Advertisement

தேன் சிந்துதே வானம்

இறுதி அத்தியாயம்

விஜயனுக்கு வர்ஷா இங்கு வந்ததே தெரியாது. வர்ஷா அவனை அழைக்கவே இல்லை. துர்கா தான் பேசும் போது சொன்னார்.

ஆருஷியை பார்க்க வந்தா… நாங்க இருன்னு சொன்னோம் இருந்துட்டா… நீ எதுவும் பிரச்சனை பண்ணாத. இதோட விட்டுடு. அவ நல்லத்தான் இருக்கா… ஆருஷி இல்லாத நேரம் யஸ்வந்தையும் பார்த்துக்கிறா. ஆருஷிக்கும் அவளுக்கும் ஒத்து போகுது. ரெண்டு பேரும் வீட்ல இருக்க நேரம் ஒண்ணா தான் இருக்காங்க.”

மனைவி அவளாகவே வந்தது விஜயனுக்குச் சந்தோஷம் தான். அவன் அழைத்தால் வர்ஷா கோபத்தில் எடுக்கவில்லை.

வர்ஷா இரவு மாடி அறையில் மகனுடன் சென்று படுத்துக் கொள்வாள். “உனக்குப் பயமா இல்லையா?” அருஷி கேட்க…

நான் நைட் ரொம்ப மொபைல்ல இருப்பேன். அப்புறம் தூக்கம் வந்ததும் தூங்கிடுவேன். எனக்குப் பயம் எல்லாம் இல்லை.” என்றாள்.

அவள் அம்மா வீட்டில் வேலை ஒன்றும் செய்ய மாட்டாள் என துர்காவுக்குத் தெரியும். அதனால் அவரும் வேலை வாங்குவதில்லை. இங்கே அவள் வேலையை மற்றும் மகனின் வேலையை அவள் தானே செய்தாக வேண்டும். அதோடு அவளாகவே சில நேரம் ஆருஷியோ துர்காவோ சமைத்துக் கொண்டு இருந்தால் வந்து உதவுவாள்.

கவிதா இருக்கும் போதே துர்கா சமைத்து விடுவார். அதை எல்லாம் வேறு பாத்திரத்துக்கு மாற்றி அப்போதே கவிதாவை பாத்திரங்களைக் கழுவ வைத்து தான் அனுப்புவாள்.

உங்க மூத்த மருமகள் மாதிரி இல்லமா உங்க ரெண்டாவது மருமகள். ரொம்ப விவரம்.” கவிதா சொல்ல….

ஆருஷி மாதிரி அமைதியா இருப்பா… ஏமாத்தலாம்னு நினைச்சியா… உன் வேலை எல்லாம் இவகிட்ட செல்லாது.” என்றார் துர்கா.

வீட்டு வேலை செய்யும் பெண்ணும் அவள் இருக்கும் நேரம் வந்தால்.. துளைந்தாள்… இங்கு இடுக்கு விடாமல் சுத்தம் செய்ய வைப்பாள். கொடுக்கும் பணத்துக்குக் கராக வேலை வாங்கி விடுவாள்.

மாலை ஆருஷி கல்லூரியில் இருந்து வந்ததும் சிறிது நேரம் படுத்து உறங்கி விடுவாள். அவள் எழுந்து அவள் எதாவது உண்டதும், அவளும் வர்ஷாவும் பிள்ளைகளை வெளியே விளையாட விட்டு பேசிக் கொண்டு இருப்பார்கள்.

மதியம் கவிதா இருக்கும் போதே இரவுக்கும் எதாவது குழம்பு செய்து துர்கா வைத்து விடுவார். அதனால் இரவு தோசையோ சப்பாத்தியோ தான். அதை இருவரும் சேர்ந்து செய்வார்கள்.

வார நாட்கள் கூடப் போய் விடும். வார இறுதியில் தான் பொழுது போவது சிரமமாக இருக்கும்.

வர்ஷா வந்து இரண்டு வாரங்கள் சென்று பொழுதே போகவில்லை என்று புலம்ப… “நான் எதுக்குப் படிக்கப் போனேன்னு நினைச்ச… இதுக்குதான். நீயும் எதாவது பண்ணு.” என்ற ஆருஷி,

நீ என்ன படிச்சிருக்க?” என்றதும்,

நான் பி இ ஆர்கிடெக்ட். எனக்கு இந்த வீட்டுக்கு இண்டிரியர் வேலை பண்ண பிடிக்கும்.”

அப்போ அதையே பண்ணு.” என்றாள் ஆருஷி.

வேலை கிடைக்கணுமே… முதல்ல நம்ம வீட்லலையே நிறைய மாத்தனும்.” வர்ஷா சொல்ல…

இவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த துர்கா, “என்ன வேணா பண்ணு. ஆனா எங்ககிட்ட எல்லாம் பணம் கேட்காத.” என்று விட்டார்.

நான் உங்ககிட்ட கேட்டேனா அத்தை.” என்றவள், மறுநாள் ஆருஷியையும் காரில் அழைத்துக் கொண்டு ஷாப்பிங் சென்றாள். அவளே தான் காரை ஓட்டிக் கொண்டு வந்தாள்.

உன்னை நம்பி வரலாம் தானே…” ஆருஷி கேட்க…

நான் உங்க கொழுந்தனை விட நல்லாவே ஓட்டுவேன்.” என்றாள்.

இருவரும் வீட்டுக்கு தேவையான கர்ட்டன், மெத்தை விரிப்புகள் இன்னும் மற்ற அலங்கார சாமான்கள் வாங்கிக் கொண்டு வீடு வந்தனர்.

கார்பெண்டரை வர சொல்லி என்னென்ன செய்ய வேண்டும் என்று சொன்னவள், அதற்குரிய பொருட்களை அவரையே வாங்கிக் கொண்டு வர செய்தாள்.

ஹாலில் ஒரு பக்க சவரில் வால் பேப்பர் ஓட்ட வைத்து அலங்கரிக்கச் செய்தவள், அவரை வைத்தே… ஜன்னலுக்குப் புதுத் திரை சீலைகள் எல்லாம் மாட்டி விட்டாள். அங்கங்கே சில அலங்கார பொருட்களும் வாங்கி வைக்க வீடு பளிச்சென்று தான் இருந்தது.

உன் பொண்டாட்டிக்கு நிறையப் பணம் அனுப்புவியோ… என்ன செய்யுறதுன்னு தெரியாம…. செலவு பண்ணிட்டு இருக்கா. ஆனா வீடு இப்போ பார்க்க நல்லாத்தான் இருக்கு.” என துர்கா சிரித்துக் கொண்டு சொல்ல… விஜயனும் சிரித்தான்.

மறுவாரம் துர்கா இருவரையும் மகள்கள் வீட்டுக்கு சென்று வரும்படி அனுப்பி வைத்தார். யஸ்வந்தையும் தர்ஷனையும் அழைத்துச் செல்வதால்… வாடகை காரில் சென்றனர்.

பிரமிளா வீட்டுக்கு மஞ்சுளாவும் வந்து விட்டாள். அதனால் ஒரே இடத்தில் எல்லோரும் சேர்ந்து கலட்டாவாக இருந்தது.

ஆருஷி ஒன்றை கவனித்தாள்… மஞ்சுளாவுக்கும் வர்ஷாவுக்கும் தான் அதிகம் முட்டிக் கொள்கிறது. ஆனால் அதிகம் சிரித்துப் பேசுவதும் அவர்கள் இருவரும் தான். இப்போது மீண்டும் மஞ்சுளாவும் வர்ஷாவும் ராசியாகி விட்டார்கள்.

அந்த வார இறுதி அங்கே நன்றாகச் சென்று விட…. அடுத்த வார இறுதியில் விஜயன் சொல்லாமல் கொள்ளாமல் வந்து நின்றான். இரண்டு பெரிய பெட்டிகள் மற்றும் மூன்று பெரிய பைகள் என அங்கிருந்து மொத்தமாகக் காலி செய்து கொண்டு வந்துவிட்டான் போல….

கணவன் வந்ததும் தான் வர்ஷாவுக்கு ஹப்பா என்று நிம்மதியானது. ஆனால் கோபமாக இருப்பது போல முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தாள்.

விஜயனும் அவளைக் கண்டுகொள்ளாமல் இருந்தான்.

என்ன வீட்டுக்கு விருந்தாளி எல்லாம் வந்திருக்காங்க போல… சொல்லவே இல்லை.” என்று அவன் கிண்டலாக வேறு கேட்க…. யாரை சொல்கிறான் என்பது போல ஆருஷி பார்க்க…

உங்க தங்கச்சியைத் தான் அண்ணி சொல்றேன்.” என்றான். சட்டென்று ஆருஷிக்குச் சிரிப்பு வந்து விட… வர்ஷா கணவனை முறைத்தாள்.

என்ன டா மொத்த கூடாரத்தையும் காலி பண்ணிட்டு வந்திட்ட மாதிரி இருக்கு.” துர்கா கேட்க…

இப்போதைக்கு இந்த ப்ராஜக்ட் முடிஞ்சு ரெண்டு மாசம் லீவுக்குத் தான் வந்திருக்கேன். அடுத்து என்னன்னு அடுத்த ப்ராஜக்ட் போடுற இடத்தைப் பொருத்து தான். அவங்களே இங்க போட்டுட்டா பரவாயில்லை… இல்லைனா அப்போ வேற யோசிக்கலாம்.” என்றான்.

முதலில் விஜயனைப் பார்த்ததும் அப்பா தான் வந்துவிட்டார் என்று ஆவலாக வந்த யஸ்வந்த, பிறகு இல்லை என்று உணர்ந்து, அவன் தந்தையைத் தேட… எல்லோருக்கும் பார்க்கவே கஷ்ட்டமாக இருந்தது.

அப்பா இப்போ வரலை அப்புறமா வருவாங்க.” என ஆருஷி மகனிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

துர்கா பிரமிளாவை அழைத்தவர், இன்று யஸ்வந்த தந்தையைத் தேடியதை சொல்லி, “அவன் மகன் அவனைத் தேடுறான். அதைப் பார்க்கவே முடியலை…”

ரெண்டு பேரும் காலேஜ்ஜே வெளியூர்ல தான் படிச்சாங்க. அப்போ இருந்தே எங்களுக்குப் பழகிடுச்சு…. ஆனா சின்னப் பிள்ளைக்குத் தெரியுமா? இவன் யாருக்கு இப்படிச் சம்பாதிக்கணும். நீ உன் தம்பிகிட்ட சொல்லு, நீ சொன்னா கேட்பான்.”

இங்க இருக்கணும்னு இல்ல… அவனுக்கு எங்க வேலை கிடைக்குதோ அங்க குடும்பத்தோட போய் இருக்கட்டும்.” என்றார்.

சரிமா நான் அவன்கிட்ட பேசுறேன்.” என்ற பிரமிளாவும் தம்பியை அழைத்துப் பேசினாள்.

அவள் அம்மா சொல்லியதை சொல்ல… “சரிக்கா பார்க்கிறேன்.” என்றான்.

இரவு அறைக்கு வந்த கணவனை வர்ஷா முறைக்க… விஜயன் சென்று அவளைக் கட்டிப் பிடிக்க… வர்ஷா அவனைத் தள்ளி விட…

வீடெல்லாம் சூப்பரா மாத்தி வச்சிருக்க… அதுக்குப் பாராட்டலாம்னு நினைச்சேன் வேண்டாமா?” என்றதும், வர்ஷா கோபத்தை விட்டு உண்மையா என்பது போலப் பார்க்க… “சத்தியமா டி… ரொம்ப நல்லா இருக்கு.” என்றதும், வர்ஷாவும் குளிர்ந்து போனாள்.

என்னை இங்க வரவே கூடாதுன்னு சொன்னீங்க. இப்போ இப்படி இருக்கீங்க.”

நீ நடத்துகிறதை பொருத்து தான். நீ ஒழுங்கா இருந்தா நானும் இருப்பேன்.”

இப்போ நீ ஒழுங்கா இருக்க… அதனால நானும் இருக்கேன்.”

உங்க அண்ணன் எல்லாம் உங்க அண்ணிக்கு எத்தனை தடவை போன் போடுறார் தெரியுமா? நீங்க அன்னைக்குப் போட்டது நான் எடுக்கலைனதும் அப்படியே விட்டாச்சு.”

எனக்கே நம்ம பொண்டாட்டிக்கு பேசணும், அவளுக்கு நிறையச் செய்யணும்னு ஆசை வரணும். அது நீ நடந்துக்கிறதை வச்சு தான்.”

நீ கல்யாணத்துக்குப் பிறகும் உங்க வீட்ல கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த மாதிரியே இருக்கலாம்னு நினைச்சிட்டு இருக்க… அங்க உங்க அண்ணி இருக்காங்க. அதே போல எங்க வீட்லயும் பெரியவங்க இருக்காங்க. எங்க இருந்தாலும் நாம இருக்கிறபடி இருந்தா தான் நமக்கு மரியாதை.”

ஆமாம் எனக்கு இப்போ புரியுது.” என்றவள்,

அடுத்து உங்களுக்குத் திரும்ப ரொம்பத் தூரத்துல வேலை போட்டுட்டா…” வர்ஷா கணவனின் சட்டை பட்டனை திருக்கியபடி கேட்க…

நான் சொல்லி இருக்கேன். எங்கனாலும் குடும்பமா போற மாதிரி போடுங்கன்னு. ஆனா அப்படி எங்காவது வெளிநாடு போட்டா… அங்க வேலைக்கு எல்லாம் ஆள் கிடைக்கிறது கஷ்ட்டம். நீயே தான் பண்ற மாதிரி இருக்கும்.”

எல்லா வேலையும் நானே பண்ணுமா?”

இரு முதல்ல எங்க போடுறாங்கன்னு பார்ப்போம்.” என்றவன்,

நீ இப்படிப் பேசிட்டே இருக்கப் போறியா… நான் வந்து ஆறு மாசத்துக்கு மேல ஆகுது. உனக்கு வேற எதுவும் தோணாதா?” என,

நீங்க தான் தோன வைக்கணும்.” என்றாள் வர்ஷா கணவனை மையலாகப் பார்த்து. அதன் பிறகு கணவன் மனைவி இருவருக்கும் நேரம் இனிமையாகச் சென்றது.

கணவனும் இருந்ததால் வர்ஷா இன்னும் சந்தோஷமாக வளைய வந்தாள். ஆருஷி கல்லூரி சென்றிருக்கும் நேரம் எங்காவது வெளியே கணவனுடன் சென்றுவிட்டு வர வேண்டும் என்றால்… சென்றுவிட்டு வந்து விடுவாள். மாலை ஆருஷி வந்துவிட்டால் அவளுடன் தான் இருப்பாள். ஆருஷியின் கல்லூரி வேலைகளில் அவளுக்கு உதவியும் செய்வாள்.

விஜயன் யஸ்வந்தையும் தர்ஷனையும் பார்த்துகொள்ள… அவன் இருந்ததால் அவர்களுக்கும் பொழுது போனது.

ஆருஷிக்கு ஐந்தாம் மாதம் தொடக்கி இருக்க… அப்போது வருகிறேன் என்ற ஆதவன் வரவே இல்லை. நாத்தனார்கள் இருவரும் அவர்கள் வீட்டில் இருந்து ஐந்து வகைச் சாதம் செய்து எடுத்து வந்து, ஆருஷிக்கு வளையல் போட்டு சென்றனர். வர்ஷாவும் சேர்ந்து தான் செய்தாள்.

முதல் குழந்தையின் போதும் ஆதவன் அவளுடன் இருக்கவில்லை இப்போதும் இருக்கவில்லை. ஏழாம் மாதம் துவக்கத்திலேயே சரத்தும் பார்கவியும் மகளுக்கு வளைகாப்புச் செய்ய வந்தனர்.

துர்கா, பார்கவி, பிரமிளா, மஞ்சுளா, வர்ஷா, அதோடு அக்கம் பக்கம் இருப்பவர்கள் வந்து வளையல் அடுக்கி முடிக்க… அதுவரை சமாளித்துக் கொண்டிருந்த ஆருஷி, மனையில் இருந்து எழுந்துகொள்ளச் சொன்னதும், எழுந்து கீழே இருந்த அறைக்குள் சென்றவள், கணவன் இல்லாததை நினைத்து அழுது விட்டாள். எல்லோருக்கும் அவளைப் பார்க்கவே கஷ்ட்டமாகப் போய்விட்டது. துர்காவுக்கு மகன் மீது மிகுந்த வருத்தம் தான்.

விஜயனை சென்னையில் பெரிய மால் கட்டும் வேலையில் சீப் இன்ஜினியராகப் போட்டு இருந்தனர். இந்த வாரம் விஜயன் குடும்பமும் சென்னை செல்கிறது.

ஆருஷியை நாத்தனார்கள் சமாதானம் செய்ய, வர்ஷா, அவளுக்குக் குடிக்கப் பால் கொண்டு வந்த கொடுக்க… வளைகாப்புக்கு வந்திருந்த சகுந்தலா மகளைத் தனியாக அழைத்துச் சென்று, “நீ என்ன அவளுக்கு வேலைக்காரியா? ஒழுங்கா நம்ம வீட்ல இருந்திருக்கலாம்.” என,

ஏன் இதுல என்ன இருக்கு? அப்படிப் பார்த்தா அவங்க எனக்கு எத்தனை தடவை செஞ்சிருக்கங்க தெரியுமா? நாங்க அக்கா தங்கச்சி தானே… எங்களுக்குள்ள ஒன்னும் இல்லை. சும்மா எதாவது சொல்லிட்டு இருக்காதீங்க.” என்றாள் நறுக்கென்று. இப்போதெல்லாம் அம்மா வீட்டோடு அளவோடு தான் வைத்துக் கொள்கிறாள்.

ஆருஷி அன்றே அவள் பெற்றோருடன் சென்னை சென்று விட்டாள். ஆதவன் துர்காவிடம் நன்றாக வாங்கிக் கட்டி இருந்தான். மறுநாள் ஆருஷிக்கு அழைத்துப் பேசியவன், “இப்போ வந்திட்டு எப்படிப் பிரசவத்துக்கு உன்னோட இருக்க முடியும் ஆருஷி? அதுதான் அப்ப வரலாம்னு இப்போ வரலை. அம்மா கத்து கத்துன்னு கத்துறாங்க.” என்றான்.

நீங்க கண்டிப்பா பிரசவதுக்காவது வந்துடுவீங்க இல்ல…” என ஆருஷி நம்பிக்கை இல்லாமல் கேட்க… டிக்கெட் எல்லாம் போட்டு வச்சுட்டேன். கண்டிப்பா வந்திடுவேன் என்றான்.

ஆருஷி அவள் அம்மா வீட்டுக்கு வந்த பிறகு ஓய்வாகத்தான் இருந்தாள். எதாவது காய்கறி நறுக்கிக் கொடுப்பாள். வெளியே உலாவுவாள் இல்லையென்றால் மகனை பார்த்துக் கொண்டு இருப்பாள். இது போலத்தான் எதாவது செய்து பொழுதை போக்கிக் கொண்டு இருந்தாள்.

சரத் எதாவது எரிச்சல் வருகிற மாதிரியே பேசுவது, செய்வது என இருப்பதால்… அவர் அலுவலகத்தில் இருந்து வரும் நேரம் உள்ளே அறையில் சென்று படுத்து உறக்கம் வரும் வரை கைபேசியைப் பார்த்துக் கொண்டு இருப்பாள்.

பத்து நாட்கள் சென்றிருக்கும் சரத் இலக்கியாவின் பேரில் இருக்கும் பணத்தை எடுத்து தர சொல்லி தகராறு செய்து கொண்டிருந்தார். அதை வைத்து தன் நண்பரோடு பிஸ்னஸ் செய்து பெரிய பணக்காரன் ஆகப் போவதாகச் சொல்ல…. பார்கவி மறுக்க…

அது என்னோட பணம் தானே…அதை கொடுக்கிறதுக்கு என்ன?” என்றார்.

உங்க பணமா இருந்தாலும் எதுக்காக வச்சிருக்கோம். இலக்கியாவுக்குக் கல்யாணம் பண்ண வேண்டாமா?”

எல்லாப் பணமும் கேட்கலை… ஒரு பத்து லட்சம் மட்டும் தாங்க….. அதைப் பிஸ்னஸ்ல போட்டு ரெண்டு மடங்கா ஆக்கி கொடுக்கிறேன்.” எனச் சொல்ல…

அப்பா லூசாப்பா நீங்க. இனிமே நீங்க பிஸ்னஸ் பண்ணி சம்பாதிக்கப் போறீங்க? உங்களுக்கு முன்ன பின்ன அனுபவம் இருக்கா?” என ஆருஷி கேட்க…

நீ என்னை எப்பவுமே மதிக்க மாட்ட… இப்போ பெரிய இடத்தில கல்யாணம் பண்ணி இருக்கோம்னு திமிரு வேற…” என அவர் ஆருஷியை பேச…

நீங்க ஏன் அவளைப் பேசுறீங்க? உங்க மாப்பிள்ளைகிட்ட பேசிக்கோங்க. அவர் கொடுக்கச் சொன்னா கொடுக்கிறோம்.” என பார்கவி சொல்ல… சரத் முனங்கிக் கொண்டே இருக்க… ஆருஷி வெளியே சென்று உட்கார்ந்து விட்டாள்.

வெளி கேட்டுக்கும் வீட்டின் கதவுக்கும் இடையே முன்புறம் சிறிது இடம் இருக்கும். அங்கே ஒரு நாற்காலி எப்போதும் இருக்கும். அதில் உட்கார்ந்து இருந்தவள், இப்போதும் சரத் திருந்தாமல் இருப்பது, கணவன் அருகில் இல்லாதது எல்லாம் சேர்த்து அவளுக்கு அப்படி ஒரு அழுகை… தனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என நினைத்து அழுது கொண்டிருந்தாள். 

Advertisement