ணுக்கு நிறைவாக வந்திருந்தது.

குடுப்பம் சேர்ந்து இருக்க… அந்தக் குடும்பத்தில் இருக்கும் எல்லோருமே நினைக்க வேண்டும்.

“ஒரு கண்ணு கலங்கினாலும் 

பல கைகள் துடைக்க வருமே 

இப்படி ஒரு கூட்டுக்குள்ள தான் வாழ ஏங்குதே….

சொந்தம் உள்ள வாழ்க்கை சொர்கத்துக்கும் மேல….

சொத்து சுகம் ஏதும் வேண்டாமே….”

Advertisement